இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சமத்துவத் திருமணமும் அதன் சமுகத் தேவையும் – சுலக்ஷனா..

நதிக்கரைகளை அண்மித்து வாழ்ந்த மனிதர்கள், ஏதோவொரு காலக்கட்டத்தில், அனுபவித்த திருப்தியற்ற சூழல் தான், குழுமமாக வாழ்வதற்கானத் தேவையை ஏற்படுத்தியிருக்கக் கூடும். குழுமமாக வாழ்வதற்கானத் தேவை நிறைவேறிய போது தான், ஆண், பெண் சேர்க்கை என்ற இயல்பான விடயம், சமுகத்தில் சில கட்டுக்குள் நின்று நிலவத் தொடங்கிற்று எனலாம். இதன் அடுத்தக்கட்டமாக காலங்கள் செல்ல, மூலதனம், பண்டமாற்றுமுறை ஆகியன சமுகத்தின் அசைவியக்கமாக, தொழிற்படத் தொடங்கும் போது, வளங்கள் அல்லது சொத்துக்கள் பற்றியத் தேவையும், தேடலும் ஏற்பட்டு, சமுகமானது இன்னும் சில இருக்கமான கட்டுக்குள் உட்பட்டு வர்க்கங்களாகத் துண்டாடப்படுகின்றது.

இந்நிலையினையே கால்மார்க்ஸ் வளங்கள் அதிகமாகவும், சனத்தொகை குறைவாகவும் இருந்த போது சாத்தியமான சமத்துவம், வளங்கள் குறைவானதும், வர்க்கங்களாகத் துண்டாடப்பட்டு, சமத்துவம் என்பது, கேள்விக்குறியாக்கப்பட்டது என்பதாக குறிப்பிடுவார்.

இவ்வாறு சமுகம் வர்க்கங்களாகத் துண்டாடப்பட்ட போது, உருவாகிய ஆளும் வர்க்கம், தமக்கான வரையறைகளை நிறுவி, அடிமைகள் என்ற நிரந்தரப் பிரிவினரை தோற்றுவிக்கின்றது. இத்தகைய, வர்க்கங்களாகத் துண்டாடப்பட்ட சமுகத்தில், ஆதிக்க நிலையில் இருந்த வர்க்கம், தமக்கான நலனைப் பேணும் வகையில், கோட்பாடுகளையும் சிந்தனாவாதங்களையும் உருவாக்கிக் கொள்கிறது.

இந்தப் பின்னணியில்தான் இன்றளவில், கட்டவிழ்க்கப்பட வேண்டிய நிலையில், சாஸ்த்திர சம்பிரதாயங்களும், வர்ணாச்சிரம தர்மங்களும் சமுகத்தில் நிலைக் கொண்டுள்ளன. எனினும், இவை காலத்தின் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவலனான’ என்பதற்கமைய, சில மாற்றங்களை ஏற்றுள்ளமையும் மறுப்பதற்கில்லை.

எனினும், மனிதர் அவர் தம், வாழ்வின், உளம் ஒத்த வாழ்வாக விளங்கும் ‘திருமணம்’ இத்தகைய கட்டுக்களிலிருந்து இன்னும், விடுபடாமல் இருக்கின்ற நிலையையே காணமுடிகின்றது. இன்று திருமணம் என்பது, வியாபாரமாகவும், குழந்தை பிறப்பு என்பது பொருளாதாரமாகவுமே நோக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில் தான், பாலின சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதும், பூடகமான அரசியலாக சமுகத்தில் நிலவுகின்றது. இந்நிலைப்பாடு குறித்து பின்னர் தனியாக ஆராய்வோம்.

இது இப்படி இருக்க, சமுகத்தின் ஏகோபித்தக் குரலாக ஏற்கப்படும், ஆண், பெண் சேர்க்கையின் அங்கிகரிக்கப்பட்ட சட்டமாகிய திருமணமும், சில வரன்முறைகளின் அடிப்படையில், அசமத்துவ நிலையைத் தோற்றுவித்திருப்பது ஆராயப்பட வேண்டியதொரு விடயமாகும்.

ஏனெனில் பெண் என்ற படைப்பு, சமுகத்தின் பார்வையில், குழந்தைகளை பிரசுவிக்கின்ற மனித இயந்திரமாகப் பார்க்கப்படுவதும், அதனையே புனிதம் என்ற போர்வைக்குள் வைத்து, கற்பு என்ற பெயரில் ஒருவகையான அடிமைத்தனத்துக்குள் ஆளாக்கி விடுவதும், நடந்தேறிய வண்ணம் தான் இருக்கின்றன. அதே நேரம், தாலி, மெட்டி, குங்குமம் என அடையாளங்களை வழங்குவதன் மூலம், திருமணமானவளாக, பெண்ணை அடையாளப்படுத்த விளையும் சமுகம், அத்தகைய அடையாளப்படுத்தல்களை, வரன்முறைகளை ஆண்களுக்கு வழங்காமைக்கான நோக்கமும் ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.

இதற்கும் மேலாக, சாதி என்ற வரன்முறைக்குள்ளும், சம்பிரதாயம் என்ற நெறிமுறைக்குள்ளும், பெண் என்பவள், முழுமையாக அதேநேரம், மறைமுகமாக அடிமைத்தனத்திற்குள் உட்படுத்தப்படுகின்றாள். இத்தகைய சாஸ்த்திர சம்பிரதாயங்கள் என்பவை, ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஆதிக்க நிலையின் வெளிப்பாடாகத் தான் இருந்து வருகின்றன.

குறிப்பாக, இத்தகைய சாஸ்த்திரங்களும், சம்பிரதாயங்களும் நிலவாதக் காலப்பகுதியில், திருமணம் என்பது, அன்பால் இணைந்த இருவரின் உளம் ஒத்த வாழ்வை உலகறியச் செய்யும் கைபிடித்தல் நிகழ்வாகவே, நிலவி வந்திருக்கின்றது. சங்க இலக்கியங்களும், இத்தகைய திருமண நிகழ்வு குறித்தே பேசி நிற்கின்றன. குறிப்பாக, அகநானூற்று, களிற்றுயானைநிரை 86வது பாடல் ( உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை…..) வேத மந்திரங்கள் ஒலிக்காத திருமணமாக, கைப்பிடித்தல் நிகழ்வை சுட்டி நிற்கிறது.

இங்கு மந்திரங்கள், ஒலிக்காத திருமணம் என அடிகோடிட்டு, பேசுவதன் நோக்கம், இன்றைய சூழலில் நிகழும் திருமணம் என்பது, அந்தணர் ஓமம் வளர்த்து, வேதங்கள் ஓதி, மணமக்கள் அக்கினி வலம் வருவதாக அமைகின்ற காரணத்தினாலேயாகும். உண்மையில், திருமணம் என்பது மனிதர் அவர்தம் வாழ்வின் அன்பின் பிணைப்பில் உளம் ஒத்த நிகழ்வாக, அமைகின்ற பட்சத்தில், பொருள் அல்லது அர்த்தம் தெரியாத மந்திர உச்சாடனங்களின் தேவைப்பாடுதான் என்ன?

அத்தகைய மந்திர உச்சாடனங்கள் மங்கல வாழ்த்தாகத் தான் அமைகின்றது எனின், அவை தமிழ் மொழியில் அல்லது, அவர்தம் பிரயோக மொழியின் வாழ்த்தாக அமைந்தால் என்ன? அவ்வாறு அமைவதுதான், தெய்வக்குற்றமாகப் புனிதம் என்ற போர்வைக்குள் போர்த்தப்படுமெனின், அப்போர்வையை நீக்க வேண்டிய காலத்தின் தேவை இப்போது உருவாகி விட்டதென்றே, கருதுக்கிடக்கின்றது.

