Home இலங்கை மாற்றப்பட வேண்டிய கல்விப் போதனா முறைமை – இரா. சுலக்ஷனா..

மாற்றப்பட வேண்டிய கல்விப் போதனா முறைமை – இரா. சுலக்ஷனா..

by admin

‘ தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’

என்ற குறட்பா, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அத்தனை உண்மைகளையும், தன்னுள் கொண்டிருக்கிறது. மணற் பரப்பில் இருக்கின்ற கிணற்றின், ஆழத்தைப் பொறுத்து, நீர் சுரக்கும் என்ற நிதர்சனமான உண்மையை போலவே, ஆழ்ந்த கற்றல், அறிவின் விஸ்தகரிப்பிற்கு காரணமாக அமையும் என்பதாக குறட்பா விரிகிறது. இன்றைய கற்றல், கற்பித்தல் முறைமையில், பல்வேறு மாற்றங்கள், நிகழ்ந்து வருகின்ற சூழ்நிலையில், ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய, கருத்தும் இதுவே எனலாம்.

இயந்திரமயமான இன்றைய சூழலில் கல்வி, மனிதர்தம் வாழ்வியலில், அவர்தம் அடையாளமாகவும், அரசியலாகவும் முனைப்போடு, செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இந்நிலையில்தான் கல்வி, அறிவின் விஸ்தகரிப்பு என்ற இருநிலைப்பட்ட, எண்ணக்கருக்கள் குறித்தத் தெளிவும், மாற்றங்காண வேண்டிய, போதனா முறைமை குறித்த புரிதலும், சமுகத்தின் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாக கட்;டுரையின் வழி, கட்டவிழ்க்கப்படுகின்றது.

முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை, கல்வி பெறுதல், நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை, ஒப்பிட்டளவில், பாரபட்சமற்றதாகவே, நடைமுறையில் இருக்கிறது : 1945 முதல் இற்றைவரை இலவசக் கல்வியாக கல்வி முறைமை இலங்கையில், நடை முறையில் இருக்கிறது : 1980 முதல் இலவசப்பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன : இலங்கையின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, (2016) 5 – 16 வயதுவரை, கட்டாயக் கல்விப் பெறுதல், அமுல்படுத்தப்பட்ட சட்ட ஏற்பாடாக அமைகிறது. இவ்வளவும், கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த ஏற்பாடுகள் தாம் என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால், நம்முடைய கல்விமுறைமை என்னவாக இருக்கிறது என்பது, சிந்திக்கப்படாத அல்லது, சிந்தனைக்கு எட்டாத, அப்பாற்பட்ட விடயமாகவே இதுவரை இருந்துவருகின்றது என்பது கசப்பான உண்மையே. இன்றைய கல்விமுறை என்பது, பாட அலகுகளை, மனனஞ் செய்து பரீட்சையில் ஒப்புவித்தல், சிறந்த பெறுபேறு பெறல் என்பதாகவே கட்டமைக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. ஒப்புவித்தலோடு முடிவடையும் கல்வி முறையில், அறிவின் விஸ்தகரிப்பு என்னவாக இருக்கும் என்பது சொல்லிப் புரிந்துக் கொள்ள வேண்டிய விடயமல்ல.

இதேவேளை பரீட்சைகள் அல்லது தேர்வுகள் அதிக்கூடியப் புள்ளிகளைப் பெறல் அல்லது சிறந்தப் பெறுபேறுகளைப் பெறல் என்பதை நோக்கமாகக் கொண்டு கட்டமைக்கப்படுவதும், மாணவர் மனஉளைச்சலுக்கு உட்படுவதும் நடந்தேறிய வண்ணம் இருக்கின்ற, பரவலாக வெளிக்கொணரப்படாத செய்திகளாகவே இருக்கின்றன.

அண்மையில், ‘ தேர்வுகள், மாணவர் மனஉளைச்சலுக்கு காரணமாக அமைகின்றனவா? ‘ என்;ற கேள்வியோடு, சமுகவலைத்தளங்களில் வைரலான வீடியோ, கல்வி முறைமை அல்லது போதனா முறைமை குறித்த மாற்று சிந்தனை முறைமையின், தேவைப்பாட்டை, உலகிற்கு அறைக்கூவிச் சென்றமை, எடுத்து நோக்குதற்குரியது.

‘பிரபல தனியர் பாடசாலையில் தரம் பதினொற்றில் பயிலும், மாணவன், தேர்வுகள் பிற்போடப்பட வேண்டும் என்பதற்காக, தரம் ஐந்தில் பயிலும் மாணவனை கொலை செய்வதாக அமைகின்றது குறித்த சம்பவம்.’ விசாரணை முடிவில், கொலை செய்த மாணவன், கோபக்காரன் என பாடசாலை நிர்வாகம் குற்றஞ் சாட்டுகின்றது. ஆக ஆரம்ப கல்வி முதல் பதினோராம் தரம் வரை அவனின் கோபத்தை தணிக்க கல்வி முறையோ, போதனா முறையோ ஏற்புடையதாக இருக்கவில்லை என்பது, ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.

இலங்கையிலும், பரீட்சைகள் மாணவர் மனஉளைச்சலுக்கும், மாணவர் பெற்றோர் விரிசலுக்கும் வலுவான காரணமாக அமைந்தமையே, புலமை பரிசில் பரீட்சைகள் அண்மைகாலம் வரை வெளிப்படுத்தி நிற்கின்றன. அதேவேளை பரீட்சை பெறுபேறுகள் குறைவெனின், அல்லது எதிர்பார்த்தப் பெறுபேறுகள் கிடைக்கவில்லையெனின், தற்கொலை செய்துக் கொள்ளலும், அதிபர், ஆசிரியர் ஏசினார் என்பதற்காக தற்கொலைசெய்துக் கொள்ளலும் சர்வசாதாரணமான நிகழ்வுகளாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை பரீட்சைகள், மாணவர் மத்தியல் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, அவரவர் தனித்துவ திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்துவிடவும் செய்கின்றன. இன்னிலையில் தான், மாணவர் இடைவிலகல், என்ற அடுத்தக்கட்டப் பாரதூரமான விளைவும் ஏற்படுகின்றது. வெறுமனே, பரீட்சை தோல்வி மாத்திரம் மாணவர் இடைவிலகலுக்கு காரணமாக அமைவதில்லை : மாறாக, பரீட்சைகளில், சிறந்தப் பெறுபேறுகளை பெறுபவர்களை படித்தவர்கள் எனக் கொண்டாடுவதும், பரீட்சையில் தோல்வியடைந்தவர்களை அறிவற்றவர் என்ற நிலையில் வைத்துத் தூற்றும், சமுகத்தின் மாற்றப்படாத காலனித்துவ மனபாங்கும் காரணமாக அமைகின்றது.

இவ்வாறு கல்விச் சூழலுக்குள் மாற்ற வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில், கல்விக்கும் அறிவின் விஸ்தகரிப்பிற்குமானத் தொடர்பு என்பது, விரிசல் நிலையிலேயே இருக்கின்றது. சுருக்கமாகச் சொன்னால், புத்தக அறிவு, செயல் அறிவாக மாறாத நிலை எனலாம்.

ஆரம்ப பாடசாலை பிரிவில் இருந்தே தான், ‘ சூழலை சுத்தமாகப் பேணுவோம்’ என, பாடம் புகட்டப்படுகின்றது. ஆனால், அதே மாணவர் தான், சுற்றுலா தளங்களில், பேருந்து பயணங்களில், செல்லும் இடங்களில் பொலித்தீன் பைகளையும், குப்பைகளையும் கண்ட இடங்களில் போட்டுவிட்டு வரும் பழக்கத்தை உடையவர்களாக இருக்கின்றனர். மாணவர் மாத்திரம் அல்ல வளர்ந்தவர் வரை இன்னிலையே தொடர்வதைக் காண்கின்றோம்.

இன்னுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம், ‘உயிர்கள் மீது கருணையுடன் இருத்தல்’ என்பதாகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற பாடம் பாடமாக மாத்திரமே இருக்கிறது. தெரு நாய் முதல், காட்டு விலங்கு வரை காவுக்கொள்ளப்படும் நிலையே காணப்படுகின்றது. ஆக இத்தகைய மிகமிகச் சாதாரண சம்பவங்கள், புத்தக அறிவு, செயல் அறிவாக மாற்றமடையாத நிலையையே வெளிப்படுத்தி நிற்கின்றன.

உண்மையில் கல்வி வேறு : நடைமுறை வேறுதான். இந்நிலையே கல்வியில் மிகப் பெரிய பிரச்சனையும் கூட. ஆயினும் அறிவின் விஸ்தகரிப்பு என்பது, பரந்துப்பட்ட கல்வி முறையில் தான் சாத்தியமாகும் எனும் பட்சத்தில், எங்களுடைய கல்வி என்பது சமுகத்தைப் பிரதிப்பலிப்பதாக இருக்க வேண்டும்: சமுகத்திற்கு எதிர்வினையாற்றுவதாக இருக்க வேண்டும். மாறாக, இன்றளவிலும் கல்விமுறைமை என்பது, சமுக ஏற்பாடுகளை நியாயப்படுத்துபவையாகவும், அதனைத் திரும்பவும் வலியுறுத்துபவையாகவுமே இருந்து வருகிறது.

எனவே இத்தகைய கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுதல் என்பது, கல்விப்போதனா முறையில், மாற்றங்கள் ஏற்படும் போது சாத்தியப்பாடுடையதாகிறது. குறிப்பாக, இன்றைய முன்பள்ளி சூழலில் இருந்தே இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும், சிறுவர்கள் விரும்புகின்ற உலகாக கல்வியுலகு மாற்றப்பட வேண்டும். கலைவழி கல்வி புகட்டப்பட வேண்டும். குறிப்பாக, இன்றைய சூழலில் நடைமுறையில் இருக்கின்ற, பாடலாக கணித எண்ணக்கருக்களை, எழுத்துக்களைப் பயிற்றுவித்தல் போன்ற முன்பள்ளியில் அறிமுகஞ் செய்யப்பட்ட போதனா முறைகள், விரிவு பெறல் வேண்டும்.

கதைகூறல் முறைமைகளும் சொல்லப்படுகின்ற கதைகளும் மறுபரிசீலனைச் செய்யப்படவேண்டும். குறிப்பாக ‘ காகம் வடையை தூக்கிச் சென்ற கதை’ காகத்தின் ஏமாற்றுதனத்தையும், நரியின் தந்திரத்தையும் அல்லவா சொல்லிக் கொடுத்திருக்கிறது? எனவே இத்தகைய கதைகள் மறுபரிசீலனைச் செய்யப்பட்டு, சமுகத்திற்கு எதிர்வினையாற்றும் வiயிலான எண்ணங்களைத் தூண்டும் வகையிலும், படைப்பாக்க சக்தியைத் தூண்டும் வகையிலும் அமையப் பெறுதல் வேண்டும்.

பாடசாலைகளை பொறுத்தவரை, மனப்பாடஞ் செய்வதற்கான படிப்பாக அன்றி விளக்கத்தோடு கற்றலாக, எளிமையாக புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் போதிக்கப்பட வேண்டும். குறித்த பாட அலகு, மாணவர் கலந்துரையாடலுக்கும், மாணவர்களின் கேள்விகளுக்குமான வாய்ப்பாக மாற்றப்பட வேண்டும். இது சரி, இது பிழை என்ற வரையறையில் மட்டிட்டு நிற்காமல், ஏன் சரி, ஏன் பிழை, பிழையானக் கூற்று எதனால் பிழையாக அமைகிறது: எப்படி வந்தால் அக்கூற்று சரியாக அமையும் என்பதான விளக்கங்களுடன் சுருக்கவினாக்கள், போதிக்க வேண்டும்.

தொழிலை பெறுவதற்காகவே கற்றல், என்ற பொதுப்புத்தியில் நின்று விடுபட்டு, செயல் அறிவாக மாற்றுவதற்கான வழிமுறைகளாக கற்பித்தல் முறைமைகள் மாற்றப்பட வேண்டும். பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு, அவரவர் திறமைகளை வெளிப்படுத்தவும், பாரட்டுவதற்குமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திடங்களினூடாகப் பெறப்படுவது ஒருவகை அறிவு மாத்திரமே என்ற தெளிவையும், புத்தகத்தைக்கடந்த அறிவு பரப்பு என்பது பலவடிவங்களில், பலநிலைகளில் இருக்கின்றது என்ற புரிதலையும் எற்படுத்த வேண்டும். எல்லாத் தொழில் துறையும், எல்லா கல்வித்துறைகளும் சமமானவையே என்ற சமரச மனபாங்கை ஏற்படுத்த வேண்டும், விசேடமாக, உள முதிர்ச்சிக்கான கல்வி முறைமையாக, சாவல்களை எதிர்க்கொள்கின்ற பக்குவத்திற்குரிய கல்வியாக கல்வி முறைமை மாற வேண்டும்.
பல்கலைச்சூழலைப் பொறுத்தவரை, பரீட்சைகளை மையப்படுத்தி மாணவர் தயாராகுதல் என்ற நிலையில் நின்றும், ஏற்கனவே இருக்கின்றத் தொழில் துறைகளுக்குத் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளல் என்ற நிலையில் நின்றும் விடுபட்டு, ஏன்? எதற்காக படிக்கின்றோம்: இதை எதற்காக படிக்க வேண்டும்: சமுகத்தில் கட்டுடைக்க வேண்டிய விடயங்கள் எவை? : ஏன் அவை கட்டுடைக்கப்பட வேண்டும்: நமது கல்வி முறைமை எவ்வாறு சமுகத்திற்கு எதிர்pவனையாற்றப் போகின்றது: எதிர்காலத்தை பிரயத்தனத்தோடு கடப்பதற்கு நமது கல்வி முறை அல்லது துறை என்ன மாற்றங்களை ஏற்க வேண்டும்: சமுகத்திற்கு எதிர்வினையாற்றக்கூடியதாக துறையை, கல்விமுறையை எவ்வாறு கையாள வேண்டும் போன்ற பரந்துபட்ட, பிரக்ஞை நிலைக்கான தேடலாக போதனைமுறைமை மாற வேண்டும். எடுத்தப் பட்டத்திற்கும் செய்யும் வேலைக்கும் என்னத் தொடர்பு இருக்கிறது என்ற அடுத்தக்கட்ட கேள்விக்கான வாய்ப்பாக அன்றி, பிரயோக நிலைக்கான அறிவாக, புதிய தொழில்துறை உருவாக்கத்திற்கான வாய்ப்பாக மாற வேண்டும். இந்நிலையினை பரஸ்பர மாணவர் உரையாடல்களும், காத்திரமான மாணவர் விரிவுரையாளர் கலந்துரையாடல்களும், தோற்றவிக்கும் .

ஆக இன்றைய சூழலில், அடையாளமாகவும் அரசியலாகவும் முனைப்போடு செயற்படும் கல்வி போதனா முறையில் எற்படுத்தப்பட வேண்டிய பல்வேறு மாற்றுப் போதான முறைமைகளும், முற்போக்கான, சமுகத்திற்கு எதிர்வினையாற்றக்கூடிய மாணவ சமுக எழுச்சிக்கு நிச்சயம் வாய்ப்பாக அமையும்.

இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More