Home உலகம் கொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு – ஒரு சமூகமானிடவியல் பார்வை!

கொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு – ஒரு சமூகமானிடவியல் பார்வை!

by admin

Thomas Hylland Eriksen, நோர்வேஜிய சமூகமானிடவியல் பேராசிரியர் – தமிழாக்கம்:ரூபன் சிவராஜா,நோர்வே.

பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சிலநன்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.  வேலை,நுகர்வு என்பவற்றால்    தீர்மானிக்கப்படும் வாழ்வைத் தாண்டிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் –          நிதானமான வாழ்வைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை இந்த நெருக்கடி வழங்கக்கூடும்” என நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர்   Thomas Hylland Eriksen, அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குறுகியகாலத்திற்குள் நாம்     அறியப்படாத ஒரு அவசர நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளேளாம். நோர்வேயில் பெரும்பான்மையான விடயங்கள் தண்டவாளத்தில் நேர்த்தியாகப் போய்கொண்டிருந்த நிலைக்குப் பழகிவிட்டோம். தடம் புரள்வதென்பது எமக்கு மிக அரிதாக நேர்வது. அதனைச் சரிப்படுத்துவதென்பது சவாலானது.

இப்பொழுது  கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு முகம் கொடுக்கின்றோம். இனி இருக்கப்போகும் சமூகம் முன்னர் இருந்ததைப் போல் இருக்கப் போவதில்லை. நோர்வே மக்களைவிட மோசமான நெருக்கடியை ஏனைய மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர். எனவே முறைப்பாடு செய்வதற்குரிய உரிமை எமக்கில்லை.         மொறீசியஸ் தனது ஒரேயொரு விமானநிலையத்தினையும் மூடநேர்ந்திருக்கிறது. வெளியுலகத்துடனான  நடமாட்டத் தொடர்புக்கு விமானப் போக்குவரத்தை நம்பியிருக்கும் ஒருசிறிய தீவுத் தேசத்திற்கு இதுவொரு பாரிய விளைவு. அமெரிக்காவின் சமூகசமத்துவமின்மை மிகப்பெரியது. மில்லியன் கணக்கான       அமெரிக்கர்கள் –       அவர்கள் சுகதேகிகளோ   அன்றி நோய்வாய்ப் பட்டவர்களோ வெறுந்தரையில் நிற்கவேண்டி ஏற்படும்.

காங்கோ போன்ற நாடுகளில்   இத்தகைய        தொற்றுப் பரம்பல்களைக் கையாள்வதற்குரிய வளங்கள் குறைபாடாகவுள்ளன. வறியநாடுகளில் அனைத்துச் சமூகத் தொழிற்பாடுகளையும் வியாபாரத்தையும் நிறுத்துவது கடினமானது. இருந்தும் கிழக்காசிய நாடுகள் இது விடயத்தில் செயற்திறனைக் காட்டியுள்ளன.

உலகமயமாக்கலின் முகம் இருந்தும்கூட நோர்வே நிலைமைகள் ஏனைய பல நாடுகளைவிட       வியப்பிற்குரியதாய் ஆகியிருக்கிறது. காரணம் இத்தகையதொரு நெருக்கடிவருமெனும் முன்தயாரிப்பு எம்மிடம் இருந்திருக்கவில்லை. இதன் விளைவு எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது. எண்ணெய் விலை சரிவடைந்து வருகிறது. விமானசேவை நிறுவனங்கள் கிட்டத்தட்ட திவாலாகியுள்ளன. தலைவர்கள் தடுமாறுகின்றனர். கப்பற்துறைப் பணியாளர்கள் தற்காலிகவேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதுவெறும் ஆரம்பம் மட்டுமே. இசைக்குழுவுடன் பயிற்சிசெய்ய முடியவில்லை. உடற்பயிற்சிக் கூடம் செல்லமுடியவில்லை. விமானங்கள் பறக்கமுடியவில்லை.இத்தனையும் ஏன். மலைஏறக்கூட எங்களுக்குஅனுமதி இல்லைஎனும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

          ஒரு உலகளாவிய தொற்றுப் பரம்பல் நிகழும் என்பது உலகசுகாதார அமைப்பினாலும் மருத்துவ ஆய்வாளர்களாலும் பலஆண்டுகளாகக் கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் எப்பொழுது எந்தவழியில் அது பரவுமென்பதை எவரும் முன்னறிந்திருக்கவில்லை. இப்பொழுது அது வந்திருக்கிறது.

உதைபந்தாட்ட ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கங்கள்          தம்மிடம் இல்லாத நிதியை ‘நெருக்கடிப் பொதி’களாக ஒதுக்குகின்றன. விடுதிகளும் உணவகங்களும் பணியாளர்களை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நீக்குகின்றன. வெறுமையான தேவாலயங்களில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. பேருந்துகளும் தொடருந்துகளும் பயணிகள் இல்லாமல் ஓடித் திரிகின்றன. இசைநிகழ்வு மண்டபங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பங்குச்சந்தை சரிந்துகிடக்கிறது. வீடுகளுக்குள் இருக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர். ஊடகச் செய்திகள் கொரோனாத் தகவல்களால் நிரம்பி வழிகின்றன.

அதிகார சகதிகளுக்கு ஆபத்து.

விரைவில் அல்லது தாமதமாகவேனும் தொற்றுப் பரம்பல் ஒருகட்டத்தில் தணிந்துவிடும்; உணவகங்கள் திறக்கப்படும்; மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் திரும்புவர்; மீண்டும் அயலில் உள்ள கடைகளில் மாவும் ’ரொய்லெற்’ பேப்பரும் வாங்கும் நிலமைவரும். ஆனால் இந்த இடைநிலைக் காலத்திற்குள் ((liminal phase) )ஏதோ ஒன்று மாறியிருக்கும். அதாவது இரண்டு சம்பவக் காலங்களுக்கு இடைப்பட்ட காலத்தைக்  liminal phase என சமூக மானிடவியலாளர்கள் அழைப்பர். இந்தக் காலகட்டம் பருவமடைதல் காலத்திற்கு ஒப்பானது.     எதுவும்      நடக்கலாம்.இது சமூகத்தின் அதிகாரசக்திகளுக்கு ஆபத்தமானது. உலகமயமாக்கல் எவ்வாறு தொழிற்படுகின்றது என்பது முதற்தடவையாக நோர்வேஜியர்கள் உட்பட்ட பெரும்பான்மை உலகமக்களுக்கு நினைவூட்டப் பட்டிருக்கின்றது.

உலகமயமாக்கல் சந்தைப்பொருளாதாரத்தில் பெருநிறுவனங்கள் மேலும் வலுவடைவனவாகவும் சிறுநிறுவனங்கள் திவாலாவதற்குமான   அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாகப் பலரும் அறிவர். போதைஊசி ஏற்றுபவர்கள் போல நாம் புதைபடிவ எரிபொருளுக்கு( fassile ) நாளாந்த அடிமைகளாகியுள்ளதையும் இன்னும் பலர் அறிவர்.ஆனால் ஐரோப்பியர்கள்       பாதுகாப்பாகவும் சவுகரியமாகவும்           வாழ்வதற்கு      வழிவகுத்த        அமைப்புமுறைமையை    இயங்க வைக்கும்  நேர்த்தியாக மறைக்கப்பட்ட, அடர்த்தியான வலைப்பின்னல் பற்றிய அறிதல் அரிதாகவே உள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படும் போதுமட்டுமே மின்உற்பத்தி நிலையங்கள் விசைச்சுழல்கள் பற்றிய நினைப்பு உங்களுக்கு வருகிறது (சிலவேளைகளில் அப்பொழுதுகூட வருவதில்லை).

