Home உலகம் கொரோனா – அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்தது – இத்தாலி, ஸ்பெயினில் அவலம் தொடர்கிறது..

கொரோனா – அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்தது – இத்தாலி, ஸ்பெயினில் அவலம் தொடர்கிறது..

by admin
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் பத்தாயிரம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான். இதன் மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,132 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1031 ஆகவும் அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாகாணமான நியூயார்க்கில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த அமெரிக்காவில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட பாதிக்கும் அதிகமாகும்.

இந்நிலையில், அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்துவந்த இந்திய சமையல்கலை நிபுணரான ஃபிலாய்ட் கார்டோஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் இறந்த அவருக்கு, சிறந்த உணவை அளித்தவர் என்ற வாசகங்களுடன் எண்ணற்ற உணவுப்பிரியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் ஃபிலாய்ட் கார்டோஸ் குறித்து சமூகவலைதளங்களில் அதிக அளவில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதே சூழ்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,287 என்னும் புதிய உச்சத்தை தொட்டிருப்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு காட்டுகிறது.

இன்று (மார்ச் 26) காலை இந்திய நேரம் 10 மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,71,407 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,14,051 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்த தரவு கூறுகிறது.

அதிகபட்சமாக இத்தாலியில் 7,503 பேரும் ஸ்பெயினில் 3,647 பேரும் இந்த நோய்த்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் 3,163 பேரும் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுத்தளம் கூறுகிறது. நோய்த்தொற்றை பொறுத்தவரை, அதிகபட்சமாக சீனாவில் 81,667 பேரும், இத்தாலியில் 74,386 பேரும் அமெரிக்காவில் 68,960 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் நிலை என்ன?

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இன்று அறிவித்துள்ளன.

கோப்புப்படம்
படத்தின் காப்புரிமைLUIS ASCUI/GETTY IMAGES

நியூசிலாந்து இதுவரை கிட்டதட்ட 300 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாடு முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றியமையாத பணிகளை மேற்கொள்பவர்கள் மட்டுந்தான் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) ஃபேஸ்புக் நேரலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன், மக்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் நேரலையிலேயே பதிலளித்தார்.

2,600க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று பாதிப்புகளும், 11 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் இதுவரை நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படவில்லை. எனினும், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் எத்தனை பேர் பங்கேற்கலாம் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

THANKS – BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More