உலகம் பிரதான செய்திகள்

சாட்டை – பிரம்பால் அடித்து வழங்கப்படும் தண்டனை முறையை சவூதி கைவிடவுள்ளது


சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சவூதிஅரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்டஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட்டை மற்றும் பிரம்பால் அடிப்பதற்கு பதிலாக சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சவூதிஅரேபிய அரசர் சல்மான் மற்றும் நாட்டின் நடைமுறை ஆட்சியாளராக இருக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் மேற்கொள்ளும் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தத்தின் ஓர் அங்கம் இது என இந்த தண்டனை ஒழிப்பை அந்த ஆவணம் விவரித்துள்ளது.

அரசுக்கு எதிரான கருத்துடையவர்களை சிறையில் அடைப்பது, அரசுக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை உள்ளிட்டவற்றில் சவூதிஅரேபிய அரசு மனித உரிமைகளை பின்பற்றவில்லை என நீண்டகாலமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

சவூதி அரேபியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பெருமளவில் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் காரணம் ஏதுமின்றி கைது செய்யப்படுவதாகவும், சவூதிஅரேபியா உலகிலேயே மோசமான மனித உரிமை மீறல்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்றும் அந்நாட்டிலுள்ள செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

2015ஆம் ஆண்டு ராய்ஃப் பதாவி எனும் வலைப்பதிவர் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகவும், இணையவழிக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு பொது இடத்தில் வைத்து சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்ட நிகழ்வு அப்போது பெருமளவில் செய்திகளில் இடம் பிடித்திருந்தது

அவருக்கு 1000 சவுக்கடி தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பு மற்றும் அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட நேரத்தில் அவர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது ஆகியவை அவருடைய தண்டனையை பகுதி அளவில் ரத்து செய்ய உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது #சாட்டை  #தண்டனை  #சவூதி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.