இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு? நிலாந்தன்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார்.

ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். அதைத்தான் புதிய ஜனாதிபதியும் சொன்னார். இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் அவர் சொன்னார். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் இயக்கம் பிடித்துச் சென்றிருக்கலாம் என்று அவர் சொன்னார். அதைத்தான் இப்பொழுது விமல் வீரவன்சவும் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரும் புதைக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

சம்பந்தரும் காணாமல் ஆக்கப்படடவர்கள் உயிருடன் இல்லை என்பதே உண்மை என்று கூறுகிறார். கடந்தடிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீன குழுவிடம் அவர் அவ்வாறு கூறினார். மேற்படி குழு கொழும்பில் சம்பந்தரை அவருடைய இல்லத்தில் சந்தித்து. அப்பொழுது அக் குழுவில் அங்கம் வகித்த ஓர் அங்கிலிக்கன் மதகுருகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சம்பந்தரிடம் கேள்விகேட்டார். அப்போது சம்பந்தர் மேற்கண்டவாறு பதில் சொன்னார். அவர் அப்படிசொன்னதும் அந்தமதகுருவின் கண்கள் கலங்கிவிட்டன. அதற்குப்பின் அவர் எதுவுமே பேசவில்லை.

இவர்கள் எல்லாரோடும் ஒப்பிடுகையில் விமல் வீரவன்ச வெளிப்படையாக கதைக்கிறார். காணாமல் ஆக்கப்பட்ட ஆக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர் கூறுகிறார். விமல் வீரவன்ச ஒரு முன்னாள் ஜேவிபி உறுப்பினர். JVP இயக்கத்தின் இனவாத முகங்களில் அவர் மிகத் தீவிரமானவர்.. யுத்த வெற்றிவாதத்தின் பங்காளிகளில் ஒருவர். எனவே அவர் அப்படி கூறுகிறார். ஆனால் அவர் ஒருகாலத்தில் அவரோடு ஒன்றாகச் சாப்பிட்டு ஒன்றாக உறங்கிய JVP தோழர்கள் பலர் கடந்த தசாப்தங்களில் கொன்று புதைத்க்கப்பட்டுவிட்டார்கள். அல்லது குற்றுயிராக ரயர் போட்டு கொளுத்தப்பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு என்னநடந்தது? யார் கொன்றது? என்பது குறித்து யாருமே கிடைக்கவில்லை. அமரர் சுனிலா அபேசேகர போன்ற மனித உரிமைவாதிகள் சிலர் அதைப் பற்றிபேசினார்கள். ஆனால் எந்த இயக்கத்தில் இருந்ததற்காக அவர்கள் கொல்லப்பட்டார்களோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்களோ அந்த இயக்கம் அவர்கள் அவர்களைப்பற்றி கேட்பதை நிறுத்திவிட்டது.

தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை மறக்கப்பட்டுவிட்டது என்று இளைப்பாறிய பேராசிரியர் கலாநிதி ஜெயதிலக்க கூறினார். சிலஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் நடந்த ஒருகருத்தரங்கில் அவர் அவ்வாறு கூறினார். தமிழ் சிவில் சமூக அமையம் ஒழுங்குசெய்த அக் கருத்தரங்கு வவுனியாவில் நடந்தது. அதில் ஜெயதிலக்க மேற்கண்டவாறு கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எப்படி மறக்கபட்டார்கள்? அவர்களைக் குறித்து குரல் எழுப்பவேண்டிய ஜேவிபி ஏன் அதைச் செய்யவில்லை? என்று ஒரு சிங்கள செயற்பாட்டாளரிடம் கேட்டேன். அவர் சொன்னார் ‘அவர்களைக் காணாமல் ஆக்கியவர்கள் தான் உங்களுடைய ஆட்களையும் காணாமல் ஆக்கினார்கள். எனவே காணாமல் ஆகியவர்களை விசாரிக்க வேண்டும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் தண்டிக்க வேண்டும் என்று கேட்டால் இலங்கைத் தீவின் படைத்தர்ப்பைத்தான் விசாரிக்க வேண்டியிருக்கும். ஆனால் JVP யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது. அது யுத்த வெற்றியின் பங்காளியாக காணப்படுகிறது. யுத்தவெற்றியைக் கொண்டாடும் ஒருகட்சி அந்த வெற்றிநாயகர்களை விசாரிக்க கேட்குமா? கேட்காது. இது விடயத்தில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தனக்கும் நீதி தேவையில்லை என இன்று JVP நம்புகிறது. அதனால்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை அது கைவிட்டது. அதைகடந்து வந்துவிட்டது’ என்று அவர் சொன்னார்.

JVP மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிலங்கை அரசியலே அங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கடந்து வந்துவிட்டது. ஒப்பீட்டளவில் தமிழ் மக்கள் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடவும் அதிகதொகையினர் அங்குகாணாமல் ஆக்கப்பட்டார்கள். உத்தியோகபூர்வ தரவுகளின்படி கிட்டத்தட்ட 12000 பேர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின்படி கிட்டத்தட்ட ஒருலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது விடயத்தில் சில மனித உரிமைவாதிகளைத் தவிர பெரும்பாலான சிங்கள தலைவர்கள் அந்த விவகாரத்தை அப்படியே கைவிட்டுவிட்டார்கள். அதைமறந்து விட்டார்கள். ஆதைக் கடந்து வந்துவிட்டார்கள். பலஆண்டுகளுக்கு முன்பு அமரர் சுனிலா அபேசேகர அதாவது அவர் இறப்பதற்கு முன்பு சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதுவழங்கப்பட்ட காலம் மலையகத்தில் ஓரிடத்தில் ஒருமனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதைப்பற்றி தனது நேர்காணலில் குறிப்பிட்டார். இதுவே லத்தீன் அமெரிக்கா என்றால் அங்கே அப் புதைகுழியை நோக்கி பாதிக்கப்பட்டமக்கள் படையெடுத்துவருவார்கள். தங்களுடைய உறவினர்களின் எச்சங்கள் உண்டா என்று தேடுவார்கள். ஆனால் இலங்கைத் தீவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. புதைகுழியை நோக்கி பாதிக்கப்பட்ட மக்கள் யாருமே பெருமளவில் வரவில்லை என்று சுனிலா கவலைப்பட்டு இருந்தார்.

இது ஒருகொடுமையான உண்மை இலங்கைத் தீவு மனிதப் புதைகுழிகளுடன் சகஜமாக வாழப் பழகிவிட்டது. ஒரு மேற்கத்திய ஊடகம் ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சிக்குப் பின் பின்வருமாறு எழுதியது ‘காணாமல்போனவர்களை அதிகம் உடைய ஒரு தீவு’என்று

இவ்வாறு தமது சொந்த இனத்துக்குள்ளேயே எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் ஆறுகளில் வீசப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை கடந்துவருகிற ஓர் அரசியல் பாரம்பரியமானது தன்னுடைய இனமல்லாத வேறு ஒரு இனத்தின் விவகாரத்தில் எப்படிநடந்து கொள்ளும்?

இக்கேள்வியை உலக சமூகத்தை நோக்கியம் ஐநா வை நோக்கியம் மனித உரிமை நிறுவனங்களை நோக்கியும் தமிழ் மக்களை நோக்கியும் கட்டுரை கேட்கிறது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மறக்கும் ஒருதீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

இது விடயத்தில் ஆகப் பிந்திய கூற்று விமல் வீரவன்ச உடையது. அவர் ஒப்பீட்டளவில் வெளிப்படையாக ஒரு உண்மையை போட்டு உடைக்கிறார். மண்ணில் தோண்டி எடுங்கள் என்று கூறுவதன் மூலம் அவர்கள் புதைக்கப்ப்பட்டு விட்டார்கள் என்று கூறுகிறார். அப்படிஎன்றால் அவர்களைப் புதைத்தது யார்? எங்கே? புதைத்தது? ஏன் புதைத்தது? எந்த நீதிகட்டமைப்பின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டார்கள்? எந்த நீதிமன்றம் அவர்களுக்கு மரணத் தீர்ப்பு வழங்கியது? அதுவும் காணாமல் ஆக்குமாறு எந்தநீதிமன்றம் தீர்ப்புவழங்கியது? அந்ததண்டனையை நிறைவேற்றிய சட்டத்தின் காவல் அமைப்பு இது எது?

இக்கேள்விகளுக்கு வீரவன்சவும் உட்பட அனைத்துசிங்களத் தலைவர்களும் பதில் கூறவேண்டும். ஆனால் அவர்கள் அதற்கு ஒருடெம்ப்ளேட் பதில் வைத்திருக்கிறார்கள். அது என்னவெனில் புலிகள் இயக்கமே அதற்கு பொறுப்பு என்பதுதான். அப்படிஎன்றால் இறுதிக்கட்டப் போரில் அரசபடைகளிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது சரணடைந்த புலிகள் இயக்கத்தவர்களை யார் காணாமல் ஆக்கியது?

எனினும் இது விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்று கூறுவதே அரசாங்கத்தைப் பொறுத்தவரை பாதுகாப்பானது. ஏனெனில் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் எங்கே? யாரால்? தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? எந்த நீதிபரிபாலன கட்டமைப்பின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? போன்ற கேள்விகளுக்குப தில் கூற வேண்டும். ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் இவ்வாறு ஒரு தொகுதிகைதிகளை ரகசியமாக தடுத்துவைத்து இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவ்வாறுபதில் கூறப் புறப்பட்டாள் இலங்கை அரசாங்கம் ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக வெளிஅரங்கில் பார்க்கப்படும். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை என்று கூறுவதே ஒப்பீட்டளவில் அவர்களுக்கு பாதுகாப்பானது. ஏற்கனவே காணாமல் ஆக்கப்பட்ட சிங்களமக்களை எப்படிமறந்துவிட முடிந்ததோ அப்படியே வரும் காலங்களில் தமிழ் மக்களின் விடயத்திலும் மறதிதான் அதற்கு சரியான தீர்வு என்று சிங்கள அரசியல்வாதிகள் நம்புகிறார்களா?

அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ அவர்களின் நம்பிக்கைகளை மெய்ப்பிக்கும் விதத்தில் தான் தமிழ் பகுதிகளில் நிலைமைகாணப்படுகிறதா? குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சுதந்திரதினம் என்றழைக்கப்பட்டநாளில் கிளிநொச்சியில் நடந்தசம்பவங்கள் அதைத்தான் மெய்ப்பிக்கின்றனவா?

கடந்த செவ்வாய்க்கிழமை சுதந்திரதினம் அன்றுகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒழுங்குபடுத்திய இரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளும் தமிழ் மக்கள் ஒருதிரளாக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில். கூட தமிழ் தரப்பு ஒற்றுமைப்பட முடியவில்லை. அன்றைக்கு கிளிநொச்சியில் கூட்டமைப்பினரின் தலைமையில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்குபற்றிய மக்களின் மொத்த தொகையைவிட அதிகரித்ததொகையினர் மற்றொரு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு தமிழ் தேசியமக்கள் முன்னணி தலைமைதாங்கி இருக்கிறது. அதில் ஒர் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் ‘காசுக்காக போராடமாட்டோம் என்றுகுரல் எழுப்பினார்கள்’அப்படியென்றால் யார் காசுகொடுப்பது? யார் காசு வாங்குவது? யாரை யார் இயக்குவது?

இறுதிக் கட்டபோரில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய தமிழ் பட்டினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக இரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இது எதைக் காட்டுகிறது? தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெறும் பொருட்டு ஒருபெரும் திரளாக மேலெழுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதைத்தானா? சுதந்திரதினம் என்றழைக்கப்படட ஒருநாளைக் கொண்டாடுவதில் நாடு இன ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு காணப்பட்ட ஒருநாளில் தமிழ் மக்களும் இரண்டாக அல்லது அதைவிட பலதுண்டுகளாக சிதறிக் கிடக்கிறார்கள் என்பதையா?

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.