இலங்கை பிரதான செய்திகள்

இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது.  இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும்  தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை எழுந்திருப்பதுடன், இதை குறுகியகால, இடைக்கால, நீண்டகால கண்ணோட்டங்களுடன் செயற்படுத்த வேண்டியுமிருக்கிறது.

மரத்தினாலான கோடரிப்பிடியை கையகப்படுத்தியே மரங்கள் வெட்டப்படுகின்றன. அதேபோலவே இந்த எதிரி வைரசும் எம் கலங்களுக்குள்  புகுந்து எமது சொந்தக் கலங்களையே தம்வசப்படுத்தி எம் உடலினுள் பெருக்கெடுத்து எம்மை அழிக்கத் துணிந்து நிற்கிறது.  இதுவே பொதுவாக காலம் காலமாக எதிரிகளின் தந்திரோபாயமாகவும் இருந்து வருகிறது.

எனவே நாம் பிறகாரணிகளாலும் சூழ்நிலைகளாலும் நோய்க்கிருமிகளாலும் கையகப்படுத்தப்பட்டு  தாக்கங்களையும் அழிவுகளையும் சந்திக்காமல் தடுப்பதற்கு எம்மைத் தயார்படுத்தும் திட்டங்களில்  ஒன்றுபடவேண்டிய அவசியம்  உணரப்படுகிறது.  ஒன்றுபட்டு நாம் தனிமனிதர்களாகவும் சமூகமாகவும்  தேசமாகவும் பல கடமைகளை அமைதியாகவும் ஆர்ப்பரிப்பு இல்லாமலும் நிறைவேற்றவேண்டிய தேவையிருக்கிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது நாம் சமூகத்திலே தனித்தனி மனிதர்களாக பிரிந்து இயங்குவது என்று அர்த்தப்படாது. உண்மையிலேயே நாம் ஒற்றுமையான சமூகமாக தேசமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தற்பொழுது எழுந்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடிகள், தனிமைப்பட்டுப் போனது போல உணரும் மனத்தாக்கங்கள், கொரோனா தாக்கங்கள், கொரோனாவை பூச்சாண்டியாக காட்டி நிகழும் அராஜகங்கள், அடிக்கடி  வந்து போகும் புலம்பெயர் உறவுகளின்  தம் சொந்தங்களிடம்  வந்து போக முடியாத நிலை, அதன் ஏக்கங்கள்,  பொது நிகழ்வுகளில் கூடச் சந்தித்து  மனம் ஆறமுடியாத உள நெருக்கீடுகள்,  உதவிக்கு யாருமற்ற முதியோர்… எனப் பல்வேறுபட்ட சவால்களை திடீரென எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே அயலவர்களினதும் ஊரவர்களினதும் ஒன்றிணைவும் ஒருங்கிணைந்த  செயற்பாடுகளும்  மேம்படுத்தப்படவேண்டிய தேவை உணரப்படுகிறது.

வேலையிழப்பு, வருவாய் குறைதல், புலம்பெயர் தேசங்களிலிருந்து தத்தம் குடும்பங்களுக்கு கிடைத்துவரும் வருவாய் குறைவு, அதிகரித்த செலவினங்கள் போன்றவற்றால் எமக்கு ஏற்பட்டிருக்கும், ஏற்படப்போகும் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கு தனிநபர்களாகவும் குடும்பமாகவும் சமூகமாகவும், தமிழ்த் தேசமாகவும் நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியிருக்கிறது. இதற்குப் பல துறைசார் வல்லுநர்கள் பங்களிப்பும் ஆலோசனைகளும் வழங்க ஆயத்தமாக இருக்கிறார்கள்.

குடிவகை பாவனை, புகைத்தல் போன்றவற்றிற்கான  செலவீனங்களை நிறுத்துதல், ஆடம்பர செலவீனங்களைக் குறைத்தல், உள்ளூர் உற்பத்தி முயற்சிகளை  ஊக்கப்படுத்துதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல்,   தற்சார்புப் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் கட்டியெழுப்புதல், உள்ளூரிலிருந்தோ புலம்பெயர் தேசங்களிலிருந்தோ  கிடைக்கும் வருவாய்களை திட்டமிட்டு செலவு செய்தல், பிறரின் நல்ல முன் முயற்சிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்துதல், அயலவர்கள், ஊரவர்களின் முயற்சிகளை சரியான திசையில் நெறிப்படுத்துதல் போன்ற சில ஆரம்ப முயற்சிகள் பயனுடையதாக அமையும்.

எமது கல்வி நிலையை தக்கவைத்து மேம்படுத்துவதற்கு கற்பித்தல், கற்றல் பொறிமுறைகளை சூழ்நிலைகளுக்கேற்றவாறு மாற்றியமைக்கும் முயற்சிகள் பல ஆரம்பிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மெருகேற்றப்படுவதுடன் அனைத்து மட்ட மக்களையும் சென்றடையும் வழிவகைகளையும் செயற்படுத்த வேண்டும்.

நாம் பின்னடைந்துவிட்டோம், தளர்ந்து விட்டோம், சூழ்நிலைகள் சரியில்லை எனக் கருதி எமது அரசியல் அபிலாசைகளைக் கைவிடுவது அர்த்தமற்றதும் ஆபத்தானதுமாகும். இந்தச் சின்னஞ்சிறு கொரோனா வைரஸ் எமக்கு ஒரு பாடத்தைக் கற்பித்து நிற்கிறது. ஒரு சொந்தமான கட்டமைப்போ, கலமோ இல்லாத இந்த வைரஸ் பல கண்டங்கள் தாண்டி பலரைத் தன் கையகப்படுத்தி, சுய விளம்பரமோ, சுய அறிமுகமோ இல்லாமல் செயலில் இறங்கி  ஒரு குறுகிய காலத்திலே  உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. தூய்மை இல்லாது, கூட்டம் சேருவதை மனித குலத்தின் பெரும் பலவீனம் என்பதை துல்லியமாக அறிந்து திட்டமிட்டு அதனூடாக தனது பரம்பலை விஸ்தரித்து வருகிறது.

தொற்றுநோய்களைத் திட்டமிட்டு வெற்றி கொண்டு விட்டோம்.  இனி எமது இலக்கு தொற்றாத நோய்கள் என்று கொக்கரித்த உலகின் உச்சந்தலையிலே இந்தச் சின்னஞ்சிறு வைரஸ்  ஓங்கி அறைந்திருக்கிறது. இந்த நுண்ணிய வைரஸின் அசுர வல்லமையில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.

அன்று தொட்டு இருந்து வரும் எமது கலாசார விழுமியங்கள் இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த எமக்கு உறுதுணையாக அமையும்.  வெளியே சென்று கை, கால் அலம்பி, கழுவி வீட்டினுள் செல்லுதல், மரணவீடு, வைத்தியசாலைகள் அல்லது சனக்கூட்டமான இடங்களுக்கு சென்றால் குளித்து விட்டு வீட்டினுள் செல்லுதல், மற்றவர்களை வணக்கம் சொல்லி வரவேற்றல், வீட்டில் சமைத்த உணவை உண்ணுதல், எமது பாரம்பரிய உணவு வகைகளை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தல் போன்ற சாதாரண நடவடிக்கைகள் எம்மைக் காக்க உறுதுணையாக அமையும்.

அத்துடன் நீண்டகாலமாக பல இக்கட்டான சூழ்நிலைகளினூடாக பயணித்த அனுபவம் இந்த அசாதாரண சூழ்நிலையை வெற்றிகொள்ள எமக்குக் கைகொடுக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் முகம் தெரிந்த, முகம் தெரியாத பல தனி நபர்களும் குழுக்களும் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தேர்தல்அரசியல் கடந்த ஒற்றுமை இன்னும் வலுப்பெறவேண்டியது இன்றைய தேவையாகி நிற்கிறது. இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்ள, வெற்றிகொள்ள உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தமிழ் மக்கள் பேரவை எதிர்பார்த்து நிற்கிறது. உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் [email protected] என்ற எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி பங்களிக்கவும். #வெற்றி  #தமிழ்மக்கள்பேரவை  #கொவிட்19  #சுகாதார

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap