Home இலங்கை இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போதும் காணி உரிமம் இல்லை

இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போதும் காணி உரிமம் இல்லை

by admin
1974ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தென் பகுதி மக்கள் தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்த நிலையில் 1978 ஆண்டு மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள பூ மலர்ந்தான் பகுதியில் அரச அதிகாரிகளினால் குடியமர்த்தப்பட்டனர்.
குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது ஜனசக்தி வீட்டு திட்டம், ஜனசக்தி வீட்டு உரிமையாளர் அட்டை என சகல வித அரச வாழ்வாதார உதவிகளும் ஆவணங்களும் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
அதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக குறித்த தென் பகுதி மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு சென்று பின்னர் மீண்டும் வந்து தொடர்சியான யுத்த சூழல் காரணமாக சொந்த பகுதிக்கு வர முடியாமல் வேறுபகுதிகளில் அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
  யுத்தம் நிறை வடைந்த பின்னர் அரச அதிகாரிகளினால் குறித்த தென் பகுதி மக்கள் மீண்டும் தங்கள் சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
 குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு இந்தியன் வீட்டு திட்டமும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிலையில் 2011 தொடக்கம் இன்று வரை குறித்த மக்களுக்கான காணி உரிம பத்திரம் வழங்கப்படாமல் மறுக்கப்படுவதாகவும்   தற்போது தனி நபர்கள் குறித்த காணிகள் தங்களுக்கு சொந்தமான காணி என தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக 2013,2014 ஆண்டுகளின் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் அரச அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு ஜனாதிபதி , மாகாண காணி ஆணையாளர் , காணி அமைச்சு , பிரதமர் , போன்ற பல உயர் அதிகாரிகளை நாடியும் தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் உயர் அதிகாரிகள் பிரதேச செயலகத்திற்கு வழங்கிய கட்டளையை நிறை வேற்றாததன் நிமித்தமாக குறித்த பூ மலர்ந்தான் பகுதியை சேர்ந்த அனேக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது வரை குறித்த கிராம மக்கள் பூமலர்ந்தான் பகுதியில் காணி உரிமம் இல்லாமலே வாழ்ந்து வருகின்ற நிலையில் 2018 ஆண்டு குறித்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான காணி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.
அதன் மூலம் பல விசாரணைகள் இடம் பெற்ற நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை தியம் மீண்டும் குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசாரணை மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய பொறுப்பதிகாரியும் விசாரணை அதிகாரியுமான  வசந்தராஜ் முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த கிராம மக்களால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகத்திற்கு சமர்பிக்கப்பட்ட வரை படம் தொடர்பாகவும் தற்போது குறித்த காணிகளை தனியார் காணிகள் என தெரிவித்து ஆவணங்களை சமர்பித்துள்ளவர்களின் ஆவணங்கள் தொடர்பாகவும் பரிசீலனை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை பெற்று இரு வாரங்களில் குறித்த விடயம் தொடர்பான தீர்வை மேற்கொள்வதாக விசாரணையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  #இனக்கலவரம் #சிங்களமக்கள்  #மீள்குடியேற்றம் #காணிஉரிமம்
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More