Home இலங்கை கொரோனாவும் மனிதாபிமானச் சிந்தனையின் தேவையும் – எஸ்.சுமித்ரா…

கொரோனாவும் மனிதாபிமானச் சிந்தனையின் தேவையும் – எஸ்.சுமித்ரா…

by admin

இன்று 3 ஆம் உலகப்போர் என்று கூறுமளவிற்கு உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், கொவிட் 19, மனிதங்களிடையே பல பாடங்களைக் கற்பித்துக்கொண்டிருப்பதோடு, மனிதாபிமான மனித மனமாற்றத்திற்கான கற்கையாகவும் அமைகின்றது எனலாம். இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையில் கடந்த மாரச்; 10ஆம் தேதி முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதிலிருந்து, நாட்டுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசினால் பிறப்பிக்கப்பட்ட ‘ஊரடங்கு சட்டமும்’ (Curfew) அதன் நடைமுறையும் மனிதர்களின் பல் வகையான உண்மை முகங்களை வெளிக்கொணர்ந்துள்ளது எனலாம்.

ஏனெனில், பரபரப்பான (Busy) வாழ்க்கை, வேலைப்பளு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தமது குடும்பத்தாருடன் கூட நேருக்கு நேர் இருந்து பேசுவதற்கு நேரம் இன்றித் தவித்த மனிதர்கள், எப்படி மற்றையவர்களைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியும்? இதனால் சுயநலமும், வன்மமும், போட்டியும், மனிதரை மனிதர் மதிக்காத தன்மையும் எம்மிடையே அதிகரித்துக்கொண்டிருந்தது. கொரோனாவினால் நாடுமுழுவதும் ஊரடங்கினால் முடக்கப்படப்போவதாக அறிவித்ததிலிருந்து பல மனிதர்களும் சிந்தித்தது, அன்றாடம் கூலி வேலை மற்றும் சுயதொழில் செய்து வாழ்க்கை நடத்துபவர்களைப் பற்றியே. இது ஒரு ஆரோக்கியமான மனிதாபிமானச் சிந்தனைதான். அதிலும் இது, அரசு தனது உதவித் திட்டம் பற்றி அறிவிப்பதற்கும், ஊடகங்கள் மூலம் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்ற அறிவித்தல் விடுவதற்கு முன்னரே பல வகையில் தனிநபர் உதவிகள் வழங்கப்பட்டமை மிகவும் மேலான மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது.

அரசின் கட்டளைக்கமைய மருத்துவம், பாதுகாப்பு, அடிப்படைத்தேவைகளை நிவர்த்தி செய்தல் எனப் பல மனிதாபிமானச் செயற்பாடுகள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டிணைந்த செயற்பாடுகள் மூலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றில் மருத்துவத்துறைசார்ந்தவர்கள், அரச படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் மக்களுக்கான

2

சேவையைச் செய்துகொண்டிருக்கின்றனர். இவை வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதும் என்பதற்கப்பால் இவர்களது செயற்பாடுகளின் ‘மனிதாபிமானம்’ என்பதை சற்று ஆழமாக நோக்கவேண்டியுள்ளது. அரசினால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதில் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன முக்கிய இடம் பெறுகின்றன. இதில் அரசினால் வழங்குமாறு பணிக்கப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கான ரூ.5000ஃஸ்ரீ ஐ பல சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது கிராம சேவகரின் உதவியுடன் தமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுவீடாகச் சென்று வழங்கியதும், சில சமுர்த்தி மற்றும் கிராமசேவகர்கள் மக்களைப்; பொது இடங்களுக்கு அல்லது அவர்களது அலுவலகங்களுக்கு அழைத்து மிகவும் எளிமையான முறையில் அவர்களது கொடுப்பனவுகளை வழங்குவதும் தமது கடமை என்பதற்கப்பால் மனிதநேயத்துடன் கூடிய செயற்பாடே எனலாம்.

ஆனால், மறுபுறம் சில அதிகாரிகள் மக்களை நடாத்திய விதம் மனிதாபிமானமற்ற செயற்பாடு மட்டுமன்றி, இத்தகைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் எவ்வாறு மனிதர்களற்றவர்கள் போல் செயற்பாடுகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாவும், வார்த்தைகள் பிரயோகங்கள், அதிகாரத்துடனான கட்டளைகள் மற்றும் சில அடையாளப்படுத்தல்களைக்கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்கமுடியாது என மறுத்துரைப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகவே உள்ளன. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அரச உத்தியோகத்தர்களைத்தவிர வேறு எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் வருமானமின்றி கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதை நிவாரணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்த சூழலில் சிந்திக்க முடியாதவர்களாக உள்ளனர் எனில்; மனிதாபிமானம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இன்னுமொருபுறம் பல தனியார் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், தன்னார்வத் தொண்டர்களும், தனிநபர்களும் தங்களாலான உதவிகளை குறிப்பாக உலர்
உணவுப் பொருட்களை மக்களுக்காக வழங்குவது வரவேற்கத்தக்கதும்,

3

இச்சூழலுக்கு தேவையான மனிதாபிமான சேவையுமாகும். ஆனால் ஒரு சிலர், தாமும் நிவாரணம் வழங்குவதாகக் கூறி, நிவாரணப்பொருட்களுடன் தம்மையும்
காட்சிப்படுத்தி படம் எடுத்து, முக அட்டையில் படம்காட்டும் போலித் தன்மை இந்தச் சூழலில் பொருத்தமற்றது எனலாம்.

இன்றைய கொரனா தொற்றுநோய் சூழ்நிலையில் மக்களின் மனநிலை பற்றி பேசுவதும் முக்கியமானதாகும். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற முதுமொழி இந்த கொரோனா வைரஸ் சூழ்நிலையில் மக்களுக்கு மிகவும் பொருத்தமானது எனலாம். பல தரப்பினராலும் வழங்கப்படுகின்ற நிவாரணப்பொருட்களைக் கொண்டு 3 நேரமும் உண்டு, பாதுகாப்பாகக் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு சில மக்கள். தம்மிடம் இருப்பவற்றில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளித்து திருப்தி காண்பதில் இன்னுமொரு பகுதி மக்கள்.

மறுபுறம் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் திருப்திகாணாது, மற்றவர்களைப் பற்றியும், இந்த சூழ்நிலை பற்றியும் சிந்திக்காது, ‘தமக்கு எவரும் நிவாரணம் வழங்கவில்லை’ என்று குறைகூறுவதும், ‘காசு மட்டும்தான் கிடைத்தது, உணவுப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை’ எனக் கூறுவதும், தமது சீவியத்தை நடத்தக்கூடிய பலம் இருந்தும் யாராவது தமக்கு நிவாரணம் வழங்குவது கட்டாயமான சட்டம் போன்று – நிவாரணப் பொதி இன்னும் கிடைக்கவில்லை என்று பலருக்கும் கூறிக்கொள்ளும் சிலரும், உணவுக்கு வளியின்றி உள்ளவர்களுக்காக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருள் பொதியிலிருந்த சீனியில் சித்திரைப் புணத்தாண்டுக்கு சீனிப்பலகாரம் செய்த சிலரும், வழங்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவில் புடைவை எடுப்பதற்காக புடைவைக் கடையின் கதவைத் தட்டிய பலரும் எம்மிடையே அதிகம். இன்னுமொருபுறம், பருப்பு போன்ற உலர் உணவுப்பொருட்களை பதுக்கிவைத்தும், அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் சில வியாபாரிகளும், எமக்குள்ளே உலாவருகின்றனர்.

இன்னுமொருபுறம், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் எமது நாட்டு மருத்துவத்துறையினரின் சேவையை பலரும் பராட்டிக்கொண்டிருக்கும் வேளையில், கொரோனா அல்லாத நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்குச்

4

செல்லும்போது, வழமைக்கு மாறாக சில வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் நடந்துகொள்ளும் விதங்களும் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

‘கொரோனா விடுமுறைக்கால செயலட்டை’ என்ற பெயரில் றூயவளயுpp போன்றவற்றின் மூலம் ஆசிரியர்களால் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் மாதிரி
வினாக்கள், மாணவர்களது கற்றல் செயற்பாட்டை ஊக்கிவிப்பதாக அமைந்தாலும், சகல மாணவர்களையும் கருத்தில் கொள்ளாது, சமத்துவமற்ற
முறையில் இலக்குவைக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதும், இதனால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் எதுவுமறியாமல் திண்டாடுவதும் சில மாணவர்களை உளரீதியாகப் பாதித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துபவர்கள் இச்சூழ்நிலைக்கு பொருத்தமான, சகலமாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு சிந்தித்திப்பதோடு, பரீட்சை நோக்கில் நடைமுறைக்குப் பொருத்தமற்ற கோட்பாடுகளை பாடப்புத்தகங்களில் புகுத்துவதற்குப் பதிலாக, வாழ்வியலை விளங்கிக்கொள்ளும் திறனை பாடவிதானங்களில் உட்புகுத்தவேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சூழல் சிந்திக்க வைத்துள்ளது.

குடும்பத் தலைவர்கள் எனக்கூறப்படும் சில ஆண்கள், தற்போது வீட்டில் இருந்து செய்வதறியாமல், தாம் வீட்டுவேலை செய்வதையும், சமைப்பதையும்
கேலிக்கையாக வீடியோ எடுத்து அதை முக அட்டையில் பதிவு செய்வதும், அதற்கு அவர்களது நண்பர்கள் பதில் கருத்துக்கள் (Comments) செய்யும் விதமும்
மனிதாபிமானமற்ற செயற்பாடுகளாகவும், ஏதோ வீட்டுவேலை, சமையல் என்பது பெண்ணுக்குமட்டும்தான் உரியது என்பது போன்ற தொனியில் தாம் செய்வதை
நகைச்சுவையாக சிந்திக்கும் மனிதர்களின் பல முகங்கள் வெளிவந்துள்ளன. இவர்கள் வாழ்க்கைக்கான கல்வியைப் பெற்றிருந்தால், இங்கு புரிதலுடனான வாழ்க்கை நடைபெற்றிருக்கும். மாறாக, சமைப்பதிலோ, சமையல் அறைக்குச் செல்வதிலோ, ‘பணம்’ பெற்றுக்கொள்ளாது வீட்டில் செய்யும் ஏனைய வேலைகளிலோ இந்தச் சூழ்நிலையில் ஈடுபடும்போது பெண் – ஆண் என்ற ஏற்றத்தாழ்வோ, அவற்றைச் செய்யும்போது அவை கேலிக்கைகளாகவோ பார்க்கப்பட்டிருக்காது.

5

எனவே, எவரும் எதிர்பார்க்காத, அறிந்திராத வகையில், முழு உலகையே நிலைகுலைய வைத்த இந்த சூழ்நிலையில் சிலரது சிந்தனை மனிதநேயத்துடனும், சிலரது சிந்தனை மனிதநேயமற்ற முறையிலும் அமைந்திருப்பது, மனிதாபிமான சிந்தனைக்கான வாழ்வியலுடன்கூடிய கல்வியின் தேவையை உணர வைத்துள்ளதுடன், வாழ்வியலுடன்கூடிய கல்வியானது கொரோனாவையும் தாண்டிய எந்தவிதமான பாரதூரமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் நேரான சிந்தனை (positive thinking) மூலமாக மனிதநேயத்தை எம்மிடையே வளர்க்கும் எனலாம். உண்டோம், குடித்தோம், ஆடம்பரமாக வாழ்ந்தோம் என்பதற்கப்பால் மனிதரை மனிதராக மதித்து வாழும் மனிதாபிமான சிந்தனையுடனான வாழ்க்கையே எச்சூழலிலும் மேலானது எனலாம்.

எஸ்.சுமித்ரா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More