Home இலங்கை இலங்கையின் பலமாகும் இலவச மருத்துவ சேவை- சி.ஜெயபிரதாப்…

இலங்கையின் பலமாகும் இலவச மருத்துவ சேவை- சி.ஜெயபிரதாப்…

by admin

உலகமே இன்று அச்சம் கொள்கின்றது. ஒவ்வொருவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடத்தலையே பாதுகாப்பென்று கருதிக் கொள்கின்ற நிலை அதுவே பாதுகாப்பும் கூட, நாட்கள் தோறும் இழப்புகள் எண்ணப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் குழந்தையோ, தாயோ, தந்தையோ, அக்காவோ, அண்ணாவோ, அல்லது அவர்களின் குடும்பத்திலுள்ள முதியவர்களோ இக் கொடூர நுண்ணங்கியால் மரணத்தைத் தழுவுகின்றனர் என்பது கவலையான விடயமே. ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகத்தையே இன்று கட்டிப் போட்டு ஆள்கின்றது. நாடுகள் தொடங்கி வீடுகள் வரை ‘தனிமைப்படுதல்’ என்னும் ஒற்றைச் சொல்லே தாரக மந்திரம் ஆகி விட்டது, பல வல்லரசு நாடுகளே இன்று செய்வதறியாது திணறி நிற்கின்ற நேரத்தில் எம் நாட்டின் நிலை பற்றிய தெளிவான ஆழ்ந்த சிந்தனை அவசியமாகின்றது. இவ்வாறான சூழலில் நாம் நமது பலவீனங்களைக் களைதலும், பலங்களை இனங்கண்டு சரிவரப் பயன்படுத்தலும் அவசியமாகின்றது. இவ்வாறான சூழலில் பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது எம் நாட்டிடம் காணப்படும் மிகப் பிரதானமான பலம் இலவச மருத்துவ சேவையே ஆகும்.

எமது நாடானது ‘வளர்ச்சி அடைந்துவருகின்ற’ வரிசைப் படுத்தலில் உள்ள ஓர் நாடு, அதாவது வளர்ச்சி அடையாத நாடாகவே அடையாளப்படுத்தப்படும் ஓர் நாடு. பிற வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளைப் போன்று தாமும் கௌரவத் தோற்றம் கொள்ளுதல் வேண்டும் என்பதனைக் கனவாகக் கொண்ட நாடு, அவ் வளர்ச்சியடைதல், வளர்ச்சியடையாமையை யார் தீர்மானித்தல்?, எவ்வாறு தீர்மானித்தல்?,அவைகளின் உண்மைத் தன்மைகள் என்பன பற்றி விரிவாக கலந்துரையாடப்பட வேண்டியதே. இவ்வாறான சூழ்நிலையில் வளர்ச்சியடைந்து வருகின்ற எம் நாடானது வளர்ச்சியடைந்த நாட்டை விட அதிகரித்த அனுகூலங்களை அனுபவிக்கின்றது என்பது யதார்த்தமே.

வளர்ச்சி பெற்ற நாடொன்று பல்துறை சார்ந்த வளர்ச்சியினை அடைந்திருக்கும். குறிப்பாக வங்கித் துறை, காப்புறுதி துறை, போக்குவரத்து துறை என சகல துறைகளும் இதில் அடங்கலாகும். இவற்றில் குறிப்பாக காப்புறுதித் துறையில் மட்டுப்படுத்தப்பட்ட விருத்தியினைக் கொண்ட எம் நாடானது அத் துறையில் பாரியளவான விருத்தியினைக் கொண்ட நாடுகளின் முன் தற்கால சூழ்நிலையில் கம்பீர தோற்றம் கொள்வதனைக் காண முடிகின்றது.

ஒரு அமெரிக்கர் வைத்தியசாலை செல்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, அவர் முதலில் தான் காப்புறுதி செய்த காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்பினை ஏற்படுத்த வேண்டும். அதன் பிற்பாடே அக் காப்புறுதி நிறுவனமானது தொலைபேசி ஊடாக ஓர் வைத்தியருடன் தொடர்பினை ஏற்படுத்தும், அதன் பிற்பாடு தொலைபேசி ஊடாக மாத்திரைகள் சொல்லப்பட்டு அதற்கு நோய் குணமாகவில்லை என்றாலே அடுத்தபடியான வைத்தியரை நேரே சந்தித்தல் நிகழ முடியும். இவை ஒரு சாதாரண நோய் நிலைமைகளில் சாத்தியமாகலாம். ஆனால் தற்காலத்தில் காணப்படும் கொரனாவின் கோரத் தாண்டவத்திற்கான பிரதான குறைபாடே இந்த சிக்கலான மருத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படையே ஆகும், இங்கே ஒவ்வொரு கட்டங்களும் பணப் பரிமாற்றம் சார்ந்த விடயம் என்பதுடன், காப்புறுதி பணம் செலுத்தாத ஒரு நோயாளிக்கு மருத்துவம் அளிக்கப்படாமல் உயிர் இழந்திருந்தமையினையும் குறிப்பிட முடியும்.

இதனுடன் ஒப்பிடுகின்ற போது எமது நாடானது எவ்வளவோ மேன்மை பொருந்தியதாகவே காணப்படுகின்றது. அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் இலவசமாகவே கிடைக்கின்றன. இந்த ஊரடங்கு சட்ட சூழ்நிலையில் எமக்கு சாதாரணமான காய்ச்சல், தலையிடி ஏற்பட்டாலே பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் வீட்டிற்கே வந்து சோதனை செய்கின்றனர். நோய் அறிகுறிகளை வைத்துக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் எனின் எமக்கும் ஏனையோருக்கும் பாதகங்கள் ஏற்படா வண்ணம் எம்மைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர்.எந்த கட்டண அறவீடுகளும் இன்றி இவற்றைச் செய்வதுடன் பல ஆயிரம் பெறுமதியான மருந்துகளையும் இலவசமாக பெற்றுக் கொள்ளும் வசதிகள் எமது மருத்துவ துறையிடம் காணப்படுகின்றன என்பது சிறப்பம்சமே.

எம் நாட்டின் பலங்களாவன இலவச மருத்துவமும், இலவச கல்வியும் ஆகும். பல கோடி பணங்களை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கிய நாடுகள் கூட இன்று நோய்க்கான தீர்வுகள் இன்றி கலங்கி நிற்கின்ற நிலையில் இன்றைய தேவை சிறந்த மருத்துவமும் அது யாவருக்கும் கிடைதலுமே தான் அந்த வகையில் நமக்கு கிடைத்திருக்கின்ற இலவச மருத்துவமும் திறமையான சேவையும் என்றுமே பேணப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
கடந்த காலங்களில் இவ் இலவச மருத்துவத்தினைக் கேள்வி கேட்பதான சில சம்பவங்கள் நடந்தேறின. அவைகள் தனியார் மருத்துவ துறையை வளர்த்தலுக்கான பின்புலமாகக் கூட இருக்க முடியும். அரச மருத்துவ துறைகளின் சிறு பிழைகள் கூட பாரிய செய்திகளாக உருவேடுத்திருந்தமையும் அவற்றை மிகப் பாரிய பூதாகரமான செய்திகளாக ஊடகங்கள் செய்தி பரப்பியதனையும் இங்கே குறிப்பிட முடியும். இருந்தும் உயிர் காக்கும் வைத்திய துறைகளின் பிழைகள் குறிப்பிடப்பட வேண்டியதும், அவைகள் தொடர்ந்து நிகழா வண்ணம் சேவைகள் செம்மைப் படுத்தப்பட வேண்டியதும் அவசியமே. இருந்தும் இவ்வாறானா செய்திகளுக்கு பின்னூட்டலாக பல பொதுமக்கள் தனியார் வைத்திய துறையினை நோக்கி நகர ஆரம்பித்தனர். தனிப்பட்ட வைத்திய துறையை அணுகும் போது பல இலட்சம் ஷரூபா’ பணம் தேவையாகின்றது. அத்துடன் தனியார் வைத்தியசாலைகளால் ஒரு கட்டத்திற்கு மேலான சேவைகளை வழங்குவதற்கான வசதி வாய்ப்புகளும் இன்றியே காணப்படுகின்றது.

எமது நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வு சமனற்றதாகவே காணப்படுகின்றது, அதாவது வருமானம் கூடுதலாக பெறுபவர்களும் அதே நேரம் வருமானத்தை குறைவாக பெறுகின்றவர்களும் வாழ்ந்து வருகின்றனர். வருமானம் தான் சமமில்லையே தவிர சகலரின் உடல் ஆரோக்கியமும், உயிர் வாழ்தலுக்கான உரிமையும் சமம் தானே. எனவே சகலருக்கும் சமமான, திறைமையான அதே நேரம் மிகத் துரிதமாக பெறத்தக்கதாக எமது மருத்துவ சேவை காணப்படுவதானது அனைவருமே பெருமை கொள்ளத்தக்க ஒரு விடயமே ஆகும்.

அரச சட்ட திட்டங்களையும் கடந்து எம் உள்ளத்தில் எழுந்திருக்கின்ற பயம் கொண்ட மனநிலையானது எம்மை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுக்கின்றது. எம்மை காத்துக்கொள்ள பல வழிகளிலும் முயல்கின்றோம். கைகளை அடிக்கடி கழுவுதல் முதல், தெரியாதவர்களுடன் தள்ளி நின்று பேசக் கூட இங்கு யாருமே தயாராக இல்லை. இவ்வாறான சூழலிலேயே வைத்திய, சுகாதார துறை சார்ந்தவர்கள் இரவு, பகல் தோறும் மக்களுக்கு புரிகின்ற பணிகளானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.

இவ்வாறு மருத்துவ துறைகளில் சேவையாற்றுகின்றவர்களில் பலரும் எமது நாட்டின் இலவச கல்வியினூடாக உருவாக்கப்பட்டவர்களே, இதன் மூலமாகவே தான் பல ஏழைக் குடும்பப் பின்னணியினைக் கொண்ட பலருக்கும் மருத்துவ துறை சார்ந்த கல்வியினைப் பெற முடிந்தது. இதன் மூலமாகவே பணம் உள்ளோர், பணம் அற்றோர் என்ற பாகுபாடுகள் இன்றி திறமையுள்ள பலரும் கல்வியினைக் கற்று அத் துறைகளுக்குள் பிரவேசித்தல் நிகழ்ந்திருக்கின்றது.

இவ்வாறாக மக்களின் அடிப்படை நலன்கள், உரிமைகளை உறுதிப்படுத்த அமைக்கப்படும் அரசு, நலன்புரி அரசு ஆகும். இதன் பொது நோக்கங்களாவன சகலருக்கும் நன்மை கிடைப்பதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் அதில் கடமை புரிகின்றவர்களின் குறைபாடுகளை துறை சார்ந்த குறைபாடுகளாக கருதலாகாது. உதாரணமாக ஒழுங்காக சேவை வழங்காத ஒரு உத்தியோகத்தரால் ஒட்டு மொத்த அரச வைத்தியசாலைகளையும் ஒதுக்குதல் தீர்வாகாது. அவர்களை சரிவர கடமை செய்ய தூண்டுதலானது இந் நாட்டின் வரி செலுத்துபவர்கள் எனும் அடிப்படையில் எம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும். இலவசங்களாக குறிப்பிடப்படும் இச் சேவைகளுக்கான அடிப்படை எம் வரிப்பணங்கள் என்பதே உண்மை. எனவே சகலரும் இச் சேவைகளை பெறுதலினை உறுதிப்படுத்தலானது ஒவ்வொருவரின் கடமையும், உரிமையும் ஆகும்.

இவ்வாறான சூழலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பன நமக்கு அத்தியாவசியமானதே, இலவச கல்வியானது இன்னும் பல்லாயிரக் கணக்கான திறைமை சாலிகளை உருவாக்கட்டும், இலவச மருத்துவமானதும் சகலரும் சமமான சிறந்த தரம் கொண்டதுமான சேவைகளை வழங்கட்டும். இவ்வாறான இடர் சூழலில் சகலருக்கும் சிறந்த சேவையை வழங்கும் மருத்துவ, சுகாதாரத் துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சி.ஜெயபிரதாப்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More