இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை – நுகர்வோர் பெரிதும் பாதிப்பு

(க.கிஷாந்தன்)

ஹட்டன் உட்பட மலையகத்தின் பெருந்தோட்டப்பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் பெரும்பாலான வர்த்தகர்கள் அத்தியாவசியப்பொருட்களைக்கூட அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில வர்த்தகர்கள் சாதாரண விலையைவிடவும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்வதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் கூட மனிதநேயமற்ற விதத்தில் நடந்து கொள்கின்றனர் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

கண்டி உட்பட 6 மாவட்டங்களை தவிர ஏனைய 19 மாவட்டங்களில்   ஊடரங்குச்சட்டம் (30.03.2020) இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் 6 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. எவ்வளவுதான் அறிவுரைகள் வழங்கப்படாலும் ஒரு சிலர் சமூக இடைவெளியையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.

நுவரெலியா, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்து.  குறிப்பாக ஹட்டன் நகரில் மக்கள் நலன்கருதி, அவர்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் அடிக்கடி ஒலி பெருக்கு மூலம் அறிவிக்கப்பட்டதுடன், காவல்துறை  பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

நுவரெலியா மாவட்டத்தைப் பொருத்தமட்டில் நுவரெலியா, ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டகலை, தலவாக்கலை, பூண்டுலோயா, ஆகிய நகரங்களுக்கு காலை 6 மணி முதலே மக்கள் படையெடுத்து வந்தனர்.

ச.தொ.ச. நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், மொத்த மற்றும் சில்லறைக் கடைகளில் அணிவகுத்து நின்று, நீண்டநேரம் காத்திருந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். மரக்கறிச்சந்தையிலும் சனநெருக்கடி காணப்பட்டது. எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் அதிக வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சில வர்த்தகர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொண்டாலும் பெரும்பாலானவர்கள் இலாபம் உழைப்பதிலேயே குறியாக இருந்து வழமையைவிட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதையும், கட்டுப்பாட்டு விலைகளை அப்பட்டமாக மீறுவதையும் காணமுடிந்தது. ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என்பதாலும், வரிசையில் நீண்டநேரம் காத்திருந்ததாலும் வேறுவழியின்றி மக்களும் வாங்கிச்சென்றனர்.

8 மணிநேரமே ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளே இடம்பெற்றன.  #வர்த்தகர்கள்  # விற்பனை  #நுகர்வோர் #பாதிப்பு #ஊரடங்கு

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link