Home இலங்கை கொரோனா கால உள ஆற்றுப்படுத்தல் – இரா.சுலக்ஷனா…

கொரோனா கால உள ஆற்றுப்படுத்தல் – இரா.சுலக்ஷனா…

by admin


உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரிடர் என்ற அடிப்படையில் கொவிட்-19 நோக்கப்படுகின்றது. அவரவர் வீட்டுக்குள் தனியன்களாக வாழ்வதற்கான ஓர் இக்கட்டான சூழ்நிலையையே, பாதுகாப்பு என்ற அடிப்படையில் கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கின்றது. இதுவரை காலமும் குதிரை ஓட்டப்பந்தயத்தில் போல் ஓடிக் கொண்டிருந்த மனித இயந்திரங்களை இழுத்துப் பிடித்து, நிலைகுலையச் செய்து நிறுத்தி, அவரவர் வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. அயல் வீட்டுக்காரர், பக்கத்து தெரு என சுற்றித் திரிந்த காலம் போய் அவரவர் வீட்டுக்குள் தனி தனியாக வாழ்வதற்கானத் தேவையை வலுக்கட்டாயமாக கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கிறது.

தொற்று தொடர்பான கேள்வியும் சந்தேகமும் அதன் உற்பத்தி நிலையில் நின்றும் கிளைகளாகப் பிரிந்து சென்று பல்வேறுவிதமான கண்ணோட்டங்களின் அடிப்படையில் இன்று வரை, பல்வேறு தரப்பினரதும் அவதானிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதை அவதானிக்கமுடிகிறது. உலகளவில் உயிரிழப்புகள் எண்ணிறைந்த வகையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், தனிமைப்படுத்தல் முகாம்களில் தொற்றாளர், தொற்றாளர் என சந்தேகிக்கும் நபர்கள் என அனைவரையும் கண்காணிக்கும் வைத்திய பரிசோதனைகளும் இடம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

இதுவரை காலமும் தொற்று தொடர்பான நிரூபிக்கப்பட்ட உண்மை தகவல்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில், ஆளாள் இடைவெளி பேணலும், மூக்கு வாய் மூடி அணிதலும், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளலும், தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டைகளை பயன்படுத்தலும், அவரவர் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் என்ற பெயரில் முன்மொழியப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

போக்குவரத்து, கல்வி, சுகாதார நலன்புரி சேவைகள், வங்கி கணக்கு சேவைகள், தொழில்துறைகள் என இன்ன பிற துறைகளிலும் கொரோனா தொற்று பேரச்சத்தை ஏற்படுத்தி, மாற்று வழிமுறைகளில் சேவைகளை முன்னெடுப்பதற்கான தேவையை வலுவாக உணர்த்தியும், ஏற்படுத்தியும் உள்ளது. எனினும், தொற்றின் ஆரம்ப காலங்களில்இருந்த முடக்க நிலை சற்று தளர்வடைந்துள்ள நிலையில், எதிர் வருகின்ற காலங்களில் ஏற்படப் போகின்ற பேராபத்து நிலைகளை கருத்திற்கொண்டு, உலகநாடுகள் செயற்பட்டு வருகின்றனவா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருந்து வருகிறது.

கொரோனா ஏற்படுத்தியுள்ள முடக்க நிலை என்பது, அனைத்து உலக வாழ் மக்களுக்குமான இதுவரை இருந்திராத புதிய வாழ்வியல் கோலமொன்றின் தேவையை வலியுறுத்திய ஒன்றாகவே நோக்க வேண்டிக்கிடக்கிறது.

‘மருத்துவம், சட்டம், வணிகம், பொறியியல் இவை உன்னதமான முயற்சிகள் மற்றும் வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள தேவையானவை. ஆனால், கவிதை, கலை, காதல் அன்பு இவையே நாம் உயிருடன் இருப்பதற்கு அடிப்படையானவை.’ என்ற அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸின் கூற்று இத்தகையதொரு சூழ்நிலையில் பரந்தளவிலான அவதானத்துக்குரியதாகிறது.

கொரோனா தொற்று, புதிய வாழ்வியல் முறைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், உள ஆற்றுப்படுத்தல் என்பது, பரந்த அளவில் வேண்டப்படுகின்ற அம்சமாக உணரப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையிலேயே மேற்கண்ட கூற்று அவதானத்துக் குரியதாகிறது.

தொற்று தொடர்பான அவதான நிலைகளை வெளிப்படுத்துவதில் தொடங்கி, முடக்க நிலையில் இருக்கும் மக்களின் உள ஆற்றுப்படுத்தல் வரை பல்வேறு வகைகளிலும் கலைகளின் தேவைப்பாடு உணரப்பட்டு வந்தமை நோக்குதற்குரியது. உள ஆற்றுப்படுத்தல் என்ற வகையில், முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், தனியன்களாக வாழ பழக்கப்பட்டுப் போன மக்கள் மத்தியில் உள்ள சிகிச்சை என்ற அடிப்படையிலும், அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கான அடிப்படை நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில், கொரோனா தொற்று கட்டுப்பாட்டை இழந்து பரவும் வீதமும், மரண வீதமும் அதிகரித்த நிலையில், வூஹான் மாகாணம் முற்றாக முடக்கப்பட்டிருந்தது. இத்தகையதொரு சூழலில், வெளி மாகாணத்தை சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் குறித்த மாகாணத்துக்கு பிரவேசிப்பதற்கானத் தடை உத்தரவும் வலுவாக அமுல் நிலையில் இருந்தது.

இந்தப் பின்னணியில் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்த காணொளி ஒன்று உலக மக்கள் அனைவரதும் அவதானத்துக்குரியதாகியது. குறித்த காணொளி விசேடமாக உள ஆற்றுப்படுத்தலினுடைய தேவையை வலுவாக உணர்த்தியிருந்தது. இதனடிப்படையில்தான் உலக நாடுகள் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளின் தேவையை உணர்ந்து செயற்பட்டமையை காணமுடிந்தது.

குறிப்பாக சீன வைத்தியர்களின் பாடல் நிகழ்ச்சியில் ஆரம்பமாகி பிரித்தானிய வயலின் இசை, இந்திய பொலிஸ் காவலர்களின் கொரோனா விழிப்புணர்வு நடனம், இலங்கையின் இசை நிகழ்ச்சிகள் என இன்னப்பிற வகையில் உள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையை சமூக வலைதளங்களும், ஊடகங்களும் வெளிக் கொண்டு வந்திருந்தன.

இத்தகைய உள ஆற்றுப்படுத்தல் என்பது, தொற்றாளர், தொற்றாளர் என சந்தேகிக்கும் நபர், சிகிச்சை அளிப்பவர் என அனைவருக்குமான சிகிச்சைமுறை என்ற ஒற்றைக் குவிமையப் பார்வையே நிலைபெற்றிருந்தது. தனிமைப்படுத்தல் முகாம்களை விடுத்து அவரவர் வீட்டுக்குள் தனியன்களாக வாழும் அனைவருக்குமான உள ஆற்றுப்படுத்தல் ஒன்றின் தேவைப்பாட்டை, ‘கொரோனா தொற்று அச்சத்தில் ஒருவர் தற்கொலை’ என்ற செய்தி பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தது.

ஆக இத்தகையதொரு இக்கட்டான சூழலில் உள ஆற்றுப்படுத்தல் என்பது தொற்றாளர், தொற்றாளர் என சந்தேகிக்கும் நபர்கள், சிகிச்சை அளிப்போர் என்ற குழுமத்தையும் கடந்து, உலக வாழ் அனைத்து சமூகங்களுக்குமான தேவைப்பாடுடைய ஒன்று என்றே தெளிய வேண்டிக்கிடக்கிறது. குறிப்பாக தொற்று தொடர்பான பேரச்சத்தில் இருந்து விடுபடவும், குறிப்பாக தொற்று ஏற்பட்டு விட்டால் மரணம் என்ற ஒற்றைப் பரிமாண மனப்பாங்கில் இருந்து விடுபடவும் உள ஆற்றுப்படுத்தல் என்பது தேவைப்பாடுடையதாகிறது.

இதுவரை உலக வாழ் மக்கள் பல்வேறு தொற்று நோய்களின் கோரப் பிடியில் இருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழி முறைகளையும், தொற்று நீக்கி மருந்துகளையும் கண்டறிந்த போதும், கொரோனா தொற்று அதற்கு மாறாக உலக மக்களை உலுக்கிக் கொண்டிருப்பதையே காணமுடிகிறது. இத்தகையதொரு சூழலில் ஏற்கனவே உறவுகள் விரிசல் கண்டு சென்றுள்ள சூழலிலும், உறவுகள் பாழ்பட்டு போன நிலமைகளிலும் வாழ்ந்து வருகின்ற மக்கள்குழுமங்களின் மத்தியில், உள ஆற்றுப்படுத்தல் என்பது வெறுமனே ஆற்றுப்படுத்தல் என்ற நிலையை கடந்து அதன் மற்றொரு பரிமாணத்தில் இன்றளவும் செயல்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக மிகச்சாதாரண மொழிப் பிரயோகங்களில் சிரிப்பதற்கும் சிந்திப்பதற்குமான
கொவிட் -19 மீம்ஸ்கள் ( எலேய் சைனாக்காரன் பாம்பு கறி தின்னதால கொரோனா வைரஸ் வந்துட்டுன்னு சொல்லுறானுக! பாம்புக்கு எதிரி கீரி தாம்ல. அப்ப அம்புட்டு போரும் கீரியை புடிச்சி தின்னா சரியாகிடும் டா இத சொன்னா நம்மல கேன பயனு சொல்லுறானுக, ஆத்தி என்ன தும்மல் வந்துட்டே இருக்கு. ஒருவேலை கொரோனாவா, என்ன கிருமி நம்மல எட்டார்க் பண்ணல. ஆஹா எத்தன கிருமி வந்தாலும் இங்க மருத்துவ மூலிக இருக்குடா, கொரோனா வைரஸ் இந்தியாவையும் வந்தடைந்தது… எல்லாமே மேட்இன் சைனா வா ஆகிடுச்சினு பாத்தா கடைசில நம்ம சாவு கூட மேட்இன் சைனா தாண்டா..) இத்தகைய உள ஆற்றுப்படுத்தல் முறையில் முதன்மை பெறுகின்றன.

மனிதர் மத்தியில் இயல்பாக இருக்கின்ற கலாபூர்வமான உணர்வு வெளிப்பாட்டின் மாற்று வடிவ பிரயோகம் ஆற்றுப்படுத்தல் செயல்பாடுகளில் இன்னொரு வகையாக நோக்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில்தான் ஏற்கனவே பாடலமைக்கப்பட்ட மெட்டுகளில் பாடல் வரிகளை மாற்றி அமைத்து உருவாக்கப்பட்ட பாடலாக்கங்கள், விழிப்புணர்வுடன் கூடிய பாடலாக்க முயற்சிகள், விழிப்புணர்வு நடனங்கள், ஓவியப் போட்டிகள் என்பன முதன்மை பெறுகின்றன.

மனிதர் மத்தியில் காலாதிகாலமாக நிலைபெற்று வருகின்ற, தாம் வாழும் சூழலை தனக்கு ஏற்றாற்போல் வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற இயல்பு நிலையின் வெளிப்பாடாக, கொரோனா தொற்று காலப்பகுதியிலும் கலைகள், உள ஆற்றுப்படுத்தல் என்ற வகையில் இதுவரை இருந்துவந்த நிலைமைக்கு, மாற்றான வடிவத்தில் பிரயோகிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

கொரோனா தொற்று உலகளவில் இதுவரை நிலவிவந்த அசைக்கமுடியாத கற்பிதங்களை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. அதேநேரம் இதுவரை இருப்புக் கொள்ளாத, முற்றிலும் புதிய வாழ்வியல் கோலமொன்றிற்காகப் பழக்கப்படுத்திக் கொள்ளல் என்ற அடிப்படையில் மனிதர்களை புதிய வழியில் பயணப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் முன்னெடுக்கப்படும் உள ஆற்றுப்படுத்தல்களும், ஆற்றுப்படுத்தல் முயற்சிகளும் தனித்தனியாக வாழும் சூழலில் முற்றிலும் தனித்து வாழ்வதற்கான வாய்ப்பை ஒழுங்கமைத்துக் கொடுக்கின்ற ஒன்றாக அமையும் பட்சத்தில், ஏற்கனவே பல்வேறு சமூக கட்டமைப்புக்குள்ளும் துண்டாடப்பட்டு வாழும் மக்களின் சமூக வாழ்க்கையில், சமூக இடைவினை அல்லது சமூக ஊடாட்டம் என்பது பாழ்பட்டு போகும் சூழல் உருவாகும் என்பது மறுப்பதற்கில்லை.

கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கின்ற முடக்கநிலை என்பது, குழுமவாழ்விற்கான அல்லது சமுகமாக ஒன்றிணைவதற்கான சமுக தேவையின் மீதானதொரு தவிர்க்க முடியாத சவால் நிலை என்ற போதும், இதுவரை காலமும் கலைகள் அத்தகைய சமுக ஒருங்கிணைப்பின் பாலமாகவே தொழிற்பட்டு வந்திருக்கிறது. ஆக இத்தகையதொரு சூழலில் முன்னெடுக்கப்படும் நோய் தொற்று அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான உள ஆற்றுப்படுத்தல் முயற்சிகளும், குழும வாழ்வின் தேவையை பாழ்படுத்திவிடுவதற்கான ஊடுபாவாக அமையாதிருப்பது குறித்தும் கூர்ந்து கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக சிறுவர்களை பொருத்தவரை இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முறைமை என்பது, சவால்கள் நிறைந்த ஒன்றே. வெளிகள விளையாட்டுக்களும், நண்பர்களது சந்திப்புகளும், தொடர்புகளும் முழுமையாக சிதைவடைந்து நிற்கின்ற நிலையில், அவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் என்பது, மகிழ்வித்தலும், தொற்று தொடர்பான சரியான பரிதலையும், தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படலும் என்ற வகையில் அமையப்பெறுதல் தேவைப்பாடுடையதாகிறது. ஆக ஓட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து சென்றுள்ள இத்தகையதொரு சூழலில், உள ஆற்றுப்படுத்தல் என்பது எவ்வாறு பிரதான தேவைப்பாடுடைய ஒன்றாக நோக்கப்படுகிறதோ, அவ்வாறே அத்தகைய உள ஆற்றுப்படுத்தல், எதிர்வுக் கூறப்படும் தொற்று நீக்கத்தின் பின்னரான சூழலில் சமுக ஒருங்கிணைப்பின் தேவைக்கும், அவசியத்துக்குமான சிந்தனையை சிதைத்துவிடுவதற்கான ஊடுபாவாக அமையாதிருக்கும் வகையிலான உள ஆற்றுப்படுத்தலாக முன்னெடுத்தலும் நமது தார்மீகப் பொறுப்பாகிறது.

இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்கப்பல்கலைகழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More