நிலத்திற்குக் கீழ் ஒருசில மீற்றர் ஆழத்தில் தம் வேலையைச் செய்யும் நீர்க் குழாய்களின் வலையமைப்பைக் கடந்து நாளாந்தம் செல்கிறீர்கள். அப்படியொரு தொழிற்பாடு உள்ளதெனத் தெரியாமலே அதன் மேல் நடக்கின்றீர்கள்.  வீட்டின் நீர்க்குழாய் வறண்டுபோகும் போதுதான் தண்ணீர் எங்கிருந்துவருகிறது என்பதில் ஆர்வம் உண்டாகுகிறது.

அமைப்பியல்    பாதிப்பு    இதனைப் போன்றதுதான் உலகமயமாக்கப்பட்ட       பொருளாதாரமும். அதுவேகம், வினைத்திறன், நேரம்தவறாமை, முன்னர் கணிக்கப்பட்ட நாடுகடந்த உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. பிரேசிலில் சோயா விவசாயிகள் இல்லாமல் நோர்வேயில் மாட்டிறைச்சி இல்லை. ஆசியத் தொழிற்சாலைகளில் மிகைநேர உழைப்பாளர்கள்,குறைந்தசம்பளத் தொழிலாளர்கள் இல்லாமல் நோர்வேயில் பெருநுகர்வுக் கடைகள் (XXL eller Elkjøp ) இல்லை. கொன்ரைனர் கப்பல்கள் இல்லாமல் சீனப்பொருளாதார அதிசயம் நிகழ்ந்திருக்காது.

எல்லாமும் ‘உரியநேரத்திற்குள்  (       in time) எனும் நடைமுறையே இங்கு முதன்மையானது: கோதுமைமுதல் நோர்வேயின் ஆலைகள் -சோயாத்தூள் முதல் நோர்வே சால்மன் மீன் -அவுஸ்ரேலிய இரும்புத்தாது மற்றும் சீனாவிலிருந்து வரும் இயந்திரப் பாகங்கள் வரை அனைத்தும் விரைவாகவும் நேரம்தவறாமலும் கிடைக்க வேண்டுமென்ற அமைப்பியல் நிலவுகின்றது.தாமதங்கள் என்பதுசந்தைச்   சங்கிலியில் தளம்பலை ஏற்படுத்தும். வழங்கல் நிறுத்தப்படும் போதுஉற்பத்தியும் நிறுத்தப்படுகிறது.

முதலாளித்துவமானது வாங்குவதையும் விற்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் சிறிய அளவிலானது.உதாரணத்திற்கு,உங்களிடம் விற்பதற்குரிய பொருட்கள் சில உள்ளன. நான் வேறு பொருட்களை விற்றதனால் வேறுசிலபொருட்களை வாங்குவதற்குரி யபணம் என்னிடம் உள்ளது. பொருட்களாகவோஅல்லதுசேவையாகவோ இருக்கலாம் – வாங்குபவர் எண்ணிக்கைகுறையும் போது மொத்தக்கணக்கும் மோசமானதாக இருக்கும்.

உலகமயமாக்கலில் பரஸ்பரம் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலை 1500 களிலிருந்து மெதுவாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் இறுதித் தசாப்தங்களில் அதீதவளர்ச்சி கண்டுள்ளமை, ஒருநாடு தனித்துநின்று சமாளிப்பதென்பதை சாத்தியமற்ற தாக்கியுள்ளது.சுருங்கச் சொன்னால் இது மிகப்பெரும் அமைப்பியல் பாதிப்பு.

