Home உலகம் “உலக வல்லரசை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா – அம்பலமாகும் இயலாமை – ஆடிபோயுள்ள மக்கள்”

“உலக வல்லரசை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா – அம்பலமாகும் இயலாமை – ஆடிபோயுள்ள மக்கள்”

by admin
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி’ என்று கூறி அலட்சியம் காட்டிய அதிபர் டிரம்ப் தலைமையிலான வல்லாதிக்க நாடு இப்போது அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு தீர்வு அளிக்க முடியாமல் திணறி வருவதைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது.

வெளியிலிருந்து பார்த்தால் இந்த நாடு பலருக்கும் ஒரு முழுமையான நாடாகத் தோன்றும். தங்களுடைய வருமானம் முழுவதையும் செலவிட்டு, வாழ்வை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு, ஆபத்தான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சில நாட்களுக்குள் இந்த நாடு முற்றிலும் மாறிவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் 230க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 18,500க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. (Plz update)

இது இன்னும் எவ்வளவு மோசமாகப் போகும், எவ்வளவு நாட்களுக்குப் போகும் என்று யாருக்கும் தெரியவில்லை.

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால் உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும், தனது தீர்ப்பை சொல்லத் தவறாத ஒரு நாட்டில், தங்களுடைய வல்லமை குறித்து வரம்புகளைத் தாண்டி பெருமையடித்துக் கொள்ளும் தலைவர்களைக் கொண்ட ஒரு நாடு, உலகின் வல்லாதிக்க நாடு எந்த அளவுக்கு அம்பலப்பட்டும், உள்நாட்டளவில் சிறுமைப்பட்டும் கிடக்கிறது என்பதை பலராலும் பார்க்க முடிகிறது.

மோசமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், “நம்பத்தகாததாக இருக்காது,’ “அமெரிக்க மக்கள் தொகையில் பாதி பேருக்கு கோவிட் – 19 தொற்று ஏற்படும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைவார்கள்” என்று அமெரிக்க மத்திய பொது சுகாதாரப் பாதுகாப்பு ஏஜென்சியான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் (சி.டி.சி.) முன்னாள் டைரக்டரான டாம் பிரியெடென் கூறுகிறார்

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

“நியூயார்க் அல்லது லண்டனுக்கு பெருமையுடன் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்த சீன பெற்றோர்கள்கூட, மாஸ்க்குகள் மற்றும் கிருமிநாசினிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது 25,000 பவுண்ட் செலவு பிடித்தாலும் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு வரச் செய்கின்றனர்” என்று ஒரு செய்தி கூறுகிறது.

“நியூயார்க்கில் இருப்பதைவிட, சீனாவுக்கு திரும்பிச் செல்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்று நினைத்ததால் நாங்கள் திரும்பி வந்தோம்” என்று இந்த மாதத்தில் கிழக்கு சீனாவில் உள்ள தனது நகரத்துக்குத் திரும்பிய 24 வயதான கல்லூரி பட்டதாரி மாணவர் சொன்னதாக செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கொரோனா பரவுதல் மற்றும் மரணங்கள் அதிகரித்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சீனா எத்தகைய போராட்டங்களை சமாளித்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.

பரிசோதனை மற்றும் அவசர கால திட்டங்களை உருவாக்காமல், வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்று டிரம்ப் நிர்வாகத்தின் மீது அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

“நாங்கள் அதை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்” என்று ஜனவரி பிற்பகுதியில் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பு மாநாட்டின்போது சி.என்.பி.சி.க்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்களை நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நிலைமை வேகமாக மாறியது. நாட்டின் நிலவரத்தைப் பார்ப்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது – அனைவருக்கும் ஆரோக்கிய வசதி என்பதில் அரசின் பங்களிப்பு அரசியல் விளையாட்டாக மாறிவிட்ட நிலையில் – ஆலோசனைகளுக்குப் பல நாட்கள் எடுத்துக் கொண்டதால், கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்கத் திணறி வருகிறது.

நாட்டின் மிக உயர்ந்த சுகாதார ஏஜென்சியான சி.டி.சி. தங்களுடைய கொரோனா வைரஸ் பரிசோதனை நடைமுறையை உருவாக்கியுள்ளது. ஆனால் உற்பத்தியில் ஏற்பட்ட குறைபாடுகளால், ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிவுகள் முழுமை பெறாமல் உள்ளன.

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தப் பிரச்சினைகள் இப்போது தீர்க்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பஞ்சு உருட்டு குச்சிகள், கையுறைகள், கொரோனா பரிசோதனைக்குத் தேவைப்படும் சாதனங்கள் மற்றும் இதர பொருட்கள் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் நடைபெறவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசின் ஆயத்த நிலைகள் பற்றி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும், தன்னைச் சுற்றி மருத்துவத் தொழில்துறையினரை வைத்துக் கொண்டு டி.வி. முன் அதிபர் டிரம்ப் தோன்றினார். தங்களுடைய பங்கை சிறப்பாக ஆற்றி, ஆதரவு அளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

“அமெரிக்காவில் பெரிய அளவில் தொற்றுநோய் பரவும் நிலையில், தேவையான மருத்துவ ஆதரவுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் நல்ல மனது கொண்ட கொடையாளர்களின் தயவை நம்பியிருக்க வேண்டியுள்ளதே என்பது கவலைக்குரிய, செயல்பாடற்ற நிலையைக் காட்டுவதாக இருக்கிறது” என்று பத்திரிகையாளர் டேவிட் வாலஸ்-வெல்ஸ் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். ‘America is broken’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் டிரம்ப் மற்றும் அரசு நடைமுறைகள் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“முன்னணி சேவையாளர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் மன்றாடி, கட்டணங்களுக்கு விலக்கு தருதல், பரிசோதனைகளுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்குதல் ஆகியவற்றுக்கு தற்போதைய நிர்வாகம் சம்மதிக்க வைக்க முயற்சிக்கும் என்பது மிகையான கற்பனையாக இருக்காது.”

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பரிசோதனை வசதிகள் கிடைத்தாலும், பலருக்கும் அதற்கான செலவை ஏற்க முடியாது – நீங்கள் காப்பீடு செய்திருக்காவிட்டால், விளிம்பில் வாழ்வதாக அர்த்தமாகும் நாடாக இது உள்ளது.

தனிப்பட்ட பத்திரிகையாளராக இருக்கும் கார்ல் கிப்சன், காப்பீடு செய்து கொள்ளவில்லை. கொரோனா அச்சத்திலான காலக்கட்டத்தில் வாழ்வது பற்றி அவர் எழுதியிருக்கிறார்.

“அமெரிக்காவில் சுகாதார சேவையின் அதிக செலவு காரணமாக, 2013ல் இருந்து நான் டாக்டரிடம் போனதே கிடையாது. எனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கியதால் அவசர சிகிச்சைப் பகுதி வரை நான் சென்றிருக்கிறேன்” என்று அவர் நினைவுபடுத்திக் கூறியுள்ளார்.

“நான்கு மணி நேரம் கழித்து, என் கையை டாக்டர் கட்டி தொங்கவிட்டார், வலி மருந்துகள் எழுதிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அதற்கான பில் 4,000 டாலர்கள் அதில் இன்னும் செலுத்தாத தொகை, இன்றளவும் என் கிரெடிட் அட்டை பில்லில் வந்து கொண்டிருக்கிறது. ஒரு வீடு வாடகைக்கு எடுக்க அல்லது ஒரு கார் வாங்க முடியாத அளவுக்கு அந்தக் கடன் எனக்கு அழுத்தத்தைத் தந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சுமார் 27.5 மில்லியன் பேர், அதாவது மக்கள் தொகையில் 8.5 சதவீதம் பேர், 2018ல் காப்பீடு செய்து கொள்ளவில்லை.

செயல்பட வேண்டிய, வேகமாகச் செயல்பட வேண்டிய அழுத்தத்தில், குறைந்த கட்டணத்திலான ஒரு திட்டத்துக்கு டிரம்ப் நிர்வாகம் கையெழுத்திட்டுள்ளது, அதில் இலவசப் பரிசோதனைகளும் அடங்கும் – ஆனால் அதற்கும் எதிர்ப்புக் குரல்கள் உள்ளன.

Banner

வீடுகள் இல்லாமல் முகாம்கள், தங்குமிடங்கள் மற்றும் தெருக்களில் வாழும் சுமார் 5 லட்சம் அமெரிக்கர்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் ஆபத்தில் உள்ளனர்.

மில்லியன் கணக்கிலான மாஸ்க்குகள் தயாரிக்கப்படுவதாக, அதிபர் மாளிகையில் இருந்து மேடையேறி டிரம்ப் சொல்லிக் கொண்டிருந்தாலும், களத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

சியாட்டிலில் டாக்டர்கள் பிளாஸ்டிக் ஷீட்களைக் கொண்டு தாங்களே மாஸ்க்குகள் தயாரித்துக் கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமாக செய்திகளும் வெளியாகியுள்ளன.

கட்டுமான நிறுவனங்கள், பல் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் மாஸ்க்குகள் வைத்திருக்கும் வேறு எந்தக் குழுவினரும் மாஸ்க்குகளை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் மருத்துவமனை சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவசர சிகிச்சை அறையில் இருந்த டாக்டர்களுக்கு, தரப்பட்ட மாஸ்க்குகள் காலாவதியாகி இருந்ததால், அதை அணிய முற்படும்போது எலாஸ்டிக் அறுந்து போய்விட்டதாக மற்றொரு செய்தி தெரிவிக்கிறது

“காலவரையின்றி பயன்படுத்த தங்களுக்கு ஒரு மாஸ்க் மட்டுமே தரப்பட்டிருப்பதாக நாட்டின் பல பகுதிகளில் இருந்து நிறைய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதில் லைசால் ஸ்பிரே செய்து துடைத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளனர். இது தங்களைப் பாதுகாக்கப் போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை” என்றும் அவர்கள் கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்காகோ நகரில் மருத்துவம மையம் ஒன்றில், மருத்துவமனை அலுவலர்கள், கண் பாதுகாப்பு்கான முகக் கவசத்தைத் தூக்கி வீசிடாமல், கழுவக் கூடிய ஆய்வக கண்ணாடிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

புரூக்ளின் நகரில், போதிய அளவுக்கு சப்ளை இல்லாததால் மாஸ்க்குகளை ஒரு வாரம் வரையில் பயன்படுத்துவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஷிப்டுகள் மாறும்போது கைகளுக்கான கிருமிநாசினியை அதிகம் ஸ்பிரே செய்து பயன்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

`வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில்’ இருந்து வெளியே வரும் வழக்கத்துக்கு மாறான செய்திகள் இவை.

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்க, தேவைப்பட்டால் பெரிய கைக்குட்டைகள் அல்லது தோளில் போடும் துணிகளைப் பயன்படுத்துமாறு அமெரிக்காவின் மிக உயர்ந்த மருத்துவ அமைப்பான சிடிசி பரிந்துரை செய்துள்ளது. “முகத்தை மூடிக் கொள்ளும் மாஸ்க்குகள் கிடைக்காத பகுதிகளில், சுகாதார சேவை அளிப்பவர்கள் (எச்.சி.பி.) வீடுகளிலேயே தயாரிக்கும் மாஸ்க்குகளை (உ-ம் பெரிய கைக்குட்டைகள், தோளில் போடும் துணி போன்றவற்றை). கோவிட் – 19 பாதிப்பு உள்ள நோயாளிகளின் நலனுக்கான கடைசி முயற்சியாகப் பயன்படுத்தலாம்” என்று சிடிசி கூறியுள்ளது.

சிடிசியின் இந்த அணுகுமுறை தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் ஆபத்தில் சிக்க வைத்துவிடும் என்று சுகாதாரத் துறை பணியாளர்கள் பலர் கோபமடைந்துள்ளனர்.

நோயாளிக்கு சுவாசிப்பது சிரமமாகும்போது தேவைப்படும் வென்டிலேட்டர் வசதிகள் மோசமாக உள்ளன. அமெரிக்காவில் 1,60,000 வென்டிலேட்டர்கள் உள்ளதாகவும், 8,900 வென்டிலேட்டர்கள் கையிருப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஏராளமாக தேவைப்படும்

ஆனால் அசாதாரணமான ஒரு சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள். நாட்டில் ஆயத்தங்கள் நடப்பது பற்றி செய்திகளை நிறைய கேள்விப்படுகிறார்கள். கொரோனாவில் இருந்து தப்பிக்க – பதுங்கு அறைகள் விற்பனை என்பது அவற்றில் ஒன்றாக உள்ளது.

1968ல் இன்புளுயன்சா A (H3N2) வைரஸால் ஏற்பட்டதைப் போல தீவிர தொற்றுப் பரவலாக இது அமையுமானால், 1 மில்லியன் பேருக்கு மருத்துவமனை வசதி தேவைப்படும். 38 மில்லியன் பேருக்கு மருத்துவ வசதியும், 200,000 பேருக்கு ஐ.சி.யு. வசதியும் தேவைப்படும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் அமெரிக்கா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

H1N1 வைரரஸ் தாக்குதல் 1918ல் ஏற்பட்ட ப்ளூ தொற்றுநோய் பரவல் போல இது இருக்குமானால், 9.6 மில்லியன் பேரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கும், 2.9 மில்லியன் பேருக்கு ஐ.சி.யு. வசதிகள் தேவைப்படும்.

1968 தீவிர தொற்று பரவலின்போது உலகங்கும் ஒரு மில்லியன் பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்காவில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

1918ல் தாக்கிய ப்ளூ காய்ச்சல் 500 மில்லியன் பேரை அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேரை பாதித்தது, அதில் குறைந்தது 50 மில்லியன் பேர் இறந்தார்கள். அப்படி இறந்தவர்களில் 675000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவில் 924,107 மருத்துவமனை படுக்கை வசதிகள் உள்ளன என்றும், 46,825 படுக்கைகள் மருத்துவ அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை வசதிகள் கொண்டவை என்றும், 50,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருதயம், குழந்தைகள் நோய், பிரசவித்த சில நாட்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தீக்காயம் அடைந்த நோயாளிகள் மற்றும் பிறருக்காக உள்ளன என்று அமெரிக்க மருத்துவமனை சங்கம் தெரிவித்துள்ளது.

உத்தேசமாக தேவைப்படும் எண்ணிக்கைக்கும், தற்போது கைவசம் உள்ள எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பை வேகப்படுத்தி, உரிய காலத்தில் கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் 1,000 மக்கள் தொகைக்கு 2.8 என்ற அளவில் மருத்துவமனை படுக்கை வசதிகள் உள்ளன. தென்கொரியாவில் இது 12 எனவும், சீனாவில் 4.3 எனவும் உள்ளது.

டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை அமல்படுத்தும்போது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை துடிப்புடன் பராமரிக்கவும், நம்பிக்கையை மீட்டெடுக்கவும் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு நிதியை பயன்படுத்தும் போதும், ஒப்பீடுகள் நின்றுவிடப் போவதில்லை.

Thanks – BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More