இலங்கை பிரதான செய்திகள்

கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்

கொரோனா வைரஸ் இயற்கையில் இருந்து வேறானதொன்றல்ல. அதுவும் இயற்கையில் ஓர் படைப்பே. அதன் மூலம் இன்று இயற்கை ஊதியிருக்கும் அபாயச்சங்கு மனுக்குலத்துக்கான ஒர் எச்சரிக்கை. இதனைப் புரிந்துகொண்டவர்களாகக் கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போமாயின் ஏனைய உயிர்களைப் போன்று இப்புவியில் மனிதன் நோய் நொடியின்றி நீடூழிவாழலாம் – என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் – 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் –

மனித உயிர்களைக் கொத்துக் கொத்தாக பலியெடுத்துக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் இதன் மூத்த முடிசூடிகளான சார்ஸ், மேர்ஸ் வைரசுக்களைப் போன்றே காட்டு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தாவிய விலங்கு வைரஸ் ஆகும். புதிய கொரோனா வைரசின் கருப்பொருளை ஆராய்ந்ததில் இவற்றின் உறைவிடம் சீனாவின் குதிரைலாட வெளவால்களும் சீனச்சந்தைகளில் விற்பனையாகும் மலாயன் அழுங்குகளும் என்பது தெரியவந்துள்ளது. இவற்றை உறைவிடமாக அல்லது இடைவிருந்து வழங்கிகளாகக் கொண்டிருந்த சார்ஸ் வகைக் கொரோனாக்களே மனிதர்களில் தாவிப் பெருகும்போது விகாரமுற்று கொரோனா – 19 என்ற இரண்டாவது அவதாரமெடுத்து உலகை வலம்வரத் தொடங்கியுள்ளது.

காட்டுவிலங்குகள் மனிதனுக்கு இதுவரையில் அறிமுகம் இல்லாத எண்ணற்ற வைரசுக்களின் உறைவிடங்களாக உள்ளன. மனிதர்கள் இவற்றைக் கையாளுகின்றபோது, மனிதர்களுக்குத் தாவிவிடுகின்ற இவை, அதுவரை பரிச்சயமில்லாத வைரஸ் என்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியைக் கொண்டிராத நிலையில் அங்கு பல்கிப்பெருகத் தொடங்குகின்றன. பின்னர், அங்கிருந்து காட்டுத்தீ போல எளிதில் மனிதர்களுக்கு மனிதர் பரவ ஆரம்பித்துவிடுகின்றது.

சார்ஸ், மேர்ஸ் நோய்கள் காட்டுவிலங்குகளில் உறையும் வைரசுக்களினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அபாய அறிவிப்புகளாக இருந்தபோதும் மனிதர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. உணவுக்காகவும், மருத்துவத்துக்காகவும், செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கெனவும் தினமும் காடுகளில் இருந்து விலங்குகள் கடத்தப்படுவது தொடர் கதையாகவே நீடிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்று வன விலங்குகள் கடத்தலும் சர்வதேச வலைப்பின்னலோடு பெருமெடுப்பில் இடம்பெற்றுவருகிறது.

காட்டு விலங்குகளின் கடத்தலினால் உலகின் உயிர்ப்பல்வகைமை கேள்விக்குறியாகி வருகிறது கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சம் அழுங்குகள் அவற்றின் செதில்களைப் பெறும் பொருட்டுக் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக உலக கானுயிர் நிதியம் தெரிவித்திருக்கிறது. உலகில் எல்லா உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபட்டு உயிர்வலைப்பின்னலாகவே இயங்குகின்றன. இவற்றில் ஓரிழை அறுந்தாலும் உயிரினச் சமநிலை பாதிக்கப்பட்டுக் கடைசியில் மனிதர்களும் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

காட்டுவிலங்குகளில் மாத்திரம் அல்ல, இதுவரை மனிதர்களுக்குப் பரிச்சயம் இல்லாத, மனிதர்கள் பூமியில் நடமாடுவதற்கு முன்பாகவே தோன்றிய ஏராளமான வைரசுக்கள் துருவப் பனிப்பாறைகளின் கீழ் உறங்குநிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். மனிதர்கள் அளவுக்கு அதிகமாக வெளியேற்றுகின்ற கரிக்காற்று பூமியைச் சூடுபடுத்துவதால் பனிப்பாறைகள் உருகி வழிய ஆரம்பித்திருக்கின்றன. இதன்போது பனிப்பாறைகளில் சிக்குண்டு இருக்கும் வைரசுக்களும் வெளியேற நேர்ந்தால் எதிர்காலத்தில் இவற்றுக்கும் சேர்த்தே மனிதர்கள்; முகங்கொடுக்க நேரிடும்.

கொரோனா வைரஸ் இயற்கையில் இருந்து வேறானதொன்றல்ல. அதுவும் இயற்கையில் ஓர் படைப்பே. அதன் மூலம் இன்று இயற்கை ஊதியிருக்கும் அபாயச்சங்கு மனுக்குலத்துக்கான ஒரு எச்சரிக்கை. இதனைப் புரிந்துகொண்டவர்களாகக் கொரோனாவுக்குப் பின்னரான உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போமாயின் ஏனைய உயிர்களைப் போன்று இப்புவியில் மனிதன் நோய் நொடியின்றி நீடூழிவாழலாம். இல்லை, இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்குமெனின் இயற்கை இன்னும் இன்னும் வலிய கொரோனாக்கள் மூலம் எங்களுக்கான எச்சரிக்கையை விடுத்துக்கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். – என்று குறிப்பிடப்பட்டுள்ளது. #கொரோனா #இயற்கை #சுற்றுச்சூழல்தினம்  #ஐங்கரநேசன்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap