கட்டுரைகள் பிரதான செய்திகள்

சமூக சுய உளஃநல ஆற்றுப்படுத்தலில் மரபுத் தொடர்களினதும் தூசணங்களினதும் வகிபாகம்…

உலக இயங்கியலிலே மனித வலுக்களின் பெறுதியானது மிகத் தேவைப்பாடானதாகும். தனியன்களின் கூட்டு வடிவான சமூகமானது தனது உறுப்பினத் தனியன்களின் வாழ்க்;கையோட்ட நடவடிக்கைகளிலும், நடைமுறைகளிலும் செவ்வனான செல்வாக்கைக் கொடுத்த வண்ணமே உள்ளது. அவ்வாறான வாய்ப்புக்களையும், இருப்புக்களையும் தக்கவாறு பயன்படுத்தியோர் பெற்ற பயன் வேறு, தகாதவாறு பயன் படுத்தியோர் பெற்ற பயன் வேறு. இவ்வாறு இரு நிலைப்பட்ட பன்முக மனிதத் தன்மைகளின் இடையே காணப்படுகின்ற உணர்வுகள் யாவும் ஒத்த தன்மையைக் கொண்டவை. ஆயினும் வெளிப்படும் நியமங்களிலும், நேரங்களிலும் வேறுபட்டே அமையும் என்பது நியதி. உடல் தந்த உறவு முதல் உடல் சேர்ந்த உறவுவரைக்கும் நிலமை இதே.

இவ்வாறு நிகரெதிரான வேறுபாடுடைய, ஒட்டு மொத்த சமுதாயத்திலே மனித மனங்களின் பாலான ஆற்றுப்படுத்தலின் தேவைக்கும், தன்மைக்கும் மொழியூடகத்தின் தேவை பிரதான்யம். மொழியூடகப் பிரிப்புக்களிலே மரபுத்தொடர்கள் மற்றும் தூசணங்களின் தேவையானது மறைமுகமாகவும்,வக்கிரமாகவும்,இன்றியமையாததாகவும்தனி நபர் சுய உளஃநல ஆற்றுப்படுத்தலின்மொழித்தேவைப் பிரயோகங்களாகக் காணப்படுகின்றமை சிலருணர்ந்து பலருணராதவை. மனிதத்திரளானது தமது தேவையினையும், காலநிலைச் செல்வாக்கினையும் கருத்திற்கொண்டு இசைந்த தன்மைக்கமைய பற்பல பிரிவுகளாக, பல் சமூக அமைப்புக்களாகவும், சமூக மட்டத்தில்உயர்ந்த, தாழ்ந்த அமைப்பு வாரியாகவும் உருவெடுத்துள்ளன பாரெங்கும். இவ்வாறான மனித கூட்டங்களின் சுய உளக்கிடைக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அவற்றில் இருந்து வெளிவருதற்கான நடையிறந்த தன்மைக்காகவும், பெண்ணியம் மற்றும் சாதியம் சார்ந்து சமூக மட்டத்தில் காணப்படுகின்ற இழி நிலை வக்கிர மொழிப்பிரயோகங்களான மரபுத்தொடர்கள் மற்றும் தூசணங்களின் செல்வாக்கு எத்தகையது?
மொழி வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லை. இருந்தும் அர்த்தங்கள் பலவற்றைச் சேர்த்த மனித எண்ணங்களின் கற்பனையில் பிறந்த ஒலிகளின் தூலம் தான் மொழி எனலாம். ஒரு மொழியில் ஒரு ஒலிச்சத்தம் ஒரு கருத்தைச் சொல்ல பிறிதொரு மொழியில் மற்றொரு அர்த்தத்தைக் குறிக்கின்றது. ஆய்ந்து நோக்கினால் மொழி வார்த்தைகளுக்கு அர்த்தம் ஒன்று இருந்தால் அது சர்வலோக உண்மை போல ஒரே அர்த்தத்தைத்தான் அனைத்து மொழிகளிலும் கொள்ள வேண்டும். மொழியானது தொடர்பாடலில் கருத்துப் பரவலுக்கான ஊடகம், வார்த்தைகளின் ஒழுங்கமைப்புக் கோர்வை, உள வெளிப்பாடுகளைக் கடத்தும் காவி என்றெல்லாம் அமையப் பெற்றது. எழுத்து, பேச்சு எனும் இரு வடிவங்களைக் கொண்டுமுள்ளது. இவ்வாறான தன்மைகளையுடைய மொழிப் பிரயோகங்களின் வாயிலாகவே மனித மனதாழத்தின் அல்லோல கல்லோல நிலைமைகளானது கணப்பொழுது மொழி வெளிப்படுத்துகையில், சொல்லாது சொல்லும் இரண்டற மொழிதல் தன்மையாக வெளிப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய தன்மைகளுக்கு ஊடாகவே சுய உளஃநல ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் காலந்தொட்டு வழங்கி வருகின்றதும், புது வரவுகளாக அமைகின்றதுமான மரபுத்தொடர்கள் மற்றும் தூசணங்களும் கூட மேற்கண்ட மொழிப் பிரயோகங்களாக அமைகின்றமை அவதானத்திலும், அனுபவத்திலும் சிக்கியதாகும். குறித்த மொழியைப் பேசுகின்ற ஒருவர் அல்லது கூட்டத்தினர் தமது சுயஉளஃநல ஆற்றுப்படுத்தலின் பொருட்டு இன்னொரு உயிரை,இனத்தை,சமூகத்தை பண்பாடு, பொருள் நிலை சார்ந்து மனக்கிலேசம் பண்ணுவதாகவும், உளக்கிடைக்கைகளை அடித்து நொறுக்கும் பண்புடமை கொண்டதாகவும்,காலந்தொட்டு வழங்கி வருகின்ற, குறியீட்டுடன் இரண்டற மொழிதல் தன்மை கொண்ட வார்த்தைகளின் அடைமொழிச் சேர்க்கைகளாக என பல்வகைத் தன்மையுடையதாக மரபுத்தொடர்களும், தூசணங்களும் சமூக மட்டங்களிடையே பாவிக்கப் பட்டன: படுகின்றன: படுமா?.இதுகால நிர்ணயத்திற்கமைய வேறுபடலாம்: வேறுபட வேண்டும்.

இவ்வாறான மொழிப் பிரயோகங்களைப் பிரயோகிக்கும் ஒருவர் அல்லது கூட்டத்தினரின் உளநல நிலைமை, இறந்தகால ஞாபகங்களின் தொகுதி, நிகழ்கால நிகழ்வுகளின் நிதர்சனம், கருத்தியல் ரீதியான முருகியல் நிலை, பிழைப்பட்ட எண்ணங்களால் வளர்ந்த, வளர்க்கப்பட்ட மனித குடும்ப முறைமை, முற்சாய்வுப் புரிதல்என்பவையே தனி நபர் சார்ந்தோ அல்லது கூட்டம் சார்ந்தோ அமைகின்ற சுயஉள வெளிப்படுத்துகைகளின், தாக்குதல்களின் காரண காரியங்களாக அமைகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உளவியல் நிபுணரான சின்மன்ட் புரோய்ட் தற்சிந்தனைப்படி மனமானது நனவிலி மனதிலே காணப்படுகின்ற சுய வெளிப்பாடுகளை, (அவரவர் மரபுக்கமைய) உளவடுக்களைக் களைவதற்கான மன ஆற்றுப்படுத்தலைத் தானாக மேற்கொள்ள சில வழிமுறைகளைக் கையாள்வதாகக் கூறுகின்றார். அதாவது ‘ஆழ்மன எண்ணங்கள், நிறைவேறாத ஆசைகள் என்பன பெரும்பாலும் கனவுகளாக வெளிப்படுகின்றன. அதைப் போலவே கற்பனை கொள்ளல், கோபங் கொள்ளல் புறங்கூறல், பொய்கூறல், இழி கூறல் போன்ற மொழி வினை வடிவங்களாக வெளிப்படுகின்றன.’ என்கின்றார் இதிலே கோபங் கொள்ளல், புறங்கூறல், இழி கூறல் போன்ற மொழித் தாக்கங்களின் வாயிலாகவே மரபுத்தொடர்களும், தூசணங்களும் சமூக மட்டங்களிடையே பெருவாரியாக பாரதூரமான வக்கிரப் போக்கில் பாவிக்கப் படுகின்றனமையானது உணர்ந்தும் உணராதவதனி நபரொருவருக்கு இன்னொருவரின் மீது கோபம் ஏற்பட்டு அவரை அங்கத் தீண்டல் செய்ய முடியாது போகின்ற போது பாதிப்புக்குள்ளானவர் மொழித் தீண்டலைப் பிரயோகிக்கின்றார் இதன் போது அவரைப் பற்றி பிழைபட உரைத்தல், புறங்கூறல், கெட்ட வார்த்தைகளில் திட்டுதல் (தூசணங்களில் திட்டுதல்) போன்ற வேலைகளைச் செய்கின்றார். இத்தருணம் பாதிக்கப்பட்டவரின் மனதிற்கு ஒருவித உளத்திருப்தி தானாகவே உண்டாகின்றது. அது போலவே இவரால் சொற் தீண்டலுக்கு உள்ளானவருக்கும் இருந்ததை விட கோப உணர்வு பிய்த்தெடுக்கப்படுகின்றது.இவ்வாறான தருணங்களில் ஒருவர் உபயோகிக்கின்ற மரபுத்தொடர்களோ, தூசணங்களோ கூறப்படுகின்ற அர்த்தத்தில் நேரடியான பொருள்விளைவை ஒருபோதும் கொள்வதில்லை. மாறாக சொல்லாது சொல்லல் என்ற மறைமுக மொழிதல்களின் வாயிலாகவே பெரும்பாலும் அமைகின்றன. உதாரணமாக

‘ அவனுக்கு நான் என்ன செய்தாலும் வயித்தெரிச்சல் தான்….’
‘ கடும் ஆள்டா அவன் அவனுக்கு எப்ப தொப்பி பிரளும் எண்டே தெரியாது…’

மேற்கண்ட உரையாடலின் போது இரு வேறு வகையான மரபுத்தொடர்கள் மொழிக்கையாள்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. ஒன்று ‘வயித்தெரிச்சல்’ மற்றையது ‘தொப்பி பிரளுதல்’ இவற்றை ஆழ நோக்கினால் இவையிரண்டின் பேச்சுப் பொருள்களும் நேரடியாக அமையவில்லை. அங்கு எவருக்கும் வயிறு எரியவில்லை, எவரின் தொப்பியும் பிரளவில்லை(மாறவில்லை). அவ்வாறாயின் அங்கு சொல்லப்பட்ட மரபுத்தொடர்களின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?, அவற்றைப் பிரயோகித்ததற்கான காரணம் என்ன?, அதைப் பிரயோகித்த பிரயோகிக்கு உண்டான உளத்திருப்தி என்ன? பிரயோகிக்கப்படவரின் உள நிலைச் சிக்கல் என்ன? விடை காண தொடரந்;து வருக.

வயித்தெரிச்சல் என்பதன் மறைமுகப் பொருளர்த்தம் யாதெனில் குறித்தவோர் நபரின் செயற்பாடுகள் அனைத்தும் இன்னொரு நபருக்குப் பிடிக்காத போது அவர் ஒருவித எதிர்த் தூண்டல் விளைவைப் பிரயோகிப்பார.; அவ்வேளை அவரின் நடத்தைகளில் மாற்றம் உண்டாகி அவரின் பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு காணப்படும் சந்தர்ப்பம்உண்டாகும். அப்போது பாதிக்கப்பட்ட நபரினால் ‘வயித்தெரிச்சல்’ எனும் மரபுத்தொடர் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அது போலவேதான் ஒரு கூட்டத்தில் உள்ள நபர் அடிக்கடி தனது கருத்தை மாற்றி மாற்றி வினையாற்றும் போது ‘தொப்பி பிரளுதல்’ என்னும் மரபுத்தொடரானது பிரயோகிக்கப் படுகின்றது.

மேற்சொல்லப் பட்டதான தருணங்களைப் போலவே பல்தருணங்களில் பிரயோகிக்கப் படுகின்ற மரபுத்தொடர்கள் உள ஆற்றுப்படுத்தலுக்காக மறைமுகமாகப் பயன் படுத்தப்படுவது பற்றி உளமருத்துவ நிபுணர் சா.சிவயோகன் அவர்கள் யாழ்ப்பிரதேசத்தினை மையமாகக் கொண்டு ஓர் ஆய்வு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் போது கண்டுபிடிக்கப்பட்ட மரபுத்தொடர்கள் வருமாறு. தலை வெடிக்குது, கழுத்தறுத்தல், வயித்தைப் பற்றி எரியுது, இடி விழுந்து போச்சு, எல்லாம் தலையெழுத்து, வயிற்றில் அடித்தல்,ஈரல் கருகுது, சனியன் பிடிச்சிட்டு, ஆப்பு வைத்தல் (புதுவரவு). இவைகள் எல்லாம் ஆண், பெண், இளவட்டங்கள் என்ற ரதீரியில் பயன் படுத்தப் படுவதாக தனது ஆய்வில் குறிப்பிட்டிருந்தார.; இவற்றைப் போலவே கிழக்குப் பகுதிகளில் வயித்தெரிச்சல், தொப்பி பிரளுதல், வாளி வைத்தல், வால் பிடித்தல், காலம் சரியில்ல, விளக்கம் வெள்ளப் பேப்பர,; காத்துப் பொயித்து, உள்ளால செய்தல், நெஞ்சு வெடிச்சுத்து போன்ற பல மரபுத்தொடர்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இதுபோலவேதான் மனங்களின் வெளிப்பாடாகத் தூசண (நிந்தைச் சொல்) வார்த்தைகளும் பயன் படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதே. அனைவராலும் பிரயோகித்தல் தவறு என்று சொல்லப்பட்டு ஆனால் பிரதி தினமும் பிரயோகிக்கப் படுபவையாக தூசண வார்த்தைகள் அமைகின்றன. தனி நபரொருவர் பொதுவிடத்தில் கோபத்தின் வெளிப்பாடாகவோ அல்லது நகைச்சுவைத் தன்மையாகவோ தூசண வார்த்தை ஒன்றினைப் பிரயோகிக்கும் இடத்து குறித்த அந்நபர் நாகரிகமற்றவர், ஒழுக்கம் இல்லாதவர் என்று ஏனையோர் பட்டம் கொடுப்பர். ஆனால் அவர்களே தனிப்பட்ட ரதீரியில் தமக்கான உளத்தேவையின் பொருட்டு அவ்வார்த்தைகளை உரைப்பர். காரணம் அவர்களை அறியாமலே அவர்கட்கு அவ்வார்த்தைகளால் உண்டாகின்ற ஒரு வகை கீழ் நிலை உளத்திருப்தியே. இவ்வாறு பேசப்பட்டுக் கொண்டிக்கின்ற தூசண வார்த்தைகளைப் பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களாக பெரும்பாலானவை அமைவது, இரு தரப்பினரிடையே உண்டாகும் நேரடியான அல்லது மறைமுகமான முரண் நடவடிக்கைகளாகவோ அல்லது தமக்கு கீழ் ஒருவரை வைத்து ஆதிக்கம் செலுத்தும், இழி நிலைப்படுத்தும் நோக்கமாகவும் காணப்படுகின்றன. கிராமப் புறங்கள் வரை நகர்ப்புறங்கள் வரை, இளையோர் முதல் முதியோர் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இச் சொற்பிரயோகங்கள் பயன் படுத்தப்பட்ட வண்ணமே உள்ளன.

சொல்லப்போனால் மரபுத்தொடர்களை விட தூசண வார்த்தைகள்தான் தனி மனித உள விடுபடுகைக்காக அதிகமாக சமூகங்களிடையே பிரயோகிக்கப் படுபவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக
‘ அவள்ட சந்தப்பூழலுக்கு எனக்குக் கதைக்க வந்திட்டாள்..’
‘ அவளா? சரியான ஆட்டக்காரி தட்டுவாணி…’
‘ அவனே வம்புல புறந்த புண்ட மகன்..’

போன்ற உரையாடல்களை நோக்கினால் இங்கு கூறப்பட்ட தூசண வார்த்தைகளுக்கான பொருள்கள் நேரடியாக அன்றி மறைமுகமாகவே கொள்ளப்படுகின்றன. ‘சந்தப்பூழல்;’ என்றால் செயலில் திடமில்லாத தன்மை என்றும்,’தட்டுவாணி, ஆட்டக்காரி’ என்றால் நன்னடத்தை இல்லாத பெண் என்றும் பொளுள் கொள்ளப்படும். இவைகளை விட இன்னும் ஏராளமான தூசண வார்த்தைகளுமுள. ஒருவரை பொல்லால் அடிப்பதை விட இவ்வாறான சொல்லால் அடிக்கும் போது தாக்கப்பட்டவர்அடைகின்ற பாதிப்பும், தாக்கியவர்அடைகின்ற திருப்தியும் சொல்லிலடங்காதவை. கூறப்படுகின்ற தூசண வார்த்தைகளை ஆழ நோக்கும் போது பெரும்பாலான வார்த்தைப் பிரயோகங்கள் பெண்பால் சார்ந்தவையாகவும், இலிங்க உறுப்புக்கள் சம்மந்தப்பட்ட ஆலிங்கனத்தைச் சுட்டுவதாகவும் அமைந்திருப்பதற்கான காரணத்தை சற்று விரிவாகவாகப் பார்க்க வேண்டடிய தேவையுண்டு.

சினஇழிவுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்ற தூசன வார்த்தைகள் என்பன ஏன் பெண்களையும், அவர்தம் உறுப்புக்களைச் சுட்டுவதாகவும் அமையப் பெற்றுள்ளன?, ஏன் ஒடுக்கச் செய்கின்ற சாதிகளைச் சுட்டுகின்றன? ஏன் பாலியல் சார் வினைகளை இழிவாகக் கருதி சுட்டப்படுகின்றன?, குறித்த ஒரு தூசண சொல்லைக் கூறினால் மகிழ்வுந்திருப்தியும் ஏன் வருகின்றது? என்;னுங் கேள்விகளையும் எழுப்ப வேண்டிய தேவையுண்டு. எந்த வொரு விடயமாக இருந்தாலும் பெண்களை அடிமை நோக்கில் பார்க்கப்பட்டு வந்த ஆண்வாரிச் சமூகத்தின் இழி செயலின் விளைவாகவே இன்றும் தூசண வார்த்தைகளானது பயன் படுத்தப்படுகின்றன. ஒரு நபர் இன்னொரு நபருக்கு அவரை பொதுவான தூசண வார்த்தைகளால் திட்டுவதை விட, குறித்த நபரின் பெண்ணுறவுகளை அடைமொழியாக்கிக் கொண்டு திட்டும் போது அவர் உச்ச கட்ட கோபத்தினை அடைந்து விடுகின்றார்.இதற்கு காரணம் என்ன? தூசணம் என்றால் எல்லாம் கெட்ட வார்த்தை தானே ஏனெனில் அக்குறித்த பெண்ணுறவுகளை அவர் தனது பொருளுடமையாகப் ( சக உயிரன்றி) பாக்கின்றார். தான் ஒரு ஆண் மகன் தன்னை பெண்மை நிலையில் சித்திரிப்பதற்காக அவர் அவமானப்படுகின்றார் இங்குதான் பெண் கொடுமைகளின் உச்சகட்ட செயல் வினை வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகின்றது.

பக்திப் போர்வை கொண்ட சமய இலக்கியங்களிலும் சரி,அரச தாழ்நக்கிப் புலவர்களின் பாடல் வன்மையிலும் சரி, தற்காலம் வருகின்ற சினிமாப் பாடல்களிலும் சரி, ஆபாசப் படங்களிலும் சரி பெண்களையும், அவர்களின் தனியங்கங்களையும் சுட்டுவதாகவும், அவற்றை விவரித்து பாடுவதாகவுமே தூசண வார்தைகளானது அமைகின்றமையானது இற்றைவரைக்கும் மரபிழந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக இராமாயணத்தின் ஒரு பகுதியில் இவ்வாறு வருகின்றது.
‘இயல்வுறு செயல்வி நாவாய் இரு கையும் எயினர் தூண்டத்
துயழ்வான துடுப்பு வீசித் துவலை கண் மகளிர் மென்றூ
கயல்வுறு பரவவ யல்குலொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்கயா உயிர்ப்பளித்ததம்மா!’

அதாவது ராமனை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர பரதன் தலைமையில் கூட்டம் கூட்டமாக மக்கள் போகின்றனர். எல்லோரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். கங்கையைப் படகில் கடக்கிறார்கள். அப்போது துடுப்புக்கள் தண்ணீரை வாரி அடிக்க பெண்களின் ஆடை நனைந்து அல்குல் ( பெண்ணுறுப்பு) தெரிந்ததாம். அதைப் பார்க்க துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம் பிறந்ததாம். என்கிறது இப்பாடல் வரிகள். அந்த சூழலில் இவ்வரிகளைக் கோர்த்த புலவனின் அல்லது உற்சாகம் கொண்ட ஆண்களின் உறவுப் பெண்கள் சென்றிருந்தாரல் என்ன செய்திருப்பார்கள்? சிந்திக்க: தெளிக. இது போலவே காலங்காலமாக தமிழ் சினிப்பாடல்களில் வருகின்ற பெண்கள் சார் உவமைகளையும் நான் சொல்லத்தேவையில்லை. ஆகவேதான் தூசண வார்த்தைகள் என்பது பெரும்பாலும் பெண்ணடிமைத்தனங்களின் உச்சகட்ட ஆரம்பங்களில் ஒன்று எனலாம். பெண்கனைச் சுட்டுவது போலவேதான் சாதியமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதுபவர்களையும் அவர் தம் சாதிப் பெயரை வைத்துத் திட்டுவதானதும் எமது சமூகங்களிலே காணப்படுகின்றன. ஒருவரை சாதி குறைந்தவர் என்று கருப்படுகின்றவர்களின் பெயரைச் சுட்டு வசை பேசினாலும் அதுவும் ஒரு கீழ்த்தனமான செயற்பாடாகவே கவனிக்கப்படத் தேiவில்லையா?
‘ போடா சக்கிலிய நாயே’
‘ போடா பறத்தமிழா’

போன்ற சாதி சார் வார்தைகளைக் கொண்டு ஒருவரை சொற் தீண்டல் செய்யும் போது ஏன் ஏசுபவருக்கும் சந்தோசமும், ஏசப்பட்டவருக்கு கோபமும் வருகின்றது? காரணம் நான் அவரை எனது வக்கிர எண்ணங்கள் கொண்ட வார்த்தைப் பிரயோகங்களால் திட்டி விட்டேன் என்னும் எண்ணத் திருப்தியும், இவ்வாறு நான் கெட்ட இழி வார்த்தைகளால் தாக்கப்பட்டு விட்டேன் எனுமெண்ணமுந்தான் அன்றி வேறில்லை.ஆனால் இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களின் முரண் நகை யாதெனில் வேறு பிரதேசத்தவர், மாற்று மொழியாளர், ஒரே பிரதேசத்தில் மாறுபட்ட வட்டார வழக்குகளை உடையோர்களிடையே குறித்தவொரு பிரதேச மொழிகளை உடையவர்கள் தமக்குரியதான சில தூசண வார்த்தைகளைப் பேசும் போது அது அவர்களுக்கு சாதாரண ஒலிக்குறிப்பாகவேதான் தோன்றும். உதாரணமாக மட்டக்களப்பில் ‘பணியாரம்’ என்றால் தூசண வார்த்தையாகக் கொள்ளப்படும் ஆனால் வடபுலத்தில் அது சாதாரண வார்த்தையாகக் கொள்ளப்படும். அது போல் வடபுலத்தில் ‘படுத்தல்’ என்றால் பாரதூரமான தூசண வார்த்தையாகக் கொள்ளப்படும் ஆனால் மட்டக்களப்பில் அது நித்திரைக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படும் சாதாரண வார்த்தையே. ஆக இத்தூசன வார்த்தைகள் சட்டென்று பொருளிழக்கின்றமை மொழியின் முரண் நகையே.

மரபுத்தொடரக்ளும் சரி தூசன வார்த்தைகளும் சரி பிரயோகிக்கப்படுகின்ற சமூகத்திலே அச் சமூகத்தின் துன்ப, துயரங்களுக்குரிய காரண காரியங்களாக, அவற்றின் அனுபவ வெளிப்பாடுகளாக, சாதாரண மெய்ப்பாட்டு உணர்வுகளுடன் தொடர்பு படுவனவாக என பலவாறும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணமுடிகின்றது. மனித உளத்தின் தேவைகளையும், அதன் விடுபடு நிலைகளையும் மற்றவரால் முழுமையாக உணர முடியாது என்ற காரணத்தினாலோ, தனது நிலைகளை உரைத்து விடுபடுவதற்கான நல்ல வார்த்தைகள் என்று சொல்லத்தக்க தகுந்த வார்த்;தைகள் தனது தாய் மொழியில் இல்லாத காரணத்தினாலோ இவ்வாறான சொற்பிரயோகங்கள் மறைமுகப் பொருளுடன் உரைக்கப் பட்டு, எதிர்த்தாக்கவன்மையை உடைய உள விடுபடு நிலைமையை இருபக்க நிலையில் உண்டு பண்ணுகின்ற அதேவேளை மிக மோசமான பெண்ணடிமைத்தனங்களையும், சாதிய ஒடுக்கு முறைகளுக்கு வலு சேர்ப்பவையாகவும் அமைகின்றமை காலத்தின் கவலையும,; கவனித்துக்கிளைய வேண்டிய தேவையுமே என்பதில் உறுதித் திடமுண்டு.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap