இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சமூகங்களின் குரல்களாகக் கவிப்பாடும் மரபுகள் – கலாநிதி. சி. ஜெயசங்கர்.

கவித்துவமும், புலமைத்துவமும், சமூக நோக்கும், விமர்சனப் பாங்கும் கொண்ட மக்கள் கலை வடிவமாகக் கவிப்பாடும் மரபுகள் இருந்து வருகின்றன. பொது மக்களின் பொதுப் புத்தியின் பிரதிபலிப்புகள், கவித்துமாகவும், எழுந்தமானதாகவும், அங்கதமாகவும் வந்தமரும் கலை வடிவமாகக் கவிபாடும் மரபுகள் காணப்படுகின்றன. அறிவும், படைப்பாற்றலும், விமர்சன நோக்கும் பொதுமக்களுக்கு உரியவை அல்லது எல்லா மனிதர்க்கும் இயல்பானவை என்பதை அறிவுறுத்தும் சாதனங்கள் பலவற்றுள் கவிப்பாடும் மரபு குறிப்பிடத்தக்கது.

நவீனமயமாக்கம் என்னும் காலனியமயமாக்கம் காரணமாக ஆதிக்கம் பெற்ற எழுத்து மரபானது அவ்வாறல்லாத மரபுகளை குறிப்பாகப் பொது மரபாக இருந்து வந்த வாய்மொழி மரபை அறிவு பூர்வமற்றது, பாமரத்தனமானது என்ற பண்பாட்டு வன்முறையை நிகழ்த்தியதன் மூலமாக, வாய்மொழி மரபுகளையும் அதுசார் உள்ளுர் அறிவு முறைகளையும் ஓரங்கட்டி, எழுத்துடன் வந்த உயர் குழாம் மரபான ஏட்டு மரபையும் அதற்கும் மேலாக அச்சு மரபையும் உண்மையானதென உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் உச்சமாக, வாய்வழியாகப் பரிமாற்றப்படும் செய்திகள், வதந்திகள் என்னும் பொய்மைகளாக கட்டமைக்கப்பட்டன.

மாறாக, அதிகாரபூர்வமான செய்தி நிறுவனங்கள் வழி பரப்பப்படும் பொய்களும், செய்திகள் என்ற மெய்ப்பிப்பைப் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டன. ஈழப்போரில் ‘ லங்கா புவத்’ என்ற இலங்கையின் செய்தி நிறுவனம் ‘அவித்த புட்டுகுள்ளால் கரிக்குருவி பறக்கிறது’ என்பதான செய்திகளை வெளியிட்டதன் வாயிலாக தமிழ்ப் பகுதிகளில் அந்தக்காலத்தில் வாழ்ந்த பொய்யர், புழுகர் லங்கா புவத் என அழைக்கப்பட்டனர்.

ஆயினும், செய்தி உண்மை; வதந்தி பொய் என்னும் புனைவு நவீன காலனியக் கல்வியின் எழுத்து ஆதிக்கம் காரணமாக பொதுப்புத்தியில் இருந்து அகற்றப்பட முடியாததாகவே இருந்து வருகின்றது. எழுதப்பட்ட விடயம் அச்சவாகனமேறி நூலுருவம் பெற்று விட்டால், நம்பி வாசிக்கப்படுவதாகவும், வாய்வழியாகப் பாடப்படும், பகிரப்படும் விடயங்கள் அந்த வகையிலான நம்பிக்கையைப் பெற்றிராத வகையிலும் காலனியம் அறிமுகப்படுத்திய கல்வி முறை சமுகத்தின் மத்தியில் மிகவும் ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

அத்துடன் நூற்றாண்டு கால பல்வகை அறிவு முறைகளையும், அவை காலனியம் கொண்டு வந்த நவீன முறைமைக்கு ஒத்ததாக இல்லாமையை காரணங்காட்டி நிராகரிக்க வைத்திருக்கின்றது. இது உள்ளுர் மருத்துவர்கள், தொழிநுட்ப வல்லுநர்கள், விவசாயிகள், பண்டிதர்கள், புலவர்கள், கலைஞர்கள் என இன்னோரன்ன உள்ளுர் அறிவாளுமைகளையும் அவர்களுடன் தொடர்புடைய அறிவு முறைமைகளையும் பல்கலைக்கழக அறிவுப் பண்புகளுக்கு தகுதியற்றவர்களாக நிராகரித்திருப்பது, நவீன வரலாறாக இருந்துவருகிறது.

இத்தகையதொரு பின்னணியில் கவிபாடும் ஆற்றுகை என்பதன் அறிமுகம் மற்றுமொரு அறிவுமுறையின் இருப்பையும், அதன் இருப்பின் மூலங்களை அறிந்து கொள்வதுமான முயற்சியாக அமைவதுடன், இதன் சமகாலத் தேவையினை முன்வைப்பதன் வாயிலாகவும், காலனிய நீக்கம் பெற்ற கல்வி முறைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதன் வாயிலாகவும் விடுதலை பெற்றதும், நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதுமான சமூகங்களின் உருவாக்கங்களுக்கான உலகந்தழுவிய காலனிய நீக்க கல்விமுறையின் ஓர் அம்சமாக இது அமைகிறது.

அதேவேளை காலனியத்தால் உறைய வைக்கப்பட்டிருக்கின்ற உடலினதும் உள்ளத்தினதும் பேச்சாற்றலை இயங்க வைப்பதற்கும்; : புத்தியும், உடலும், உளமும் இயைந்து சீறுடன் இயங்கும் இயல்பை மீளவும் பெற்றுக் கொள்வதற்குமான வழிமுறைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டிருக்கும் கவிபாடும் மரபை, மீளக் கொண்டு வருவதும் மீளுருவாக்கம் செய்து வருவதும் சமூக நீதிக்கும், சமூக சனநாயகத்துக்குமான கலைவழிக் கல்விச் செயற்பாடாகவும் : கலைச் செயல்வாதமாகவும் முன்னெடுக்கும் நோக்குடன் கவிபாடும் திருவிழா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிழக்குப் பல்கலைகழக நுண்கலைத் துறையானது பத்தாண்டுகளாக உலக தாய்மொழி தினத்தை தாய் அல்லது முதல் மொழியை மையப்படுத்திய கல்விச் செயற்பாடாகவும்  கலைச் செயல்வாதமாகவும் முன்னெடுத்து வருகின்றது. இச்செயற்பாடு பல்வேறு மொழிகளைப் பேசும் சமூகங்களதும் ஓரங்கட்டப்பட்ட அல்லது விளிம்பு நிலைச் சமூகங்களதும் மொழிகளை அடிப்படையாகக் கொண்டதாக கலைத் திருவிழாக்களையும் கருத்தாடல்களையும் காட்சிப்படுத்தல்களையும் சமூகங்களுடன் இணைந்த செயற்பாடாக பல்கலைக்கழகச் சூழலிலும் நிகழ்த்தி வருகின்றது. இந்த வகையிலேயே 2020 மாசி மாதம் 21 இலும் ‘கவிபாடும் கலைத்திருவிழா’ பல்கலைக்கழக சமூக ஒருங்கிணைப்பில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கலாநிதி. சி. ஜெயசங்கர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap