Home இலங்கை 2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்…

2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்…

by admin

கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தரப்புக்களை வகைப்படுத்த வேண்டும. தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பிரதான தரப்புக்கள் உண்டு.

முதலாவது கூட்டமைப்பு.

இரண்டாவது கூட்டமைப்புக்கு எதிரான அணி

மூன்றாவது சிவில் சமூகங்கள.

இவைதவிர தென்னிலங்கை மையக் கட்சிகளோடு இணங்கிச் செயற்படும் கட்சிகளும் உண்டு.

முதலில் கூட்டமைப்பு கடந்த ஆண்டு பெற்றவை எவை பெறாதவை எவையெவை என்று பார்ப்போம்.
கடந்த ஆண்டு கூட்டமைப்பைப் பொறுத்தவரை கம்பெரலிய ஆண்டுதான். தனது யாப்புருவாக்க முயற்சிகள் பிசகி விட்ட காரணத்தால் கூட்டமைப்பு அபிவிருத்தி அரசியலில் முழுமூச்சாக இறங்கிய ஒரு காலகட்டம் அதுவாகும். யாப்புருவாக்கும் முயற்சிகளில் முழு நம்பிக்கை கொண்டிருந்த சம்பந்தர் நல்ல நாள் பெருநாட்களின் போது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் வாக்குறுதிகளை வழங்கி வந்தார.; ஆனால் அந்த நம்பிக்கைகளை மைத்திரிபால சிறிசேன கவிழ்த்து கொட்டி விட்டார். 2018டில் இடம்பெற்ற ஆட்சி குழப்பத்தோடு கூட்டமைப்பின் கனவுகள் தகர்ந்து விட்டன. இனி அரசியல் தீர்வு இல்லை என்று கண்டதும் அக்கட்சி ரணில் விக்கிரமசிங்கவோடு கூட்டுச் சேர்ந்து கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்தது. அதாவது வீட்டுத் சின்னத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஒரு இணக்க அரசியல் அது.

ஆனால் அதையும் கோட்டாபய தோற்கடித்து விட்டார். கடந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு கிடைத்த பெரு வெற்றியானது கூட்டமைப்பின் அபிவிருத்தி அரசியலைத் தலைகீழாக்கி விட்டது. இனி இணக்க அரசியல் செய்ய முடியாது. ஏனெனில் தமிழ் மக்கள் கோட்டாபயவுக்கு எதிராக வாக்களித்து விட்டார்கள். அந்த வாக்களிப்புக்கு கூட்டமைப்பு உரிமை கோருகிறது. ஆனால் உண்மையில் அது அவர்கள் கேட்டு பெற்ற வாக்குகள் அல்ல. தமிழ் மக்கள் இயல்பாகவே கோட்டாபய வரக்கூடாது என்று தீர்மானித்து வழங்கிய வாக்குகள் அவை.

இந்நிலையில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக புதிய அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்ய கூட்டமைப்பால் முடியாது. இனி எதிர்ப்பு அரசியலைத் தவிர அவர்களுக்கு வேறு வழி உண்டா? இவ்வாறாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இணக்க அரசியலில் வெளிப்படையாக இறங்கிய கூட்டமைப்பு ஆண்டின் முடிவில் எதிர்ப்பு அரசியலில் வந்து நிற்கிறது. மணிக் கூட்டின் பெண்டுலம் ஓர் அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தத்துக்கு வந்துவிட்டது. இது அந்தக் கட்சியின் வெற்றியா தோல்வியா?

இரண்டாவதாக கூட்டமைப்புக்கு எதிரான அணிகள். அரங்கில் இப்பொழுது இரண்டு அணிகள் உண்டு. ஒன்று விக்னேஸ்வரன் மற்றது கஜேந்திரகுமார். இந்த இரண்டு அணிகளையும் இணைத்து ஓர் ஐக்கிய முன்னணியை இன்று வரையிலும் கட்டி எழுப்ப முடியவில்லை. எனவே கூட்டமைப்புக்கு எதிராக ஒரு பலமான மாற்று அணியாக இந்த அணி இன்னமும் எழுச்சி பெறவில்லை.

கூட்டமைப்பு செய்வது பிழை, அது அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கிறது, எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு விட்டது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூட்டமைப்பு பேரம் பேசவில்லை, பேர அரசியல் ஒழுக்கம் அதனிடம் இல்லை……. என்றெல்லாம் கூட்டமைப்பை குற்றம்சாட்டிய மேற்படி கட்சிகள் அவ்வாறு பேரம் பேசுவது என்று சொன்னால் அதற்கு முதலில் மக்கள் ஆணையைப் பெறவேண்டும.; மக்கள் ஆணையைப் பெற்ற பிரதிநிதிகளோடுதான் அரசாங்கமும் பேசும் வெளிநாடுகளும் பேசும.; ஐநா போன்ற உலகப் பொது அமைப்புக்களும் பேசும.; எனவே கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் சரியானதை செய்ய முற்படும் கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு மக்கள் ஆணையைப் பெற வேண்டும.

