இந்தியா பிரதான செய்திகள்

நிர்பயா கொலை குற்றவாளிகள் நால்வரும் ஜனவரி 22ம் திகதி தூக்கிலிடப்படுவர்


டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை உத்தரவு பிறப்பித்துள்ளது,  ஜனவரி 22ம் திகதி காலை 7 மணிக்கு, 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியை சேர்ந்த 23 வயதான பிஸியோதெரபி மாணவி தனது நண்பருடன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்துக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இதையடுத்து மறுநாளே முக்கிய குற்றவாளியான பேருந்து ராம்சிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்செயலில் தொடர்புள்ள அவரது சகோதரர் முகேஷ் சிங், ஜிம் பயிற்சியாளராக இருந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டது.
2013 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தகதி பேருந்து சாரதிராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2013ம் ஆண்டு ஓகஸ்ட் 31-ஆம் திகதி குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் குற்றம் செய்ததை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்த சிறுவனை சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டுகாலம் அடைத்து வைக்க உத்தரவிட்டது.
2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதி நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2014 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதைப் பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இருப்பினும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அரசு தரப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்தில் முன்னிலையிலும் அல்லது குடியரசுத்தலைவரின் முன்னிலையிலும் குற்றவாளிகள் தொடர்பான மனு, நிலுவையில் இல்லை. எனவே இவர்களது தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அதேநேரம், குற்றவாளிகளான முகேஷ் மற்றும் வினய் ஷர்மா ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தாங்கள் தயாராகி கொண்டிருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 22ம் திகதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தார். #நிர்பயா  #கொலை #குற்றவாளிகள் #தூக்கிலிடப்படுவர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link