இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

மலைகத்தின் அடையாளக் கலைகள் – ச.புஸ்பலதா…

மலையக தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புடன் தமது பாரம்பரியத்தினையும் சமயம், சடங்குகள், வழிப்பாட்டு முறைகள், தென்னிந்திய தமிழ் மொழி, பேச்சு வழக்கு, கலை அம்சங்களுடன் கூடிய அடையாளத்தினையும் கொண்டு வாழ்கின்றார்கள். காலனித்து ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவில் இருந்து அழைத்து வந்து மலைநாட்டு பகுதியில் குடியமர்த்தப்;பட்டு கோப்பி, தேயிலை, இறப்பர் பயிரி;டப்பட்ட தோட்டகளில் தொழில் புரியும் தோட்ட தொழிலாளியாக உருவாக்கினர். பொருளாதாரத்தில் இலங்கை தனியானதொரு இடத்தை; பெற முதுகெலும்பாக காணப்பட்ட தேயிலை, இறப்பர் தோட்டங்களில் மலையகமக்கள் தொழில் புரிந்து வருவதுடன் அவர்களின் கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவ் வாழ்வியலோடு பாரம்பரியமாக பின்பற்றி வரும் வழக்காறுகள், நம்பிக்கைகள்;, பழக்கவழக்கங்கள், கலைகள், கூத்துக்கள் அனைத்தும் மலையக மக்களிடத்தில் கலந்தே காணப்படுகின்றது.

பாரம்பரிய கூத்து, சடங்கு முறையின் அடிப்படையில் ஆற்றுகை, அளிக்கை விளங்கி வருகின்றது. இம்முறையில்தான் பாரம்பரிய கூத்துக்கலை உயிர்ப்பெற்று வருகின்றது. உள்ளுர் மக்கள் கூட கூத்தரங்கில் ஆற்றுகை அளிக்கை முறையில் கூத்தின் பாடல்கள், ஆடல் முறைகளினையும், தாளக்கட்டுக்களினையும் ஞாபகத்தில் கொண்டு பாடி, ஆடி அளிக்கை முறையினை மேற்கொள்கின்றனர். பாரம்பரிய கலை வடிவங்கள் சமூகத்திற்கு சமாந்தர கல்வி முறையை அளிக்கும் ஊடகமாக விளங்குவதோடு சமூகம்சார் நன்மைகளினையும், ஒருமைப்பாட்டினையும், கூட்டுச்செயற்பாட்டினையும் சமூகத்தின் மனிதர்களிடம் விளைவிக்கும் ஓரு பாரம்பரிய பொக்கிஷமாகவே கூத்து, சடங்கு மற்றும் பாரம்பரிய கலை அளிக்கை செயற்பாடுகள் காணப்படுகின்றன.

மீளமுடியாத துன்பம், குறைந்த வேதனம், அடிமை வாழ்க்கை போன்றவற்றை இன்று வரை அனுபவித்து வருகின்றனர். இப்படியான ஓயாத உழைப்பும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் மலையக வாழ் மக்கள் தமது பாரம்பரிய கலைகளினையும் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள், நாட்டார் பாடல்கள், புராணக்கதை வடிவங்கள், கூத்துக்கள், நாடகம், வெறியாட்ட நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், பண்டிகைகள் என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவிற்கு பாரம்பரிய கலைத்துவங்கள் சமய வழிபாட்டுகளுடனும், சடங்கு சம்பிரதாயங்களுடனும் வாழ்வியல் நிகழ்வுகளோடும், தொழில் என்பவற்றுடனும் கலந்தே காணப்படுகின்றது. அத்துடன் இவை அனைத்தும் தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகமயமாக்கலின் விளைவாலும் நவகாலனித்துவம் மற்றும் தொழில்நுட்ப உலகின் தாக்கத்தாலும் சமூக மக்களின் சிந்தனை, செயற்பாடுகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளமை தற்கால நிதர்சன உண்மையாகும். காலனித்துவ ஆதிக்க சிந்தனையிலிருந்தும், முதலாளித்துவ பொருளாதார ஆதிக்கத்திலிருந்தும் விடுபட முடியாதவனாக காணப்படும் மனிதரின் சிந்தனை மற்றும் வாழ்வின் கூறுகளில் புத்துணர்ச்சியூட்டும் தன்மையாகவும், மக்களது பொழுது போக்கிற்காகவும் தமது பாரம்பரிய தன்மையை சிதைவடையாமல் பாதுகாப்பதற்காக தனியன்களாகிக் கொண்ட மனிதர்களின் சமூகமயமாக்கல் செயற்பாட்டோடும் இக்காலத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் பாரம்பரிய கூத்தரங்கு இன்றியமையாததாக காணப்படுகிறது

மலையக மக்களின் அடையாளமாவும் தனித்துவமான கலை வடிவங்களாகவும் கூத்துக்கலை காணப்படுவதுடன் கூத்துக்கலையானது இலங்கையில் தனியான செல்வாக்கினையும் வரவேற்பினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மலையகத்தின் கூத்துக்களாக காமன் கூத்து, அர்ச்சுணன்தபசு, பொன்னர் சங்கர் போன்றவை காணப்படுவதுடன் சடங்கு முறையுடனான பல நம்பிக்கைகள்;, வழக்காறுகள் கூத்துக்கள், ஆடல் முறைகளும் காணப்படுகின்றன. கூத்துக்கலையானது சடங்கு முறையாக ஆரம்ப காலத்தில் மலையகத்தில் பெரும்பாலான ஊர்களில் நிகழ்த்தப்பட்டு திறந்த வெளி அரங்கு ஆற்றுகையாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுடன் இவை இன்றைய காலத்தில் கைவிடப்பட்ட நிலைக்கும், அழிந்து வரும் துர்ப்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அழியப்படவில்லை. கூத்துக்கலையானது கவனிப்பார் அற்று இருப்பதுடன் அதற்கான விடயமானது தனியான ஆய்விற்குரிய விடயமாக பார்க்கப்பட வேண்டும். அத்துடன் முறையாக அறிந்து கற்று ஆற்றுகை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையும் இன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு மலையக மக்களின் வருகையுடன் இவர்களில் பாரம்பரிய மரபு வழியாக வளர்ந்து வந்த இக்கலை வடிவங்களும் அழியாது சடங்கு சம்பிரதாயம் நம்பிக்கை முறையுடனும் உளவிடுதலை, மகிழ்ச்சி பொழுதுபோக்கு போன்ற வாழ்வியல் முறையுடன் கொண்டாடும் நெறியினை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மலையக மக்களின் அடையாளமாகவும் இக் கலை வடிவங்களினை வலுப்பெற செய்ய வேண்டிய கடமையும் ஏற்ப்பட்டுள்ளது. இன்றைய சமூகமானது வெறும் கல்வி மற்றும் ஆய்வு முறையில் மாத்திரமே இவ்வாறு கூத்துக்கலை உள்ளதாக கற்று வருவதுடன் கல்விசார் அறிதலுமாக காணப்படுகின்றது. இக் கலைவடிவங்களினை பொக்கிசமாக அடையாளப்படுத்தல் மட்டுமல்லாது கூத்துக்கலை வடிவங்களினை ஆற்றுகை, அளிக்கை ஊடாக பார்த்தல், பங்குப்பற்றல் என்ற முறையில் மீளுருவாக்கப்பட வேண்டும்.

ஊர் முழுவதும் சுற்றி திரிந்து ஆடுதல், பல ஊர்களுக்குச் சென்று ஆற்றுகை அளிக்கை மேற்கொள்ளல், காணி;க்கை பெறுதல் என மக்களின் நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், ஐதீகங்களை மீண்டும் கொண்டு வர வேண்டியுள்ளது. கலை ஆற்றுகையினை அறிந்து பார்த்தல் பிரயோசனமானது. வாய்மொழி ஊடாக கேட்டு அறியும் இன்றைய நிலையினை மாற்றி ஆற்றுகை அளிக்கை முறைக்கு கொண்டுவருவதன் மூலம் நம்பிக்கை சடங்கு முறையினை வாழ்வியல் கலையின் ஊடாக அடையாளப்படுத்த உதவதுடன் பேசு பொருளாக அமையும் கலையினை ஆற்றுகை, அளிக்கை, காட்சி, நேரடியான அனுபவம் போன்றவை பங்குபற்றல் முறையினை கொடுக்கும் இக் கலைகள் மலையக வரலாற்றினையும் பாரம்பரிய அடையாள முறையினையும் வெளிப்படுத்துவதுடன் மலையக மக்களின் அடையாளமாகவும் உள்ள இக் கலையினை நவகாலனிய சிந்தனையின் காரணமாக கல்வி

முறையில் கற்ற சமூகத்துடன் சேர்ந்து வளர்க்கும் பாதுகாப்பதற்கும் அதற்கான பங்களிப்பு முறை வழங்குவது குறைவாகவே காணப்படுகின்றது. ஆற்றுகை முறையில் பங்குபற்றுவது, திறந்த வெளி அரங்கில் அளிக்கை செய்தல் போன்றவை இன்றைய சமூகத்திடம் மிக குறைவாக காணப்படுகின்றது. இலக்கிய முறையிலும் கல்வி முறையிலும் கலை வடிவங்கள் அறியப்படுவதாக மாறி வருகின்றது தவிர ஆற்றுகை முறையில் நேரடியான பார்வை, அனுபவம், ரசித்தல், பங்குபற்றல் குறைந்தே வருகின்றது. இதனை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டும். அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாரம்பரிய கலை வடிவங்களினை சரியாக அறிந்து முறையாக கற்று ஆற்றுகை முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நவீனமயமாக்கத்துடனான சினிமா, சின்னத்திரை நாடகங்கள் இன்று வலுப்பெற்று உள்ளதுடன் எமது பாரம்பரிய அடையாளமான வாழ்வியல் கலைகளினை கைவிட நேர்ந்துள்ளன. மலையக மக்களின் பாரம்பரிய கூத்துக் கலையினை மேல் கொண்டுவர வேண்டும். உலகறியப்பட செய்ய வேண்டும். காலனிய ஆதிக்கத்துடன் ஒரு நாட்டில் இருந்து வந்து இலங்கையில் மலைநாட்டு பகுதியில் குடியமர்த்தப்பட்டு அவர்களோடு வந்த கலை வடிவமான சடங்கு, கூத்துக் கலையினை அழியாது பேணிப்பாதுகாத்து வந்தமை வரவேற்கத்தக்கதாகும். இன்றைய சூழலில் நவீனமயமாக்கத்தின் விளைவாழ் வலுவிழக்கப்பட்ட நிலை காணப்படுவதுடன் மீண்டும் மீளுருவாக்கப்பட வேண்டும். கல்வி முறையில் உள்ள ஏனைய கலையான பரதநாட்டியம் கர்நாடக சங்கீதம் என்பவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்தினை ஏன் நாம் எம் மலைவாழ் மக்களின் அடையாளமாக மிக சிறப்பிக்கப்பட வேண்டிய கூத்துக் கலையினையும், எம்மவர் கலையினையும் கற்க கூடாது? அதனை அளிக்கை முறையில் மீண்டும் மீளுருவாக்க வேண்டும். ஆய்வுகள், கல்வி முறையில் மாத்திரம் பார்க்காமல் திறந்த வெளி அரங்கு ஆற்றுகை அளிக்கை முறையில் மீளுருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய காலனித்துவ சூழலில் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனக்கானதொரு ஆக்கத்திறன் மற்றும் அறிவுப்பின்புலம் இல்லாதவர்களாக உருவாகி வருகின்றனர். இவ்வாறான காலனித்துவ சிந்தனையின் விளைவாக எமது கல்விமுறை, கலாச்சாரம், மொழி, கலை, பாரம்பரிய சடங்கு, விளையாட்டு, பொழுதுபோக்கு, சிந்தனை, வழிபாட்டு முறை போன்றவற்றில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளது. சிந்தனையளவில் நாமும் கறுப்புத்தோல் போர்த்தியுள்ள வெள்ளையர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எம் முன்னோர்களின் அடையாளம் ஆற்றுகை முறையினை சிதைவடையாமல் பாதுகாக்க வேண்டும். கூத்தின் ஆற்றுகை அளிக்கை முறையின்போது பாரம்பரிய தன்மை மாறாது உலகத்தார் மத்தியில் செல்ல வேண்டிய தற்காலத்தின் அவசியத்தன்மை காணப்படுகிறது. தற்போது காணப்படும் நவகாலனிய கல்வி மற்றும் பாரதூரமான தன்மையிலிருந்து கலைகளினை மீளுருவாக்க வேண்டிய தேவையுள்ளன. மலையக மக்கள் நவீனமயமாக்கல் விடயங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதுடன் உழைப்பு மற்றும் பணத்தினை நோக்கி ஓடும் இயந்திரமாக தற்கால சூழலுக்கேற்ப மாறிவருவதுடன் இவ்வாறான சமூகத்திற்கு பாரம்பரியத்தையும் வரலாற்றினையும் மீட்டுக்கொடுப்பதன் மூலமும் பாரம்பரிய ஆற்றுகை அளிக்கை முறையினை மீள் அளிப்பதன் மூலம் காலனித்துவ, நவகாலனித்துவம் மற்றும் தொழில்நுட்ப தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும்.

தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் கலை அவர்களின் பாரம்பரியம் நிறைந்து காணப்படுவதுடன் வாழ்வியல் அடையாளமாக வாழ்வோடு இணைந்ததாகவே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. மலையகத்தில் கூத்துக்கலையானது மலையக வாழ்வியலில் நிராகரிக்க முடியாத ஒரு பண்பாட்டு அடையாளமாகும். மலையக மக்களின் வாழ்க்கையினை துன்பம் நீக்கி இன்பமாக பிரகாசிக்க வைக்கும் கலைகளினை பொக்கிஷமாக அழியாது பாதுகாப்பதோடு அக்காலத்தில் அளிக்கை முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டிய கடமையும் எம்மவரிடம் உள்ளது.

எனவே உலகமயமாக்கலில் உலகம் சுருங்கினாலும் விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்று எம் சமூத்தின் அடையாளமாகவும், கலாசாரத்தின் குறியீடாக உயிர்ப்போடு விளங்கும் பாரம்பரிய சடங்கு, கூத்து கலைகளினை போற்றுவதோடு அழியாமலும் சிதைவடையாமலும் பாதுகாத்து வலுப்பெறச் செய்ய வேண்டும். அத்துடன் நாளைய சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் பொக்கிஷமான அடையாளமாக காணப்படுவதுடன் பாரம்பரிய வாழ்வியல் கலையான சடங்கு, கூத்துக் கலைகளினை பாதுகாத்து எதிர்காலத்திற்கு அளிக்கை முறையாக ஒப்படைக்க வேண்டிய தற்கால சமூகத்தினரான எம் அனைவரினதும் தலையாய கடமையாகும். ஆவணப்படுத்து முறையாக மாத்திரம் இருந்துவிடாது அளிக்கை முறையின் ஊடாக நேரடியான அனுபவத்தினையும் பங்குபற்றுதலினையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.

ச.புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.