இலங்கை பிரதான செய்திகள்

செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய பின்னடைவு

செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 260 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் (19.01.2020) கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடரீதியாக சமமான பங்கீடு இல்லாத காரணத்தால் கிராமப்புறத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களின் கல்வி பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 94 ஆசிரியர்களின் பாடரீதியான வெற்றிடம் நீண்டகாலமாக நிரப்பபடாமல் உள்ளது.

மேலும் பாடசாலைகளில் இருந்து இடமாற்றம் பெற்று செல்லுகின்ற ஆசிரியர்களுக்கு பதிலீடாக மீள் நியமனம் செய்வதில் காலதாமதங்கள் நிலவுவதால் வன்னிப் பிரதேசத்தில் கல்விகற்கின்ற கிராமப்புறப் பாடசாலை மாணவர்களின் கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் பாரியளவில் பின்தங்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுனர்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வவுனியா வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செட்டிகுளம் பிரதேச கல்விச் சமூகத்தினராலும் பெற்றோர்களாலும் செட்டிகுளத்திற்கான புதிய கல்வி வலயம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கமைவாக கடந்த வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சு நாடு முழுவதும் புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் திட்டத்திற்கு அமைய செட்டிகுளமும் புதிய கல்வி வலயமாக கொண்டுவரப்படவேண்டும் என்று கடந்த வரவுசெலவுத்திட்டத்தின் கல்வி அமைச்சின் விவாதத்தில் கோரிக்கை முன்வைக்கபட்டது.அதற்கமைவாக கல்வி அமைச்சினால் செட்டிகுளத்திற்கான தனியான கல்வி வலயம் ஆரம்பிப்பதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான நிதி பங்களிப்பைச் செய்த இலண்டனை சேர்ந்த வேல்முருகு பரமேஸ்வரன்,சுவிஸ்லாந்தை சேர்ந்த வேல்முருகு தனஞ்சயன் மற்றும் மயில்வாகனம் பாஸ்கரன் ஆகியோருக்கு பெற்றோர்களும் மாணவர்களும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இவர்களுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் நடராசா மதிகரன்(றேகன்) செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களான,டெல்சன்,உருத்திரன்,தயாளினி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.