இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா..


நிலவை காட்டி சோறு ஊட்டுதல் கதை சொல்லி தூங்க வைத்தல் இவை நமது பண்பாடுஉட்பட எல்லாவகையான பண்பாட்டுகளிலும் மறுதலிகப்படாத, மறுதலிக்கமுடியாத வாழ்வியல் பிணைப்புகளாக இருந்துவருகின்ற விடயங்கள் தாம்!. பெற்றோர்கள் கதைச்சொல்லிகளாக நின்றுக் கொண்டு கதைச்சொல்லல் என்பது நமது பண்பாட்டில் மருவி போன விடயம். எனினும், கதைச் சொல்லிகளாக நமது பண்பாட்டில் காலாதிகாலமாகக் கொண்டாடப்படுபவர்கள், கொண்டாட்டத்திற்குரியவர்கள் நிச்சயமாக நமது தாத்தாவும், பாட்டியாகவுமே இருக்கமுடியும்.

பெரும்பாலும், சிறுவர் கதைகள், கற்பனையின் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவங்களாக, இருக்கின்ற பட்சத்தில், அறிவு, ஒழுக்கம் இவற்றின் பாற்பட்டு சிறுவர்களுக்கு கதைச் சொல்லல் என்பதாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த கதைகள், தேவதை கதைகள், புராண இதிகாச மற்றும் ஜதீகக்கதைகள், வீரதீரக்கதைகள், விலங்குகள், பறவைகளின் கதைகள், வரலாற்றுக்கதைகள், அமானுஷ்ய கதைகள், துப்பறியும் கதைகள் என்பனவாக அமைந்து விடுகின்றன.

சிறுவர்களின் உள முதிர்ச்சியிலும், உள பாதுகாப்பிலும் இத்தகைய கதைகள் பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றன. ‘ எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே’ என்ற புலமைபித்தனின் வரிகளுக்கமைய, இத்தகைய வளர்ப்பில் கதைகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

குறிப்பாக, கதைகள் அவர்களை அறியாமலேயே, சமுகம் சார்ந்து, பண்பாட்டுக் கட்டமைப்பு சார்ந்து, தமது குலம், மதம், இனம் பால் சார்ந்து சிந்தனைகளை கட்டமைத்து விடுகின்றன. ஆக, இத்தகைய சிந்தனை கட்;டமைப்பு என்பது, சிறுபராயம் முதலே, சொல்லப்பட்டு வருகின்ற கதைகளின் வழி, மிக நுணுக்கமாக , அவர்களை கட்டமைத்து வடிவமைத்து விடுகின்றன. இந்த கட்டமைப்பு தான், பின்னாளில் அவர்களின் சமுகம் சார்ந்து, சமுகக் கட்டமைப்பு சார்ந்து பார்வை கோணங்களைத் தீர்மானித்து விடவும் வழிவகை செய்கின்றன.

குறிப்பாக, இராமாயணம், மகாபாரதக் கதைகள் ‘சிறுவர்களுக்கான இராமாயணம்’, ‘ சிறுவர்களுக்கான மகாபாரதம்’ என்பதாக நமது பண்பாட்டில் கதைகளாகச் சொல்லப்பட்டு வருகின்றன. நமது பண்பாட்டை பொறுத்தவரை, மதம், கடவுள் இவற்றை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில், அற்புதங்களாகவும், வீரதீரச் செயல்களாகவும் கடவுள் முதல் கொண்டு நாயன்மார்கள் வரை, காலாதிகாலமாக சிறுபராயம் முதல் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன.

அப்படி சொல்லப்பட்டு வரும் கதைகளின் உட்கருத்துக்கள் என்னவாக இருக்கிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ண லீலைகள், விநாயகர் தோற்றம் என இன்னப்பிற, கதைகளாகச் சொல்லப்படுகின்றன. இவற்றின் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது?

எடுத்துக்காட்டாக விநாயகர் தோற்றம் பற்றி சொல்லப்படும் கதைகளில் ‘ திருகைலாய மலையில், பார்வதி தனிமையை உணர்ந்த போது, அவர் சந்தனத்தைக் கொண்டு ஒரு உருவத்தை உருவாக்கி, அதற்கு கணேசர் என பெயர் வைத்ததாகவும், அவரையே வாயிலில் காவலுக்கு வைத்துவிட்டு பார்வதி குளிப்பதற்காக, சென்றதாகவும், அப்போது அங்கே வந்த சிவனை கணேசர், உள்ளே செல்லவிடாது தடுக்க, கோபம் கொண்ட சிவன், கணேசரின் தலையை சீவியதாகவும், சத்தம் கேட்டு வெளியில் வந்த பார்வதி கணேசரின் நிலையை கண்டு, பூமியையே அழிக்கப் போவதாக சூளுரைத்ததாகவும், பின்னர், சிவன் காட்டிற்கு சென்று முதன்முதலில், தென்படும் மிருகத்தின் தலையை எடுத்து வாருங்களென கிங்கர்களைப் பணிக்கவும், அவர்கள் யானையின் தலையை கொண்டுவந்து கொடுக்க, பிறகு கணேசரின் தலை இருந்த இடத்தில், யானையின் தலையை வைத்து உயிர்பித்ததாகச் சொல்லப்படுகின்றது.’

கடவுள் கோட்பாடு பற்றிச் சொல்லும் போது, உயிர்களின் மீது கருனை உடையவராக இருத்தல் அல்லது ஜீவ காருண்யம் என்பது, சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கு அந்த ஜீவ காருண்யம் என்னவாக இருக்கிறது. அத்தகைய ஜீவகாருண்யம் பாழ்பட்டு போனதையல்லவா குறித்த கதை வலியுறுத்தி நிற்கிறது.

கிருஷ்ண லீலைகள் என்று சொல்லப்படுகின்ற கதைகள், திருட்டுக்களாகவும், பெண்களை சீண்டுவதாகவுமே அமைகின்றன. ஆயினும், மறுபுறம் களவு பஞ்சமாபாதங்களில் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது. இத்தகைய முன்னுக்குபின் முரணான கதைகள் எத்தகைய சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகை செய்கின்றன.

கைகேயின் மனநிலை, மந்தரை என்கின்ற கூனியின் குணாதிசயம், மறுநாள் பட்டம் சூடவிருக்கின்ற தன் புதல்வன் ராமனைக் காட்டுக்குப் போகச் சொல்லுகின்ற தசரதனின் மனநிலை, ராவணனைக் கொன்று சீதையை மீட்டு, நாடு திரும்பி ராமன் பட்டாபிஷேகம் செய்துக் கொண்ட பிறகு, சலவைத் தொழிலாளி ஒருவன் சந்தேகப்பட்டான் என்பதற்காக, மீண்டும் காட்டுக்கு அனுப்பட்ட சீதையின் கையறுநிலை இவற்றை சிறுவர்களான லவனும் குசனும் பாடி நடித்தனர் என்று சொல்லப்படுகின்ற கதை, ஊரறிய தன் மகன் கர்ணன் என்று சொல்ல முடியாத குந்தி, கணவன் பார்வையற்றவர் என்பதால் தன் கண்களையே கட்டிக் கொண்டு உலகையே பார்ப்பதைத் துறந்த காந்தாரி, அம்பை, பாஞ்சாலி, அரவாணின் தாய் உலூபி, கடோத்கஜனின் தாய் இடும்பி, பாரத போர் என சொல்லப்படும் கதை. இவ்வாறு இந்த பாத்திரங்களுக்கூடாக கட்டமைக்கப்பட்டுள்ள, கதைகளை, அவை சார்ந்த பின்னணிகளை, பாத்திரங்களுக்கு ஏற்படும் இன்னல்களை சிறுவர்களின் மனவுலகம் எவ்வாறு புரிந்துக் கொள்ளும், அல்லது ஏற்றுக் கொள்ளும் என்பது கேள்விக் குறியே.

அவ்வாறே, வாய்மைக்கு சான்றாக சொல்லப்படுகின்ற அரிசந்திரன் கதையில், தன் மனைவியையும், குழந்தையையும் விற்கின்ற கதை, மனிதர்களை விற்பனை பொருட்களாக பார்க்கப்படுவதையல்லவா வெளிப்படுத்தி நிற்கின்றது.

உணவு உண்ணாமல் அடம்பிடிக்கும் குழந்தைகள், தூங்காமல் அடம்பிடிக்கும் குழந்தைகள் இவர்களுக்கு சொல்லப்படுகின்ற அமானுஷ்ய கதைகள் அவர்களின் உள விருத்தியில் எவ்வகையான பங்களிப்பை செய்ய போகின்றது. இயல்பாகவே, பயம் என்ற எதிர்மறை இயல்பின் வலுவான பிரயோக நிலைக்கும், வெளிப்பாட்டிற்குமான உருவாக்கத்திற்கே வழிவகை செய்கின்றன எனத் தெளிய வேண்டிக்கிடக்கிறது.

குழந்தை விருத்தி, சிறுவர் உள நல விருத்தியில் முக்கிய பங்கினை வகிக்கின்ற இத்தகைய கதைகள், அவர்களின் மனவுலகு சார்ந்து மறு கட்டமைக்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசியத்தையும் வலியுத்தி நிற்கின்றன.

குறிப்பாக, ‘ பாட்டி வடை சுட்ட கதை’ எவ்வாறு காகம் விறகு குச்சிகளைக் கொண்டு சென்று கொடுத்துவிட்;டு, பாட்டியிடம், வடை பெற்று, தன் குஞ்சிகளுக்கும் பகிர்ந்துக் கொடுத்து உண்டதாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, சொல்லப்பட்டு வருகின்றதோ, அவ்வாறு தான், ஏனைய கதையாக்கங்களையும் மறுகட்டமைப்பு செய்யவேண்டியத் தேவை இருக்கிறது.

சிறுவர்களுக்கு சொல்லப்படுகின்ற கதைகளின் வழி அவர்களின் பன்முக ஆளுமை பரிமாணங்களையும் வளர்க்க முடியும் ; மனித ஆற்றலின் விளைவுகளை, சொல்லப்படுகின்ற விஞ்ஞானக் கதைகள் வழியே, அவர்கள் அதற்கு பரிட்சயமாகிறார்கள். அத்தகைய கண்டு பிடிப்புகள் சார்ந்த கதைகள், அவர்களின் புத்தாக்கச் செய்றபாடுகளுக்கு வழிவகுக்கும்.

ஆக, சிறுவர்களின், உள வளர்ச்சியில், கதைகள் தாம் வலிமையான, உளவள துணையாக விளங்குகின்றமையின் தார்மீக நிலையுணர்ந்து, சிறுவர்களின் உள முதிர்ச்சிக்கு அமைய சீர்மீகக் கதைகள் படைத்தலும், அவ்வாறு ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள கதைகளைச் சொல்லிக் கொடுத்தலும், காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்து வருகிறது.

இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap