இலங்கை பிரதான செய்திகள்

“போரின்போது காணாமல் போனோரை மறந்து விடுங்கள்”

காணாமல் போனவர்கள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகாணமால் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோட்டாபய கூறியிருந்தார்.

இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, ராணுவத்தைச் சேர்ந்த பெருந்திரளானோரும் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதன்படி, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனையொன்று நாட்டில் உள்ளதாகவும், அந்த பிரச்சனையை அனைத்து தரப்பினரும் மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதல்களுக்கு இலக்காகி, உயிரிழந்தவர்களே காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாகவே காணாமல் போனோரின் உறவினர்கள் கூறி வருவதாக தெரிவித்திருந்தனர். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை என குறிப்பிட்டார்.

யுத்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலத்காரமாக அழைத்து செல்லப்பட்டவர்களே காணாமல் போயுள்ளமை யுனிசெஃப் நிறுவத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 4000திற்கும் அதிகமானோர் யுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதையும் அவர் இதன்போது கூறினார்.

யுத்தத்தில் உயிரிழந்து, சடலங்கள் கிடைக்காதவர்களே இந்த காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். யுத்த களம் தொடர்பிலான புரிந்துணர்வு இல்லாதவர்களே, இவ்வாறான பிரச்சனைகளை எழுப்பி வருவதாக அவர் கூறினார். காணாமல் போயுள்ளதாக கூறிக் கொள்ளும் சிலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

gotabaya rajapaksa
படத்தின் காப்புரிமைPMD SRI LANKA
Image captionஇலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் பாதுகாப்பு செயலராக இருந்தார் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

இதனால், குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் முழுமையான ஆய்வொன்று நடத்தப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், காணாமல் போனோர் விவகாரத்தை மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என கூறிய ஜனாதிபதி, காணாமல் போனமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பிரகீத் என்னெலிகொட உயிரிழந்திருக்கும் பட்சத்தில் அவருக்கும் மரண சான்றிதழை வழங்க முடியும் என குறிப்பிட்டார்.

ஜெனீவா விவகாரம்

நாடொன்றிற்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமொன்றை இதுவரை எந்தவொரு நாடும் ஆதரிக்காத நிலையில், இலங்கையை ஆட்சி செய்த கடந்த அரசாங்கமே அதனை ஆதரித்திருந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் தனக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அந்த தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் தாம் ஒருபோதும் ஈடுபட போவதில்லை என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்திருந்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் ஊடாகவே அவர்களின் பிரச்சனைகளுக்காக தீர்வை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழர்கள் முதலில் பொருளாதாரத்தை இலக்காகவே கொண்டே போராட்டங்களை ஆரம்பித்திருந்ததாக கூறிய ஜனாதிபதி, பின்னர் அந்த போராட்டங்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும், அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில், பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

’19ஆவது திருத்தச் சட்டமே பிரச்சனை’

கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமே, நாட்டின் அரசியல் பிரச்சனைகளுக்கான பிரதான காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

19ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால், நிறைவேற்று அதிகாரத்திற்கும் (ஜனாதிபதி), சட்டவாக்கத்திற்கும் (நாடாளுமன்றம்) இடையில் பிரச்சனை ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியொருவருக்கு, 19ஆவது திருத்தச் சட்டம் இருக்கின்றமையினால் கடமையாற்ற கடினமாக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் காரணமாகவே நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை

மத பயங்கரவாதமொன்று நாட்டில் மீண்டும் தலைத்தூக்காதிருக்கும் வகையில் தான் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரச புலனாய்வுத்துறை, ரகசிய போலீசார், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளை ஒன்றிணைந்து, அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

மத பயங்கரவாதம் மற்றும் ஏனைய பயங்கரவாதங்களை இல்லாதொழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சிறந்ததாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது இடைகால அறிக்கையிலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகள் விவகாரம்

நாட்டில் அரசியல் கைதிகள் என்ற ஒரு தரப்பு இருக்கின்றமை தொடர்பில் தான் நம்பவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

Pmd sri lanka
படத்தின் காப்புரிமைPMD SRI LANKA

ராணுவ ஆட்சி முறைமை ஏற்படுத்தப்படுகின்றதா?

கடந்த அரசாங்கம் பல ராணுவ அதிகாரிகளை உயர் நிலை கடமைகளில் ஈடுபடுத்தியிருந்த போதிலும், அது தொடர்பில் எவரும் குரல் எழுப்பாத பின்னணியில் தன்னை மாத்திரம் விமர்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

நாட்டில் ராணுவத்தினர் சிவில் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ராணுவ அதிகாரிகள் பல்வேறு பயிற்சிகளை பெற்று, சிறந்த தலைமைத்துவத்தை பெற்றிருக்கின்றமையினால், அவர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனாலேயே தான் ராணுவ அதிகாரிகளை கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

BBC – Tamil

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.