இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

“எமது காலத்துக்கான எங்களுக்கான அரங்குகளை உருவாக்கும் கற்றல்கள் எமக்குரியதாகட்டும்”

மனிதசமூகங்களின் தொன்மையான கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகவும் நம்பிக்கை, விளையாட்டு, அறிவூட்டல், மகிழ்வூட்டல், சமூக ஒன்றுகூடல், ஆற்றல்களை வெளிப்படுத்தல், கொண்டாடுதல், முரண்பாட்டு முகாமைத்துவம், உடல் உள ஆற்றுப்படுத்தல், அறிவுதிறன் அனுபவப் பகிர்வுக் களமெனப் பலதரப்பட்டவிடயங்கள் இணைந்த வடிவமாக நாடகமும் அரங்கமும் காணப்படுகின்றது.

மனிதசமூகங்கள் ஒவ்வொன்றும் தங்களை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன, மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சமூகங்களினால் இலகுவாகவும் எளிமையாகவும் புளங்கப்படக் கூடிய அல்லது கையாளப்படக் கூடிய உருவாக்கங்களாக நாடகமும் அரங்கும் திகழ்ந்து வந்திருக்கின்றன, திகழ்ந்துவருகின்றன.

ஈழத்தமிழர்தம் சூழலில் பல்வகைப்பட்ட நாடக அரங்க வடிவங்கள் சமகாலத்திலும் ஆற்றுகைநிலையில் காணப்பட்டுவரினும் காலனியவாதிகளால் அவர்களது நோக்கத்திற்காகவும், தேவைக்காகவும் உருவாக்கப்பட்ட மண்டபங்களில் அமைந்த படச்சட்ட மேடைகளான அரங்கில் நிகழும் நாடகங்களையே முறையே அரங்காகவும் நாடகமாகவும் கண்டுகொண்டு இருக்கிறோம். இதனையே நவீனமானதெனக் கருதிக்கொண்டும், படித்துக் கொண்டும், பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம்.

எங்களது பிரதேசங்களில், எங்களது தேசத்தில் பயிலப்பட்டு வரும் காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர்சங்கர், மகிடிக்கூத்து, வடமோடி, தென்மோடி, நாட்டைக்கூத்து, காத்தவராயன் கூத்து, கோவலன்கூத்து, புலிக்கூத்து எனவிரிந்து செல்லும் நாடகமும் அரங்குடன் கோலம், சொக்கரி எனப் பலவகைப்பட்ட நாடுமுழுவதும்மான நாடக அரங்குபற்றி அறிதலும் அதில் இயங்குதலும் அவசியமாகின்றது.

அதுபோல் உலகம் முழுவதும் எங்களையொத்தநிலமைகளில் வாழும் மனிதசமூகங்களதும்,மற்றும் உலகின் பல்வேறுசமூகங்களதுநாடகஅரங்குகளுடன் பரீட்சயமாகிக் கொள்வதும்,புரிந்துகொள்வதும் மிகவும் அவசியமாகும். அப்போதுதான் உலகினதும், உலக நாடகஅரங்கினதும் மெய்யான பரிமாணத்தை விளங்கிக் கொள்ளமுடியும்.

இவற்றினடியாக எங்களுக்கான எங்களது காலத்துக்கான நாடகஅரங்குகள் பற்றிக் கற்பனை செய்வோம். சிந்தனை செய்வோம், உருவாக்கம் செய்வோம், மீள்பார்வைசெய்வோம், மீளுருவாக்கம்  செய்வோம்.
இந்தஉலகம்  எல்லா உயிர்களுக்கும் எல்லாவற்றுக்குமான சொர்க்கமாக அமையும் வகையில் நாடகஅரங்குகள் செய்வோம்.

இயற்கை இந்தபூமியை
அழகாய் வாழத் தந்தது
பூச்சி புழு மனிதரெல்லாம்
மரஞ் செடிகொடிகளுடன்
இனிதுவாழவைத்தது

கண்ணில் காணும் உயிர்களும்
கண்ணில் படாஉயிர்களும்
உலகில் வாழ்ந்துவருவது
உலகைக் காத்துவருவதே

கலாநிதிசி. ஜெயசங்கர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap