Home இலங்கை மீன்மகளீர் பதிவும் புனைவும் – கலாவதி கலைமகள்…

மீன்மகளீர் பதிவும் புனைவும் – கலாவதி கலைமகள்…

by admin

மீன்மகளீர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையாளமாக பண்பாட்டின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. அலங்காரங்களாக வரவேற்பு நிகழ்வுகள் போன்றவற்றில் மீன்மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை அவதானிக்கலாம். பரவலாக மட்டக்களப்பு வரவேற்புத்தூபி, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக வரவேற்புத் தூபி, மட்டக்களப்பு புகையிரதநிலையம், நகர்ச் சந்திகள் போன்றவற்றில் வரவேற்கும் பாங்கினைக் கொண்ட உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றினைத் தவிர ஒவியங்களாக கலாசார மண்டபங்களில் வரையப்பட்டுள்ளன. மீன்மகளீர்; உருவம் மேல்பகுதி ஆடையற்றதாகவும் கச்சை மேற்சட்டை அணிந்தவாறும் கீழ்ப்பகுதி மீன்வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவை வணங்கியபடியும் கைகளில் மலர்களை ஏந்தியபடியும் உள்ளன.

பாடுமீன் என்பது மட்டக்களப்பின் வளம், அழகு சார் குறியீடாகும். பாடுமீனை பெண்ணாக உருவகம் செய்தவராக சுவாமி விபுலானந்தர் காணப்படுகின்றார். இவர் பாடுமீனை பெண்ணாக நீரரமகளீராக உருவகம் செய்கின்றார்.

‘நீரரமகளீர் இ;ன்னிசைப் பாடல்’ என்னும் கவிதையில்
‘நாதமாய்த் தோன்றி நவைதீர்அமிழ்தனைய……..
நீருளிரந்தெழுந்த நின்றார் அரமகளிர்
பைம்புனலின் மேற்படர்ந்த பாசிநிகர் கூந்தலார்
அம்பொன்னின் மேனி அரையின்கீழ் திங்கள் மதிமுகத்திற்
பொங்கிய புன்முறுவல் பூத்தார் புலமையார்கவிமுகத்தை நோக்கிக் கனிந்துரைப்பார் யாங்கிளையே’ (சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்கள் தொகுதி 4)

இசையை பெண்ணாக உருவகித்து அவள் மூப்பற்றவள்இ மென்மையான மொழி உடையவள் படர்ந்த பாசிநிறக் கூந்தலை உடையவள்இ பொன்னை ஒத்த மேனியை உடையவள் மேனியின் கீழ்ப்பகுதி மீன் வடிவம் பெற்றவள்இ இசையை பெண்ணாக உருவகித்துள்ளார். இவரின் இக் கவிதையைத் தொடர்ந்து கவிஞர் காசியானந்தனின் ‘மீன்மகள் பாடுகின்றாள் வாவிமகள் ஆடுகின்றாள்………….’என்னும் கவிதையை தொடர்புபடுத்த முடியும்.

நீரரமகளீர் இன்னிசைப்பாடல் என்னும் கவிதையில் நீருளிருந்து எழும் இசையை பெண்ணாக உருவகிக்கும் சுவாமி விபுலானந்தர்இ யாழ்நூலில் ‘மட்டக்களப்பு வாவி கடலோடு கலப்பதினால் ஒருவகைச் சங்கு வாழ்தற்கிடமாயிற்று. அளவிற் சிறியவும் பெரியவுமான சங்குகள் இடையிட்டு முரல்வதினாலே ஏற்படும் ஓசையின் சேர்க்கை இசைத்தன்மை பெறுகின்றது.’ (வி.சி.கந்தையாஇமட்டக்களப்புத் தமிழகம்) எனத் தெளிவுபடுத்துகின்றார். நீரரமகளீர் என்பது சுவாமி விபுலானந்தரின் கற்பனை ஆகும். இக்கற்பனை கடற்கன்னித் தொன்மத்திலிருந்து உருவாகக்கப்பட்டதாக காணப்படுகின்றது.

கடற்கன்னி உலகம் தழுவிய தொன்மமாகும். மீன்பாதி பெண்ணுருதழுவிய வடிவம். பல மிருகங்கள் சேர்ந்த யாளி உருவமைப்புஇ காமதேனுஇ ஸ்ப்பிங்ஸ் போன்ற மனிதரும் மிருகங்களும் சேர்ந்த உருவங்களை தொன்மக் கதைகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. இதன் உண்மை , பொய் இவற்றிக்கப்பால் நீரரமகளீர்க்குரிய ஆண்பால் ‘மீன்மகன்’ உருவம் ஏன்; தோன்றவில்லை என்னும் கேள்வியும் இங்கு கேட்கப்பட வேண்டும்.

மீன்மகளிர் வடிவங்களின் உருவச்சித்தரிப்பு என்பது ‘இசைக்கு இயல்பான மென்மை, அழகு, இன்பம், என்பனவற்றை அரசமகளிர் தம் தன்மைகளாகவும்………… அடிகள் தமது கற்பனை மிகுதியும் நயம் பெருக்கச் செய்துள்ளார்.’ ஏன வி.சி.கந்தையா தனது மட்டக்களப்புத்தமிழகம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
அடிகளாரின் நீரரமகளிர் கற்பனை அவர் வாழ்ந்த அக்காலத்து கற்பனையாகும். இக்கற்பனையை பிரதேசத்து அடையளமாகவும்இ குறியீடாகவும் பரவலாக்கும் போதும் பின்பற்றப்படும் போதும் அதன் மீதான சமகால வாசிப்பு என்பது அவசியமானது.

நீண்ட கூந்தலை உடைய மேல்ப்பாதி பெண்ணுருவிலும் கீழ்ப்பாதி மீனுருவிலும் வணங்கியபடியும் மலர்களை ஏதிய படியும் வரவேற்ப்புகளில் நிறுத்திவைக்கப்படும் பெண்கள் தோற்றங்களை ஒத்தனவாகவே மீன்மகளீர் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெண் உடல் என்பது கவர்ச்சிஇ அழகுஇ நுகர்வுஇ சுவைஇ மென்மை என்னும் நோக்கிலே பார்க்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றது. வரவேற்பில் பெண்களை நிறுத்துவதும் இரு பெண்கள் மலர்களை ஏந்தி வருவதும் சிலைகளாக ஓவியங்களாக வடிமைக்கப்படும். வரவேற்ப்பு அலங்காரங்கள் என பெண்ணுடல் என்பது அழகுஇ கவர்ச்சி என்னும் நோக்கில் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய பால்நிலை அரசியல் நிலைப்பாட்டின் பின்னணியிலே நீரரமகளீர் உருவாக்கமும் அணுகப்படவேண்டிய விடயமாகும்.

சொத்துரிமை உருவான காலத்தில் குடும்ப அமைப்பு முக்கியம் பெறுகின்றது. தன் சொத்துக்களைப் பாதுகாக்க வாரிசுகள் முக்கியம்பெறுகின்றனர். இத்தகைய சமூக அமைப்பில் பெண் ஆணுக்குரியவளாக பாதுகாக்கப்பட வேண்டியவளாக மாற்றப்படுகின்றாள். அவளின் உடல் சிந்தனை என்பது குடும்பம் சார்ந்து குறிப்பாக அணுக்குரியதாக மாற்றப்படுகின்றது. இதனைத் தொடர்ந்தே ஆணைக்கவர்தல் அணுக்குரியதாக பெண்ணை மாற்றல் என்னும் மனப்பதிவும் மறுபக்கம் ஒரு ஆண் பெண்ணைக்கவர்தல் வேண்டும் என்னும் மனப்பாங்கும் உருவாக்கப்படுகின்றது. மென்மை, கவர்ச்சி, இன்பம், அழகு என்பது பெண்ணுக்கும் வீரம்இ விவேகம் பலம்இ தைரியம் என்பது ஆணுக்;குரியவைகளாக சமூகம் கட்டமைக்கின்றது. பல் பாலினப் புரிதலும் இல்லாமல்ச் செய்யப்படுகின்றது. இத்தகைய கமூகக்கட்டமைப்பின் பின்னணியிலே மீன்மகளிர் வடிவம் அதன் தோற்றம் ஆடையமைப்பு என்பபவை பார்க்கப்படல் வேண்டும்.

மட்டக்களப்பு பறங்கியர் போன்ற பல் இன மக்கள், வேடர், குறவர் பழங்குடி மக்கள் அனைவரும் வாழும் பிரதேசமாகும். இவ் மக்களின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் வேறுபாடுகளும் ஒற்றுமைத்தன்மைகளும் தனித்துவங்களும் கொண்டவை. மீன்மகளிர் உருவம் மட்டும் மட்டக்களப்பின் அடையாளமாக அடையாளப்படுவதன் மூலம் நாம் மட்டக்களப்பின் பல் அமசங்களை இழக்கின்றோம்.

மட்டக்களப்பின் இயற்கைவளம் சதுப்புநிலத்தாவரங்கள், கடற்கரையை அண்டிவாழும் தாவரங்கள், கூத்துப்பாரம்பரியங்கள். தோரணப்பாரம்பரியம், மகுடி, சொர்ணாளி, பறை, உடுக்கு போன்ற இசைப்பாரம்பரியங்களும் ஆடகசவுந்தரி,உலகநாச்சியார் போன்ற பெண் அரசியார்களையும் ஒவ்வொரு சமூகங்களின் பண்பாடு, பழங்குடிமககள் பண்பாடு போன்ற பல்தன்மைகளையும் மறந்துள்ளோம்.

சுவாமி விபுலானந்தர் நீரரமகளீர் இன்னிசைப்பாடலில் மட்டக்களப்புத் தோணி பற்றிக் கூறுகின்றார். தோணியில் புலவர் சென்று இசையைக் கேட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதாவது
‘மாவலியின் பேரால் வயங்கு மணிநதியும்
காவும் பொழிலும் கழிகமுகமும் புள்ளணிந்த
ஏரியும்மல்கி இரத்தினத் தீவமென’
இவ்வாறாய் பல தனித்துவங்கள் சிந்திக்கப்படாமல் எடுத்துக்காட்டப்படாமலும் போயிற்று எனலாம்.

மட்டக்களப்பின் ஒவ்வொரு பகுதிகளும் சில தனித்துவமான இசை, நடன, ஆற்றுகைப் பாரம்பரியங்களையும் சமூஅடையாளங்களையும் கொண்டவை. கவிபாடுதல், களிகம்பு(பொல்லடி), போன்ற ஆற்றுகைகள் இஸ்லாமியர் சமூகத்தினரிடையே காணப்படுகின்றன. அது போல் ‘கொம்புமுறி’ வந்தாறுமூலைப் பகுதியில் ஆற்றுகை செய்யப்படுவதாகும். இவ்வாறான பல இனங்களின் பண்பாட்டுக் கூறுகளை வளங்களை உடைய பகுதியாகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மக்களின் வாழ்வியல் அம்சங்களாகவும் செயற்படுகிறன. அத்தோடு நெல்வகைகள் பாரம்பரிய விதைப்பு முறைகள். மீன்பிடி தொழில் முறைகள் இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பிரம்புக் கூடு வகைகள் போன்ற அறிவு மரபுகளும் காணப்படுகின்றன. ஆனால் மீன்மகளிர் வடிவம் மட்டும் பொதுவான அடையாளமாக மாற்றப்படுவதன் மூலம் பல தனித்துவ அடையாளஙகளைக் கலைப்பாரம்பரியங்களை அழகியல்முறைகளை முன்னிலைப்படுத்;த தவறுகின்றோம்.

எமது பொது அடையாளமாக மட்டக்களப்பில் பரவலாக்கப்பட்டுள்ள நீரரமகளீர் வடிவம் மீதான மீள் வாசிப்பும் விமர்சனங்களை முன்வைத்தலும் அதனை கலந்துரையாடலுக்கு இட்டுச் செல்லலும் ஆக்கபூர்வமான அடையாள உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். #மீன்மகளீர்  #புனைவு #மட்டக்களப்பு

கலாவதி கலைமகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More