Home இலங்கை  கொரோனா தொற்று நோயும் உயிர் கொல்லி அச்சமும் – நிலவன்…

 கொரோனா தொற்று நோயும் உயிர் கொல்லி அச்சமும் – நிலவன்…

by admin

உலகெங்கிலும் உள்ள வல்லரசு நாடுகள் முதல் அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இன்று பேசுபொருள் அச்சுறுத்தலாய் காணப்படும் கொரோனா வைரஸ் கோவிட்-19 ( COVID -19) தொற்று நோய். இது மிகப் பெரும் பாதிப்பினை மக்களின் உடலிலும் ,உளத்திலும் ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் உலகில் 32 ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 1344 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறு புறம் கொரோனா குறித்தவதந்திகளும் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில் முதற்களத்தில் நின்று பணிபுரிகிற மருத்துவர்களையும், தாதியர்களையும், சுகாதார ஊழியர்களையும், துறைசார் நிபுணர்கள், பாதுகாப்புத்தரப்பினரையும் நாம் சிந்தித்துப்பார்க்கவும் பாராட்டவும் வேண்டும்.

கோவிட்-19 ன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல், சுவாசப்பை பிரச்சினை அதிகமாக இருக்கலாம். சில நோயாளிகளுக்கு வலி, நாசி நெரிசல், மூக்கில் சளி ஒழுகுதல், தொண்டைப் புண் அல்லது 104 டிகிரி வரை காய்ச்சல், தலைவலி, மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல், மூச்சு விடுதலில் சிரமம் ,நடுக்கம், தளர்ச்சி, பசியின்மை, தொண்டைக்கட்டு வயிற்றுப்போக்கு கூட இருக்கலாம். இந்த நோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் மிகக்குறைவாகவே இருக்கும். பிறகு படிப்படியாக அதிகரிக்கும். இப்படியான உபாதைகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவ உதவியை (Medic-Help) மக்கள் நாடவேண்டும் . இதனால் உங்களையும், உங்களைச் சார்ந்த சகமனிதர்களையும், பாதுகாத்துக் கொள்வதுடன் சமூகத்தையும் நாட்டையும் நோய்த் தொற்றில் இருந்து பாதுக்கமுடியும்.

உலகம் முழுவதிலும் 307,297 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 22/03/2020அன்று 311,988 என்பதாக இப்போது உயர்ந்துவிட்டது. அதுபோல 13,049 என்று இருந்த பலியானவர்களின் எண்ணிக்கை, இப்போது 13,407 ஆக உயர்ந்துவிட்டது. இத்தாலியில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 4,825 ஆக உள்ளது. இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,720 பேரும் மரணம் அடைந்துள்ளனர். என ஜான் ஹாப்கின்ஸ்பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக உலகம் முழுவதிலிருந்தும் தகவல்களைத் திரட்டி உடனுக்குடன்தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் கோவிட் -19 ஒரு வகை தொற்று நோய் வைரஸ், இது காய்ச்சல், மூக்கு, தொண்டைமற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது. மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும், மற்ற வைரஸ்களைவிட கொரோனா வைரஸ், தீவிரமாக நோய்க்கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது.

நிர்க்கதியாகியுள்ள மக்கள் சிலருக்கு வைரஸ் தாக்கம் இருந்தாலும் எந்த அறிகுறிகளும் இருக்காது. அதனால் அவர்கள் உடல் ரீதியாக நன்றாகவே உணருவார்கள். பெரும்பாலான மக்கள் (சுமார் 80 சதவீத மக்கள்) எந்தசிறப்புச் சிகிச்சையும் இல்லாமலேயே நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

கோவிட் -19 நோய்கள் தொற்றும் தன்மைகள் கொண்டவை. ஒரு நபரிடமிருந்து ஏனையவர்களுக்கும் தொற்றும். அது காற்றினூடாக, அழுக்கு படிந்த கைகளினூடாக,அல்லது நேரடித் தொடர்பு மூலமும் தொற்றும். கொரனா தொற்று இருக்கும் நபர் இருமும் போதோ அல்லது சுவாசிக்கும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்தத் துளிகள் பாதிக்கப்பட்டநபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும்.

நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை சுவாசம் மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும். இதனால் தான் நோய்வாய்ப்பட்டவரிடமிருந்து 1 மீட்டருக்கு (3 அடி) அதிகமான தூரத்தில் தள்ளி இருக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கு சாதாரணமான தும்மல், இருமல் , போன்ற அறிகுறிகள் காணப்படும்போது, பீதியில் உடனடியாகஎதிர்வினையாக நான் வதந்திகளை உருவாக்கி உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்தாமல் உரிய முறையில் தனிமைப் படுத்தி வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது ஆரோக்கியமானதாக அமையும்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். பரிசோதனைகளின் முடிவில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப் படுகிறார்கள். முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தால் அர்களுக்கு மருத்துவமனையிலேயே மேலதிக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தல் என்பது எம்மையும், எமது அன்புக்குரியவர்களையும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொறிமுறையாகும் மக்களாகியநாம் ஒத்துழைக்காவிட்டால் சர்வநாசம் நிகழ்ந்து விடும்.

சளி இருமல் போன்ற சுவாச நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மருத்துவ முகக்கவசம் அணியத் தேவையில்லை. கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கும், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நபர்களைப் பராமரிப்பவர்களுக்கும் முகக்கவசங்கள் கட்டாயம் என்கிறது WHO நிறுவனம் .

அடிக்கடி கை கழுவுதல் நல்லது நோய் பரவும் பிரதேசங்களில் உள்ளவர்கள் வாய் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். எல்லாரும் முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் பாதுகாப்பாக அகற்றி விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

பொதுமக்கள் எல்லாருக்கும் முகமூடி( மூக்கு வாய்க் கவசம்) தேவையில்லை. தொற்று நோயாளர்களுடன் மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் . பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும் அல்லது அது பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . கொரோனா வைரஸ் மற்றும் அது பரவுவதால் ஏற்படும் அச்சம் பொதுசுகாதார முயற்சிகள், தொற்றுநோய் குறித்த சமூக உளவியல் கட்டுப் படுத்தினாலும் அது ஏற்படுத்தப்போகும் உள நெருக்கடியினை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது .

நோய் அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக வைத்தியரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். இது சாதாரண காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணிமாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம்,நுரையீல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாட்கள் பாதிப்பு இருப்பவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளமையாளும் உடல் உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது, ஆனால் உளவியல் சார்ந்த பிரச்சினை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் ஒரு புறம் தங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்றஅச்சத்தில் வாழும் மக்கள் இன்னொருபுறம் இரண்டுமே பெரிய உளநலப் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.

அரசியல், தலைவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை மதம், மொழி, வர்க்க வேறுபாடுகள் இன்றி தொற்றுநோய் பாதிப்பொன்றினை அனுபவிக்கின்ற மக்கள் அனுபவிக்கும் நெருக்கீட்டினை விட அந்தப் பாதிப்பு தங்களுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற ஏக்கத்தால் வாழ்பவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி பெரிதாகவே காணப்படுகிறது.

இலங்கை இந்தியா போன்ற ஆசிய ,நாடுகளில் அரசியல்வாதிகள், தலைவர்கள், ஊடகத்துறையினர், சமூகத்தில் பிரபலமானவர்கள் சமூக ஊடக நலன் விரும்பிகள், போலி வைத்தியர்கள் ஆகியவர்களின் பொறுப்பில்லாத வார்த்தைகளும், செயல்களுமே பயத்தின் அடிப்படையிலான தொற்று நோய்களில் பல காரணிகளின் பயம், பதட்டம் , பதகளிப்பு, கவலை ,ஏக்கம் போன்ற அச்சுறுத்தல் பாரிய உள நெருக்கீட்டினை ஏற்படுத்தி மக்களை மனச் சோர்வு நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

பாரிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சீனா கொரியா அமெரிக்கா போன்ற நாடுகளே திக்குமுக்காடிபோயிருக்கும் இத்தருணத்தில் தொழில்நுட்ப பொருளாதார வசதி குறைந்த நாடுகளில் வாழ்பவர்கள் எப்படி இந்த நோயை கையாளப் போகின்றார்கள் என்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படும் தகவல்கள் இவ் உளப்பாதிப்பினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.

தற்போதைய சூழல் ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இது ஒரு வகை உணர்வு பயம் என்று பொதுமைப் படுத்தப்பட்டாலும் கவலை,அச்சம், பதற்றம்,மன அழுத்தம்,படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது. மனபயம், பதட்டம், பீதி என்பது சில நரம்பியல் ரசாயனப் பொருள்கள் அதிகரிப்பதால் இருதயபடபடப்பு, மூச்சடைப்பு , நெஞ்சுவலி, நடுக்கம், வாந்தி, தலைச் சுற்றல் போன்ற பல தீவிரமான அறிகுறிகள் வெளிப்படும். பதறிய பொருள் சிதறும் இது பழமொழி உண்மையில் அச்சம் பயம் என்பது பரிணாம வளர்ச்சியில்ஒரு தற்காப்பு பாதுகாப்பு உணர்ச்சியே, ஆனால் தற்போது உள்ள சூழல் மனித மன வளர்ச்சியில் அளவுக்கதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகுகின்றன. தேவையற்ற அதீதமான தீமை நடக்குமோ என்ற பயம் பதட்டத்தை உருவாக்கி மக்களை மனச்சோர்வு நிலைக்கு கொண்டு செல்கிறது. மக்களை இதன்உளவியல் தாக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு விழப்புணர்வுச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் .

இந்தியா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தங்கியிருந்து டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது சோதனை அதிகாரிகளினால் அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கிரீன் டெஸ்டில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 18/03/2020 இரவு 9 மணியளவில் அவரை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொரோனா சிறப்பு விடுதியில் அனுமதித்தனர். இந்நிலையில் அதே நாள் இரவு தனிமை வார்டில் இருந்ததால், மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென மருத்துவமனை யில் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துக்கம், மனக் கவலை, தாங்கமுடியாத பிரச்சினைகள் அனைத்துமே மனதை சோர்வாக்கி, நம்மை ஊரைவிட்டும், உடலைவிட்டும், உலகைவிட்டும் விடுதலை அடையவே தூண்டும் தற்கொலை எண்ணம். மரணம் அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும் போது, ஏன் பயம் கொள்ள வேண்டும். எம் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள் எமக்குள் தைரியத்தை ஏற்படுத்திட வேண்டும். நம் சமூகம் முழுக்க எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டுள்ளது. எனவே, எங்கேதிரும்பினாலும்,படித்தாலும் எதிர்மறை செய்திகளாகவே உள்ளன. குறிப்பாகச் சமூகத்தளங்கள், ஊடகங்கள் வைரஸ் தொற்றுப் பற்றி எதிர்மறை எண்ணங்களின் ஊற்றாக உள்ளது.

தற்போதைய வாழ்க்கை முறை அனைவருக்கும் பல நெருக்கடியைக் கொடுக்கிறது. எனவே, இதில் விடுபடஅனைவருக்கும் விழிப்புணர்வு என்பது கட்டாயம் சமூகம் ஒன்றின் நேர்விதமான ( Positive) மாற்றத்தையே ஏற்படுத்த வேண்டும். மாறாக விழிப்புணர்வுகளே அச்சமூகத்தின் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடாது. சமூகவலைத் தளங்களிலும் சரி ஊடகங்களிலும் சரி பகிரப்படும் தகவல்கள் விழிப்புணர்வுக்கு பதிலாக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது. சீனாவில் இந்த நோயின் தாக்கமும் பாதிப்பும் வெகுவாககுறைவடைந்து வந்தமைக்கு அம்மக்களின் உள்ளத் திறன்களும் காரணமாக இருந்திருக்கலாம்.

ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் இந்நோயினை எதிர்கொள்வதற்கான மன தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்து நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாடல் ஒன்றினை ஒன்றிணைந்து பாடியமை உலகமக்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையே அம்மக்கள் இந்த நோயை எதிர்கொள்ள காரணமாகியது. நாம் இத்தகைய தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் விழிப்புணர்வுடன் இணைந்து உள தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

உலகம் மிக மோசமானது அல்ல, சூழ்நிலைகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. பிரச்சினை என்று நினைத்தால் எல்லாமே பிரச்சினைகள் தான். மக்களின் மனங்களில் இந்த கொரோனா வைரஸ் கோவிட் -19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். இலங்கையில் முதலாவதாக சஅடையாளம் காணப்பட்ட கொரோனா சநோயாளி பூரண குணமடைந்துள்ளார். ஒரு சுற்றுலா வழிகாட்டயான இவர் (IDH) அங்கோடை ஆதார வைத்திய சாலையின் தொடர் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்பின் பலனாக கொரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்து இன்று (23) திங்கட்கிழமை மாலை வீடு திரும்பினார். இவருக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டு பூரண குணமடைந்துள்ளார் என உறுதிப்படுத்தியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்படும் போராட்டங்களுக்கு பதிலாக நம்மை நாமே பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் .

தொற்று நோய்களைப் பொறுத்தவரையில், அவை ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியக்கூடிய தாக்கங்கள் பரவலாகதெரியாது. ஆனால் அவை அச்சுறுத்தல் என்று சொல்லி மக்களை நெருக்கீட்டிற்குள்ளாக்காது இது கட்டுப்படுத்தக் கூடியது என்ற உற்சாகத்தைக் கொடுக்க வேண்டும். உணவுத் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்றபிரச்சினை பெரிதாகி விட்டது இதுவே மிகப்பெரிய உளத்தாக்கமாக மனதில் பதிந்துவிடுகிறது. சாதாரண நிலை இல்லாது அசாதாரண நிலையாக இப்பிரச்சினை உருவாகப் போகின்றது என்ற ஒவ்வொருவர்மனங்களிலும் ஏற்பட்டுத்தியிருக்கும் அச்சத்தைப் போக்கவேண்டும்.

உணவுத் தட்டுப்பாடு வருமளவிற்கு இந்நோய் பரவ போகின்றது என்ற எதிர்மறையான எண்ணங்களே மக்கள்மத்தியில் ஊசலாடுகிறது. எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். இதனால் நடுத்தரவர்க்கத்தினரும் கீழ்மட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்களும் தினசரி சம்பளம் பெறும் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாரிய நெருக்கீட்டிற்குள்ளாகும் வகையில் செயற்படுவதையும் நிறுத்த வேண்டும்.

வசதி படைத்தவர்களும் செல்வந்தர்களும் மாத வருமானம் பெறும் வர்க்கத்தினரும் தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தாராளமாக வாங்கி சேமிக்கின்றனர். ஆனால் வருமானம் குறைந்தகுடும்பங்களால் இவ்வாறு சேமிக்க முடியவில்லை எனவே வரும் நாட்களில் நாம் பட்டினியால் வாடப்போகிறோம் என்ற எண்ணம் பாமர மக்களின் மனங்களை பலவீனமாக்கி விடுகின்றது.

முடியாத செயலும் இல்லை விடியாத பொழுதும் இல்லை என்பது போல் இந்த கொரோனா வைரஸ் கோவிட் -19 நோய் தொற்று ஏற்பட்டு உணவுப் பஞ்சத்தினால் இறப்பு நிகழ்ந்துவிடும் என்ற அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளை அரசும் தனியார் நிறுவனங்களும் நாளாந்த வருவாய் தேடும் மக்களுக்கு செய்ய வேண்டும்.

அரசு மேற்கொள்ளும் சில முன்னாயத்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. பாடசாலை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கியமை, பொழுது போக்குகளியாட்ட நிகழ்வுகள், திரையரங்குகளை மூடியமை மக்கள் மத்தியில் இந்த தடைகள் நாம் வழக்கமாக இல்லாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த ஆய்வின்படி,அவர்கள் அதிர்ச்சிக்கு பிறகான மனஅழுத்தபாதிப்பால், (PTSD – post-traumatic stress disorder) பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக அவர்களுக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுவிட்டால், அவர்கள் இந்த மன அழுத்தப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் பாதிப்பில் இருந்து மீள்எழவும் தனிமைப் படுத்தப்படும்போது இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறப்போகின்றதோ என்ற எதிர்மறையான எண்ணமே மேலோங்கி அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களைத் தனிமைப் படுத்தப்படுவதற்கான முறையான விளக்கம் கொடுக்கப்படுதல் வேண்டும்.

அவர்கள் தங்களை காரணமின்றி தனிமைப்படுத்தி வைத்துவிட்டதாக ,தனிமையில் ஏற்படக் கூடிய மனநிலைபாதிப்புக்களுக்கும் உள்ளாகாது இது நமக்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பை குறைப்பதற்காக அரசுஎடுத்திருக்கும் ஒரு முன்னாயத்த நடவடிக்கை என்ற எண்ணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கோவிட் -19 நோய்க்கு மருந்தே இல்லை, இதை கட்டுப்படுத்தவே முடியாது, இதற்கு மாற்றுமருந்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாது. இது அனைத்து மக்களையும் பாதிக்கப் போகின்றது என்ற எதிரான எண்ணங்களை விடுத்து இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது, இதைக்கட்டுப்படுத்த முடியும், சீனாவில் கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறார்கள், என்ற நேரானே எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும்.

தகவல்கள் மற்றும் செய்திகள் சரியான அவசர காலத்தில் கொடுக்கப்படுவது தாக்கத்தின் விளைவு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உதவும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொற்று நோய்க்கு அதிகளவிலான சமூக வலைதளங்களினதும் ஊடகங்களின் கவனம் கிடைத்துள்ளது. இது பொது மக்களிடம் இருந்து ஓய்வில்லாத கேள்விகள் வந்துகொண்டேயிருப்பது இந்த தொற்று நோயைய் மிகைப்படுத்திக் காட்டுகிறது.

உலக காசநோயாளிகளில் வருடத்துக்கு சுமார் 22 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஒரு காசநோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். 2017ஆம் ஆண்டில் 16 லட்சம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் உலக காசநோய் அறிக்கை ( GTR) 2018 தெரிவிக்கிறது. காசநோய் குறித்து அவ்வளவு விழிப்புணர்வு நம்மிடம் இல்லை . இதனை விட மக்களிடத்தில் வீச்சுக் கொண்டு பரவுகிறது கொரோனா வைரஸ்கோவிட் -19 தொற்று நோய் இது உயிர் கொல்லி நோய் இல்லை என்றும் மக்கள் தொற்றை ஏற்படமால் தம்மையும் தாம் வாழும் சமூகத்தையும் பாதுக்க முடியும் என்ற விழிப்புணர்வை உரியமுறையில் மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

முடிந்த வரை அடிக்கடி கை கழுவுதல், குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் சென்றுவந்த , பின் வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இவை அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் இவ்வாறன தனி மனித சுகாதாரத்தை பேணுதல் வேண்டும்.

உளவியல் பாதிப்புக்களின் அறிகுறிகள், நீண்ட காலமாக ஒழுங்கான நித்திரையின்மை, பயங்கரக் கனவுகள், காரணமில்லாத வலிகள் அல்லது வேறு உபாதைகள் ஆகும். தொற்று நோய்கள் குறித்த சமூக உளவியலை கட்டுப்படுத்துவது எளிதல்ல தொற்று நோய்களுக்கு எதிர்வினையான இனவாதம் வெறுப்பை தூண்டிவிடும் வகையிலான பேச்சுக்கள் ஒன்றும் புதிய நிகழ்வு கிடையாது இவற்றை துண்டுவது சமூக வலைதளங்களின் பங்களிப்பையும் புறக்கணிக்க முடியாது.

கொரோனா வைரஸ் கோவிட் -19 (COVID-19) பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர்பிழைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. தேவையில்லாத சமூக கிளர்ச்சி ஏற்படும் வகையிலான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். எனவே ஒவ்வொரு நபர்களும் சமூக வலைத்தளங்களில் தயவு செய்து நேரான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியதும் விழிப்புணர்வுடன் கூடியதுமான தகவல்களை நோய் தடுப்பு மையத்தின் அறிவுரைப்படி பரப்புங்கள் இல்லையெனில் இதுவே பாரிய உளத்தாக்கமாக மாறிவிடும். கொரோனா-19 தொற்றுநோய்க்கு இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக விலகல் தான் கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வு மட்டுமே நம்மை எப்போதும் காப்பாற்றும் என்பது மட்டும் தெளிவாகிறது.

நிலவன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More