கட்டுரைகள் பிரதான செய்திகள்

தொடர்பாடல் சாதனங்கள் வழி கல்வி ? இரா.சுலக்ஷனா…


அறிவியலும் மனிதர்களுமாக, ஒன்றித்துப் போன இயந்திர வாழ்க்கையில், கல்வி அல்லது கல்வியியல் மிக முக்கியமான அதேவேளை, மிகப் பிரதானமான மைல் கல்லாக இன்றளவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இத்தகைய அசாதாரண சூழலிலும் நமது தேவையும், சிந்தனையும் இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வது குறித்ததாகவே இருந்து வருகிறது. இதனையொட்டி முன்வைக்கப்படும் மாற்றுவழிமுறைகளின் அடிப்படையில், கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகிறது.

இலங்கையை பொறுத்தவரை பாடசாலை கல்வி முதல் பல்கலைக் கல்வி வரை, அனைத்துப் படிநிலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள், பல்வேறு மாற்று ஊடகங்கள் வாயிலாக, முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலவசக் கல்விக் கொள்கையின் அடிப்படையில், இதுவரை காலமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கையில், கல்வி வழங்கல் முறைமையில், அசமத்துவ நிலையே நிலவிவருகின்ற நிலையில், மாற்று வழிமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற கல்விச் செயற்பாடுகள் குறித்தும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

அறிவியல் மயமாகிப் போன இன்றைய சூழலில், இருவழி தொடர்பாடல் சாதனங்களான தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட, இன்னப்பிற சமுக வலைதளங்களுக்கூடாகவும், கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகையதொரு அசாதாரண சூழலில், மாற்று வழிகளில் கல்விச் செயற்பாடுகளைத் தொடர முனைதல் என்பது, கல்வி சூழலை பொறுத்தவரை, ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே. ஆயினும் ‘மாற்றுவழி முறையில் முன்னெடுக்கப்படும் கல்விச் செயன்முறைகளில், கல்வி போதனா முறைமை என்னவாக இருக்கிறது? ‘ என்பது குறித்தும் சிந்திக்க வேண்டி இருக்கிறது. இதுவரை காலமும் இருந்து வருகின்ற, கல்வி போதனாமுறைகளிலேயே, மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்ற நிலையில், மாற்றுவழியில் முன்னெடுக்கப்படும், கல்விச் செயன்முறைகளில், போதனா முறைமை என்னவாக இருக்கப்போகிறது?

இதுவரைகாலமும், முன்னெடுக்கப்படுகின்ற கல்;வி செயன்முறைகள், மனப்பாடக் கல்வியாகவும், ஒப்புவித்தலுமாகவும், ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அல்லது தயார்நிலையில் இருக்கின்ற கேள்விகளுக்கான விடைக்கூறல் முறையாகவே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

கல்விப் போதனா முறைமையை பொறுத்தவரை நாம், எதிர்நோக்குகின்ற பாரிய சவாலாகவும், இந்நிலைமையேத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பரீட்சை தயார்ப்படுத்தலுக்கான செயன்முறையாக முன்னெடுக்கப்படும் கல்வி செயன்முறைகளில், கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்குமானத் தீர்வாக மாற்றுவழிமுறையில் முன்னெடுக்கப்படுகின்ற, கல்வி செயன்முறைகள் அமைகிறதா என்பது கேள்விக்குறியே.

வகுப்பறையொன்றில், 40 மாணவர்களுக்குமான கேள்விகள், ஒன்றிலிருந்து ஒன்ற வேறுபட்டே இருக்கும் ; அப்படி எழுகின்ற கேள்விகளில் எழுமாறாக ஒன்றோ அல்லது இரண்டோ வகுப்பறையில் கேட்கப்படும். ஆனால், அவ்வாறு எழுகின்ற, எழுமாறான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இடமளிக்கப்படாத ஒருவகை போதனா முறையாகவே, மாற்றுவழி கல்விச் செயன்முறைகள் தொடர்கின்றமை குறித்து சிந்திக்க வேண்டி இருக்கிறது.

கொடுத்தலும் வாங்கலுமாக வகுப்பறையில் தொடர்கின்ற அல்லது கலந்துரையாடலாகத் தொடர வேண்டி இருக்கின்ற, குழுச் செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டிய கல்வி செயன்முறைகள் ஒற்றை குவிமையமாக, போதித்தல் அதனை கேட்டுக் கொண்டிருத்தல் என்பதாக மாற்றுவழி முறையில் தொடர்வது எத்துனை பொருத்தப்படுடையது என்பது குறித்து சிந்திக்க வேண்டி இருக்கிறது.

குறித்த ஒரு பாட அலகினை கற்பிப்பதற்கு ஏறக்குறைய, மூன்று அல்லது நான்கு நாட்கள், சில வேளைகளில் ஒருவாரமும் தேவைப்படுகின்ற நிலையைத்தான் வகுப்பறை கற்பித்தல் முறையில் பெரும்பாலும் அவதானிக்க முடிகின்றது. ஆனால், மாற்றுவழி முறை கல்வி செயற்பாடு, ஒரே நாளில் ஒரு சில மணித்தியாலங்களில் குறித்த பாடஅலகுகளை கற்பித்து முடித்தல் என்பது, எந்தளவிற்கு சாத்தியப்பாடான பெறுபேற்றினை பெற்றுதரப் போகிறது என்பது குறித்தும் கல்வி சமுகம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

போதனா முறைமை அல்லது கல்வி சீர்த்திருத்தக் கொள்கைகள், இவையனைத்தும் கல்வி உளவியல், மாணவர் உளவியல் இதனை முன்னிறுத்தி மாற்று போதனாமுறைகள், மாற்று கல்விச்சிந்தனைகள் என்பதாக முன்வைக்கப்பட்டு, மாற்றங்களை மேற்கொள்வதற்கான எத்தனங்கள் இடம்பெறுகின்ற சூழலில், இத்தகைய பேரிடர் காலத்தில், கைக்கொள்ளப்பட்டுவருகின்ற, மாற்றுவழிமுறைகள் இத்தகைய நிலைமைகளை கருத்திற் கொண்ட உருவாக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்திற்கிடமாகவே இருக்கிறது.

நேயர் விருப்பம், நேயர் தெரிவு என பாடல், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திற்குமான வாய்ப்பை வழங்கும் ஊடகங்கள், ஒலிபரப்புகின்ற கல்வி செயற்பாடுகளிலும், மாணவர் கேள்விகளுக்கு இடமளித்தல், கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வுகளை முன்வைத்தலாகக் கல்வி செயன்முறைகளை, கல்வி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்தல், மாணவர் சமுகத்திற்கு, தமது கல்வி செயன்முறைகளை செவ்வனே முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமையும். எனினும் இந்நிலை என்பது, செயன்முறை சார்ந்து கற்பிக்க, கற்க வேண்டிய பாடங்களில் ( விஞ்ஞான செயன்முறைகள்) எத்துனை பொறுத்தமானது என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.

இடைவெளிகளற்ற போதனா முறையாக கல்வி செயற்பாடுகள், நிகழ்ச்சிகளாகத் தொகுத்தளிக்கப்படல் குறித்தும் சிந்திக்க வேண்டி கிடக்கிறது. ஆக, ஏற்கனவே இருந்துவருகின்ற போட்டிப்பரீட்சை தயார்படுத்தலாகவும், கலந்துரையாடல்களுக்கு இடமற்ற, அவர் அவர் சுயம் சார்ந்து சிந்திக்கின்ற, சமுகம் சார்ந்து எதிர்வினையாற்றுவது குறித்த சிந்திப்பதை தடைசெய்துக் கொண்டிருக்கின்ற மனோநிலை காழ்கொண்டிருக்கின்ற ஒரு சுழலில், தொடர்ந்தும் மனப்பாடக் கல்வியை ஆதரிக்கும் வகையிலேயே, மாற்றுவழி போதனா முறைமை அமைதல் என்பது, கல்வி சமுகத்தை பொறுத்தவரை அபத்தமான ஒன்று என்றே தெளியவேண்டிக்கிடக்கிறது.

இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap