இலங்கை பிரதான செய்திகள்

48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிமனிதர்கள் வடிவமைத்த ஆயுதங்கள் கண்டுபிடிப்பு


இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகத்தின் விரிவுரையாளரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஒசான் வெடகே இதனை பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு வெளியில் இவ்வாறான சான்றுகள் முதன்முறையாக இலங்கையிலேயே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிருகங்களின் எலும்புகளில் தயாரிக்கப்பட்ட வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி, மிருகங்களை வேட்டையாடியமைக்கான ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பாயங்கல பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

1986ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே இந்த ஆய்வின் முதலாவது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர், அந்த காலப் பகுதியில் போதிய தொழில்நுட்பம் காணப்படாமையினால் மீண்டும் அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவின் கீழ் தம் தலைமையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக ஒசான் வெடகே தெரிவித்துள்ளார்.

அகழ்வுப் பணிகளின் போது பெற்றுகொள்ளப்பட்ட தொல்பொருள்கள் ஆய்விற்காக ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதுமான ஆய்வு வசதிகள் இல்லாமையை அடுத்தே, இந்த தொல்பொருட்கள் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையமானது, மனிதப் பரிணாம வளர்ச்சி தொடர்பிலான ஆய்வுகளை செய்யும் தலைசிறந்த ஆராய்ச்சி நிலையம் என அவர் குறிப்பிட்டுள்ளார்;.

இந்த ஆய்வுகளின் ஊடாகவே பல தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பழமை அடையாளங்கள் குறித்து தகவல் அறிய முடிந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மிருகங்களின் எலும்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட வில் மற்றும் அம்புகள் இவற்றில் காணப்பட்டதாக மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க யுகத்திலிருந்து மனிதர்கள் வெளியில் வருகை தந்த பின்னர் தயாரிக்கப்பட்ட வில் மற்றும் அம்புகள் இவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுமார் 48,000 வருடங்களுக்கு முன்னர் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு மிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளமை இந்த ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெடகே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஈர வலயக் காடுகள் (மழைக் காடுகள்) அமைந்துள்ள பகுதிகளிலேயே ஆதிவாசிகள் இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்துள்ளதாக நம்ப முடிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆயுதங்களின் ஊடாக அந்த மனிதர்கள் சிறு மற்றும் மத்திய அளவிலான மிருகங்களையே வேட்டையாடியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .

குறிப்பாக அணில், குரங்கு போன்ற மிருகங்களே இவர்களால் வேட்டையாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அணில் மற்றும் குரங்கு போன்ற மிருகங்கள் மிக வேகமாக நகர்வதால் அவற்றை இலகுவாக வேட்டையாட முடியாது என்பதை கண்டறிந்துள்ள அந்த மக்கள், அம்பு போன்ற கூர்மையான ஆயுதங்களை தயாரித்துள்ளதாக நம்ப முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அம்பானது, மிருகமொன்றின் எலும்பை பயன்படுத்தி முதலில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மிருகங்களின் எலும்புகளை மிகக் கூர்மையாக்கி அவற்றின் ஊடாகவே இந்த வேட்டையாடும் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் வேறொரு பகுதியில் மிருகங்களின் எலும்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடிய மிக பழமையாக சந்தர்ப்பம் இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒசான் வெடகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இயற்கையுடன் இணைந்ததாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் இதன் ஊடாக கிடைத்துள்ளதாகவும் பல வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் தற்போதே கிடைக்க ஆரம்பித்துள்ளதாகவும் ஒசான் வெடகே தெரிவித்துள்ளார்.

இதுவொரு ஆரம்பம் மாத்திரமே என கூறிய அவர், எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் மேலும் பல ஆய்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆதி மனிதர்கள் ஈர வலய காடுகளுக்குள் ஒன்றிணைந்து வாழ்ந்ததன் ஊடாக மிருகங்களின் எலும்புகளைக் கொண்டு ஆயுதங்கள் தயாரித்தமை தொடர்பிலான சான்றுகள் முதன் முறையாக இலங்கையில் கிடைத்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த பெறுமதி வாய்ந்த சந்தர்ப்பம் என ஒசான் வெடகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஆதி மனிதர் சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போது உறுதியாகியுள்ளமையும் பெறுமதியான ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்விற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பத்மலால் உள்ளிட்ட குழுவினர் ஆரம்பம் முதல் செயற்பட்டிருந்தனர்.  #இலங்கை  #ஆதிமனிதர்கள்  #ஆயுதங்கள் #கண்டுபிடிப்பு #வில்

 
நன்றி பிபிசி தமிழ்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.