இலங்கை பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் சாட்சியமளித்த குற்றப்புலானாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் சஹ்ரான் ஹசீம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல்நாள் கல்கிஸ்ஸ பகுதியில் பதிவு செய்த காணொளி ஒன்றில் தாக்குதலுக்கான காரணங்களை தெரியபடுத்தியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி ஜமில் மொகமட் என்பவரிடம் பயங்கரவாத ஒழிப்பு விசாரணை பிரிவு விசாரணை மேற்கொண்டு அது குறித்து அப்போதைய காவல்துறைமா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கு தெரியப்படுத்தியதாகவும் எனினும் 2019 ஏப்ரல் 8 ஆம் திகதி பூஜித்த ஜயசுந்தர கையெழுத்திட்டு அனுப்பிய ஆவணத்தில் ஜமீல் மொஹமட் என்பவர் ஒரு தீவிரவாத வெறியர் என்பது தொடர்பில் எந்த தகவலும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
ஜமீல் மொகமட்டின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டபோது, தாக்குதல் நடந்த தினமன்று காலை குண்டுதாரி தனது கைத்தொலைபேசியில்லிருந்து ஒரு பதிவினை அனுப்பியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல்நாள், சஹ்ரான் ஹசீம் நீண்ட உடையை அணிந்து தரையில் விழுந்தவாறு பதிவு செய்த , இதுவரை ஊடகங்கள் ஒளிபரப்பாத பல காணொளிகளை அவர் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ளார்.

அதில் தாக்குதல் நடத்துவதற்கு உயிர்த்த ஞாயிறு தினத்தை தெரிவு செய்தமைக்கான நான்கு காரணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாகவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

1. அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களை நேசிப்பதும், தடைசெய்யப்பட்ட செயல்களை நிராகரிப்பதுமாகும்.

2. முன்னாள் ஐ.எஸ் தலைவர் உருவாக்கிய இஸ்லாமிய அரசின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கு பழிவாக்குதல்.

3. நியூசிலாந்தில் ஒரு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை கொலை செய்தமை

4. ஈராக் மற்றும் சிரியாவில் முஸ்லிம் மக்களைக் கொல்வதற்கு காரணமாணவர்கள் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டமை.

இவ்வாறான காரணங்களால் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தாக்கப்பட்டதாக சஹ்ரானின் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தற்கொலைக் குண்டு தாக்குதல்களை இலங்கையில் நடத்த காரணமானவைகளாக

1. அல்லாஹ் தெய்வத்தை ஏசுவது மற்றும் குறைத்து மதிப்பிடுதல்.

2. குளியாப்பிட்டியில் பன்றி உருவத்தில் அல்லாஹ்வை சித்தரித்தது.

3. அல்லாஹ் மறுபிறவி எடுத்தான் என ஞானசர தேரர் கூறியமை

4. முகமது நபிக்கு எதிராக குற்றம் சுமத்தியமை

5. குரானைக் கிழித்து எரித்தமை.

6. மஸ்ஜித் பள்ளிவாசல்களை இடித்தமை

7. முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்து பொருளாதாரத்தை அழித்தமை

8. சர்வதேச சிலுவைப் போரில் இலங்கையின் பங்கேற்பு.

9. அல்லாஹ்வின் சட்டத்தின்படி இஸ்லாத்தை தழுவ மறுக்கும் நபர்களை கண்ட இடத்தில் கொல்வது.
எனவும்; சஹ்ரான் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளதாக அவர் சாட்சியம் அளித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும், அல்லாஹ்வை கௌரவபடுத்துவதற்காகவுமே நடத்தப்படுகிறது எனவும் அந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

மேலும்; வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம் குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியதிய போது குறித்த காணொளி , தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அதாவது ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையான நேரத்தில் கல்கிஸ்சையில் உள்ள கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சஹ்ரான் ஹசீமிடம் இருந்த துப்பாக்கி குறித்து ஆணைக்குழு விசாரித்ததில் அது டி56 ரக துப்பாக்கி எனவும், 2017 ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளுக்காக அதனை சஹ்ரான் பாவித்துள்ளதாகவும் எனினும்; அந்த ஆயுதத்தை சரியாக தம்மால் அடையாளம் காண முடியவில்லை எனவும் சாட்சியாளர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். #உயிர்த்தஞாயிறு  #ஜனாதிபதிஆணைக்குழு #காணொளி #பூஜித்த #சஹ்ரான்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap