Home இலக்கியம் ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்….

ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்….

by admin

2017 தை  14 ,15 இல் கனடாவில்  இடம்பெற்ற, கருணா வின்சென்ட்டின்  கண்காட்சியை முன்னிட்டு வெளிந்த  கட்டுரையை இங்கு நினைவு கூர்கிறோம்…

கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து

Jan 13, 2017 @ 13:52 

கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக்  கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத்  தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம்.

பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. மனித சமூகத்தின் ஆரம்பகால வளர்ச்சியோடு அவை ஒவ்வொரு கட்டடத்தில் ஒவ்வொரு ரூபத்தில் இணைந்திருக்கின்றன.

கூத்து, இசை, நாடகம்  என்பன எப்போது ஆரம்பித்தன என்று சொல்லமுடியாது. ஓவியம் என்பது குழந்தைக்கு சந்திரனைக் காட்டி உணவு தீத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது. தூரத்தில் தெரியும் மாட்டைக்காட்டி ஆட்டைக் காட்டி உணவூட்டுவதிலிருந்து தொடங்குகிறது. சந்திரனைக்காட்டி “உம்மாண்டி ” என்பதோ அல்லது அவ்வைப்பாட்டி என்பதோ எதுவானாலும் குழந்தைக்கு அங்கு  நவீன  ஓவியம் தொடக்கிவிடப்படுகிறது.

நவீன ஓவியம்

17 ஆம்  நூற்றாண்டில் வந்த காமராப்பெட்டி  மரபு  வழியாக வந்த ஓவியர்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டத்தொடங்கியது.

மரபுவழி வந்த ஓவியர்கள் தமது ஓவியங்களில் வரையறுக்கப்பட்ட    பரிணாமம், இணக்கப்பாடு , சமநிலை,அமைவு , நிறச் சேர்க்கை போன்ற பல அம்சங்களை மரபு ரீதியான ஓவியர்கள்  வரையறுத்தனர்.  வித்தியாசமான அபூர்வமான கலைத்தன்மைவாய்ந்தவர்களாக இருந்தனர்.

அரசர்களையும் , இராணிகளையும் , நிலச் சுவாந்தர்களையும் பண்ணையார்களையும் அவர்களின் பாரியார்களையும் நீண்ட நேரம் இருத்தி வைத்து படம் வரைந்து அதற்கான பண்டத்தைப் பெற்று வந்த மரபு வழி  ஓவியர்களுக்கு நொடிப்பொழுதில் விமபத்தைப் பிரதிசெய்யும் “கமரா’ பெருஞ்   சோதனையாயிற்று.

ஓவியம் பற்றிய முரணான கருத்தமைவுகள் தோன்றத்தொடங்கின. மரபு ஓவியத்திலிருந்து நவீன ஓவியம் ஆரம்பமாயிற்று. மனபதிவுவாதம் என்ற கொள்கை உருவாயிற்று.  நவீன ஓவியம் மரபு ஓவியத்திற்கு முன்னதாகவே  மாந்த்ரீகம் போன்ற விடயங்களில் பயன்பாட்டில் இருந்தது. எனினும் நவீன ஓவியங்கள் என்பவை விவேகம் சார்ந்தவையாக அமைந்தமை எனவும் முன்பு இருந்தவை மாந்திரீகங்களுக்கு பயன்பட்டவை எனவும்   கருதப்பட்டது.

யாழ்ப்பாணமும்  மேற்கு ஓவியமும்

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில்  ஓவியத்திற்கு என்று ஒரு மரபு இருக்கவில்லை. மேற்கத்தைய பாணி ஓவியங்கள் பாடசாலைகள் மூலம் ஊட்டப்பட்டது. ஆங்கிலேயர் தமது விட்ட்டோரிய தத்ரூபப்  பாணி ஓவியங்களை அறிமுகம் செய்தனர்.

யாழ் ஓவிய வரலாற்றில் எம்மாற் குறித்துச் சொல்லக் கூடிய ஒருவர் ஓவியப் பாடக்   கல்வியதிகாரி எஸ் ஆர் கனகசபை அவர்கள். SRK அவர்கள் இரட்டுத்துணியில் “ஆயில் பெயிண்ட்” (எண்ணெய் வண்ண)   ஓவியங்களை  முதன்முதல் ஆரம்பித்த ஒருவர். இது மேற்கத்தையப் பணியாகும் .

மாற்கு மாஸ்டர்,  எஸ் ஆர் கனகசபை அவர்கள் தான் மேற்கத்தியப்பாணியை எம்மிடத்தில் அறிமுகம்செய்தவர் எனவும் அதனை அன்று  பலர் பின்பற்றுவதாகவும் தனியே ஒரு ஓவிய “இன்ஸ்பெக்டராக” இருக்காமல் பல விடயங்களைத் தேடி அறிந்த ஒருவர் அவர் என்றும் எஸ் ஆர் கே பற்றிச் சொல்வார். எஸ் ஆர் கனகசபையின் பணி இலங்கை ஓவிய வரலாற்றில் முக்கியம்பெற்ற 43 குழுவினருடன் தொடர்புடையது.

எஸ் ஆர் கே   ஆரம்பித்த வின்சர் ஓவியக் கழகத்தின் பணியும்  எமது ஓவிய வரலாற்றில் முக்கியமானது. 1938 மார்ச்சில் கோப்பாயில் தொடக்கப்பட்ட வின்ஸர் ஆட்கிளப்பில், எஸ்.ஆர்.கே.யின் வழிகாட்டலில் ஓவியப்பயிற்சிகளில் ஈடுபட்ட இராசையா, எம்.எஸ்.கந்தையா. கே. கனகசபாபதி, ஐ, நடராசா, க. இராசரத்தினம் என்போர் பின்னாளில் புகழ்பெற்ற ஓவியர்களாகப் பரிணமித்தனர். ஓவியரும்  நாடகத் தயாரிப்பாளருமான சானா வும் வின்ஸர் ஆட்கிளப்புடன் .தொடர்புடையவரா யிருந்தவராவார்.

 நாம் இன்று காணும் நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவரின் படம் அமரர் எஸ் ஆர் கே யினால் வரையப்பட்ட படமாகும்.

மாற்குவும் அவர் விழுதுகளும்

எஸ் ஆர் கே யின் மறைவின் பின்னர் ஓவியர் மாற்குவுடன் இணைந்து  சிலரால் ஆரம்பிக்கப்பட்டது விடுமுறைக்கால ஓவியக் கழகமாகும். நியூசீலாந்தில் வதியும் ஓவியர் அற்புதசிங்கம் இங்கு ஒரு வர்த்தக ஓவியராகவும் அரங்க அமைப்பு ஓவியராகவும் பணியாற்றுபவர்.

இந்த விடுமுறைக்கு கழகத்தில் பயின்ற இவருடன் ரமணி ,செல்வநாதன் , தங்கராஜா , புகழேந்தி, ஞானமலர், பேபி ஆகியோரும் வேறு சிலரும் பயின்றுள்ளனர். விசாகப்பெருமாள், சுவாம்பிள்ளை ஆகியோர் ஆசிரியர்களாக இங்கு பணிபுரிந்துள்ளார்கள் .

நவீன ஓவியத்தை எங்களுக்கு அறிமுகம் செய்ததில் மாற்கு மாஸ்டருக்கும் விடுமுறைக்கால ஓவியக்  கழகத்திற்கும் பெரும் பங்கு  உண்டு .

மாற்கு மாஸ்டர் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கரவெட்டி சயன்ஸ்  சென்ரரிலும் ஓவிய வகுப்பினை நடத்திவந்தார்.  நானும்  அங்கு அவரது மாணவராகச்  சேர்ந்து சுமார் ஒரு  வருடத்துக்கும்  மேலாக படிக்க முடிந்ததை இங்கு குறித்தல் பொருத்தமாகும்.

உயர்தரக் கல்வி ,வேலைவாய்ப்புகள் என்பவற்றின்  வாழ்வியல் சூழலின் வகிபாகங்களினால் இந்த வகுப்பும்  முடிவுக்கு வந்தது. அவரது மாணவர்களின் ஓவியங்களை கண்காட்சிகளாக நடத்துவது அவரது ஊக்குவிப்பில்  ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் எனது தொலைக்காட்சி நெறியாள்கைக்கு  அமைப்பிலிருந்து shots selection ,காடசித் தெரிவு ,வண்ணச் சேர்க்கை என்பவற்றில் மாற்குவின் பயிற்சி என் ஆளுமையில் பக்கத்துணையாக இருந்தது.

 மாற்கு மாஸ்டரின் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக அருந்ததி , வாசுகி , நிர்மலா, வைதேகி போன்றோர் தொடர்ந்தும் தமது ஆற்றலை வெளிப்படுத்தி நின்றவர்கள். பல்கலைக் கழகம் வரை  அதனைத் தொடர்ந்தவர்களும் இவர்களில் அடங்குவர்.

80களில் உச்சம் பெற்ற ஈழத்தமிழோவிய வரலாறு பின்னர் கோட்டு முறைச் சித்திர வகையில் இளையவர்களைக் கவர்ந்தது. 80 களின் பின்னர் கைலாசநாதன் ,நிலாந்தன் சனாதனன் போன்றவர்கள் குறிக்கத் தகுந்தவர்களாகின்றனர். இவர்களது ஓவியங்கள் மேற்குறித்த நவீன பாணிகளினின்றும் வித்தியாசமானவையாகின.

கணினியின் வருகை

கணினியின் வருகை அதில் ஆர்வம் கொண்ட இளையவர்களின் ஓவிய ஆளுமை நவீன ஓவியத்தில் புதுமையையும் அறிவார்ந்த மட்டத்தையும் தோற்றுவித்தது.  இணையங்களின் வருகையினால் ஓவியங்கள் மீதான பார்வையாளர்களின் ரசனை மட்டத்தை மேவக்கூடிய வகையில் எம்மவர்கள் சிலர் இந்த ஓவிய முறையிலும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.

ஊடகங்கள்

நவீன ஓவியங்களை  வெகுசன ஊடகங்கள் ஊக்குவிக்காமை  எம்மத்தியில் அவை வீச்சான வளர்ச்சியை அடைய முடியவில்லை.சில சஞ்சிகைகள் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தன. யேசுராசாவின் அலை , உமாவரதராஜனின் வியூகம் , மூன்றாவது கண்  போன்றன குறிப்பிடத்தக்கவை . சரிநிகர் ,திசை ஆகிய   பத்திரிகைகளைத் தவிர தேசிய வார இதழ்களில் தினக்குரல்  90 களில் நவீன ஓவியங்களை உள்வாங்கியது. மக்களின் ரசனைக்கு முன்னர்  ஊடகங்களின் பொறுப்பாளர்களுக்கும் ஆசிரிய பீடத்திலுள்ளவர்களின் நவீன ஓவியம் தொடர்பான ரசனையும் புரிதலும் ஈழத்து தமிழோவிய வளர்ச்சியில் முக்கிய மானதொன்றாயிற்று.

 மேற்கின் பாணி இந்தியாவிலும் மட்டுமல்ல சீனாவிலும்  ஓவியர்களிடத்தில் கலந்து கொண்டது. அதுபோலவே நவீன ஓவியங்களும் தென் இந்திய சஞ்சிகைகளில் பிரவேசிக்க எமது வாசகர்களின் புரிதலுடன்   எங்களது வார இதழ்களிலும் அது படிப்படியாக அரங்கேறியது.

வர்த்தக ஓவியம்

இதே வேளை வர்த்தக ஓவியங்கள் என்று ஒரு புதிய கலைவடிவத்தின் தோற்றம் ஓவியத்தின் அடுத்த பரிமாணமாகியது .

சிங்கள ஓவியர்கள் பற்றியவிவரணமான ”   டெலி துட” (டெலி -தூரிகை) என்ற தொடர்  தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சிக்கு நான் தயாரிப்பு உதவியாளனாக (ஓவியத்தில் ஆர்வமுள்ளவனாக இருந்தமையால் அதன் நெறியாளர் காமினி அபேய்கோன் -(இவரும்  இலங்கையின் சிறந்த ஓவியர்களில் ஒருவர்)- எனது விருப்பத்தின் பேரில் என்னையும் தமது தயாரிப்புப் பணியில் இணைத்துக்கொண்டார். அதன்போது பல ஓவியர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

சிலர் தாம் ரமணி மாஸ்டருடன் கற்றதாகவும் ரமணி ஒரு சிறந்த ஓவியர் ஆனால் அவர் வர்த்தக ஓவியத்துக்குள் தம்மை இணைத்துக்கொண்டுவிட்டார் என்று சொல்வார்கள். சிங்களத்தில் உள்ள சிலரின் பெயர்களை சொல்லி அவர்களை போல என்பார்கள்.

மரபு , நவீன ஓவியங்களின்  அப்பால் – வர்த்தக ஓவியம் என்று ஒன்று இவற்றுக்குச் சமாந்தரமாக கோடு போடத்தொடங்கியது .

கருணாவும் ஓவியமும்

மனித வரலாற்றுடன் இணைந்த ஓவியமும் சிற்பமும் மதங்களுடன் இணைந்தவை . சித்தன்னவாசல்,குகை ஓவியங்களும்  ஆசீவக  இந்தியாவின் துறவிகளுடையது என்றும் சைன சமயத்தினருடையது என்றும் இருவேறுபட்ட கருத்துகள் கொண்டவை .அஜந்தா  ஓவியங்களைப்  போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 – 1200 ஆண்டு பழமையானவை.

கத்தோலிக்க மதத்திலும்   ஓவியங்களும் சிற்பங்களும் நன்கு பிணைந்தவை. விபரங்கள் இங்கு அவசியமில்லை. இங்கு ஆலயச் சுருபங்களும் , ஆலயத்திலுள்ள படங்களும் , கிறிஸ்துவின் திருப்பாட்டினைக் காட்டும் 14 தலங்களும், ஆலயப் பத்திருப்புகளும் , சாளரக் கண்ணாடிகளின் வண்ணங்களும் ஓவியமாய் அவை சொல்லும் தகவலும்   கத்தோலிக்க ஆலயங்களில்முக்கியமானவை.

என் அன்புக்குரிய கருணா எனது நெருங்கிய உறவினர்.  அயலவர். அதனால் (தான்) எனது ஊரவர்.   எமது கரவெட்டி  அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலிகளில் திருப்பலிப் பீட உதவிப்பையனாகவும் (Alter Boy)திருச்  சிலுவைபாதை என்ற நிகழ்வு கிறிஸ்துவின் திருப்பாட்டு நாட்களில் ஆலயத்தில் நடைபெறும்போது 14 தல ங்களிலும் ஒவ்வொரு தலத்தை நோக்கி அசைகையில் சிலுவையை ஏந்திச் செல்லும் பையன்களில் ஒருவராகவும்

இருந்த நாட்கள்  நான் அவரை நினைக்கும்போது வண்ண அலைகளாய் வருவதுண்டு. ஒழுங்காக ஆலயப்பணிகளில் சிறுவயதில் ஈடுபடுவதில் ஆர்வம் மிக்க அவர் மிகவும்  பக்தியான கத்தோலிக்கக் குடும்பத்தில்  பிறந்தவர் அவர்.அவருடைய தந்தையார் வின்சென்ட்  பருத்தித்துறை கலட்டி  ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியவர். கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக (வாக்காளர்களின் அமோக ஆதரவுடன்) நீண்டகாலம் பணியாற்றியவர். கரவெட்டியில் பல கத்தோலிக்க   நாடகங்களை மேடையேற்றியவர். அண்மையில் பருத்தித்துறையில் வட்டாரக் கல்வியாதிகாரியாகப் பணியாற்றிய திரு துரைசாமி அவர்களை  சந்தித்தேன். அவுஸ்திரேலியாவிலிருந்து தமது சகோதரியின் மரணச்சடங்கில்

கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். எனது  தந்தையரின் நண்பர் அவர் என்ற வகையில் அவரிடம் என்னை அறிமுகம் செய்தபொழுது  “அப்பா போய்விட்டாரா என்ற  கேள்விக்கு அடுத்த கேள்வியாக “வின்சென்ட்  மாஸ்டர் போய்விட்டாரா ?” என்று கேட்டார். (இவரும்  “போவதற்கு’ விசா எடுத்த நிலையிலேயே காணப்பட்டார்) கல்விப்பணியிலும் கலைத்துறையிலும் நிருவாகத் திறமையிலும் முதன்மை பெற்ற ஒருவர் அமரர் வின்சென்ட்

கருணாவின் ஓவியங்களின் நிருமாணங்களிலும்

அப்பாத்திரங்களின் நெறிப்படுத்தலிலும் வின்சென்ட் மாஸ்டரின் நாடக இயக்குகையைக் காண்கிறேன். தாய் ரெஜினா ரீச்சர் பாடசாலையில் கதை சொல்வதற்கு மட்டுமன்றி எதனை விளக்குதற்கும் கரும் பலகையில் பட பட வெனப்  படம் வரைந்து விளக்கும் ஆளுமை மிக்கவர்.

கருணா எனது தங்கையுடன் படித்தவர். மிகவும் அமைதியானவர்.(அப்போ) . சிறு வயதில் பாடசாலையில் அந்த நாட்களிலேயே ஓவியவேளைகளில் மட்டுமல்ல “கைப்பணி ” எனப்படும் hand work இலும் தாமாகவே புதுமையாகச் செய்துவருவார் என நாம் அறிந்துள்ளோம். அக்காலத்தில்  வகுப்பு 1 இலிருந்து 5 வரை கைவேலை, ஓவியம், சங்கீதம் என்பன முக்கிய பாடங்கள் . எனது சகோதரி என்னை உதவியாகக் கொண்டு கைவேலைப் பொருட்கள் செய்து கொண்டு போவாள். “கருணா என்ன கொண்டுவருமோ தெரியாது ” என்ற எதிர்பார்ப்பு அவளிடம் இருக்கும்.

எனது தாயார் கருணாவின் சங்கீத ஆசிரியர் . கருணாவுக்கு சங்கீதத்திற்கு 10 (நூறுக்கு) புள்ளிகள் இட்டுவிட்டுவந்து “ரெஜினா (கருணாவின் அம்மா) என்ன நினைக்குமோ தெரியாது  கவலைப்படுவதை நான் கண்டுள்ளேன். ஆனால்  எங்களது குடும்ப உறவில் என் தாயாரின் சிறந்த ஆலோசனைக்குரிய நண்பியாக கருணாவின் தாயார் இருந்துள்ளார்..

கருணாவின் தாய்மாமன் மரியநாயகம் கரவெட்டியில் மட்டுமல்ல ஈழத்தின் புகழ்மிக்க ஓவியர்களில் ஒருவர். நீர் வண்ணங்களில் அவர் வரைந்த “காகமும் வடையும்”, நரியும் திராட்சைப் பழமும் “,சிங்கமும் முயலும்” எனது வீட்டில் இருந்த ஓவியங்கள்.

கேட்ட தாலாட்டு இசைக்குப்பிறகு நான் பார்த்த ஓவியங்கள் அவை என்பேன். இன்றைக்கும் அவை என் மனதில் நினைவில் உள்ளன.எனது ஓவிய ஆர்வத்தை அவை ஊட்டியிருக்கலாம் .

ஊரிலும் தனிப்பட்ட முறையில் ஓவியப்பயிற்சியை மரியநாயகம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். வன்னியிலும் கனடாவிலும் அவரது தூரிகை   கண்காட்சி வரை நீண்டுள்ளது.

மாற்கு மாஸ்டரின் ஓவியங்கள் கறுப்பையும் சிவப்பையும் அதிகமாக் கொண்டவை. அவர் வாழ்ந்த மண்,சூழல், உணர்வுகளின் மோதல்கள் யாவும் அவரின் வண்ணங்களில் பிரதிபலித்தன. ஓவியத்தில் கருமை என்பது வீரம், கிளர்ச்சி, உறுதி, வீரியம் என்பவற்றின்  வெளிப்பாடு ஆகும் . பனைமரத்தின்  கறுப்பு  உறுதியின் அடையாளம் எனப்படும்.

கருணாவின் ஓவியங்களில் நான் பார்த்த அளவில் பசுமையை மலிந்து காண்கிறேன். கருணாவின் வீடு அமைந்த சூழல் கரவெட்டியில் நெல்லியடி என்ற நகரத்தின் தாழ்வாரம் எனலாம். பெரிய தோட்டத்தின் கரையோரமாக இது அமைந்துள்ளது. நெல்லியடியிலிருந்து மாலீசந்நதி வரைக்கும் ( அன்று) இத்தோட்டம் உள்ளதால் பெரிய தோட்டம் எனப்பட்டது. கருணாவின் வீட்டுக்குப் போவதானால் பச்சைப்பசேலென்ற மிளகாய், புகையிலை ,உருளைக்கிழங்கு செடிகளையும் மாடுகள் சுழற்றும் சூத்திரக் கிணறு , கிணற்றைக் காவல் காக்கும் காவலனான  துலா, பூவரசு மரம்கொண்ட ஆடுகால் என்பனவற்றைத் தினமும் தாண்டுதல் வேண்டும். தோட்டத்தின் வரம்பும் பாதையும் செம்மஞ்சள் கலந்த மண்  நிறம். கருணாவும்  அவரின் குடும்பமும்  இவற்றைத்தாண்டித்தான் அந்தோனியார் கோவிலுக்கு வரவேண்டும். கருணாவும் அவரது அம்மாவும் திரு இருதயக் கல்லூரிக்கு வரவேண்டும். அது கருணாவின் துளிர்ப்பருவக்  காலம்.

மறுபுறத்தில் நெல்லியடி லக்ஸ்மி திரையரங்கினூடாக வரும் ஒழுங்கை இவர்களின் பிரதான பாதை. இந்த ஒழுங்கையில் தினமும் படக்கதை வசனம் கேட்கும் இளசுகள் “சைக்கிளில் “ஒரு காலையும் மறு காலை  நிலத்திலும் வைத்து நிற்பதை  அந்த ஒழுங்கையைத்  தாண்டியவர்கள் இன்றும் மறக்க முடியாது. சைக்கிள் பழகுபவர்களை மறக்க முடியாது. நானும் பழகியிருக்கிறேன். லக்ஸ்மி தியேட்டர் ஒழுங்கையும் பெரிய தோட்டமும் அக்காலக் கரவெட்டிக் காதலர்களின்  குறு நேரச் சந்திப்பிற்கான பாதுகாப்புப் பிரதேசம். பல கடிதங்கள் அரங்கேறிய ஒழுங்கை அது. சில கடிதங்கள் அரங்கேற்றத்துடன் மட்டும் முற்றுப்பெற்றிருக்கலாம். நெல்லியடியிலிருந்து லக்ஸ்மித் தியேட்டர் ஒழுங்கையினூடாக வந்து பெரிய தோட்டத்தில் ஏறி அதனூடாக கொடிகாமம் பிரதான வீதியைத் தாண்டுவது விரைவான பயணத்திற்காக.

இவற்றைத் தாண்டுபவர்கள் அக்காலத்தில் கண்ட காட்சிகள்  கருணாவின் ஓவியங்களில் பதிவாகியுள்ளன. இவை அவரது மனபதிவாக இருக்கலாம். வான் கோ , போல் சிகன் போன்ற ஓவியர்கள் தாம் பார்த்தவற்றை அப்படியே வரையாமல் சிலமாற்றங்களை ஏற்படுத்தி பிற்காலத்தில்  சுதந்திரமாக வரைந்துள்ளனர்.

என்னவோ எதுவோ பார்த்ததை பின்னர் வரைந்தாலும் அலலது பார்த்துத்தான் வரைந்தாலும் அவற்றுக்கான  இலக்கண வரம்புகளை விட்டு விலகாமல் இருக்கும்போதே அவை ஓவியத்திற்கான பண்பைப் பெறுகின்றன.

மாற்கு மாஸ்டரிடம் நான் ஓவியம் பயிலச்சென்றபொழுது அவர் முதலில் என்னை இயல்பாக வரையச் சொல்லி எனது ஓவியத் திறமையை படம்பிடித்தார். அதன் பின்னர் முறையாக ஒரு மனிதனை அவன் அங்கங்களை வரைவதற்கான பயிற்சிகளைத் தந்தார். அது தொடர்ந்து நவீன ஓவியங்களை நாம் தேடும் ,சுவைக்கும் இயல்பினையும் எமது சுயமான கோடுகளையும் வர்ணத்  தேடல்களையும்  நம்முள் உருவாக்கின .

 கருணாவின் ஓவியங்களில் அவருக்கான கோடுகளையும் வண்ணங்களையும் தேடும் சுயத்தினைக்   காணமுடிகிறது. திரைப்படம் ஒன்றிக்கு எவ்வளவுக்கு பின்னணி இசை “ரீ ரெக்கோர்டிங்கில் ” தேவையில்லையோ அதுபோலவே   ஓவியங்களிலும் தேவையற்ற கோடுகளின் தேவையென்பது அவசியமற்றது என்பதை கருணாவின் படங்களில் காணமுடிகிறது. கருணாவும் தமது  ஓவியத்தில் தெளிவான அளவான மெல்லிய குறுகிய கோடுகளை கவனமெடுத்து வரைந்துள்ளார்.

கருணாவும் டிஜிட்டலும் 

தொழில்சார் ஆளணி  முறைகளில்  தவிர்க்கப்படமுடியாத தேவைகளினால் டிஜிட்டல் வடிவ அமைப்பாளர்களின்  நுழைவு இதழியற்  துறையில் 90 களின் பின்னர் இலங்கையில் ஆரம்பித்தது.

கணினி வடிவ அமைப்பு சற்றுத்  தெரிந்தவர்கள் எல்லோரும் டிஜிட்டல் வடிவமைப்பாளர் ஆக பத்திரிகைகளில் நுழைந்தனர்.   தடி எடுத்தவன் எல்லாரும் தண்டக்காரனாவது என்பது   டிஜிட்டல் வடிவமைப்புத் துறையிலும் வந்தது .

இதனால்  டிஜிட்டல் துறையின் வருகை ஓவியத்துறையை வீழ்த்திவிடுமோ என்ற அச்சம் 90 களில் ஓவியத்துறையில் ஏற்பட்டத்   தொடங்கியது. இயல்பாகவே திறமை வாய்ந்த ஓவியர்களும் இந்த டிஜிட்டல் முறையினால் சோம்பேறிகளாகி  தமது ஆளுமையை இழப்பார்களோ என்ற விமர்சனக்கருத்துகளும் வந்தன.

கருணாவின் வளர்ச்சி இதற்கு நல்ல உதாரணம் என்பதை அவர் 1998 இல் வரைந்த ஒரு அட்டைப்படம் மூலம் புரிந்து கொள்ளலாம்.

மூத்த வானொலி தொலைக்காட்சி மற்றும் நாடக இயக்குனர் திரு பி  விக்னேஸ்வரன்  எழுதி 1998 இல் கனடாவில் வெளியிட்டிருந்த வானொலி நாடாகமான “வாழ்ந்து பார்க்கலாம் ” என்கிற புத்தகத்தின் அட்டைப்படத்தை  டிஜிட்டல் மூலம்  வரைந்த கருணாவிடம் தொடர்ந்தும் டிஜிட்டல் தனது ஆட்டத்தைக் காட்டமுடியவில்லை  என்பதை அண்மைக்காலமாக அவர் வரைந்த ஓவியங்கள் காட்டுகின்றன.

கருணா போன்ற இயற்கையான ஆளுமை  கொண்ட ஓவியர்களிடம் டிஜிட்டல் செல்லும்போது அவர்களது ஓவியம் டிஜிட்டலை வெல்லும் என்ற நம்பிக்கையை கருணா எமக்குத் தந்துள்ளார் .

கருணாவின்  இந்த அடி ஈழத்து ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் பரிமாணம் மட்டுமல்ல ! பரிணாமமுமே!

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More