ஆனால் அப்படி ஒரு ஜக்கியம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இன்று வரையிலும் ஏற்படவில்லை. எனவே தமிழ் மக்கள் ஒரு திரட்சியாக மக்கள் ஆணையை வழங்கக்கூடிய வாய்ப்புகளும் குறைவு. அதாவது தமிழ் தரப்பு இப்பொழுது மூன்றாக உடைந்து கிடக்கிறது. இதனால் தமிழ் வாக்குகள் மூன்றாக சிதறிப்போகும். தென்னிலங்கைக் கட்சிகள் அந்த வாக்குச் சிதறலை நன்கு பயன்படுத்தி தமக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறக்கூடும். தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய போனஸ் ஆசனங்களும் குறையக் கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. ஆக மொத்தத்தில் தமிழ்க் கட்சிகள் சிதறிக் காணப்படுகின்றன. அது தமிழ் வாக்குகளையும் சிதறடிக்கும.

மூன்றாவது தரப்பு தமிழ் சிவில் சமூகங்கள.; கடந்த ஆண்டில் தமிழ் சிவில் சமூகங்கள் தமிழ்க்; கட்சிகளின் மீது தார்மீகத் தலையீடு ஒன்றை செய்தன. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையால் தொடங்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு தமிழ் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீடு ஒன்றை செய்ய முற்பட்டது. திருமலை ஆயர், யாழ் கத்தோலிக்க ஆதீனத்தின் குரு முதல்வர், திருகோணமலை தென் கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர், யாழ்ப்பாணம் சின்மயா மிஷனின் குரு முதல்வர் இவர்களோடு தமிழில் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் சில கருத்துருவாக்கிகளும் இணைந்து உருவாக்கியதே மேற்படி சுயாதீனக் குழுவாகும்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துமாறு தமிழ் கட்சி தலைவர்கள் மீது மேற்படி சுயாதீனக் குழு தலையீடு செய்தது. தமிழ் கட்சிகளின் மீது இப்படி ஒரு குழு தார்மீக தலையீடு ஒன்றை செய்ய முடிந்தமை என்பது அரிதானது. அது என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை விடவும் அப்படி ஒரு நடைமுறை தமிழ் அரசியலில் உருவாக்கியமை தமிழ் ஜனநாயகத்தை பொறுத்தவரையிலும் செழிப்பான ஒரு மாற்றம்.

சுயாதீனக் குழுவின் தலையீட்டிலிருந்து தப்ப முயன்ற தமிழ் கட்சிகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு நகர்வு வாய்ப்பைக் கொடுத்தது. சுயாதீன குழுவின் முயற்சிகளை ஓரங்கட்ட முயன்ற சில புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சி தமிழ் கட்சித் தலைவர்களுக்கு தப்பிச் செல்ல ஒரு வழியைத் திறந்துவிட்டது.

இதன் விளைவாக ஏற்பட்டதே ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஓர் ஆவணம் ஆகும். அந்த ஆவணம் ஒரு வெற்றிகரமான அடைவு. திம்பு கோரிக்கைகளிலிருந்து தொடங்கி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தமது கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களில் ஆகப் பிந்தியது அது. இந்த அடிப்படையில் அந்த ஆவணத்துக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.

எனினும் அந்த ஆவணத்தை உருவாக்கும் முயற்சிகளில் முன்னின்று உழைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இறுதிவரை கூட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. இதனால் அந்த ஆவணம் வெளியிடப்பட்ட பொழுது அதில் 5 கட்சிகளை கையெழுத்திட்டன. அந்த ஆவணத்தில் கையெழுதிட்ட பின் அங்கு பிரசன்னமாகியிருந்த சிறீகாந்தா பல்கலைக்கழக மாணவர்களைப் பார்த்து பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார்….ஒரு தசாப்தத்துக்கு முன் ஆயுதங்களோடு விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த ஒரு ஐக்கியத்தை இப்பொழுது நீங்கள் ஆயுதமின்றிச் சாதித்திருக்கிறீர்கள்…என்று அவர் அப்படிக் கூறிய போது சுமந்திரன் அதை ஆமோதித்துக் கை தட்டியிருக்கிறார். அங்கிருந்த பலரும் அதை ஆமோதித்திருக்கிறார்கள்.

