Home இலங்கை வன்முறைகளாக மாறும் நகைச்சுவைகள் – இரா சுலக்ஷனா..

வன்முறைகளாக மாறும் நகைச்சுவைகள் – இரா சுலக்ஷனா..

by admin

‘ இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வள்ளுவனார் வாக்கு, துன்பத்தின் விடுதலையாக, மனவெழுச்சியின் காப்பீடாக நகைச்சுவை உணர்வு அமைதலை, வெளிப்படுத்தி நிற்கிறது. இயந்திரமயமாகிப் போன இன்றைய சூழ்நிலையில், மனிதர் தம் பொருளாதார சுமைகளிலிருந்து விடுபடவும், வேலைப்பளு, குடும்பப் பிரச்சினை ஆகியவற்றிலிருந்து விடுபடவும், நகைச்சுவைகளை நாடுகின்றனர். குறிப்பாக உலகம் முழுதும் 6000 சிரிப்பு மன்றங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை பட்டிமன்றமாகவும், நகைச்சுவை பாட்டுமன்றமாகவும், நகைச்சுவை நிகழ்ச்சிகளாகவும், தனியாள் நகைச்சுவைகளாகவும் நகைச்சுவைகளுக்கானக் கேள்வி நிரம்பல் சமுகத்தில் எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

உண்மையில் மனிதர் அவர் தம்முடைய நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் போதே, ‘ என்டோர்பின்ஸ் ‘ என்ற ஒருவகைத் திரவப் பொருள், அவர்தம் மூளையில் உருவாகி, இயற்கை போதையாகிய புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது ; உடலின் 300 வகையான தசைகள் மனிதர் சிரிக்கும் போதே அசைகின்றன ; மனமும் தேகமும், மனிதர்கள் சிரி;க்கும் போதே, புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் பெறுகின்றன. ஆக, மனிதர் அவர்தம் அகமும், புறமும் சிறக்க நகைச்சவை உணர்வு தேவைப்பாடுடையதாகின்றது என்பது தெளிவு.

இத்தகைய நகைச்சுவை என்பது, மனிதரின் மகிழ்;ச்சி – கோபம் ஆகிய எதிரெதிர் உணர்வுகளில், பெரும்பாலும், மகிழ்ச்சியை மையப்படுத்தி கட்டமைக்கப்படுவதாகவே, எல்லோரும் கருதுவர். ஆனால், உண்மையில், நகைச்சுவை என்பது, பிறரை நகைப்புக்குள்ளாக்கி, நகைத்தலாகவே அமைந்து விடுகிறது. இன்னிலையில் தான் நகைச்சுவை என்பது, கோபத்தை உண்டுபண்ணுவதன் மூலம், வன்முறைக்கு வழிகோலுகிறது.

இலக்கியத்தின் கடைக்குட்டியாகக் கொண்டாடப்படும், சினிமா இத்தகைய வன்முறைக்கு பலவழிகளிலும் வழிசமைத்து வருகின்றது. காலாகாலமாக, நகைச்சுவை என்பது, பால், இனம், சாதி, வர்க்கம் என்ற அடிப்படையில், ஒடுக்கப்படுகின்ற மக்களின் மீதான மிடிமை சக்தியாகவே, செயற்பட்டு வருகின்றமையை காணலாம். இதற்கு வலுசேர்க்கும் வகையிலே விசேடமாக, சினிமா நகைச்சுவைகளும் அமைந்து விடுகின்றன. ஏனைய நகைச்சுவைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

குறிப்பாக பெண்களை பாலியல் கருவிகளாக சித்தரித்தல், நலிந்த பிரிவினரை இழிவுப்படுத்தல், மாற்றுப் பாலினத்தவரை இழிவுப்படுத்தல், இயலாமையை சுட்டிக்காட்டி, இயல்புகளை நக்கல் செய்தல் என்பதாகவே, நகைச்சுவைகள் கட்டமைக்கப்படுகின்றன. பெரும்பாலும், வார்த்தை வன்முறையாகவே, நகைச்சுவைகள் அமைந்து விடுகின்றன. குறிப்பாக எல்லாத் திரைப்படங்களிலுமாக ‘ அவனா நீ ‘ என்ற வார்த்தை நகைச்சுவைக்காகப் பரவலாகப் பிரயோகிக்கப்படுவதைக் காணலாம்.
குறிப்பாக பாலின சிறுபான்மையினர் மீது இத்தகைய நகைச்சுவை என்பது, வன்முறையை செலுத்த நினைக்கும் வகையில் பிரயோகிக்கப்படுகின்றமை கவனத்திற்குரியது. அதேபோல் வீட்டு வேலை செய்பவர்களை பாலியல் கருவிகளாகச் சித்தரித்து காட்டும், ‘ மனைவி – வேலைக்காரி இடிச்சுட்டு போறா, சும்மா நிக்கிறிங்களே? கணவன் – வரட்டும் திருப்பி இடிச்சு காட்டுறன் ‘ போன்ற வேலைக்காரி நகைச்சுவைகளும் மறுப்பரிசீலனை செய்யப்படவேண்டியவையே. இந்த அடிப்படையில் நோக்கின், ஒடுக்கப்படுகின்ற மக்களை மேலும், ஒடுக்குவதற்கான ஆயுதமாகவே, நகைச்சுவைகள் அமைந்து விடுகின்றமை நன்கு தெளிவாகின்றது.
இன்றைய இடர்கால சூழலிலும் கூட, குடும்பங்களை பொறுத்தவரை, சிறப்பாக மனையாள் மீதான வன்முறையாகவே, நகைச்சுவைகள் கட்டமைக்கப்படுவதைக் காணலாம். இந்நிலையில் இன்றைய ‘மீம்ஸ்’ வகை நகைச்சுவைகளுக்கு முக்கிய இடமுண்டு. ( மனைவி – ஊரடங்கு தளர்த்திட்டாங்க, நா ஒரு இரண்டு மணிநேரம், வெளியே போறேன், உங்களுக்கு ஏதாவது வேணுமா? கணவன் – வேண்டாம். எனக்கு இதுவே போதும்.) போன்ற வகையான நகைச்சுவை, குடும்ப சூழலில் முழுமையாக மனையாள் ஒருவகையான வன்முறைக்குள்ளாக்கப்படுவதையே எடுத்துக்காட்டுகிறது.

உண்மையில் நகைச்சுவை என்பது, கேட்கும் போது சிரிக்க வைப்பதாகவும், சிந்தித்துப் பார்க்கும் போது அழுகை வரவழைப்பதாகவும் இருக்க வேண்டும். ( கண்ணதாசன்) சமுகத்தின் போலி ஆசாரங்களை, மிகை பாவனைகளை, பொத்திப் பொத்திப் புரையோடிப் போயிருக்கும் பெரிய இடத்து புண்களை, மனித மனங்களில் ஒளிந்திருக்கும் ஒழுக்கக் கேடுகளை கேள்விக்கிடமாக்கும் சிந்தனைக்குரிய நகைச்சுவைகளாக மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, நமது இலக்கியங்கள் வழி தெரியவரும் காளமேகப் புலவரின் பாடல்கள், பலவும் சிரிப்பையும், சிந்தனையையும் ஒருசேர வலியுறுத்தி நிற்பதாக அமையப்பெற்றிருக்கின்றமையை எடுத்துக்காட்டலாம்.

அதேநேரம், புதுமைபித்தன், சுந்தர் ராமசாமி, தி. ஜானகி ராமன், நாஞ்சில் நாடன் , கல்லடி வேலுப்பி;ள்ளை ஆகியோரின் நகைச்சுவைகளும், சிரித்திரன் போன்ற சஞ்சிகையில்; வெளிவரும் நகைச்சுவைகளும் இத்தகைய சிந்தனைக்குரிய நகைச்சுவைகளாக அமைகின்றமையையும் எடுத்துக்காட்டப்பட வேண்டியதே. குறிப்பாக, புதுமைபித்தனை பொறுத்தவரை, மரபுகளை எதிர்த்;தல், புதிய சமூக மதிப்புகளை உண்டாக்குதல் என்ற அடிப்படையிலேயே, தமது எழுத்துலகில் பிரவேசம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஈழத்தில் சிவஞான சுந்தரத்தின் சிரித்திரன், நகைச்சுவை சஞ்சிகை மக்களை கிளுகிளுப்பூட்டுவதற்காக மாத்திரம் படைக்கப்படாமல், சிரிக்க வைத்ததன் மூலம் சிந்திக்கவும் செய்தது. குறிப்பாக சிவஞான சுந்தரம், சிறந்த கார்ட்டூன் ஓவியராகவும் அதேநேரம், சிறந்த சிந்தனையாளராக விளங்கியமையின் வெளிப்பாடாகவே, சிரித்திரன் அமையபெற்றது. குறிப்பாக நமது சமுகத்தில் உள்ள கேடுகளை, நம்பிக்கையில் உள்ள மூடத்தனங்களை, தனிமனித சிறுமைகளை, அரசியல் ஊழல்களை, கேலிச்சித்திரங்களாகவும், விகடங்களாகவும், கட்டுரைகளாகவும் எடுத்துக் காட்டியதன் மூலம், மனிதர் அவர்தம் சமுகத்தை உன்னத நிலையை நோக்கி நகர்த்தியது எனலாம். இவ்வகையில் சவாரித்தம்பர், மைனர் மச்சான், மிஸிஸ் டாமோடிரன், மெயில் வாகனத்தார், ஒய்யப்பங்கங்காணி முதலிய கேலிச்சித்திரங்கள் வாசகர்கள் மத்தியில், கருத்து செறிவுமிக்க, சிரிப்பதன் மூலம் சிந்திக்க வைத்தவை எனலாம்.

இன்றைய சூழ்நிலையில் நகைச்சுவை என்பது, பல்வேறு விதமான ஊடகங்களின் ( கேலிச்சித்திரம் முதல் சினிமா வரை) மூலம், பல்வேறு வடிவங்களில் சமுகத்தில் சீவித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு, சமுகத்தில் பல்வேறு, நிலைகளில் சீவித்துக் கொண்டிருக்கும், எத்தனை நகைச்சுவைகள் சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன என்பது கேள்விக்குரியே. மாறாக நகைச்சுவைகள் வன்முறைக்குக் காப்பீடாக அமைகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல, ‘நலிந்தப் பிரிவினரை இழிவுக்குள்ளாக்குவதாக, நகைச்சுவைகள் அமைகின்ற போதுதான் சமுகத்தில், அவை நிலைப்பேறுடையதாக அங்கிகரிக்கப்படுகின்றன’ என்பதே, ஒருசாராரின் ஏகோபித்தக் கருத்து நிலையாக அமைகின்றது. எனினும், இக்கருத்துநிலை முழுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே. ஏனெனில், இதே நகைச்சுவை உலகில், சிந்தனைக்குரிய நகைச்சுவைகளை பல்வேறு ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்திய, வெளிப்படுத்துகின்ற கலைஞர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, கவிஞர் வாலியின் ‘ ஒரு நாமச் சண்டை? ‘ என்ற கவிதை எப்படி சிரிப்பதற்குரியதாகவும், சிந்தனைக்குரியதாகவும் அமைகின்றது என்பதை எடுத்துக்காட்டலாம்.

வடகலையா? தென்கலையா?
வாதியும் பிரதிவாதியும்
வாய்தா மேலே வாய்தா வாங்க…
வழக்கு வருஷக் கணக்காக….
நெடுநாட்களாய்
நெற்றியில் நாமமே இல்லாமல்
நின்று கொண்டிருந்த கோயில் யானை,
ஒருநாள்,
சங்கிலியை அறுத்துக் கொண்டு
சொல்லாமல் கொள்ளாமல்
ஊரைவிட்டு ஓடியே போயிற்று.
ஊர் பேசியது,
மதம் பிடித்ததால் ஓடியது என்று.
உண்மையில் ,
மதம் பிடிக்காததால் தான்
ஓடியது யானை…
கவிஞர் வாலி
இங்கு மதம் எப்படி மனித மனங்களில், ஆளுகை சக்தியாக நின்று, ஆட்சிபுரிகின்றது என்பது, சிரிப்புக்குரியதாகவும், சிந்தனைக்குரயதாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது.
1956 ஆம் ஆண்டு வெளிவந்த குலதெய்வம் திரைப்படத்தில் அமைந்த, பட்டுக் கோட்டை கல்யாணச் சுந்தரத்தின்,
பந்தியில் முந்தும்
வீரரே – வெற்றி
வீரரே- வீராதி
வீரரே!
பந்தியில் முந்தும்
வீரரே – நீங்க
படையில பிந்தும்
சூரரே!
பச்சோந்தி போல் மாறும்
பண்பாளரே……
என்ற பாடல், போலியாக வீரம் பூணும் ஒருவனின், போலித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

இதேபோல், அண்மைகாலமாக, உலகிற்கே பேரச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கில், நாடுமுழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த போதும், தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்படுவதை, சிந்தனைக்குரிய கேலிச்சித்திரமாகப் புதினப்பத்திரிகைகள் தாங்கி வந்தமையும் எடுத்து நோக்கப்பட வேண்டியதே.
ஆக, இவ்வகையில் நோக்கின், நகைச்சுவை உணர்வு என்பது, எவ்வாறு ஆண், பெண் மாத்திரமின்றி அனைத்து பாலினங்களுக்குமான, பொதுவான உணர்வாக இருக்கின்றதோ, அதேபோல், அவ்வுணர்வு வெளிப்படுவதற்கான ஊடுபாவும், பொதுப்படையானதாக இருக்க வேண்டும். மேலும், நகைச்சுவை என்பது சிரிப்பினூடாக சிந்தனைக்குரியதாக மாறுதல் பெற வேண்டும். இன்னிலையில் தான் நகைச்சுவை என்பது வன்மானக் கருவியாகத் திணிக்கப்படல் மாற்றமடையும்.
இரா சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More