Home இலங்கை பூகோளமயமாக்கப்பட்டுவரும் உலகில், சமூகங்களின் பேண்தகு தன்மையிலும், பன்மைத்தன்மைப் பேணலிலும் முதன்மொழியால் வடிவமைக்கப்பட்ட ஆய்வுப் பொறிமுறைகளின் தேவைகளும், சவால்களும்.

பூகோளமயமாக்கப்பட்டுவரும் உலகில், சமூகங்களின் பேண்தகு தன்மையிலும், பன்மைத்தன்மைப் பேணலிலும் முதன்மொழியால் வடிவமைக்கப்பட்ட ஆய்வுப் பொறிமுறைகளின் தேவைகளும், சவால்களும்.

by admin

(கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பண்பாட்டுப் பீடத்தின் 2001ம் ஆண்டு பீட ஆய்வு மாநாட்டின்போது வாசிக்கப்பட்ட கட்டுரையின் சாராம்சம், காலப் பொருத்தம் கருதி உரையாடலுக்காக முன்வைக்கப்படுகின்றது.)

பிரதான போக்கு முறையியலும் (main stream) ஆய்வுமுறைகளும் ஐரோப்பிய, அமெரிக்க மையப்பட்டதும் ஆங்கில மொழியால் தீர்மானிக்கப்பட்டதுமாக இருப்பதன் காரணமாக அவற்றுக்கு மாற்றான முறையியல்களும் (system), ஆய்வு முறைகளும் (methodology) தேவைப்படுகின்றன. ஏனெனில் உலகம் முழுவதுமுள்ள பிரச்சினைகள் ஓரே மாதிரியானவையும், ஒரே தரத்திலானவையும் அல்ல. அவை வித்தியாசமானவை. அந்த வித்தியாசங்களைக் கருத்தில் கொண்டு அவற்றை ஆய்வு செய்வதற்கான முறையியல்கள் வடிவமைக்கப்பட வேண்டும். பிரதான போக்கு ஆய்வு முறைமைகளில் இருந்து மாற்றானதும், சமாந்தரமானதுமானதுமான ஆய்வு முறைமைகளையும், முறையியலையும் பெண்ணிலைவாதிகள், பழங்குடி மக்கள் போன்றவர்கள் தங்களுக்கான முறையியல்களை முன்வைத்து இயங்கி வருவது இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும். இந்த வகையிலேயே வித்தியாசமான சூழலையுடைய ஒரு சமூகம் தனக்குரிய பிரச்சினைகளின் தீர்வுகளை தேட முற்படும்போது அதற்கேயான வழிமுறைகள் தேவைப்படுகின்றன. குறித்த சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட முறைமைகளும், அனுபவங்களும் வேறு சமூகங்களில் காணப்பட்டாலும் அவற்றை உள்வாங்கி குறித்த சூழலுக்குரிய பிரச்சினைகளிற்கான தீர்வு காணும் முறைமைகளைத் தீர்மானிப்பது, குறித்த அந்த சமூகங்களிற்குரிய பொறுப்பாக கருதப்படுகின்றது.

ஆய்வு முறைமைகளும் முறையியலும் சர்வதேசத் தராதரமுடையவை என்ற கருத்துருவாக்கங்கள் எந்தளவிற்குப் பொருத்தமானவை? சர்வதேசத் தராதரம் என்ற கருத்துருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள அரசியல் யாது?

இது தனித்த உரையாடலுக்குரியது.

ஆய்வினுடைய மொழி:

பண்பாட்டுப் பன்மைவாதம் பற்றி நாங்கள் இன்றைக்கு அதிகம் பேசுகின்றோம். எமக்கு ஈர்ப்பான, உவப்பான ஒரு சிந்தனை நோக்காகவும், போக்காகவும் அது அமைந்துள்ளது. எமது பிரச்சினைகள் பலவற்றைத் தீர்வுகள் சார்ந்து சிந்திப்பதற்குப் பொருத்தமான ஊடகமாகவும், பண்பாட்டுப் பன்மைவாதம் அமைகின்றது. கலைகள், மொழிகள், உடைகள், வாழ்க்கை முறைகள் என்பவற்றில் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட பல்தன்மை அருகி, இன்றைக்கு ஒரே தன்மையாக்கற் செயற்பாட்டினால், இன்று சில தன்மைகள் என்னும் நிலையில் நாம் வாழ்கிறோம். நாளைக்கு ஒரே தன்மை நிலைக்குச் செல்வதைத் தவிர்த்து, பண்பாட்டுப் பல்தன்மையினை மீட்டுக்கொள்வதற்கு இச் சிந்தனைப் போக்கு உதவுகின்றது.

ஒரே தன்மையாக்கல் என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. அதன் பின்னணியில் பல்தேசிய நிறுவனங்களின் மேலாதிக்கம் தலைதூக்கி நிற்பதனால் ஒரே தன்மையாக்கற் செயற்பாடு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. வரலாற்றுரீதியாக நடைபெற்றுவரும் ஒரேதன்மையாக்கற் செயற்பாட்டிற்கு சமஸ்கிருதமயமாதல், மேற்கு ஐரோப்பியமயமாக்கல், உலகமயமாக்கல் என்னும் அமெரிக்கமயமாக்கல் என்கின்ற காலனித்துவ, நவகாலனித்துவம் போன்றவை பிரபலமான உதாரணங்களாகும். இத்தகைய ஒரே தன்மையாக்கற் செயற்பாட்டிலிருந்து எம்மை மீட்டுக்கொண்டு, பல்தன்மையைப் பேணுவது என்பது பலதளங்களில், பல மட்டங்களில் செயல்வாதத்தினை வேண்டிநிற்கும் ஒன்றாகும். இச் செயற்பாடு ஒரு அரசியலும்கூட.

இத்தகைய பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனும் வகையில், எமது செயற்பாடுகள் பண்பாட்டுப் பல்தன்மைவாதம் தொடர்பில் எத்தகையதாக அமைகிறது என்று சிந்திக்கிறோம். பல்கலைக்கழகங்களில் செயற்பாடுகளாக கற்றல், கற்பித்தல், ஆய்வு, கலந்துரையாடல்கள் என்பவை அமைகின்றன. ஒரு சிறந்த புலமையாளர் என ஒருவரைக் கூறிக் கொள்வதற்கும், கணிப்பிடுவதற்கும் சில வகைமைகளும், தகைமைகளும் பொதுவாகப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படுகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தினைச் சிறந்ததாக நிரற்படுத்துவதற்கு தரப்படுத்தல் என்ற சில தகைமைகள் பின்பற்றப்படுகின்றன. இத் தகைமைகள் தொடர்பாகவும், நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அவற்றுள் மிக முக்கியமாகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படும் கருத்து யாதெனில், பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதாகும். சர்வதேச தரம் என்பது கட்டாயமாக ஆங்கிலத்துடன் சம்பந்தப்படுகின்றது. ஆய்வுகள், கற்பித்தல் முறைகள், வெளியீடுகள், பதிப்புக்கள், ஆய்வரங்குகள் எல்லாமே ஆங்கிலத்தில் அமைய வேண்டும், அவை கோரி நிற்கும் ஆய்வுமுறைகளுக்கு அமையவே அதுவும் ஆங்கிலத்திலும் அமையவேண்டும் என்பதாகும். இக் கருத்தையும், இந்த நடைமுறையையும் பல்தன்மை பண்பாட்டுச் சிந்தனையுடன் எவ்வாறு இணைக்கலாம்? அவை இணையுமா? யார் இணைப்பது?  என்பது ஆழமானதும், அவசியமானதுமான உரையாடல்களுக்குரியன.

தவிர ஆய்வு என்பது சமூக விஞ்ஞானங்களின் விளக்கங்களுக்கு இணங்க, குறிப்பிட்ட சமூகத்தின் தேவையாகும். மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஆய்வினைச் செய்கிறோம். ஆனால் ஆய்வின் முடிவுகள், விளக்கங்கள், வியாக்கியானிப்புகள் மக்களைச் சென்றடைய வழிவகைகள் செய்கிறோமா? இக் கேள்விக்கான பதில் “ஆய்வின் முறையியலும், ஆய்வின்மொழியும்” எனும் விடயங்களிற்கு எம்மை இட்டுச் செல்கின்றன.

ஆய்வு என்பது ஒரு சமூகத்தின் தேவையாகும். ஆய்வுச் செயற்பாடு ஆய்வாளருக்கும் ஆய்விற்கு உட்படுபவருக்குமிடையேயான பரஸ்பர தொடர்பினால் வெற்றியாக்கப்படுகின்றது. ஆய்வின் வெற்றி என்பது ஆய்வுப் பொதுத் தளத்தில் விவாதத்திற்கு விடப்படும்போது தீர்மானிக்கப்படும். பொதுத்தளம் என்பதை நாங்கள் புலமையாளர் உலகம் என மட்டும் வரையறுக்கின்றோம். புலமையாளர் உலகம் இன்றைய சூழ்நிலையில் நிலவுகின்ற கட்டமைப்பில் ஒரு உச்சாணிக் கோபுரமாக கருதப்படுகின்றது. இந்த உச்சாணிக் கோபுர ஐதிகத்தினைக் கட்டிக் காப்பதில் ஆங்கில மொழிப் புலமை பாரிய பணியைச் செய்கின்றது. உச்சாணிக் கொம்பில் ஏற விரும்புபவர்கள் ஆங்கிலமொழி எனும் கயிற்றை இறுகப் பிடித்து ஏறவேண்டி இருக்கின்றது.

அறிவுசார் விடயங்களை தங்கக் கோபுரத்தில் நடாத்தப்படுபவனவாக்கிவிட பொதுத்தளம் தனியே தங்கக் கோபுரத்தின் மூடிமறைக்கப்பட்ட அடித்தளமாகிவிடுகின்றது. தங்கக் கோபுரமும் ஆங்கிலத்தவர்கள் கோபுரமாயுள்ளது. ஆய்வு சமூகத்திற்காக எனும் கருத்து அடிபட்டுப் போய்விடுகின்றது. உதாரணமாக எமது வெகுசனப் பண்பாட்டிற்கும், ஆய்வறிவுப் பண்பாட்டிற்குமான பாரிய இடைவெளியைக் குறிப்பிடலாம். வெகுசனத்தின்  அனுபவங்கள், மொழியாக்கப்பட்டு, ஆய்வறிவுக் கோபுரத்தில் ஆங்கிலத்தில் அறிக்கை செய்யப்பட, ஆய்விற்கான தகவலை வழங்கியவர்கள், “பாமரராய்த்” தொடர்ந்து இருக்க வேண்டியுள்ளது. “பாமர” அறிவு முறைமைகள் ஆய்வறிவாளர் தனதெனக்கூறி, தனது வெளியீடுகளிற்கான பட்டியலை நீட்டிக்கொண்டு போகமுடிகின்றது.

மொழி என்பது வாழ்தலின் பிரதான பகுதி. வாழ்தலில், வாழும் உலகு பற்றியதான எமது அறிவை மொழியினூடாகக் கட்டியமைக்கின்றோம். வாழ்வனுபவத்தின் மொழி ஒன்றாகவும், அறிவை வளர்க்கும் மொழி இன்னொன்றாகவும் இருத்தல் என்பது குழப்ப நிலைமைகளை உண்டாக்கும். அதேவேளை வாழ்வனுபவத்திற்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். அறிவும் வாழ்தலும் வேறென்ற குழப்ப நிலையை உண்டு பண்ணும்.

வாழ்தல் அனுபவத்தை ஆங்கிலம் கற்ற ஆய்வாளர் வியாக்கியானிக்க தனது புலமையாளர் எனும் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள சமூக அங்கத்தவர்களிற்கு கொடுக்கும்நிலை அதிகார அசமத்துவத்தை எடுத்துக் காட்டும்;.

ஆங்கிலத்தில் உருவாகும் ஆய்வு ஆவணம், அறிவைத் தொடர்ந்து படிமுறையமைப்பின் உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்களை பொத்திவைத்து அதிகாரம் பண்ணுவதற்கு வாய்ப்பளிக்கும்.

உலகவாழ்பனுபவத்தில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள், சமூகப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றவைகளின் பல்தன்மையை ஆங்கிலம் என்னும் “ஒரு மொழிக்குள் அடக்குதல்” பல்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும். அறிவின் பரிமாற்றத்தை நேர்கோட்டுப் பாதையில் அமைக்கும்.

இந்தப் பூகோளத்தில் பல உலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு பல்வேறு மொழிகள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு சமூகப் பொருளாதார பண்பாட்டு நடைமுறைகள் இருந்து வருகின்றன. இவற்றின் பிரச்சினைகள், சவால்கள,; கேள்விகள் வித்தியாசங்கள் நிறைந்தவை. பல்வகைமையானவை. இவைகளில் பல்வகைப்பட்ட அறிவு முறைமைகளும் இயங்கிவருகின்றன. எனவே அவற்றை அவற்றின் தனித்துவமான பின்னணியில் விளங்கிக் கொள்வதும் ஆராய்வதும், தீர்வுகளை அடையாளம் காண்பதும், பொருத்தமானதும் அறிவுபூர்வமானதுமாகும்.

தீர்வுகள்:

1)             ஆய்வுகள் முதல் மொழியில் நடாத்தப்படுவதை ஊக்குவித்தல்

2)             முதல் மொழியிலான ஆய்வுகளிற்கு ஊக்குவிப்பு வழங்கல்

3)             மொழிபெயர்ப்புகளை ஊக்குவித்தல்

4)             கலந்துரையாடல்களை முதல் மொழியில் ஊக்குவித்தல்

5)             கற்பித்தல் மொழியை முதல் மொழியாய்த் தொடர்ந்து வைத்திருத்தல்

6)             முதல் மொழியை முக்கியத்துவப்படுத்தி வளர்த்தெடுத்தல்

7)             முதல் மொழியிலான ஆய்வறிவுச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ஊடகங்களில் கலந்துரையாடல்களை உருவாக்குதல்

8)             ஆங்கில மொழி மூலமாகத்தான் அறிவு வளரும் எனும் காலனியம் கட்டமைத்த ஐதீகத்தை உடைத்தெறிதல்

சி. ஜெயசங்கர் (நுண்கலைத்துறை), .மு. றியாஸ் அகமட் (விலங்கியற்துறை), . வாகீசர் (இரசாயனவியற்துறை), கமலினி கணேசன் (சமூகவிஞ்ஞானத்துறை),

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More