Home உலகம் கொரோனா – பிரித்தானியாவும் 3 வாரங்களுக்கு முடக்கப்படுகிறது….

கொரோனா – பிரித்தானியாவும் 3 வாரங்களுக்கு முடக்கப்படுகிறது….

by admin

கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் பரவுவதை தடுக்கும் முயற்சியில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ்ஜோன்சன் பிரித்தானியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்று வாரங்கள் நாடு தழுவிய  முழுஅடைப்பை நடைமுறைப்படுத்தி உள்ளார்.

இதன் அடிப்படையில் அனைத்து பிரித்தானிய குடும்பங்களும் கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட நோக்கங்களைத் தவிர்த்து வீட்டில் தங்கும்படி கூறப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அபராதங்களுடன் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வெளிப்புற ஜிம்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் யாவும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன.

திருமணங்கள், ஞானஸ்நானம் மற்றும் பிற விழாக்கள் நிறுத்தப்படுகின்றன, எனினும் இறுதிச் சடங்குகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. ஒரே வீட்டு உறுப்பினர்களைத் தவிர – இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூறுவது உள்ளிட்ட அனைத்து பொதுக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இன்று திங்கள் (23.03.20) இரவு முதல், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்: முற்றிலும் அவசியமானதும், வீட்டிலிருந்து ஆற்ற முடியாத பணிகளுக்கு மட்டுமே வேலைக்குச் செல்வது பயணிப்பதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவர்.

கோவிட் -19  என்ற கொரோனா வைரஸ்   தாக்கத்தால் பிரித்தானியாவின் இறப்பு எண்ணிக்கை 336 ஐ எட்டிய பின்னர் இந்த புதிய நடைமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அன்றாட வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை வித்த போதும் பிரித்தானியா,  கட்டாய நடவடிக்கைகளுக்குப் பதிலாக தன்னார்வத்தின் அடிப்படையில் இலகுவான-தொடு அணுகுமுறையைப் பேணி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இன்று இடம்பெற்ற  கோப்ரா அவசரக் குழுவின் கூட்டத்தில் இத்தகைய விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட பிரதமர் ஜோன்சன் கடந்த வார இறுதியில் பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் வெளிப்புறச் சந்தைகளில் ஏராளமான மக்கள் கூடிவருவது குறித்து பரவலான கவலைகள் எழுந்தமை குறித்தும் கவனம் செலுத்தி உள்ளார்.

பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் 10 டவுனிங் ஸ்றீற்றில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸஸ்தலத்தில் இருந்து தேசத்திற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், “இந்தக் கொடிய  போரில் நாம் ஒவ்வொருவரும் நேரடியாகப் பட்டியலிடப்பட்டுள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. நாம் ஒவ்வொருவரும் இப்போது ஒன்றாகச் இணைந்து இந்த நோயின் பரவலைத் தடுக்கவும், நமது சுகாதார சேவையை பாதுகாக்கவும், பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் கடமைப்பட்டுள்ளோம்.

“கடந்த காலங்களில் பல தடவைகள் இருந்ததைப் போல, இந்த நாட்டு மக்கள் அந்த சவாலையும் எதிர் கொள்வர் என்பதை நான் அறிவேன். “நாங்கள் முன்பை விட வலுவாக வருவோம். “நாங்கள் கொரோனா வைரஸை வெல்வோம், அதனை ஒன்றாக இணைந்து முறியடிப்போம்..

“எனவே தேசிய அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் வீட்டிலேயே இருக்கவும், எங்கள் சுகாதார சேவையைப் பாதுகாக்கவும், உயிர்களை காப்பாற்றவும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.”

“இந்த நாடு பல தசாப்தங்களுக்கு பின் எதிர்கொண்ட மிகப்பெரிய அச்சுறுத்தல்” என கொரோனா வைரஸ் குறித்து விவரித்த பிரதமர், “இந்த வைரஸின் வளர்ச்சியைத் தடுக்க ஒரு பெரிய தேசிய முயற்சி இல்லாமல், உலகில் எந்தவொரு சுகாதார சேவையும் சமாளிக்க முடியாத ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது. காரணம் போதுமான வென்டிலேட்டர்கள், போதுமான தீவிர சிகிச்சை படுக்கைகள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது.

“நாங்கள் வேறு எங்கும் பார்த்தது போல், மற்ற நாடுகளிலும் அருமையான சுகாதார பராமரிப்பு முறைகள் உள்ளன, இது உண்மையான ஆபத்தின் தருணம். “எளிமையாகச் சொல்வதானால் – ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால், NHS  இனால் அதைக் கையாள முடியாது, அதாவது கொரோனா வைரஸிலிருந்து மட்டுமல்ல, பிற நோய்களிலிருந்தும் அதிகமான மக்கள் இறக்க நேரிடும்.

“எனவே நோய் பரவுவதை மெதுவாக்குவது மிக முக்கியம். ஏனென்றால் எந்த நேரத்திலும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைக்கிறோம், எனவே NHS இன் சமாளிக்கும் திறனைப் பாதுகாக்க முடியும் – மேலும் உயிர்களைக் காப்பாற்ற முடியும். “நாம் அனைவரும் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“இந்த மாலையில் இருந்து நான்  பிரித்தானிய மக்களுக்கு மிகவும் எளிமையான அறிவுறுத்தலைக் கொடுக்க வேண்டும் – நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். “ஏனென்றால், நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், வீடுகளுக்கு இடையில் பரவும் நோயைத் தடுப்பதாகும்.” “நீங்கள் நண்பர்களை சந்திக்கக்கூடாது. உங்கள் நண்பர்கள் உங்களை சந்திக்கச் சொன்னால், நீங்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். “உங்கள் வீட்டில் வசிக்காத குடும்ப உறுப்பினர்களை நீங்கள் சந்திக்கக்கூடாது.

“உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியங்களைத் தவிர நீங்கள் கடைக்குச் செல்லக்கூடாது – இதை உங்களால் முடிந்தவரை செய்ய வேண்டும். உங்களால் முடிந்த இடத்தில் உணவு விநியோக சேவைகளைப் பயன்படுத்துங்கள்.

“நீங்கள் விதிகளைப் பின்பற்றாவிட்டால், அபராதம் விதிப்பதற்கும் கூட்டங்களை ரத்துச்செய்வதற்கும் முழுமையான கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்ட மக்களுக்கு அற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More