இத்தகைய ஒருஅமைப்பியலுக்குள் சிறியது ரும்பினால் பெரியபாரத்தைச் சரிக்கமுடியும். ‘இலாடம் இல்லாத குதிரை’ என்று தொடங்கும் பழைய குழந்தைகளுக்கான கதைஒன்று உள்ளது. அந்தக் கதையின் ஐந்தாவதுவரியில்; அரசாட்சி பறிபோகிறது. இந்தக் காரணகாரிய உறவுகள் பட்டாம்பூச்சி விளைவுகள்   (butterfly effect)   என அழைக்கப்படுகின்றன: ’இரியோ டி செனீரோவில்’  தன் சிறிய சிறகுகளை விரிக்கும் பட்டாம்பூச்சி பலவீனமான காற்றுச் சுழல்களை உருவாக்குகிறது, இது ஏனைய காற்றுச் சுழல்களைச் சந்திக்கிறது,அவை வலிமையடைந்து திசைமாறுகின்றன. அதன் அர்த்தத்தை நீங்கள் அறிவதற்கு முன்பு,கரீபியனில் ஒருசூறாவளி ஏற்பட்டு விடுகிறது. இந்த விளைவுகளைத்தான் தற்போது தாராளமாகக் காண்கிறோம்.

இதன் உண்மையான விளைவுகள் மிக வெளிப்படையானவை. அதன் வடிவம் வேலைவாய்ப்பற்றோர் அதிகரிப்பு,பொருட்களுக்கான தேவை வீழ்ச்சி,உற்பத்திச் சரிவு என்பதாக எதிர்மறைப் பரிமாணங்களை அடையும்.

மாற்றத்திற்கான வாய்ப்பு.

இன்றைய நாட்களில் பல நோர்வேஜியர்களுக்கு சடுதியாக அதிகளவுநேரம் கிடைத்துள்ளது. போகப்போக இன்னும் பலருக்கு இன்னும் அதிகநேரம் கிடைக்கப்பெறும். அந்த நேரத்தினை விமர்சனபூர்வமான மீள்சிந்தனைக்குப் பயன்படுத்தமுடியும். உலகப் பொருளாதாரத்தில் தாங்கியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத இழைகளையும் அதன் அமைப்பியல் பாதிப்புபற்றியும் உணர்ந்திருக்கின்றோம். இந்த நுண்ணறிதலை ஆரோக்கியமானதாக மாற்றமுடியும்.

நிச்சயமாக கொரோனா நெருக்கடி என்பது சந்தேகம், இனவாதம்,தேசியவாதம் என்பவற்றைத் தூண்டிவளர்க்கவும் தளங்களை அமைத்துக் கொடுக்கவும் கூடும். வழமைபோலஅமெரிக்க ஜனாதிபதி இந்தப் போக்கில் முன்னுக்குச் சென்றுகொண்டிருக்கிறார். ஆயினும் அதற்கு நேரெதிராகக் கூட இந்நெருக்கடியைக் கையாள முடியும்.

விஞ்ஞானிகளும்       அரசியல்வாதிகளும் முப்பது ஆண்டுகளாக எந்தவொரு குறிப்பிடத்தக்க தீர்வுகளையும் கண்டடையாமல் காலநிலைநெருக்கடியைப் பற்றிப் பேசிவந்திருக்கும் புறநிலையில், மாறுபட்ட வழிமுறைகளைத் தெரிவுசெய்வதற்கான ஒருவாய்ப்பாக இந்தநெருக்கடி இருக்கக்கூடும்.

வேலை,நுகர்வு என்பவற்றால் தீர்மானிக்கப்படும் வாழ்வைத் தாண்டிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதானமான வாழ்வைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை இந்தநெருக்கடி வழங்கக்கூடும்.

அமேசான்          காடுகள் அழிக்கப்படுவதற்கு நோர்வேயிலுள்ள மாட்டிறைச்சி உண்பவர்கள் பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படாத, பங்குச்சந்தை நிர்ணயவணிகர்கள் மற்றும் கொழுத்த பணக்காரர்கள் இனியும் இயற்கை அழிவு மற்றும் சமூக சமத்துவமின்மையிலிருந்து இலாபம் பெறவாய்ப்பற்ற தெரிவுகளுக்கு இந்தநெருக்கடி வழிகோலக் கூடும்.

Thomas Hylland Eriksen, நோர்வேஜிய சமூகமானிடவியல் பேராசிரியர்

தமிழாக்கம்:ரூபன் சிவராஜா,நோர்வே.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More