இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை   எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக  ஒத்திவைப்பு.

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர் வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்று (25) செவ்வாய்க்கிழமை மாலை ஒத்தி வைத்தார்.
மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில், மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, கடந்த விசாரணையின் போது அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களுக்கு காணாமல் போனோரின் குடும்பங்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் பிரதி வாதங்களை மன்றில் முன் வைத்தார்.
காணாமல் போனோரின் குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு அரச தரப்பு சட்டத்தரணியால் கடந்த வழக்கு விசாரணையின் போது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், இந்த வழக்கு இறந்தவர்களுடையதும் காணாமலாக்கப்பட்டவர்களினதும் வழக்கு என்பதால், அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்த முடியாது என மன்றில் சுட்டிக்காட்டினார். இதுவொரு மனிதாபிமான பிரச்சினை தொடர்பான வழக்கு எனவும் சட்டம் சம்பந்தமான பிரச்சினையாக இதனைக் கருத முடியாது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.
காணாமற்போனோரின் பெற்றோர்கள் சுமார் ஆயிரம் நாட்களாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காணாமல் போனோர் சார்பாக சட்டத்தரணிகள்  முன்னிலையாகி இருப்பதாக தெரிவித்தார்.
காணாமல் போனோர் சார்பில் மன்றில் 13 சத்தியக்கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.
மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையின் ஊடாக மனித எச்சங்கள் 300 வருடங்கள் பழமை வாய்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட மக்களும் சட்டத்தரணிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மன்றுக்கு அறிவித்தார்.
விசாரணையின் ஒரு பகுதி அறிக்கையாகவே அந்த அறிக்கையை நீதிமன்றம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் மேலதிக அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தடயவியல், தடயப்பொருட்கள், சான்றுப்பொருட்கள் என பலதரப்பட்ட அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இந்த விசாரணை தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை முன் வைத்தார்.
மன்றின் பாதுகாப்பிலுள்ள சான்றுப்பொருட்கள் முறையான வகையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், சட்ட வைத்திய அதிகாரியிடமுள்ள மனித எச்சங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையின் சாவியை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், சட்ட வைத்திய அதிகாரியிடமுள்ள சான்றுப்பொருட்களை மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் கட்டளையிட வேண்டும் எனவும் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர் வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.  #மன்னார்  #மனிதப்புதைகுழி  #ஒத்திவைப்பு #சதொச #காணாமல்போனோரின்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.