இந்தியா பிரதான செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட இந்தியா போராட்டங்களால் அதிர்கிறது – உத்தர பிரதேசத்தில் 9 பேர் பலி….

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம்: தொடரும் போராட்டம், உத்தர பிரதேசத்தில் 9 பேர் பலி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்தர பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

CAA NRC
Image captionகாசியாபாத்தில் நடந்த போராட்டம் – படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்தது. இந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 9 பேர் பலியாகி உள்ளதாக உத்தர பிரதேச டி.ஜி.பி ஓபி சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம்: தொடரும் போராட்டம், உத்தர பிரதேசத்தில் 9 பேர் பலி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

“லக்னோவில் 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுசாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றன. அனைத்து கோணங்களிலும் இது குறித்து விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்..

அதே சமயம் ஏ.என்.ஐ செய்து முகமை உத்தர பிரதேசத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று ஒரு போராட்டக்காரர் இறந்தது பற்றி “எங்கள் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. எப்படி மரணம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. போராட்டத்தாலோ, போலீஸ் நடவடிக்கையாலோ அது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றும் அவர் கூறியிருந்தார்.

தமிழகமெங்கும் போராட்டம்

மதுரை போராட்டம்
Image captionமதுரை போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்பினர் இன்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை போராட்டம்
Image captionமதுரை போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்,இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை காவல்துறையினர் வெளியேற்றி கைது செய்தனர்.

அதேபோல வேளச்சேரி சாலையிலிருந்து தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த இரா.நல்லகண்ணு,அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த சுமார் 150 நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 40 பேர் சென்னை உயர்நீதிமன்றம் வாயிலுக்கு எதிரில் போராட்டம் நடத்தித் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் .

மதுரையில், கோரிப்பாளையத்தில் மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத் தமிழர்களுக்கும், இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் எதிராக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் இந்த சட்டம் மத ரீதியான பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

வேளச்சேரி சாலையிலிருந்து தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த இரா.நல்லகண்ணு
Image captionவேளச்சேரி சாலையிலிருந்து தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த இரா.நல்லகண்ணு

புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவை ஜெர்மன் நாடாக மாற்ற ஒரு கூட்டம் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது என்றும் அது தடுக்கப்படவேண்டும் என்றார். ”இந்தியாவில் 40 ஆண்டுகாலமாக இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, நான் பட்டியலிட்ட எந்த ஒரு பிரச்சனைக்கும் பாஜக தீர்வு காணவில்லை, அதற்குப் பதிலாக முத்தலாக் பிரச்னையை கையில் எடுத்து மிருக பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது, பின்னர் காஷ்மீர் அசாம் மாநில பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் பாஜக கையிலெடுத்து. மக்கள் மீது தொடர்ச்சியாக சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்தது, தற்போது நான்காவது சம்மட்டி அடியாக குடியுரிமை சட்டத்தை கையிலெடுத்துள்ளது,” என்றார்.

தேனி மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போட்டியில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த 5000 மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியுரிமை சட்டத்தை பாஜக திரும்பப் பெற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர்,கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களின் மத அடையாளங்களை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவிகள் உட்பட 16 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியிலும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் பங்குபெற்றார்.

போராட்டத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தான் முன்னர் குறிப்பிட்டது போல தனது ஆட்சியே கலைந்தாலும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற விடப்போவதில்லை என்றார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது என்றார். மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காவல் துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.

டெல்லியில் 10 பேர் கைது

டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.

காங்கிரஸில் நிலைபாடு என்ன?

ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடக்குஇம் போராட்டங்களில் ஏன் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை காணவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில் வெறும் அறிக்கைகளால் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Thanks – BBC

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.