ஆனால் கூட்டமைப்பு கடைசி நேரத்தில் அந்த ஆவணத்தை அனாதை ஆக்கியது. அந்த ஆவணத்தை மீறி அது சஜித் பிரேமதாசவை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தது. இதனால் ஐந்து கட்சிகளின் கூட்டும் உடைந்தது. அவ்வாறு தான் உருவாக்கிய கூட்டையும் அது வெளியிட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தையும் பாதுகாப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களால் முடியவில்லை. அதற்குரிய கொள்ளளவும் முதிர்ச்சியும் அவர்களிடம் இருக்கவில்லை. சுயாதீன குழு அந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்திருந்தால் சில சமயம் வேறுவிதமான திருப்பங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுயாதீன குழுவை வெட்டியோடி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட நகர்வு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டு தமிழ் சிவில் சமூகம் ஆணித்தரமாக ஒரு நகர்வை முன்னெடுத்திருக்கிறது. முன்னுதாரணம் மிக்க இந்நகர்வின் மூலம் தமிழ் கட்சிகளின் மீது தமிழ் சிவில் சமூகங்கள் நிர்ணயகரமான தலையீட்டை செய்ய முடியும் என்பதனை சுயாதீனக் குழு நிரூபித்தது. எனவே கடந்த ஆண்டு முழுவதிலும் தமிழ் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட எல்லா அரசியல் நகர்வுகளையும் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் விடயங்கள் தெளிவாக தெரியவரும.

முதலாவது கூட்டமைப்பு அதன் தீர்வு மற்றம் அபிவிருத்தி முயற்சிகளில் தோல்வி கண்டுள்ளது. அக்கட்சி மேலும் உடைந்திருக்கிறது. டெலோ இயக்கத்தின் ஒரு பகுதி அக்கட்சியிலிருந்து உடைந்து ஒரு புதிய கட்சியை உருவாக்கி இருக்கிறது.

அதேசமயம் மாற்று அணிக் கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியத்தை உருவாக்கத் தவறிவிட்டன. கூட்டமைப்புக்குச் சவாலாக ஒரு பலமான ஜக்கிய முன்னணி இன்னமும் தோன்றவில்லை.

இவை இரண்டையும் தவிர தமிழ் சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீடு செய்யும் ஒரு முன்னுதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிடைப்பது என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு முன்னுதாரணத்தை காட்டியிருக்கிறார்கள். சிங்கள மக்களைப் போலவே அவர்களும் ஒரு பேரலையாகத் திரண்டு தமது ஆணை எதுவென்பதைத் துலக்கமாகவும் கூர்மையாகவும் வெளிக்காட்டினார்கள். அத்தேர்தலில் ஓர் இன அலை மேலெழுந்த போது அந்த அலைக்குள் தென்னிலங்கை மையக் கட்சிகளை ஆதரித்த தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் வாக்குகளைத் தாமரை மொட்டை நோக்கிச் சாய்த்துச் செல்ல முற்பட்ட தமிழ் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கிகளும் கரைந்து போய்விட்டன. எல்லாவிதமான எழுச்சிகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் அப்பால் தமிழ் மக்கள் ஒரு பேரலையாகத் திரள்வார்கள் என்பதற்கு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அகப் பிந்திய எடுத்துக்காட்டுககளாகும்.

தமிழ்க் கட்சிகள் நான்குக்கு மேற்பட்ட நிலைப்பாடுகளோடு காணப்பட்ட ஒரு தேர்தலில் தமிழ் மக்களோ ஒரு பெரிய திரட்சியைக் காட்டினார்கள். இப்படிப் பாத்தால் தமிழ் மக்கள் தன்னியல்பாகத் திரள்வார்கள் என்ற மற்றொரு முன்னுதாரணத்தைக் காட்டிய ஆண்டு கடந்த ஆண்டாகும். ஆனால் அவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பேரலையாகத் திரண்ட மக்கள் கூட்டம் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் தேர்தலகளில்; மூன்றுக்கு மேற்பட்ட துண்டுகளாகச் சிதறி நிற்கப் போகிறதா? ஒரு நாடாளுமன்றத் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும்; நடக்க இருக்கும் ஒராண்டில் தமிழ்க் கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்பது எதைக் காட்டுகிறது? ஜனாதிபதித் தேர்தலில் இனமாகத் திரண்டு நின்ற மக்களுக்கு தலைமை தாங்க தமிழ்க் கட்சிகளால் முடியவில்லை என்பதையா?   #தமிழ்க்கட்சிகள் #மாகாணசபை #தமிழ்மக்கள் #கூட்டமைப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More