இலங்கை பிரதான செய்திகள்

மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும்

மலையக தோட்ட புறங்களில் முன்னெடுக்கப்படும், இந்திய உதவி வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டும். பல வருடங்களாக நின்று போய் இருந்த அந்த திட்டத்தை, 2015 க்கு பிறகு ஆரம்பித்து நடத்திய கட்சி என்ற முறையில், உங்களுக்கு இது தொடர்பான முழுமையான  ஒத்துழைப்பை,  தமிழ் முற்போக்கு கூட்டணி எப்போதும் வழங்கும். அதேபோல், அதிகார பகிர்வின் ஒரே நடைமுறை ஊன்றுக்கோளாக இருக்கின்ற மாகாணசபை மற்றும் 13ம் திருத்தம், உள்ளிட்ட தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இந்திய கரிசனை தொடர வேண்டும்.

நீங்கள் இலங்கை வந்த உடனேயே உங்களை தொடர்பு கொண்டு நான் உரையாடினேன். இப்போது அதிகாரபூர்வாக, இலங்கை ஜனாதிபதியிடம் உங்கள் பதவி ஆவணங்களை சமர்பித்ததையடுத்து, நீங்கள் பாரத நாட்டின் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றுள்ளீர்கள். இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாகவும் இந்நாட்டு மலையக மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன் என புதிய இந்திய தூதுவர் கோபால் பாகலே உடன் தொலைபேசியில் உரையாடிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடுஅரச கரும மொழிகள்சமூக மேம்பாடுஇந்து சமய விவகார அமைச்சரும்கொழும்பு மாவட்ட எம்பியுமானமனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல வருடங்களாக இந்திய  வீடமைப்பு திட்டம் நின்று போயிருந்தது. எமது ஆட்சி அமைக்கப்பட்டவுடன், குடியிருப்பாளர்களுக்கு நில உரிமையை வழங்க நாம் அமைச்சரவை அனுமதியை பெற்றோம். இந்திய  வீடமைப்பு திட்டம் தொடர்பில் முன்னாள் இந்திய தூதுவருடன், எமது கூட்டணியின் பிரதிதலைவர் மலைநாட்டு புதிய கிராமங்கள்உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சர், பழனி திகாம்பரம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டார். கடந்த காலங்களில் இருந்த முறையற்ற அரசியல் தலையீடுகளை தவிர்த்து, நாம் மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களை கிராவாசிகளாக மாற்றும் புதிய கிராமங்களை இந்திய  வீடமைப்பு திட்டம் மூலம் ஆரம்பித்து நடத்தினோம்.  இது தொடர வேண்டும். இதற்கான எமது ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு.

அதேபோல் இந்நாட்டில் மாகாணசபை முறைகளையும், 13ம் திருத்தத்தையும் பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் தார்மீக பொறுப்பை இந்தியா எக்காலத்திலும் கைவிடக்கூடாது. இது தொடர்பிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு என்பதையும் நான் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

எமது ஆட்சியின் போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கை மலையகத்துக்கு வந்த போது வரலாற்றில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு கூட்டத்தை நாம் முன்னின்று நோர்வூட் நகரில் நடத்தினோம். அக்கூட்டத்திலேயே மேலும் பத்தாயிரம் வீடுகளை அமைக்கும் புதிய அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார் என்பதையும், பாரத பிரதமரின் அன்றைய தூதுக்குழுவில் சிறப்பு அதிகாரியாக நீங்கள் வருகை தந்ததையும் நான் நினவு கூற விரும்புகிறேன்.

இவற்றுக்கு பதிலளித்த இந்திய தூதர் கோபால் பாகலே, வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான ஒத்துழைப்பை தான் வரவேற்பதாகவும், இவை பற்றிய சமகால வரலாறு மற்றும் நிலவரங்கள் பற்றி தான் அறிந்து வருவதாகவும், இயல்பு நிலைமைகள் திரும்பிய பின் நேரடியாக சந்தித்து உரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.  #மலையக #இனப்பிரச்சினை #கோபால்பாகலே

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.