இலங்கை பிரதான செய்திகள்

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தினால் சுகாதார சீர்கேடுகள்

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தினால் அருகில் வாழும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொண்டுள்ளனர் என நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சி. கௌசல்யா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட காரைக்கால் பகுதியில் அமைக்கப்படுள்ள குறித்த நிலையத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு உறுப்பினர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
காரைக்கால் பகுதி ஒரு புனிதமான பகுதியாகும். அங்கு பழமை வாய்ந்த சிவாலயம் உண்டு. சித்தர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உண்டு. அவ்வாலயத்திற்கு அருகில் நல்லூர் பிரதேச சபையின் தின்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைந்துள்ளது.
அங்கு கொண்டு வரப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, கழிவுகள் கொட்டப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. தற்போது அதிகளவான கழிவுகள் அங்கு கொண்டுவரப்படுவதனால் தரம் பிரிப்பதில் ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 6 – 8 உழவு இயந்திர கழிவுகள் கொண்டு வரப்பட்டால் , அவை தரம் பிரிக்கப்பட்டு 3  – 4 உழவு இயந்திர கழிவுகளே மீள கொண்டு செல்லப்படுகின்றன. ஏனையவை அங்கேயே தேக்கப்படுகின்றது.
இதனால் அங்கு கழிவுகள் அதிகமாக காணப்படுவதனால் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை கடந்த காலங்களில் உக்க கூடிய கழிவுகளை தரம் பிரித்து பசளையாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது நிலையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுகள் அதிகரித்துள்ளமையால் , பசளையாக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தை மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து நீக்கி வேறொரு இடத்தில் நிறுவுமாறு கடந்த இரண்டு வருட காலமாக சபை அமர்வுகளில் குரல் கொடுத்து வருகின்றேன். ஆனால் எனது குரலுக்கு சபை மதிப்பளிக்க வில்லை.
இம்முறை பாதீட்டில் திண்ம கழிவகற்றலுக்கு என 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தின்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தை பிறிதொரு இடத்தில் அமைக்க காணி கொள்வனவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என கோரினேன். அதனையும் சபை கவனத்தில் எடுக்க வில்லை.
தற்போது தின்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையம் அமைந்துள்ள பகுதி பிரிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டு அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடின் அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி சபைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.  #சுகாதாரசீர்கேடுகள்  #நல்லூர்  #தமிழ்தேசிய மக்கள்முன்னணி #குடியிருப்பு
 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.