இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சனாதிபதியின் கருத்துக்கு ஐ. நா ஏன் மௌனம்?

தமிழ் சிவில் சமூக அமையம்

Tamil Civil Society Forum


28.01.2020

சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தெரிவிக்கப்பட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகள் இறந்து விட்டனர் என்ற கருத்திற்கு ஐ.நா மௌனம் சாதிப்பது ஏன்?

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஐ. நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அவர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சனாதிபதியின் ஊடகப்பிரிவினால் 17.01.2020 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்தது:
1) ‘காணாமல் ஆக்கப்பட்டோர் யாவரும் இறந்து விட்டனர்’.
2) ‘காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டோர்’
3) ‘தேவையான விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்’;
4) ‘அதன் பின்னர் அவர்களுக்கான உதவி வழங்கப்படும்’.

‘காணாமல் ஆக்கப்பட்டோர் யாவரும் இறந்து விட்டனர்’.
எதனை அடிப்படையாகக் கொண்டு சனாதிபதி ராஜபக்ச மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் அறிய விரும்புகின்றது. இதே போன்று பொறுப்பற்ற விதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 26.01.2016இல் கருத்து தெரிவித்திருந்தாலும் யுத்தத்தின் இறுதி அங்கத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய சனாதிபதி அவ்வாறானவோர் கருத்தை கூறும் போது அது தரவுகளின் அடிப்படையிலானதாக அமையலாம் என ஊகிக்க இடமுண்டு. அவ்வாறெனின் போரின் இறுதி நாட்களில் (தற்போதைய இராணுவத் தளபதி)லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் 58ஆவது படையணியிடம் சரணடைந்தவர்கள் அவ்வாறாக சரண் அடைந்ததன் பின்னர் கொல்லப்பட்டார்கள் என சனாதிபதி உறுதிப்படுத்துகிறாரா என்ற கேள்வி எழுகின்றது. இறுதி யுத்த களத்தில் முக்கிய பிரிவு ஒன்றிற்கு (53ஆவது படையணி) தலைமை ஏற்றிருந்தவரும் தற்போதைய பாதுகாப்பு செயலாளருமான மேஜர் ஜெனரல் கமால் குணரெத்தினவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் சரணடைந்தவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்.

‘காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டோர்’
சனாதிபதி ராஜபக்சவின் இந்தக் கருத்துமுழுமையானவோர் உண்மை அல்ல என்ற விடயத்திற்கப்பால் விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் சரணடைவின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என்பது எந்த விதத்தில் நியாயப்படுத்தக் கூடியது என்ற கேள்வி எழுகின்றது. எந்த வகையில் அவ்வாறு அவர்கள் கொலை செய்யப்பட்டது யுத்த நெறிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் இலங்கை அரசியலமைப்பில் விதந்துரைக்கப்படும் நீதிச் செயன்முறைக்கும் ஏற்புடையது என்ற கேள்விகள் எழுகின்றன.

‘தேவையான விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்’
விசாரணைகளின் பின்னர் மரண சான்றிதழ் வழங்கப்படும் என்ற கூற்று நம்பிக்கை ஏற்படுத்தக் கூடியதல்ல. விசாரணை என்பதன் மூலம் சனாதிபதி ராஜபக்ச கூற வருவது யாது? அனைவரும் இறந்து விட்டார்கள் என பொத்தம் பொதுவாக முடிவெடுத்து விட்டு அதனை நியாயப்படுத்தியும் விட்டு பின்னர் விசாரணை நடத்துவோம் என்று கூறுவது வேடிக்கையானது. யுத்த வெற்றி நாயகர்களை ஒரு போதும் சிறையில் அடைக்க மாட்டேன் எனக் கூறும் சனாதிபதி விசாரணை நடத்துவேன் என்று கூறுவது வினோதமானது. ஜெனீவா செயன்முறைகளுக்கு கணக்கு காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் முடக்கப்படும் என்ற செய்திகள் நிலைமையின் மோசகரமான நிலையை எடுத்து இயம்புகின்றன.

‘அதன் பின்னர் அவர்களுக்கான உதவி வழங்கப்படும்’.
காணமாலாக்கப்பட்ட உறவுகளுக்கு நாம் பொருளாதார உதவியை வழங்குவோம் என்று கூறுவதன் மூலம் பொருளாதாரப் பிழைத்தலுக்கும் தமது உறவுகளை தேடி அறிதலுக்கும் இடையில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்யுங்கள் என்று அரசாங்கம் கூறுவது கொடுமையானது. பொருளாதார நலிவுற்ற மக்கள் தமது உரிமையை கேட்கக் கூடாது என்பது சனநாயக விரோதமானது என்பதோடு அவர்களின் சுய கௌரவத்தை இழிவுபடுத்துவதுமாகும்.

ஐ.நாவின் மௌனம்
சனாதிபதி ராஜபக்ச மேற்சொன்னவற்றை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டியது. இது சனாதிபதி ராஜபக்சவின் கருத்துக்களுக்கு ஐ. நாவின் பதிலென்ன என்ற கேள்வி எழுகின்றது. 2008-2009 இல் இலங்கையில் ஐ. நாவின் செயற்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கி மூனினால் கோரப்பட்டிருந்த சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கையின் முடிவுகளை நாம் ஐ.நாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். தொடர்ச்சியான அமைதி, உடனடி துலங்களின்மை போன்றவற்றால் இலங்கையில் ஐ.நா கட்டமைக்கப்பட்ட ஓர் நிறுவனம் சார் தோல்வியயை சந்தித்ததாக சார்ள்ஸ் பெட்ரி தனது அறிக்கையில் 2012இல் குறிப்பிட்டுருந்தார். அவ்வறிக்கையில் இருந்து ஐ.நா பாடம் படித்திருந்தால் சனாதிபதி ராஜபக்சவின் நிலைப்பாட்டுக்கு காத்திரமான ஒரு பதிலை வழங்கியிருக்க வேண்டும். காலம் தாழ்த்தியேனும் அது நடக்க வேண்டுமென நாம் உரிய தரப்புக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழர்களின் நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்குமான போராட்டத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆணி வேராகும். இந்நேரத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு நாம் வலிமை சேர்ப்பது அவசியமாகும். காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எமது உறவுகளுக்கான போராட்டம் என்ற மன ஓர்மத்தோடு அவர்களுடைய போராட்டத்தில் வலிழமப்படத்த அன்புரிமையுடன் வேண்டுகிறோம்.

(ஒப்பம்) (ஒப்பம்)
அருட்பணி வீ. யோகேஸ்வரன்

இணைப் பேச்சாளர்

கலாநிதி. குமராரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் சிவில் சமூக அமையம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.