இலங்கை பிரதான செய்திகள்

கறுப்பு வானில் சிறுவனை பலவந்தமாக அழைத்துச் சென்றமைத் தொடர்பில் காவல்துறையினர்  மீது குற்றச்சாட்டு

இரண்டரை வயது குழந்தையை தனிமையில் விட்டுவிட்டு, அவரது பாதுகாப்பிற்காக இருந்த 14 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக காவல்துறைநிலையத்திற்கு அழைத்துச் சென்றமைத் தொடர்பில் காவல்துறையினர்  மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில், ஒருவரை கைது செய்வதற்கு சென்ற அக்குரெஸ்ஸ காவல்துறையினர், அவருக்கு பதிலாக அவரது 14 வயது புதல்வரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றமைத் தொடர்பில், தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

கறுவாப்பட்டை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும், அக்குரெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது ஜயந்த ரூபசிங்க என்ற வியாபாரி களவாடப்பட்ட 12 கிலோ கறுவாப்பட்டையை தம்வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி தான் வியாபாரம் நிமித்தம் வெளியில் சென்றிருந்த சமயத்தில், இந்த திருட்டு சம்பவம் தொடர்பில், தன்னுடைய இரண்டு வயது சகோதரனுடன் வீட்டில் இருந்த 14 வயது மகனை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாக, ஜயந்த தெரிவிக்கின்றார்.

இது குறித்து தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, ஜயந்த ரூபசிங்க, ”45 நிமிடங்களுக்குள் தான் வீட்டிகு வந்துவிடுவதாகவும் காத்திருக்குமாறும் காவல்துறையினர்க்கு அறிவித்த போதிலும், காவல்துறையினர் இதுத் தொடர்பில் சிறிதளவும் கவனத்திற்கொள்ளாது, தன்னுடைய 14 வயது மகனை காவல்  நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய 2 வயது மற்றுமொரு புதல்வருக்கு பாதுகாப்பிற்காக வீட்டில் இருந்த 14 வயது புதல்வரே இவ்வாறு  காவல் நிலையத்திற்குச் அழைத்துச் செல்லப்பட்டதால் தன்னுடைய குழந்தை வீட்டில் தனியாக இருந்ததாகவும் ஜயந்த குற்றஞ்சாட்டியுள்ளார்.

தன்வசம் இருந்த 12 கிலோ கறுவாப்பட்டையை காவல்துறையினரிடம் ஒப்படைத்தப் பின்னரே தன்னுடைய புதல்வர் விடுதலை செய்யப்பட்டதாகவும், எனினும் குறித்த கறுவாப்பட்டையை தான் விலைக்கே கொள்வனவு செய்ததாகவும் ஜயந்த ரூபசிங்க குறிப்பிடுகின்றார்.

“நான் வீட்டை விட்டு வெளியேறும்போது, என் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருந்தார்கள். என்னுடைய மனைவியும் 11 வயது பிள்ளையும் வெளியில் சென்றுள்ளார்கள். என்னுடைய 2 வயது மற்றும் 14 வயது பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். காவல்துறையினர் முன் வாயிலலை கம்பி கொக்கி கொண்டு திறந்துள்ளனர். உள்ளே வந்தவர்கள் வீட்டில் இரண்டு வயது பிள்ளையின் பாதுகாப்பிற்காக இருந்த என்னுடைய 14 வயது பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சமயத்தில் இரண்டு வயது குழந்தை வீட்டில் தனியாக இருந்துள்ளது.

அந்த குழந்தைக்கு ஏதாவது நடந்திருந்தால் யார் பொறுப்பு? நான் 45 நிமிடங்களுக்குள் வந்துவிடுவேன் எனக் கூறியும் காவல்துறையினர் பொறுமையிழந்து என் பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் என் வீட்டில் இருந்த 12 கிலோ கறுவாப்பட்டையை காவல்துறையினருக்கு ஒப்படைத்துவிட்டுதான் என் பிள்ளையை அழைத்து வந்தேன். எனக்கு நடந்த அநீதி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. அந்த 12 கிலோ கறுவாப்பட்டையும் திருட்டுப் பொருளா என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு வியாபாரி. அதனை விலைக் கொடுத்துதான் பெற்றுக்கொண்டேன்” என ஜயந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

”என் வீட்டில் யாரும் இல்லை. நானும் என் சகோதரனும் இருந்தோம். என் சகோதரன் தூங்கிக் கொண்டிருந்தார். காவல்துறையினர் என்னை அழைத்தபோது, சகோதரனை தனிமையில் விட்டுவிட்டு வர முடியாது எனத் தெரிவித்தேன். எனினும் காவல்துறையினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  விரைவாக வருமாறு கோரினர். அதன் பின்னர் என்னை கறுப்பு வேன் ஒன்றில் அழைத்துச் சென்றனர்.” என ஜயந்தவின் 14 வயது புதல்வர் தெரிவித்துள்ளார்.

பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லாததால் சிறுவனை அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எவ்வாறெனினும், தனது தந்தையின் இருப்பிடத்தை அறிந்த ஒரே நபர், குறித்த சிறுவனே எனவும், அவரை கண்டறியும் பொருட்டே குறித்த சிறுவனை அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  #கறுப்புவான்  #சிறுவன் #பலவந்தமாக  #காவல்துறையினர்  #குற்றச்சாட்டு  #தேசியகாவல்துறைஆணைக்குழு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.