Home இலங்கை மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில், ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும்…

மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில், ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும்…

by admin

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு போரின் போது உயிர்நீத்த பிராத்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கோரோனாவின் பாதிப்புக்கு இருக்கின்ற நேரத்திலே வருகின்றபடியால் பலவிதமான தடங்கல்களை நாங்கள் எதிர்நோக்க இருக்கின்றோம்.

முள்ளிவாய்க்காலுக்கு சென்று எங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றி மௌனமாக இறந்தவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கின்றதோ என்று எங்களுக்கு கூற முடியாது இருக்கின்றது.

அவ்வாறு செய்யக் கூடியவர்கள் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மௌனமாக அஞ்சலி செலுத்தி வரக்கூடும் என்றால் மிகவும் நன்று. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பொலிஸார் உடைய, படையினர் உடைய எதிர்ப்புகள் இவற்றில் இருப்பதை நான் காண்கின்றேன்.

அதில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் அவ்வாறானவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொண்டு போக எத்தனிக்கின்றார்கள். அப்படியானால் 14 நாள்கள் அவர்களைக் கொண்டுபோய் வைத்து இருக்கக்கூடும்.

ஆகவே முடியுமா என மக்கள் அங்கு சென்று தங்களுடைய மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம் நாங்கள் நடவடிக்கையில் இறங்கலாம். ஆனால் எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் இரண்டு விடயங்களை அன்றைய தினம் செய்ய இருக்கின்றோம்.

இறந்த மக்களினுடைய நினைவாக பயன்தரும் மரங்களை நடுவதற்கு இருக்கின்றோம். அது சம்பந்தமாக அந்தந்த மாவட்டங்களில் ஒருத்தரை அடையாளப்படுத்தி அவர்களுக்கு ஊடாக நாங்கள் மரங்களை வாங்கியும், பெற்றும் மக்களுக்கு தேவையானவர்களிடம் மரங்களை கொடுத்து தங்களுடைய வீட்டிலும் பயன்தரும் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதை 16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அது ஒரு முக்கியமான பெட்டகம் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால் வெறுமனே எங்களுடைய மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றுவதோடு நின்றுவிடாமல் வரும் காலத்திலே எங்களுடைய இறந்த உறவுகள் எதை நோக்கி எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டார்களோ அதாவது எங்களுடைய வடகிழக்கு தாயகப் பிரதேசம் நன்றாக முன்னேறவேண்டும், செழிக்க வேண்டும் அத்தோடு எல்லா விதத்திலும் நல்லதொரு நிலையை அடைய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அது நடைபெற வேண்டுமானால் இப்போது இருந்தே இந்த பயன்தரு மரநடுகை நிகழ்வில் நாங்கள் ஈடுபடுவது நல்லது என்று நினைக்கின்றேன். ஆகவே அன்று நாங்கள் அதை ஒரு விடயமாக காலையிலே செய்கின்றோம்.

அதைவிட உலகம் முழுவதும் எங்களுடைய தமிழ் உறவுகள் அன்றைய தினம் 18.18.18 க்கு அதாவது 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலே இறந்தவர்களை நினைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும்.

இது இலங்கையில் மாத்திரமன்றி எத்தனையோ நாடுகளிலே அன்றைய தினம் நடைபெறுகின்றது.

உதாரணமாக எங்களுடைய நாட்டிலே அந்த நேரத்தில் செய்யும்போது ஆஸ்திரேலியாவில் 5 அல்லது 6 மணித்தியாலம் வித்தியாசமாக இருக்கும், இங்கிலாந்தில் வித்தியாசமாக இருக்கும்.

ஆகவே அந்தந்த நாடுகளிலேயே18.18.18 க்கு நாங்கள் விளக்குகளை ஏற்ற இருக்கின்றோம். விளக்குகளை ஏற்றி இறந்தவர்களை நினைத்து அவர்களுடைய எதிர்பார்ப்பின் படி வரும் காலம் நல்லதொரு காலமாக வடகிழக்கு மாகாண மக்களுக்கு அமைய வேண்டும் என்று சிந்திப்போமாக. இப்போது இருக்கும் நிலையிலேயே சில பல தடங்கல்கள் இருக்கின்றபடியால் நான் கூறிய அந்த விடயங்களை நாங்கள் முக்கியமாக செய்யலாம்.

காலையிலேயே மரம் நடுதல், அதாவது எங்களுடைய கட்சியின் ஊடாகதான் மரம் நடவேண்டும் என்று இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு முடியுமான ஒரு பயன்தரும் மரத்தை தங்களுடைய தோட்டங்களிலோ, அண்மையில் இருக்கும் இடங்களிலோ அல்லது பொது இடங்களிலோ அவற்றை நட்டு குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதனைப் பேணிப் பராமரித்து வரவேண்டும்.

அதனை ஒருபுறமாக செய்யும்போது அன்றைய தினம் மாலை ஆறு மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொரு வீட்டியிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரி கொள்கின்றேன்- என்றார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More