அதேநேரம், இலக்கியம் காலத்திற்கேற்ப மனிதரை உருவாக்கும் வல்லமை உடையவையாக நம்பப்படுவதும், அதன் வழி இலக்கியம் மனிதரை உருவாக்கி விடுவதும் இயல்பாகிப்போன சமுகத்தில், இல்லற வாழ்விற்கான வாழ்த்து என்பது, பொருளறியா மந்திர உச்சாடனங்களாக அமைவதைக் காட்டிலும், பொருள் செறிந்த இலக்கிய மொழி வாழ்த்தாக அமைதல் என்பதும் ஏற்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த அடிப்படையில்தான் திருக்குறள், அன்புடைமை அதிகாரம் திருமண வாழ்த்தாகவும், இல்லற சிறப்புரைப்பதாகவும் சமத்துவத் திருமணத்தில் வலியுறுத்தப்படுகின்றது.

அவ்வாறே, திருமணங்களில் நடைபெறும் முகூர்த்த ஓலை வாசித்தல் என்பதாக, அடையாளப்படுத்தப்படும் கன்னிகாதானம் என்பதும், பெண்ணடிமையையே, மேலும் வலுவாக வலியுறுத்துகின்றது. குறிப்பாக, கன்னி என்றால் பெண், தானம் என்றால் தர்மம் செய்தல் என்பதாக, பெண்ணை தானமாகக் கொடுத்தலாகவே, கன்னிகாதானம் அடையாளப்படுத்தப்படுகின்றது.

எனவே, பெண்ணியம் அல்லது பெண்விடுதலை என அறைகூவும் அனைவரும் இத்தகைய கட்டுக்கள், கட்டவிழ்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் சிந்திக்க வேண்டும். இதேநேரம். திருமண நிகழ்வில் இருமனச் சேர்க்கையை, உளமாற வாழ்த்தும், மணமக்களின் தாய் கணவனை இழந்த காரணத்திற்காக ‘ விதவை’ என்ற கட்டிற்குள், வைத்து திருமண நிகழ்வில் ஓரங்கட்டப்படும் ஒருவகை சம்பிரதாயமும் இன்றளவிலும் நிலவிய வண்ணம் தான் இருக்கின்றது.

ஆக மனிதன் தோன்றிய பின் உருவாக்கப்பட்ட சாஸ்த்திர சம்பிரதாயங்கள், அவர்தம் சமுக விடுதலைக்கான உந்து சக்தியாக மீளுருவாக்கப்பட வேண்டியதன் தேவையும் இன்றைய சூழலில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த அடிப்படையில்தான், பெண்களை அடக்குகின்ற, அல்லது அடிமைப்படுத்துகின்ற சம்பிரதாயக்கட்டுக்கள் உடைக்கப்பட்டு, குறியீட்டு அடையாளங்கள் நீக்கப்பட்டு, ஆணும் பெண்ணும் சமதையென பேணும் வகையில், உளம் ஒத்த வாழ்வினை உலகறியச் செய்யும் விழாவாக கொண்டாப்பட வேண்டிய, ஆண், பெண் சேர்க்கையின் அங்கிகரிக்கப்பட்டத் திருமணமாக ‘சமத்துவத் திருமணம்’ சமுகத்தின்பாற் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

அந்தவகையில் சமத்துவத் திருமணம் என்பது, ஆணாதிக்கச்சிந்தனையின் அடிப்படையில் பெண்களுக்கு வழங்கப்படும், பாதுகாப்பு என்பதாக பூசிமெழுகப்பட்ட அடையாளங்களையும், குறியீடுகளையும் கேள்விக்கிடமாக்குவதாகவும், மரபு அல்லது பண்பாடு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் உண்மையில் சமுக விடுதலைக்கான, நல்விழுமியங்களின் பேணுகைக்கான வழிமுறையாக அமைவதாகவும் இருத்தல் வேண்டும் என்பதையே வழியுறுத்துகின்றது. மேலும், நாம் நமது மரபு அல்லது பண்பாடு என்பதாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் பண்பாட்டம்சங்கள் உண்மையில், நமக்கே உரியனவா? என்ற பண்பாட்டு மறுவாசிப்பிற்கான வழியாகவும் சமத்துவத்திருமணம் அமைகின்றது.

இயந்திரமயமாகிப்போன வாழ்வியலிலும் கூட, சாதியம் என்ற இருகப்பிணைந்தக்கட்டுக்குள், திருமணம் சிக்கி நிற்கின்ற நிலையில், பாரபட்சங்கள் அற்ற, உளம் ஒத்த அன்பிற்கான விடுதலையாகவும், விடுதலைப் பெற்ற சமுகத்தின் குறியீடாகவும், சமத்துவத் திருமணம் அமைகின்றது. நமது பாரம்பரியம் அல்லது பண்பாட்டம்சம் என்பதாக அடையாளப்படுத்தப்படும் சடங்குகள் உண்மையில், விடுதலைப் பெற்ற சமுகத்தின் முற்போக்கு சக்தியாக அமையவேண்டும். அவை உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாகவும், இயற்கையினை பாதுகாப்பதாவும் அமையவேண்டும் என்பதையும் சமத்துவத்திருமணம் வழியுறுத்துகின்றது.

வெகுசன சினிமாவின் தாக்கமும், ஊடகங்களின் விளம்பரப்படுத்தல்களும் உயர் பண்பாடாக, அல்லது ஆடம்பர வாழ்வியல் கோலமாக உருவகப்படுத்தி நிற்கும் திருமண மாயைகள், நீக்கம் பெற்று, ஒருவரை ஒருவர் மதிப்பதாகவும், சமத்துவத்துடன் நடாத்துவதுமாகவே, திருமணம் என்ற இல்லற வாழ்விற்கான சடங்கு சேமமுற நிகழ்த்தப்படல் வேண்டும்.

இன்றைய திருமணச் சடங்குகளில், இடம்பெறும் இசை நிகழ்ச்சிகள், வெகுசன சினிமாவின் தாக்கத்திற்கு உட்பட்டு, சினிமா பாட்டுக்கச்சேரிகளாகவே அமையப்பெறுகின்றன. இவை ஏன் உள்ளுர் பாடலாக்கங்களாக, மணமக்கள் வாழ்த்தாக அமைந்துவிடக்கூடாது?. நமது பண்பாடு அல்லது மரபுரிமை என்று சொல்லப்படும் சடங்குகள் என்பது பெரும்பாலும் உள்ளுர் பண்பாட்டு அம்சங்களை , உள்ளுர் கலைஞர்களைப் பேணி, ஊக்குவித்து வளர்ப்பதாகவே இருந்துவருகின்ற நிலையில், வாழ்க்கையின் அடுத்தப்படி நிலைக்கு அடியெடுத்து வைக்கும் இருவரின் வாழ்வு சிறக்க வாழ்த்தும் வாழ்த்துப்பாடல்களும், உள்ளுர் பண்பாட்டம்சங்களை வெளிப்படுத்துவதாக, பல்லுயிர் பேணி பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடலாமே! ஏனெனில் இல்லறம் என்பது,

‘ இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை’ – என்றே வழியுறுத்தப்படுகின்றது.

இந்த அடிப்படையில் நோக்கின், பொருளற்ற சம்பிரதாயங்களின் கட்டவிழ்ப்பிற்கும், உண்மையான பண்பாட்டுமரபுரிமைக்கான மறுவாசிப்பிற்கும், சாதிய விடுதலைக்கும், உள்ளுர் கலைகளை, உற்பத்திகளைப் போற்றுவதற்கும், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட நல்விழுமியங்களின் பேணுகைக்கும், சிறப்பாக, ஆண், பெண் சமதையென பேணும் மனிதர் அவர்தம் நோக்கம் நிறைவுறவும் சமத்துவத்திருமணம், சமகாலத்தில் தேவைப்பாடுடையதாகின்றது.

இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.