Home உலகம் “இரண்டாவது தடவையாக பரவல் உச்சமடைவதை அனுமதிப்து, முட்டாள் தனமானது.”

“இரண்டாவது தடவையாக பரவல் உச்சமடைவதை அனுமதிப்து, முட்டாள் தனமானது.”

by admin


“சமாதான காலத்திலோ அல்லது போர் காலத்திலோ இதுவரை கண்டிராத வகையில் மக்களது சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நீங்கள் முழுமனதுடன் இந்தக் கட்டுப்பாடுகளை மதித்து நடந்தீர்கள்” என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா பெருந் தொற்றுத் தொடர்பான நிலையை விளக்கும் தனது உரையை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தியுள்ளார்.

“சமூக இடைவெளி பேணல் என்பதால் அனைத்து விதமான துன்பங்களையும் நீங்கள் சந்தித்துள்ளீர்கள். என்வாழ்நாளில் இந்த நாடு எதிர்கொண்ட மிக மோசமான அச்சுறுத்தலான கொரோனாவைத் தோற்கடிக்க ஒரே வழி இது  என, மற்றைய எல்லா நாடுகளின் அனுபவங்கள் காட்டியவற்றிலிருந்து நீங்கள் புரிந்திருப்பீர்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

“இறப்பு எண்ணிக்கையானது துன்பகரமானதாகவும் அதிகமானதாகவும் இருந்துள்ளது. உயிரிழந்த அனைவருக்காகவும் நாம் வருந்துகின்றோம். இந்தக் கொரோனா பேரழிவில் மூழ்கி மிக மோசமான இழப்பாக அமைந்திருக்கக் கூடிய அரை மில்லியன் உயிரிழப்புகளை, நாம் கொரோனாவைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் தடுத்திருக்கிறோம் என்பது உண்மையானது. இந்த நோய் பரவலடைவதைத் தடுப்பதற்கான உங்கள் முயற்சிகளுக்கும் தியாகங்களுக்கும் நன்றி. இப்போது இறப்பு வீதம் குறைந்து வருவதுடன் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகிறது. நாங்கள் தேசிய சுகாதார சேவையைப் பாதுகாத்து பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். இரண்டாவது தடவையாக பரவல் உச்சமடைவதை அனுமதிப்பதன் மூலம் சுகாதார சேவையைப் பாதுகாத்ததில் நாம் அடைந்த வெற்றியை தூக்கி வீசிவிடுவது முட்டாள் தனமானது.” எனக் கூறியுள்ள அவர், “நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நாங்கள் தொடந்தும் இந்த வைரசைக் கட்டுப்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்” புதிய திட்டமானது “நடமாட்ட முடக்கம்” தொடர்பான பீதியை நீக்கும் எனவும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்  சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த நிலையில் “நாங்கள் ஐந்து முக்கிய விடயங்களை  திருப்தியாகப் பூர்த்திசெய்ய வேண்டும். இந்த ஐந்து விடயங்களையும்  நாம் பூர்த்திசெய்யவில்லை என்றால் நாடு முன்னொக்கிச் செல்ல முடியாது.” என் குறிப்பிட்டுள்ளார்.

1. நாங்கள் எங்கள் தேசிய சுகாதார சேவையை (NHS) பாதுகாக்க வேண்டும்.
2. இறப்பு விகிதத்தில் நீடித்த வீழ்ச்சியை நாம் காண வேண்டும்.
3. நோய்த்தொற்று விகிதத்தில் நீடித்த மற்றும் கணிசமான வீழ்ச்சியை நாம் காண வேண்டும்.
4. தேவையான நபர்களுக்கு போதுமான தற்காப்புக் கவசங்களை வழங்குவதில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
5. நாம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நோயின் இனப்பெருக்கம் விகிதத்தை ஒன்றுக்கு மேல் கட்டாயப்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த வகையில் “கூட்டு உயிரியல்பாதுகாப்பு மையத்தால் நடத்தப்படும் “கொரோனா விழிப்பூட்டல் திட்டம்” ஆனது கொரோனோ தொற்றடையும் வீதத்தையும்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் கண்காணிக்கும். ஒன்று முதல் ஐந்து வரை ஐந்து எச்சரிக்கை நிலைகள் இருக்கும், அவை ஆபத்து மற்றும் நடமாட்ட முடக்கத்தின் அளவை தீர்மானிக்கும். நடமாட்டம் முடக்கப்பட்ட காலப்பகுதியில் நாங்கள் நான்காம் நிலைக்கு வந்துள்ளோம், உங்கள் தியாகத்திற்கு நன்றி, நாங்கள் இப்போது மூன்றாம் நிலைக்கு முன்னேறத் தொடங்கும் நிலையில் இருக்கிறோம்.”

“நோய்த்தொற்று வீதமானது (R) 0.5 இற்கும் 0.9 இற்குமிடையில் உள்ளது. அதாவது 1 இற்குச் சற்றுக் கீழே உள்ளது. நான் கொடுத்த சில நிபந்தனைகளையாவது திருப்திப்படுத்துவதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அவை அனைத்தையும் நாங்கள் எந்த வகையிலும் பூர்த்தி செய்யவில்லை. எனவே சமூக நடமாட்ட முடக்கத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான நேரம் இந்த வாரமாயிருக்காது. இது நாளை முதல் நடைமுறைக்கு வரும்.”

நடமாட்ட முடக்கம் தொடர்பான புதிய விதிகள்.

• வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத எவரும், உதாரணமாக கட்டுமானம் அல்லது உற்பத்தியில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்ல ஊக்குவிக்கப்பட வேண்டும்.
• பொதுமக்கள் இயலுமானவரை பொது போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும் – பணியாளர்கள் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில், சைக்கிளில் அல்லது நடந்துசெல்ல வேண்டும்.
• தொழில்கொள்வோரிற்கான புதிய வழிகாட்டல்கள் பணியிடங்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உருவாக்கும்
• பொதுமக்கள் இப்போது “உங்கள் உள்ளூர் பூங்காவில் வெயிலில் உட்காரலாம், பிற இடங்களுக்குச் செல்லலாம், விளையாடலாம், ஆனால் ஒரே வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுமே இவ்வாறு கூட்டாக ஈடுபட முடியும்.
• பொதுமக்கள் சமூக விலகல் தொடர்பான விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவற்றை மீறினால் அபராதம் அதிகரிக்கும்.

“சமூக முடக்கத்தின் இரண்டாம் நிலையானது யூன் மாதம் 1 ஆம் தேதிக்கு முன்பான தளர்த்தப்பட தொடங்கும். கடைகளை மீண்டும் கட்டம் கட்டமாகத் திறப்பதும், ஆரம்ப மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் ஆண்டு 1 மற்றும் ஆண்டு 6. இல் சேர்ப்பதும் இதில் அடங்கும். எங்கள் இலட்சியம் என்னவென்றால், அடுத்த ஆண்டு தேர்வுகளை எதிர்கொள்ளும் இரண்டாம் நிலை மாணவர்கள் விடுமுறைக்கு முன்னர் குறைந்தபட்ச நேரத்தையாவது தமது ஆசிரியர்களுடன் செலவளிப்பார்கள்.

இந்த நிபந்தனைகள் மற்றும் மேலதிக விஞ்ஞான ஆலோசனைகளுக்கு உட்பட்டு, எண்கள் அதை ஆதரித்தால் மட்டுமே, விருந்தோம்பல் தொழில் மற்றும் பிற பொது இடங்கள் சிலவற்றையாவது மீண்டும் திறக்க முடியுமென நம்புகிறோம். அவைபாதுகாப்பானவை என உறுதிப்படுத்துவதோடு, சமூக இடைவெளி பேணலை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது நடைபெறும்.

அடுத்த இரண்டு மாதங்களின் இந்த காலகட்டத்தில் நாம் வெறும் நம்பிக்கை அல்லது பொருளாதாரத் தேவையால் இயக்கப்பட மாட்டோம். “நாங்கள் அறிவியல், தரவு மற்றும் பொது சுகாதாரத்தால் இயக்கப்படுவோம். இவை அனைத்தும் நிபந்தனைக்குட்பட்டவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த வேண்டும். இவை அனைத்தும் பெரிய நிபந்தனை (ifs) வரிசையைப் பொறுத்தது. தொற்றுவீதத்தை கீழே பேணவும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் சொல்லப்படும் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதையும் பொறுத்தது. இது அனைவரையும் பொறுத்தது.”

“விமானம் மூலம் நாட்டிற்குள் வருவோர்கள் 2 வாரம் தனிமைப்படுத்தலுக்குள்ளாவார்கள் என்பதை அரசாங்கம் அறிவிக்கும். வெளிநாட்டிலிருந்து மீண்டும் இந்தத் தொற்று நாட்டின் உள்ளே வருவதைத் தடுக்க அடுத்த மாதத் தொடக்கத்தில் இந்த நடைமுறை அமுலிற்கு வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோசமான நோயிலிருந்து நாங்கள் திரும்பி வருவோம். நாங்கள் மீண்டும் வலுவான ஆரோக்கியமுள்ளவர்களாக வருவோம். இந்த அனுபவத்தால் பிரித்தானியாவில் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும், நாங்கள் முன்பை விட வலுவாகவும் சிறப்பாகவும் வர முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் மீண்டெழும் ஆற்றல் கொண்டவர்களாக, மேலும் புதுமை படைப்போராக, பொருளாதார அடிப்படையில் இயங்கும் தன்மை உள்ளவர்களாக, ஆனால் கொடுக்கும் பண்பும் பகிரும் எண்ணம் கொண்டவர்களாக வர முடியும் என நான் நம்புகிறேன்.எனினும் இப்போதைக்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், வைரஸைக் கட்டுப்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.” என நாட்டு மக்களுக்கு அற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More