Home இலங்கை விக்கி VS தமிழ் தேசிய மக்கள் முன்னணி….

விக்கி VS தமிழ் தேசிய மக்கள் முன்னணி….

by admin

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப்.கட்சிக்குள் இணைந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியமைக்கு வட.மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் பதிலளித்துள்ளார். நேற்று  (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

கேள்விகள்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியுடன் இணைந்துள்ளதாக கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன?

பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்? அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள்?

ஊடகவியலாளர்:- ஆம்.

பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா? எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா? அப்படியானால் என்னவென்று? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும்.

தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாக முடியும். ஜீ.ஜீ. , சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே! எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சி தான்! அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம்.

நாங்கள் கேட்பது சமஷ்டி. அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசாங்கங்களுக்கும் இடையில் ஏதோவொரு கரவான (மறைவான) இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா?

ஊடகவியலாளர்:- ஆமாம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள்!

பதில்:- சரி! எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா?

அதாவது நாங்கள் மத்திய அரசாங்கங்களுடன் கரவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம்? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கள் தலைவர்களோ ஒன்று சேரவிடாது தடுப்போம் அல்லவா? அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா?

ஊடகவியலாளர்:- ஆமாம்.

பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறு தானே கூறிவருகின்றோம்? அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

1.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் குலைத்தவர் யார்?

2.தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார்?

3.பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்தது யார்?

4.காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டுபண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார்?

5.யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார்?

6.ஈ.பீ.ஆர்.எல்.எப்.உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார்?

7.எமது இரண்டாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார்?

8.தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார்?

9.இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் கரவாகக் கண்டு வந்தவர்கள் யார்?

10.கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தமது சகோதரனை விடுவிக்க கோட்டாபயவுடன் கரவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்?

11.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார்?

12.பேசுவது முன்னணி, தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசாங்கத்திற்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி?

13.ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ.வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார்?

14.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் அரசியலை கொண்டுசெல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார்?

ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும்?

ஊடகவியலாளர்:- அரசாங்கத்திற்கும், பேரினவாதிகளுக்கும்!

பதில்:- சரியாகச் சொன்னீர்கள்! அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா? அவர்களா?அத்துடன் இத்தனை தரம் மக்களைப் பிரித்துப் பிரித்து செயற்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம்.

எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது தமது குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை என சி.வி. குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More