இலங்கை பிரதான செய்திகள்

மருத்துவரை தாக்கிய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார் மற்றும் அவருடன் சென்ற யாழ்ப்பாணப் பல்கலை்ககழக ஊழியர் சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரு ஊழியர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (16) பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மருத்துவர் நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் ஆகியோர் நேற்று பிற்பகல் கோரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வெளிநாட்டு குடிமக்கள் இருவர் றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.

அங்கு சென்ற மருத்துவரும் அவரது நண்பரும் குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கிய மருத்துவர் நந்தகுமார், அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார். இதன்போது றியோ ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தினர். கற்களாலும் எறிந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பாக மருத்துவரும் அவரது நண்பரும்  காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர்.  முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர்  தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் இரு சந்தேக நபர்களை கைது செய்து இன்றைய தினம் யாழ்.நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான் தாக்குதல் நடத்திய இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.   #கொரோனா  #மருத்துவர்  #விளக்கமறியல்  #றியோ

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link