இலங்கை கட்டுரைகள்

மறவா அன்பு- பேபிசாளினி.


அனைவரும் இந்த உலகம் அன்பால் சூழ்ந்தது என்கிறார்கள். ஆனால் அந்த அன்பு என்பது சில இடங்களில் மறந்தும் மறைக்கப்பட்டும் போய்விடுகின்றது. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னர் அக்குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு எத்தனை ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாவல் அக்குழந்தை பிறந்ததும் மேலும் பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டு வருகின்றது. ஒரு தாய் தன் பிள்ளையினை பெற்றெடுக்க முன்னரும் சரி பின்னரும் சரி அளவு கடந்த பாசத்தினை அக்குழந்தையின் மீது வைக்கிறாள். அதேயளவு பாசத்தையே தகப்பனும் வைக்கிறான். பெற்றோர் தன் பிள்ளைகளை என் செல்லக் குட்டி, அம்மா பிள்ளை பட்டுக் குட்டி, தங்கக் கட்டி, செல்ல வண்டு என்ற வாய்ச்சொற்களின் மூலம் அன்பால் அழைக்கின்றனர். இவையனைத்தும் நாம் நடைமுறையில் கண்டு ரசித்ததே. பிறந்த அந்தக் குழந்தை சிறிது வளர்ந்து தவழும் நேரத்தில் எங்காவது விழுந்து அடிபடும் போது தகப்பனை விட தாயின் மனம் பெரும்பாடுபடுகின்றது. தன் குழந்தை நன்றாக சாப்பிட்டு வருகின்ற போது திடீரென்று சாப்பிடாவிட்டால் தாயானவள் அப்பிள்ளையை தூக்கிக் கொண்டு போகாத வைத்தியரும் இருக்காது போகாத பூசாரியும் இருக்காது.

அவ்வாறே காலமும் நேரமும் செல்லச் செல்ல பிள்ளையும் வளர்ந்து ஒரு வயதாகி, இரண்டு வயதாகி ஐந்து வயதில் பாடசாலைக்கு செல்கின்ற கட்டத்துக்கு வந்து சேரும். அப்போது அப்பிள்ளையை தாய் எவ்வாறெல்லாம் அழகு படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் அழகுபடுத்தி பாடசாலைக்கு அனுப்புவாள். எனது பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும், எதிர்காலத்தில் ஒரு வைத்தியராகவோ, ஒரு பொறியியலாளராகவோ, ஒரு ஆசிரியராகவோ வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் இருப்பது சாதாரண விடயமே. இவ்வேளையில் எனது தாய் ஓர் எதிர்பார்ப்போடு என்னை பாடசாலைக்கு அனுப்பிவைத்த நினைவுகள் ஞாபகம் வருகின்றது. அந்நினைவுகளை எல்லாம் திரும்பத் திரும்ப மீட்டிப் பாரக்கும் போது, அவை மீண்டும் கிடைக்காத வரங்களும் வேறெப்போதும் சுவைக்காத தனிச் சுவைகளுமாக இருக்கும். அந்த வரத்தினை சில பேர் சரியாகப் பயன்படுத்துவதுமில்லை. இவ்வாறு ஒருபுறம் இருக்க, சிலர் இந்த வரங்களைச் சரியாகப் பயன்படுத்த நினைத்தும் அவர்களது குடும்பச் சுமைகள் இடையிலே பாடசாலைகளை விட்டு விலக வழி செய்கின்றது. இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம் தான். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகவே செய்கின்றனர்.

எனவே குழந்தை பிறந்தது முதற்கொண்டு அக்குழந்தையை சீராட்டிப் பாலூட்டி தந்தையும் தாயும் அன்போடு தான் வளர்க்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அத்தனை குழந்தைகள் மீதும் வைக்கின்ற அன்பும் அரவணைப்பும் ஒன்றாகத்தான் இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது காட்டும் அந்த அன்பு ஒருபோதும் மறக்கப்படுவது இல்லை. சிலவேளை மறைக்கப்படலாம். ஏனெனில் தாய் தன் அன்பை பிள்ளைகள் மீது நேரடியாகக் கொட்டித் தீர்ப்பாள். தகப்பனோ தள்ளி நின்று கைகட்டி மறைமுகமாகத் தன் அன்பைக் காட்டுவான். இவ்விடத்தில் அவ்வன்பு மறைக்கப்படுகிறதே தவிர மறக்கப்படவில்லை. அன்பு என்பது மறைக்கப்பட்டு மறக்கப்படாமல் இருக்கின்ற பெற்றோரை, கைம்மாறாக சில பிள்ளைகளும் இறுதிக்காலம் வரை தங்களுடன் அன்போடும் பாசத்தோடும் வைத்துப் பார்த்துக்கொள்கின்றனர். இவர்களைத்தான் சமூகத்தின் முன்னுதாரணர்கள் என்பேன். இவர்கள் ஒருபக்கமிருக்க பெற்றோர் பேச்சுக் கேட்காது தங்களது சுய புத்தியின்பால் செயற்படும் பிள்ளைகளும் உண்டு. பெற்றோர் தன் பிள்ளைகளை பிறந்தது முதற்கொண்டு திருமணம் செய்து கொடுக்கும் வரை சுமந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சுமையை மேலும் கூட்டும் முகமாக பெற்றோர் பேச்சுக்கேட்காது தங்களது பாதையில் இருந்து விலகி இளவயதுத் திருமணம், பாடசாலை இடைவிலகல், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், களவெடுத்தல் போன்ற இன்னோரன்ன இழிவான செயற்பாடுகளைச் செய்கின்றனர். இவர்கள் சிறுவயதில் செய்யும் இக்காரியங்கள் இவர்களை எங்கோ கொண்டு விடுகின்றது.

பெற்றோர்க்கும் சமூகத்திற்கும் இவர்கள் சிறந்த பிள்ளைகளாக இல்லை எனிலும் இவர்களைப் போலல்லாத சமூகத்தில் இருக்கும் சில படித்த மேதாவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு சிறந்த பிள்ளைகளாக இருக்கிறார்களா என்றால் அது இன்றுவரை ஒரு கேள்விக்குறிதான். இந்தக் கேள்விக்குறி அனைவருக்கும் ஆனதல்ல. ஏனெனில் இன்றையநாளில் சில பிள்ளைகள், தங்கள் பெற்றோர்களின் இறுதிக்காலகட்டத்தில் அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு போய்ச் சேர்ப்பது கண்கூடு. மனிதனாகப் பிறக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் ஜனனம் என்பது ஒருகரையாக அமையும் போது மரணம் என்பதும் மறுகரையாக இருக்கின்றது. எனவே மனிதன் அம்மரணத்தை பெரும்பாலும் முதிர்நிலைப் பருவத்தின் பின்னரே அடைகின்றான். அந்த முதிர்நிலையில் தான் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கவேண்டும். இருப்பினும் நின்று கூடப் பேச நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய தொழிலுகில் தங்களது தாய் தகப்பனை பார்த்துக்கொள்ள சிறிது கூட நேரமும் விருப்பமும் இல்லாத மனிதர்கள் முதுமைப்பருவத்தில் தங்கள் பெற்றோர்களை சபைக்கு எடுத்துக் கொள்ளாது அநாதைகளாக விட்டுவிடுகின்றனர். இதனைப் பெரும்பாலும் சமூகத்தில் மதிப்பு மிக்க சில படித்த மேதைகள்தான் மறைமுகமாகச் செய்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்வொன்றில் ஒரு தாய் கூறிய கூற்று இது ‘படித்து நல்ல தொழிலில் இருக்கும் என்மகன் முதியோர் இல்லத்தில் என்னை விட்டு விட்டு, இங்கு இருங்கள் அம்மா நான் வரும் வரை எனக் கூறிச் சென்று ஆறு வருடங்களாகிறது. நானும் காத்துக் கொண்டிருக்கின்றேன் இதுவரை அவன் வரவில்லை’ என்று கூறி அழுதார். அவருடைய அழுகைக்கும் காத்திருப்புக்கும் தன் மகiனைத் தவிர வேறுயாரும் பதில் கூறமுடியாது. குழந்தைப் பருவமும் முதுமைப் பருவமும் ஒன்றுதான். முதியவர் ஆனதும் அவர்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். குழந்தை என்றாலே நிறைந்த செல்வம். அந் நிறைந்த செல்வத்தை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு நிறைவில்லா வேறு செல்வத்தைத் தேடி அலைவது நியாயமானதா? பொதுநலம் காத்த பெற்றோரை தங்களது சுயநலத்திற்காக கைவிடுகின்ற இவ்வுலகே சிறிது நின்று சிந்தித்துப்பார் நமக்கும் முதுமை உண்டு, நமக்கும் பிள்ளைகள் உண்டென்பதை.

இவ்விடத்தில் ஒருசிறுகதை ஞாபகம் வருகின்றது. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை, அம் மனைவியின் தாய், ஆகிய நால்வர் இருந்தனர். அத்தாய்க்கு வயது போனதன் காரணமாக ஒருவரை கோரானா வந்தால் எவ்வாறு தனிமைப்படுத்துவோமோ அதுபோல அவரையும் ஒரு கூடாரத்தில் தனிமைப்படுத்தி அவருக்கென்று தனியாக சாப்பாட்டுக் கோப்பை, தண்ணீர்க்குவளை என்பன கொடுக்கப்பட்டன. நாய்க்கு சாப்பாடு வைத்து தள்ளிவிடுவதுபோல் தன் தாய்க்கும் அப்பெண் உணவை வைத்து தள்ளிவிட்டு வந்துவிடுவாள். இதற்கு அவள் அத்தாயை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கலாம் போலும். அப்பெண்ணின் குழந்தை ஒருநாள் பாட்டியோடு உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட தாய் அக்குழந்தையைப் பார்த்து ஏன் இங்கு வந்தாய்? கிருமி வரப்போகின்றது உள்ளே போ எனத் திட்டி அனுப்பினாள். அக்குழந்தையும் அழுதுகொண்டே உள்ளே சென்றது. அப்பெண்ணின் தாய் குழந்தையைத் திட்டாதே மகளே! எனப் பாசத்தோடுதான் கூறினாள். அதற்கு அப்பெண் திட்ட வேண்டாமா? என் பிள்ளை சின்னக் குழந்தை உனக்கு அறிவு வேண்டாமா எனத் தன் தாயைத் திட்டினாள். இங்கு அந்தப் பெண்ணின் தாய் எந்த நிலையில் இருந்தாலும் தன் பிள்ளை மீது அதே அன்பைத்தான் வைத்திருக்கிறாள்.

ஆனால் அப்பெண் தாய் மீது கொண்ட அன்பு மறந்தும் எங்கோ மறைக்கப்பட்டும் போய்விட்டது. அன்றிரவு அடாத மழை பெய்தது. அந்தப் பெண்ணிற்கும் அவளது கணவனிற்கும் எந்தக் கவலையும் இல்லாது தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அக்குழந்தை பாட்டி இந்த மழையில் என்ன செய்யுமோ தெரியவில்லையே என்று தூங்காது தனது பாட்டியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. விடியற்காலை எழுந்ததும் குழந்தை முதன்முதலாக தனது பாட்டி வசிக்கும் கூடாரத்தை நோக்கி ஒடியது. அங்குதான் ஆச்சர்யம் காத்திருந்தது. இரவு பெய்த மழையால் கூடாரம் விழுந்து பாட்டியின் மேலே கிடந்தது. குழந்தை பாட்டி! என்று அழுதுகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பாட்டி இறந்து கிடக்கிறாள். அம்மா! அம்மா என்று குழந்தை அழ, அக்குழந்தையின் தாய் ஓடி வந்து பார்க்கிறாள். அப்போது அக்குழந்தை தனது தாயை பாவி என்பதுபோல் பார்த்தது. குழந்தை உடனே அவ்விடத்தில் கிடந்த தனது பாட்டியின் சாப்பாட்டுப் பாத்திரத்தையும் தண்ணீர்க்குவழையையும் எடுத்துக்கொண்டது. அக்குழந்தையின் தாய் இதனை ஏன் எடுக்கிறாய் கீழே போடு எனக் கூறினாள். இல்லை அம்மா, எதிர்காலத்தில் நான் உங்களுக்காக இதைத்தானே பயன்படுத்தவேண்டும் என்றது அக்குழந்தை. தாய்க்குப் பேச்சு வரவில்லை தனது கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வந்தது. மூத்தோர்கள் சொல்லாமலா சொல்லியிருக்கிறார்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று.

மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் அன்புக்காக ஏங்குபவர்கள் தான். எனவே அவ்வன்பை எம்மை ஈன்று வளர்த்த பெற்றோர்கள் எப்போதும் எந்நிலையிலும் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அது மறவா அன்பு மட்டுமே.
தெ.பேபிசாளினி.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.