Home இலக்கியம் ‘வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே, ஒரே ஒரு சாலைதான்’: இர்ஃபான் கான்…

‘வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே, ஒரே ஒரு சாலைதான்’: இர்ஃபான் கான்…

by admin

இர்ஃபான் கானின் கடைசிக் கடிதம்- ஒரு நினைவஞ்சலி..
பொலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மறைந்தார் என்ற செய்தி திரையுலகையும் திரை ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா லொக்டவுனில் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் கடைசி ரசிகனாகக் கூட நிற்க முடியாமல் போனதே என்று சமூக வலைதளங்களில் உருகி வருகின்றனர்.

இந்நிலையில் இர்ஃபான் கான் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தனது ரசிகர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தை ரசிகர்களின் அஞ்சலியாகப் பகிர்கிறோம்.

அந்தக் கடிதத்தில் இன்றிலிருந்து இரண்டாண்டுகளில் என் நோய் என்னை எங்கு கொண்டு சேர்த்திருக்கும் என்று எனக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டிருப்பார். அதே போல் அவருக்குத் தெரியாமல் அவரை காலம் கொண்டு சென்றுள்ளது.

ஆனால் அவரின் கடிதம் எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது திரைக்காவியத்தைப் போலவே..

கடிதத்தின் தமிழாக்கம்:

எனக்கு ‘நியூரோ எண்டோக்ரைன்’ புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன. எனது சொல்வளத்தில் ‘நியூரோ எண்டோக்ரைன்’ புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.

அந்த நோய் என்னுள் வரும் வரை நான் முற்றிலுமாக மாறுபட்ட விளையாட்டு ஒன்றில் இருந்திருக்கிறேன். ஒரு விரைவு ரயில் பயணத்தில் நானிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. எதிர்கால திட்டங்களும், இலக்குகளும், ஆசைகளும் இருந்தன. நான் அவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். அப்போது திடீரென என் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் டிக்கெட் பரிசோதகர். அவர் என்னிடம் “நீ இறங்க வேண்டிய இலக்கு வந்துவிட்டது. கீழே இறங்கு” என்றார். நான் குழம்பிப் போனேன். இது நான் இறங்குமிடம் இல்லை என மறுதலித்தேன். ஆனால், அவர் ஊர்ஜிதமாகச் சொன்னார் “இது தான் இலக்கென்று”. வாழ்க்கையில் இப்படித்தான் சில நிகழ்வுகள் நடக்கின்றன.

நான் சற்றும் எதிர்பார்த்திராத அந்த திருப்பம் எனக்கொரு விஷயத்தை உணர்த்தியது. சமுத்திரத்தின் நீரோட்டத்தை நம்மால் கணிக்க முடியாது. அத்தகைய நீரோட்டத்தில் மிதக்கும் ஒரு தக்கை தான் நாம். ஆனால், நாம் வெறும் தக்கை என்பதை உணராமலேயே சமுத்திர நீரோட்டத்தை மீறியும் தக்கையை (நம்மை) கரை சேர்க்க முற்படுகிறோம் என்பதை உணர்த்தியது.

எதிர்பாராத திருப்பமாக நோய் எனக்குக் கொடுத்த அதிர்ச்சியில், அச்சத்தில், பதற்றத்தில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அருகிலிருந்த என் மகனிடம் ஏதோ உளறியதாக நினைவு. “நான் என்னிடம் இப்போதைக்கு எதிர்பார்ப்பது இந்த நோயை இதே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடாது. நான் என் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. அச்சமும், பதற்றமும் என்னை வென்றுவிடக் கூடாது. அது என்னை துயரத்தில் ஆழ்த்திவிடும்” என்று அவனிடம் கூறியிருக்கிறேன்.

ஆம், நோய் தரும் நம்பிக்கையின்மையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. ஆனால், அந்த வேளையில் தான் என்னை வலி கவ்வியது. அதுவரை நான் அனுபவித்த வலிகள் எல்லாம் அந்த பெரும் வலிக்கு அதன் தன்மைக்கு வீரியத்திற்கான முன்னோட்டம் என்பது போல் இருந்தன என்பதை உணர்ந்தேன். என்னை எதுவுமே சமாதானப்படுத்தவில்லை. எதுவும் ஆறுதலாக இல்லை. எதுவும் ஊக்கமளிப்பதாகவும் இல்லை. என் மனதில், நிலையற்றை தன்மை மட்டுமே நிலையானதாக இருந்தது.

நான் லண்டன் மருத்துவமனையில் பிரவேசிக்கும் போது முற்றிலுமாக சோர்ந்து போயிருந்தேன். சலிப்பு மிகுந்திருந்தது. என் சிறுவயதில் எனக்கு மெக்காவாகத் தோன்றிய லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்துக்கு எதிர்புறத்தில் தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் நானிருக்கவில்லை. என் வலிகளுக்கு மத்தியில் விவியன் ரிச்சர்ட்ஸின் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால், என்னுள் எதுவுமே நடக்கவில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்ற உணர்வு மட்டுமே இருந்தது.

நான் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் நானிருந்த தளத்திற்கு நேர் மேல் தளத்தில் சுயநினைவை இழந்தோருக்கான (கோமா) வார்டு இருந்தது. ஒரு நாள் எனது அறையின் பால்கனியில் நான் நின்றிருந்தபோது, ஒரு திடீர் சிந்தனை என்னை உலுக்கியது.

வாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது என்பதை உணர்ந்த தருணம் அது.

எப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

பேரண்டவெளியின் மதிநுட்பத்தை, மிகப் பிரம்மாண்டமான சக்தியை அதன் தாக்கத்தை உணர்ந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அமைந்திருந்த இடம் எனக்கு அதை இடித்துரைத்தது. ஆம், நிலையின்மை மட்டும்தான் நிலையானது.

அந்த மெய் உணர் தருணம் என்னை யதார்த்த்தின் முன் சரணையடச் செய்தது. நான் பெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை 4 மாதங்களுக்குப் பின் அல்லது 8 மாதங்களுக்குப் பின் இல்லை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என்னை எங்கு கொண்டு சேர்க்கும், விளைவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து நடப்பவற்றிற்கு என்னை உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது. அப்போது கவலைகள் பின்னடைவைக் கண்டன. அப்படியே சில நாட்களில் மங்கிப் போயின. அடுத்த சில நாட்களில் என் எண்ண வெளியிலிருந்தே கவலைகள் விலகியிருந்தன.

முதன் முறையாக நான் சுதந்திரத்தை உணர்ந்தேன். முதன்முறையாக சாதனை படைத்ததாக நினைத்தேன். அப்படி ஒரு வெற்றியை முதன்முறையாக சுவைத்தது போல் இருந்தது. அது வெற்றியின் மாயாஜாலம் என்பேன். அண்டவெளியின் மதிநுட்பத்தின் மீதான எனது நம்பிக்கை தீர்க்கமானது. அது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் புகுந்தது போல் உணர்ந்தேன்.

ஆனால், அது அங்கேயே நிலைத்திருக்குமா என்பதை காலம் தான் சொல்லும். இப்போதைக்கு இந்த உணர்வு நன்றாக உள்ளது.

நோயுடனான எனது போராட்டப் பயணத்தில் மக்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் அறிந்த நபர்கள் மட்டுமல்லாது, எனக்குப் பரிச்சியமே இல்லாதவர்களும் கூட என் நலன் விரும்புகின்றனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து எனக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் ஒன்றிணைகிறது. அது ஒரே சக்தியாக, ஒரே உயிரோட்டமாக உருமாறி எனக்குள் புகுந்தது. எனது முதுகெலும்பின் முடிவில் அதை நான் உணர்கிறேன். எனது புத்தியில் வளர்கிறது.

சில நேரம் மொட்டாக, சில நேரம் இலையாக, அப்புறம் தளிராக கிளையாக துளிர்க்கிறது. நான் அதை ரசிக்கிறேன். ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு கிளையும் கூட்டுப் பிரார்த்தனையால் விளைந்தவை. அவை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. எனக்குள் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. அதேவேளையில், ஒரு தக்கை சமுத்திரப் பேரலையின் நீரோட்டத்தை தனக்கானதாக தகவமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற மெய்யை உணரச் செய்கிறது. தக்கை அசைந்தாடுவது இயற்கை. இயற்கை தனது தொட்டிலில் உங்களை மென்மையாகத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது என்று வாழ்க்கையை ஏற்கவும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர், ட்விட்டரில் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்த குறிப்புகளும் இருந்தாலும் இந்தக் கடிதம் இன்று அவரின் ரசிகர்களால் வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.

-தமிழில்: பாரதி ஆனந்த் –
https://www.hindutamil.in

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More