இலங்கை பிரதான செய்திகள்

முள்ளிவாய்கால் பேரழிவை நினைவுகூருவோம்” – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 அன்று மாலை 7 மணிக்கு எமது வீட்டு முன்றல்களிலும் பொது இடங்களிலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் அதே நேரம் ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் மணியொலி எழுப்பி முள்ளி வாய்க்கால் பேரவலத்தையும் தழினப்படுகொலையையும் நினைவுகூர்வோம். என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

மாணவர் ஒன்றியத்தினால் அது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
நவீனயுகத்தில் நிகழ்ந்த மாபெரும் மனிதப்பேரவலத்தின் உச்சகட்டமான முள்ளிவாய்கால் பேரழிவின்  பதினோராவது  ஆண்டு நினைவு நாளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றோம்.  மே18  என்பது தனியே முள்ளிவாய்கால் மண்ணில் நிகழ்ந்த பெருந்துயரின்  நினைவு நாள் என்பதற்கும் அப்பால் இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழினம் மீது தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் இனப்படுகொலையின் நினைவு நாளாகவும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஈழத் தமிழினம் தனக்கிழைக்கப்பட்ட அநீதிகளையும் அவற்றின் விளைவான துயர்களையும் நினைவுகொள்வதோடு  வீறுகொண்டு போராட திடசங்கற்பம் பூணும் ஒரு நாளாகவும் இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது.
நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு சிங்கள அரசை பொறுப்புக்கூற வைப்பதன் ஊடாகவே தமிழ்மக்களுக்கான விடிவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் களம், புலம், தமிழகம் என சிதறிக்கிடக்கும் தமிழர் சக்தியை ஓரணியில் திரளச்செய்வது அவசியம் ஆகின்றது.
மே 18 இனப்படுகொலை நினைவு நாள் இத்தகைய ஒரு அணிதிரட்டலுக்கான உந்து சக்தியை எமக்கு தர வேண்டும்.
இவ்வாண்டு இந்நினைவு நாள் கோவிட்19 என்னும் உலகப் பெருந்தொற்று நோயின் பின்னணியில் வருவதனால் பகிரங்கமாக பெருந்தொகையில் அணிதிரண்டு எமது அபிலாஷைகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக் கைதிகளாக நாம் மாற்றப்பட்டுள்ளோம்.
இந்நிலையில் எமது நினைவு கூரலை, உணர்வெழுச்சியை ஆழமானதாகவும் ஆத்மார்த்தமானதாகவும் அமைத்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
எனவே பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்க எமது மக்களிடம் அறைகூவல் விடுக்கின்றோம்.
மே 18 அன்று மாலை 7 மணிக்கு எமது வீட்டு முன்றல்களிலும் பொது இடங்களிலும் சுடரேற்றி அஞ்சலிப்போம்
அதே நேரத்தில் ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் மணியொலி எழுப்பி முள்ளி வாய்க்கால் பேரவலத்தையும் தழினப்படுகொலையையும் நினைவுகூர்வோம்.
போரின் இறுதி நாட்களில் எமது மக்களின் ஒரே உணவாய் அமைந்த உப்புக்கஞ்சியை எமது இல்லங்களில் ஒரு நேர உணவாக்கி நினைவுகளின் நீட்சிக்கு வழிகோலுவோம்.
அன்றைய நாளில் இந்த முள்ளிவாய்கால் கஞ்சியை பொது இடங்களில் வழங்கி மக்களை நினைவுகூரலுக்கு அழைப்போம்.
எமது எதிர்கால சந்ததிக்குக் எம்மினம் சந்தித்த பேரவலங்கலை எடுத்துச் சொல்லி அவர்களையும் இனப்படுககொலையின் சாட்சிகளாக்குவோம். இவ்வாண்டு நினைவுகூரல் ஆத்மார்த்தமானதாகவும் ஆழமானதாகவும் உணர்வெழுச்சி மிக்கதாகவும் அமையட்டும்! என குறிப்பிடப்பட்டு உள்ளது. #முள்ளிவாய்கால் #யாழ்பல்கலை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.