இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

‘‘குழந்தைகளை “தற்புனைவு ஆழ்வு” பாதித்தால் என்ன?, அதற்காக அவர்களை ஒதுக்கிவிட வேண்டுமா?- நிலவன்..

இன்று சர்வதேச தற்புனைவு ஆழ்வு (Autism) தினம்!

தற்புனைவு ஆழ்வு (Autism) மதியிறுக்கம், தற்பு, தன்மையம், மன இறுக்கம், புற உலகச் சிந்தனைக் குறைபாடு, ஒருவகையான நரம்புக்கோளாரினால் ஏற்படும் மன இறுக்கம், சமூகத் தொடர்பு சீர்குலைவு மதியிறுக்கம் என்பது இயல்பிற்கு மாறான மூளை வளர்ச்சியின் வேறுபாடு Autism ஆகும். இது தொற்று நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. இக் குறைபாடு உள்ளவர்களில் ஏறத்தாழ 10% விகிதத்தினருக்கு மட்டுமே மூளைசார்ந்த ஒரு காரணத்தால் Autism ஏற்படுகிறது என்று தெரியவருகிறது. எனவே, 90% விகிதத்தினருக்கு ஏன் Autism ஏற்படுகிறது என்று இதுவரை அறியப்படாமலே இருந்து வருகிறது.

தற்புனைவு ஆழ்வு எனும் சொல் ஓர் உலகச் சொல் ஆகிவிட்டது. இது மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. ஒரு சிக்கலான, மருத்துவ ரீதியான, உறுதியான சிகிச்சை முறை இல்லாத , நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடாகும். மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு த‌ன்னை‌ச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு நிறப்பிரிகை வகையிலான குறைபாடு ஸ்பெ‌க்‌ட்ர‌ல் டி‌ஸ்ஆ‌ர்ட‌ர் (Spectral Disorder) எ‌ன்று ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் இ‌ந்த நோ‌ய் அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது.

உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் தற்புனைவு ஆழ்வு மிக முக்கியமானது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஆய்வு கூறுகிறது. இலங்கையை பொறுத்தமட்டில் நூற்றுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இக்குறைபாடு உள்ளதாக சுகாதாரத் துறை அத்தியட்சகர் டாக்டர். மஹிபால ஹேரத் குறிப்பிடுகிறார். பெண்களை விட ஆண் சிறார்களையே அதிகம் தாக்குகிறது.. இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌ட்டு‌ம் சுமா‌ர் 20 ல‌ட்ச‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் தற்புனைவு ஆழ்வு குறைபாட்டால் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனாலு‌ம், Autism ப‌ற்‌றிய எ‌ந்த ‌விவரமு‌ம் பொதும‌க்களை இ‌ன்றுவரை அ‌திகள‌வி‌ல் செ‌ன்றடைய‌வி‌ல்லை எ‌ன்பது கவலை‌க்கு‌ரிய ‌விஷயமாகு‌ம். மேலும் இலங்கையை பொறுத்தமட்டில் Autism (தற்புனைவு ஆழ்வு ) குறைபாட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் இனங்காணப்பட்டுள்ளன.

தற்புனைவு ஆழ்கை குறைபாட்டிற்கு மருந்து என்பது கிடையாது. அதாவது, இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ, ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. பல மனநல நோய்களைப் போல கண்டறிவதற்கும் எந்த உடல் ரீதியான மருத்துவப் பரிசோதனையும் இல்லை. இரத்தப் பரிசோதனை செய்தோ, எக்ஸ்-ரே எடுத்தோ இதைக் கண்டறிய முடியாது. தற்புனைவு ஆழ்கை குறைபாடு தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, ‘செக்ரடின்’ என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பொதுவாக இக்குறைபாடு உள்ள குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ந்த 6 மாத‌த்‌தி‌ல் செ‌ய்ய வே‌ண்டிய ‌சி‌ன்ன ‌சி‌ன்ன செய‌ல்களை‌க் கூட செ‌ய்யாம‌ல் முட‌ங்‌கி இரு‌ப்பார்கள். அவர்களின் சாதாரண வளர்ச்சிப்படிகளில் இரண்டு அல்லது மூன்றாவது வயதில் அடைய வேண்டிய வளர்ச்சி விருத்தியில் தாமதம் கண்டறியப்படுகிறது. ஒரு குழந்தையிடம் காணப்படும் இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான வயதிற்கேற்ப வளர்ச்சியும் நடவடிக்கைகளும் இல்லாமல் போகும் பொழுது மட்டும் தான் இக்குறைபாட்டைக் கண்டறியும் நிலை உள்ளது. வேறுவகையில் மருத்துவப் பரிசோதனைகள், ஆய்வுகூட சோதனைகள் ஆகியவற்றின் மூலம் இக் குறைபாட்டைக் கண்டறிய வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகிறது.

குறைபாட்டைக் கண்டறிய வழியில்லாத நிலைமையால், மருத்துவர்கள் பெற்றோர்களிடமோ, குழந்தையை வளர்ப்பவர்களிடமோ, குழந்தை அதன் வளர்ச்சிநிலை எல்லைகளை எட்டியதா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டும், அவர்களே குழந்தையின் நடவடிக்கையை, பழகும் விதத்தைக் கவனித்தும் தற்புனைவு ஆழ்கைக் குறைபாடு கொண்ட குழந்தை என்பதை உறுதி செய்கிறார்கள்.

தற்புனைவு ஆழ்கைக் குறைபாடு உடைய பிள்ளைகள் தோற்றத்தில் சாதாரணப் பிள்ளைகள் போல் இருப்பார்கள். ஆனால் இவர்களிடத்தில் ஆளிடைத் தொடர்பாக கண்ணோடு கண்பார்த்துப் பேசவதில் பெயர் சொல்லி அழைக்கும் போது அதைப் பொருட்படுத்த மாட்டார்கள், , குழந்தைகளிடம் காணப்படும் விளையாட்டு, பேச்சு, சமூகத்திறன்களில் என்பவற்றில் பின்தங்கிய நிலை காணப்படும். தற்புனைவு ஆழ்கைக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சில சமயம் உடல் ரீதியான வளர்ச்சிக் கோளாறுகள் (co-occurring symptoms – அதாவது சேர்ந்தமைந்த அறிகுறிகள்) இருந்தாலும், அவை இந்த நோயின் முக்கியக் கூறுகள் அல்ல. இது ஒரு நோய் அல்ல. மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. ஆங்கிலத்தில் Development disability. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு அல்லது இயலாமை ஆகும். ஆனால் தொடர் பயிற்சிகள் மூலம் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணமுடி யும் .

தற்புனைவு ஆழ்வுக் குறைபாட்டால் பாதி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை.தன்னையொத்த பிற குழந்தைகளிடம் பழகும் விதம், பேச்சுத்திறனின் வளர்ச்சி, புலன் சார்ந்த உணர்ச்சிகளின் ஒழுங்கு (sensory balance), மற்றும் விளையாடும் முறைகள் ஆகியவற்றில் பிற சாதாரணக் (Neurologically typical) குழந்தைகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதே இந்த நோயின் பிரதானமான தன்மையாகும். ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் வேறுபடுவார்கள்.

பேச்சு, மொழி மற்றும் மற்றவர்களுடன் கருத்து பரிமாறும் திறனில் காணப்படக் கூடிய, நீண்டகாலமாக நிலைத்து நிற்கிற குறைபாடுகள் (persistent deficits in speech, language and communication). சிலர் பேசவே மாட்டார்கள் , அதிலும் சிலர் அர்த்தம் இல்லாமல் ஏதேதோ ஒலியினை எழுப்பி பேசுவார்கள். சில குழந்தைகள் அர்த்தமே இல்லாவிடிலும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். சொற்கள் மூலம் தேவையை வெளிப்படுத்தாமை (அடுத்தவரின் அல்லது தனது கையின் ஆட்காட்டி விரலைப்பயன்படுத்திச் சுட்டிக் காட்டுவது) சைகை அல்லது பிற அசைவுகளின் மூலம் தேவைகளை வெளிப்படுத்துவார்கள். சுழலும் பொருட்களுடன் அதிக நேரம் விளையாடுவது, சுழற்சியை இரசிப்பது, ஒருவிளையாட்டுப் பொம்மையின் ஒரு பகுதியில் மட்டும் முழுக் கவனம் செலுத்துவார்கள்.

மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதிலும் ஒட்டி உறவாடுவதிலும் உள்ள சிரமங்கள் (persistent deficits in social interaction and social communication) .கூடுதலாகத் தனிமையையே விரும்புவார்கள், அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை மட்டும் திரும்பத் திரும்ப விளையாடுவார்கள். சில வேளைகளில் தேவையற்று அழுவார்கள் சிரிப்பார்கள்.முக்கியமாக இந்தப் பிள்ளைகள் நேரம், இடம், யார் எவர் என்ற வித்தியாசம் உணர்வதில் சிரமப்படுவார்கள். ஊடாட்டம், இடை வினையாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை இது சுட்டிக் காட்டுகிறது.

இறுக்கமான, நெகிழ்வற்ற செயல்கள், சிந்தனைப்பாங்கு, திரும்பத்திரும்ப ஒரே செயலைச் செய்யும் தொடர் பழக்கவழக்கங்கள் (rigid, repetitive patterns of behaviour, interests, or activities). தொடர் செய்கைகள், மாற்றத்தை விரும்பாத போக்கு.உதாரணமாக கைகளை அசைத்தல், உடலை முன்னும் பின்னுமாக அசைத்தல், துள்ளுதல், மேலும் பல அசைவுகள் காணப்படும். ஆனால் ஏதாவது ஓர் உடல் அசைவை எந்த நேரமும் மேற்கொள்வார்கள். இவர்கள் இசை பிரியர்களாகவும் இசைக்கேற்ப தமது உடலை அசைப்பவர்களாகவும் இருப்பார்கள்.

தற்புனைவு ஆழ்வு (Autism) குறைபாடு உடையவர்கள் த‌ங்களு‌க்கெ‌ன்று ஒரு த‌னி உலக‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌ ஒரு தனி உலகத்தில் தாம் இருப்பது போன்ற பாவனையில் இருப்பார்கள் . பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்குவதில் திறமை வாய்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பொம்மை அல்லது பொருளை மட்டுமே பயன்படுத்துவர் கணிதத்தில் வல்லுநர்களாக இருக்கலாம், ஆனால் அதைச் சரியாக நடப்புலகில் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியாதவர்களாக இருப்பார்கள்.

தற்புனைவு ஆழ்வு உடையவர்களிடம் பல அறிவாளிகளையும் மிஞ்சும் வண்ணம் தகவல் அவர்கள் கையில் இருக்கலாம். கற்பதிலும் அதைப் பயனுக்கு கொண்டுவருவதிலும் சிரமம் காணப்படும். குறைபாடு உடையவர்களுக்கு மிகவும் மாறுபட்ட சிறப்புப் பயிற்சி அளிக்கும் முறை தேவை. ஆனால் அத்துறையில் ஆராய்ச்சியும், பயிற்சியும் இன்னமும் வளர்ச்சி அடையாத நிலையிலேயே இருக்கிறது என்பதை கார்னகி மிலான் பல்கலைக்கழக ஆய்வாளர் ‘மர்லீன் பெர்மான்’ (Marlene Behrmann, Director, Cognitive Neuroscience Lab, Department of Psychology, Carnegie Mellon Univiversity) குறிப்பிடுகிறார்.

கற்பதில் எதிர்கொள்ளும் நிலைக்குக் காரணம் மிகத்துல்லியமாக, குறிப்பிட்ட ஒருநிலைக்கு மட்டுமே தகவலைப் புரிந்து கொள்வதும், கற்பதில் மாற்றங்களுக்கு தங்களை தகவமைத்துக் கொள்ளாத நிலையும் ( ‘hyperspecificity’ of learning — their learning became fixed and inflexible — ) காரணம் என்பது இந்த ஆய்வில் பங்கேற்கும் இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர் ‘ஹில்லா ஹாரிஸ்’ (Hila Harris, The Weizmann Institute, Israel) என்பவரின் கருத்து.

அறிவுத் திறன் (அறிவாற்றல்). அறிவாற்றல் குறைவாக உள்ளவர்களில், அதாவது IQ எனப்படும் நுண்ணறிவு IQ 70க்குக் குறைவாக உள்ளவர்களில், முன்னேற்றம் குறைவாகவே இருக்கும். மொழி வளர்ச்சி. பின்தங்கிய மொழி வளர்ச்சி உள்ள குழந்தைகளில் முன்னேற்றம் குறைவாகவே இருக்கும் வளரும் தங்களது குழந்தையின் வளர்ச்சி நிலையிலும், பழக்கவழக்கம், வயதிற்கேற்ற நடத்தை ஆகியவற்றில் சந்தேகமுள்ள பெற்றோர்கள் அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவரை அல்லது உள நல மருத்துவரை நாடுவது நன்மை பயக்கும் . மிகவும் சிறுவயதிலேயே குறைபாட்டைக் கண்டறிந்துவிட்டால் தீவிர பயிற்சி அளித்து நிலைமையைச் சிறிது முன்னேற்றலாம் .

பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து கல்வி, மருத்துவம், பொருளாதார ரீதியில் பல புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறு குறைபாடுள்ள பிள்ளைகளுக்கென “விசேட பள்ளிக்கூடங்கள்”(Special School”) உண்டு். அங்கு விசேட பாடத்திட்டம் , கற்பித்தல் முறை பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் ஊனத்திற்கு ஏற்ப “தனிப்பட்ட கல்விதிட்டம்” (Individualized Education Plan -IEP) ) ஆசிரியர் எழுதிப் படிப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் வசிக்கும் கார்த்திக் குமார், ஒரு தட்புனைவு ஆழ்கைக் குறைபாடு உடையவர் இவர் இந்தியாவின் Zee Tamil தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிய ஸ ரி க ம பா பாடல் நிகழ்சி மூலம் நன்கு அறியப்பட்டவர். இனிய குரல்வளம் கொண்ட பாடகர். பெற்றோர் மற்றும் அவனது விடாமுயற்சி. இன்று அங்கீகாரமாக மாறிவிட்டது. பலமேடைகளில் பாடி அசத்துகிறான். அதீத நினைவும், ஞாபக சக்தியும் இருப்பதால் திரைப்பட பாடல்களை குறிப்புகள் இல்லாமலேயே பாடி அசத்துகிறான். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் அரபிய பாடல்களும் கார்த்தியின் ‘பிளே லிஸ்டில்’ இருக்கின்றன. 8 மொழி பாடல்களை உச்சரிப்பு பிழையின்றியும், அடிப்பிறழாமலும் பாடி அசத்துகிறான்’’ என்று பெருமைப்படும் தாயான ராஜேஸ்வரி, தட்புனைவு ஆழ்கை ’ பாதிப்பிலும் அசத்தலாம் என்பதை என்னுடைய மகன் நிரூபித்திருக்கிறான் என்ற பெருமைக்குரியவன். இப்படி கார்த்திக்கின் திறமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை பரிதாபமாகப் பார்ப்பதை விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர்களுக்குள்ளும் தனித்திறமைகள் இருக்கிறது.

தற்புனைவு ஆழ்வு பற்றிய எம் சமூகத்தில் போதிய அறிவு இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயம். இருப்பினும் இக் குறைபாட்டை இனங்கான பெற்றோர்களின் பங்கு முக்கியமான ஒன்றாகும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் நீங்கள் ஆரம்ப அறிகுறிகளாக குழந்தையின் வளர்ச்சிக் காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது தாமதங்களை இனங்காணும் போது கிராமியக் குடும்ப நல தாதியர், குடும்ப வைத்தியர் , குழந்தை வைத்தியர், மனநல வைத்தியர், உளவளத் துணை நிபுணர், உளவளத்துணை ஆலோசகர் ஒருவரை நாடி சந்தித்து கலந்துரையாடி அத‌ற்கான உ‌ரிய சி‌கி‌ச்சை முறைகளை மே‌ற்கொ‌ண்டு உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு வித்திடுங்கள்.

மேலும் தகவலுக்கு:
– Autism – https://ta.wikipedia.org/s/azg
– Autism – https://en.wikipedia.org/wiki/Autism
– ‘Sesame Street’ Introduces A New Muppet Character With Autism http://www.npr.org/sections/thetwo-way/2015/10/22/450907538/sesame-street-introduces-a-new-muppet-character-with-autism
– Training by Repetition Actually Prevents Learning for Those With Autism –http://www.cmu.edu/news/stories/archives/2015/october/repetition-and-autism.html
– Duke Launches Autism Research App, Families can participate in study with free download https://today.duke.edu/2015/10/autismbeyond
– Autism & Beyond – https://autismandbeyond.researchkit.duke.edu/

– நிலவன்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link