Home உலகம் பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால

பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால

by admin

உலகமெங்கும் கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் இனரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப்  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல நூற்றாண்டு கால வன்முறை வரலாற்றைக் கொண்ட இன அடக்குமுறைகளால் இன்றும் நாளாந்தம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்பின மக்களுக்கும்,  அவர்கள் முன்னிலையில் இருந்து நடாத்தும் இப்போராட்டங்களுக்கும் உலகம் பதில் கூறவே  வேண்டும்.   மாற்றங்கள் பல்வேறு தளங்களில் ஏற்பட வேண்டும். எந்தவொரு சமூகமோ, அரசோ, தனிநபரோ இதற்கு விதிவிலக்கல்ல. கொரோனா போன்ற பூகோள தொற்றுநோய்  உட்பட.

எமது வெளிப்பாடுகளையும், அதிலிருக்கும் வலிகளையும் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.

நாளாந்தம் கொடுமையான வன்முறையை அனுபவிக்க வேண்டியுள்ள நிலைமையை விளங்கிக் கொள்ளுங்கள் எனக் கூக்குரல் இடுகிறார்கள்.

போதுமென்றால் போதும்! எதுவரை சென்றால் போதும் என்பது உங்களுக்குப் புரியும் எனச் சலிப்படைந்தாலும், புத்துணர்வினைத் தமதாக்கிக் கொண்டு போராடுகிறார்கள்.

தமது வன்முறையான சில வெளிப்பாடுகளையும், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

உலகெங்கிலும் கறுப்பின மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களைப் பார்க்கும்போது நெஞ்சு வெடித்துவிடுமோ என்று ஏங்க வைக்கும் ஒரு துயர் அலை உடலெங்கும் பரவுகிறது. உடலிலிருந்து அவ்வலையின் தாக்கம் சில கணப்பொழுதுகளில் நீங்கினாலும் சிந்தையிலிருந்தும், ஆன்மாவிலிருந்தும் அது ஒருபோதும் நீங்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

அமெரிக்காவில் வசிக்கும் கிம்பலி ஜோன்ஸ் எனும் கறுப்பினப் பெண் கூறுகிறார் “அவர்கள் (வெள்ளையர்கள்) அதிஷ்டசாலிகள். (ஏனெனில்) கறுப்பின மக்கள் போராடுவது சமத்துவத்திற்காக. பழிவாங்குவதற்காக அல்ல.”  இதனை அவர் யூடியூப் காணொளியாக பதிவு செய்துள்ளார்.  அவர் கூறும் ஒவ்வொரு விடயமும் எம்மில் ஒரு அதிர்வலையைக் கிளப்புகின்றது என்றால் அது மிகையல்ல என்பது இக்காணொளியைப் பார்த்த அனைவருக்கும் புரியும்.

சமத்துவம் எனும் நீதியைக் கேட்டே நாம் போராடுகின்றோம் என்பதே அதிலுள்ள முக்கிய செய்தி. அதேநேரம் இப்போராட்டம் இன்று நேற்று உருவாகியதல்ல. நூற்றாண்டு காலங்களாக கட்டமைக்கப்பட்ட அநீதிகளுக்கும், வன்முறையின் பலவடிவங்களுக்கும் எதிராக கறுப்பின மக்கள் போராடி வருகின்றார்கள். 19 ஆனி 1865 அன்று அதாவது, 155 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. 1863இல் விடுதலைப் பிரகடனம் (Emancipation Proclamation) வெளிவந்திருந்தாலும் இரண்டரை வருடங்களுக்குப் பின்னரே டெக்ஸாஸ் மாநிலத்தில் கடைசியாக இருந்த அடிமைகளுக்கு 1865இல் விடுதலை கிடைத்தது. அன்றைய தினத்தையே அடிமைகள் ஒழிப்பு தினமாக கறுப்பின மக்கள் கொண்டாடி வருகின்றனர். கறுப்பின மக்களைப் பொறுத்தளவில் அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆனிமாதம் 19 ஆம் திகதியே ஆகும்.

விடுதலை கிடைத்தவுடன் அவர்கள் யாவருக்கும் சமத்துவமான  வாழ்க்கை கிடைத்தது என நினைப்பவர்கள் அனைவருமே யதார்த்தத்தைத் தெரிந்து கொள்ள விரும்பாத இனவாதிகளே!!! இது உதாரணமாக இலங்கையில் போர்  முடிந்து விட்டது. ஆகவே இனப்பிரச்சினை தீர்ந்து யாவரும் சமாதானமாக முழு உரிமைகளுடனும் வாழ்கிறார்கள் என்ற முட்டாள்தனமான கோஷத்தை எழுப்புவதைப் போன்றதாகும்.

155 வருடங்களாக தமக்கெதிராகக் கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அநீதிகளும், அவற்றின் வெளிப்பாடான வன்முறைகளும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற தொடர் போராட்டமும், அந்த அனுபவங்கள் கொடுக்கும் வலியின் வெளிப்பாடுகளுமே நாம் இன்னும் சமத்துவத்தைத்தான் கேட்கிறோம்- பழிவாங்கலை அல்ல என்ற உளக் கிடக்கை.

ஆனால் இனவாதத்தையே தனது சிந்தனைப் பரப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனையொரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். அவ்வாறான சிந்தனையை மாற்ற வேண்டிய தருணம் இது!!!

கறுப்பின மக்களால் முன்வைக்கப்படும் மற்றொரு கோசத்திற்கு போதுமென்றால் போதும்! என தமிழ் வடிவம் கொடுக்கலாம். எப்போதுதான் இதுவரை நடந்த அநியாயங்கள் போதும் என நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என கறுப்பினத்தவர்கள் அல்லாதவரிடம், குறிப்பாக வெள்ளையினத்தவரை நோக்கி அக்கேள்வி தொடுக்கப்படுகிறது.

அண்மையில் வெள்ளையினப் பொலிசாரால் றேஸாட் புரூக்ஸ் கொல்லப்பட்ட காணொளியைப் பார்வையிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் தமது எதிர்ப்பைத் தெரிவித்த அதேவேளை கணிசமானளவு நபர்கள் புரூக்ஸ் இனது நடவடிக்கையினை விமர்சிக்கவும் செய்கிறார்கள். புரூக்ஸின் கொலைக்கு முன்னர் மேலும் மூன்று கறுப்பின மக்கள் குறுகிய காலப்பகுதிக்குள் வெள்ளையினப் பொலிசாரினால் கொலை செய்யப்பட்டிருந்ததையொட்டி போராட்டங்களும், பிரச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே புரூக்ஸ் உம் கொல்லப்படுகின்றார்.

அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின மக்களைச் சேர்ந்த ட்ரெவர் நோவா எனும் அரசியல் வர்ணனையாளர் தனது யூடியூப் ஊடகத்தில் புரூக்ஸ் என்னென்னவற்றை செய்யாமல் இருந்திருக்கலாம் என விமர்சிப்பவர்கள், பிரக்ஞையுடன் அக்கொலையிலுள்ள பிரச்சினையை ஓரங்கட்டுகிறார்கள் என்பதனை ஆணித்தரமாக முன்வைக்கிறார். அதாவது இவ்வாறெல்லாம் கொல்லப்பட்டவர் நடந்திருந்தால் அக்கொலையை அவர் தவிர்த்திருக்கலாம்  எனும் சிந்தனை அவரைக் கொல்லும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் இனவாதத்தையும், இனவாத அடிப்படையில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளையும், கொலை உள்ளடங்கலாக இயல்பாக்குகிறது. இங்கு இதுதான் பிரச்சினை. இவ்வாறாக நூற்றாண்டு காலமாக இனத்துவமான சிந்தனைகள் இயல்புபடுத்தப்பட்டு வருகின்றன. இனிமேலும் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ‘போதும் என்றால் போதும்!!!’

கிம்பலி ஜோன்ஸ் மற்றும் ட்ரெவர் நோவா கூறுபவற்றோடு சம்பந்தப்படுத்தி இலங்கையை மையப்படுத்திய சில அனுபவங்களை நோக்கலாம்.

பழிவாங்குதல் அல்ல எமது நோக்கம். நாம் கேட்பது நீதியும், நியாயமும் மட்டுமே என்பதை இலங்கையில் நடைபெற்ற அல்லது பெற்று வருகின்ற பல போராட்டங்களுடன் தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளைக் கண்டித்து நடைபெற்ற மற்றும் நடைபெற்று வருகின்ற பல போராட்டங்களின் அடிநாதம் இதுவாகத்தான் அமைந்து இருக்கின்றது. பெண்ணிலைவாதம் ஒருபோதும் ஆண்களை வெறுப்பதாகவோ அல்லது அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தையோ வளர்த்ததில்லை. அவ்வாறு யாரும் கூறுவார்களேயாயின் அது ட்ரெவர் நோவா சுட்டிக் காட்டியதைப்போன்று உண்மையான பிரச்சினை எதுவோ அதனைப் பற்றிப் பேசாது ஆணாதிக்க சிந்தனைக்கு வழிகோலும் பிரக்ஞையற்ற செயற்பாடாகவே அவை அமையும்.

உதாரணமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நபர்கள் குறிப்பாக பெண்கள் விமர்சிக்கப்படும் அளவிற்கு அவர்களை வன்கொடுமை செய்த நபர்களைப் பற்றியோ, அதற்கு பின்னாலிருக்கும் ஆதிக்கச் சிந்தனையையோ, அது எவ்வளவு காலமாக இயல்பாக்கப்பட்டு மற்றும் நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என்பதையோ வெளிப்படுத்தும் கண்ணோட்டங்கள் மிகக் குறைவு. இவ்வாறாகத் தொடர்ந்து பிரச்சினையைத் தட்டிக் கழித்து அதனை மேலும் வலுச் சேர்ப்பதான மனப்பாங்குகள் எம்மத்தியில் இருக்கும் வரைக்கும் அடக்குமுறைகளை நாளாந்தம் எதிர்கொள்ளும் சமூகங்கள் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

பல கால வரலாற்றைக் கொண்ட பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters – கறுப்பின உயிர்களுக்கும் முக்கியமானவையே ) என்னும் போராட்டம் 2020 இல் பல புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. கணிசமான அளவு மாற்றங்களைச் செயற்படுத்தி வரும் சக்தி இப்பரிமாணங்களுள் ஒன்று. பெருமளவுக்கு வெள்ளையினத்தவர்கள் இணைந்து பங்கேற்பது முதற்தடவையாக இடம்பெறுகின்றது என பதிவிடுகிறார்கள் இப்போராட்டத்தை உலகின் பல பாகங்களிலும் நடாத்தும் கறுப்பின மக்கள்.

போராட்டங்களுக்கும், அவற்றால் சாதிக்கக் கூடிய விடயப் பரப்புகளுக்கும் புது வடிவங்களை பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் கொடுக்கும்  விளக்கங்களை பல கோண வடிவ அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் இலங்கைச் சமூகங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையும், அதற்கு எவ்வாறு வலுச் சேர்க்கிறார்கள் என்பதையும் கூருணர்வுடன் நோக்குவது அவசியம். அதைச் செய்யத் தவறினால் மீண்டும், மீண்டும், மீண்டும் வரலாற்றுப் பிழைகளைச் செய்பவர்கள் பட்டியலில் நாமும் நிரந்தர இடத்தைப் பிடித்து விடுவோம்.

உதாரணமாக ‘அனைத்து உயிர்களும் முக்கியமானவையே’ என்ற கோசத்தை எழுப்பும் நேரம் இதுவல்ல. அனைத்து உயிர்களும் முக்கியம்தான். விலங்குகள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள் உள்ளடங்கலாக. ஆனால் தற்போது உலக அரங்கை நேர்மறையாக வியாபித்துக் கொண்டிருப்பது கறுப்பினத்தவரது உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் எனும் கோசம். அந்த கோசத்தை வலுவிழக்கச் செய்யாமல் எமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் இன்னுமொரு இனம் என்ற வகையில் எமக்குண்டு. கறுப்பினத்தர்கள் கூறவில்லை தமது உயிர் மட்டும்தான் உயிர்கள் என்று. இதிலுள்ள  வித்தியாசத்தை கூருணர்வுடன் புரிந்து கொண்டு, அவர்களது போராட்டத்துக்கு வலுச் சேர்க்க முடியுமானால் அவர்கள் கூறும் செய்திகளை மாற்றாது, மழுங்கடிக்காது, நாமும் அவர்களுடன் இணைந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் அவர்களது கோசங்களை மழுங்கடிக்கக் கூடிய வகையில் அனைத்து உயிர்களும் உயிர்கள்தான் என்ற கோசத்தை எழுப்பாமலாவது இருக்கலாம்.

இனம், பால், பால்நிலை, சாதி, வலுவிழப்பு, வர்க்கம், பாலியல்பு, போன்ற பல ஆதிக்கங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு ஆளாகும் சமூகங்கள் என்ற வகையிலும், அவற்றிற்கு எதிராக எம்மால் முடிந்த வடிவங்களில் ஏலுமான தளங்களில் வன்முறையற்ற முறைகளில் போராடுபவர்கள் என்ற வகையிலும் தற்போது பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் உருவாக்கியுள்ள போராட்ட வெளிகளின் சக்தி எம்மையும் ஊடுருவுவது இயல்பான விடயமாகும். ஆனால் அச்சக்தியை பொறுப்புணர்வுடனும், கூருணர்வுடனும் வழிநடத்துவது அவசியம்.

எமது நாட்டின் வன்முறை வரலாற்றின் அடிப்படையில் எமது போராட்டங்கள் வடிவமெடுக்க வேண்டும். அதாவது அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ கறுப்பின மக்களுடன் சேர்ந்து அவர்களது விடுதலைக்காகவும், வாழ்வுக்காகவும் உருப்பெறும்  போராட்ட வடிவங்களை நேரடியாக எமதாக்கிக் கொள்ள முடியாது. அவர்களுடைய போராட்டங்களிலிருந்தும், அவை உருவாக்கியிருக்கும் மாற்றங்களுக்கான வெளிகளிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன.

முக்கியமாக எம்மைப் போல அல்லாத பிறரை- அது நிற, மத, இன, பால், பால்நிலை, பாலியல்பு, வலுவிழப்பு, வர்க்கம், சாதி, போன்ற எந்த அடிப்படையில் இருந்தாலும்- அவர்களது உரிமைகளும், கௌரவமும் ஒடுக்குமுறை செய்யப்படாத வகையில் விளங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இப்போராட்டங்கள் முன்வைக்கின்றன. அத்தோடு இப்புரிதல்களின் அடிப்படையிலேயே அரசு, சட்டம், சட்ட ஒழுங்குகள், வீடு, சமூகம் மற்றும்  நாடு இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் சமூகங்களில் அடக்குமுறைகள் இருக்கக்கூடாது என்பதும், இந்த அறத்தின் வெளிப்பாடாகவே சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளும், சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கம் உள்ளடங்கலாக அமைய வேண்டும் என்பதே இங்கு மீண்டும் மீண்டும் நிலைநிறுத்தப்படும் கோரிக்கை.

மனித நேய அடிப்படையில் இதனை  வாசித்து விளங்கிக் கொள்வது சிலவேளைகளில் இலகுவானதாக இருந்தாலும் இந்த அறத்தின் அடிப்படையில் விழிப்புணர்வுடனும், பிரக்ஞையுடனும் வாழ்தல் என்பதும் அவற்றையே எமது அடுத்த சந்ததியினருக்கு ஊட்டல் என்பதும் சவாலுக்குரிய விடயமே. ஆனால் சவால்களுக்கு அப்பால் அவற்றை நாளாந்த நடைமுறையின் இயல்பு வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் கொண்டு வருவோமேயாயின் நாம் மனிதர்களாக வாழலாம். இவ்வாறான போராட்டங்களுக்கு எமது உயிர்ப்புடனான பங்களிப்பைச் செலுத்துபவர்களாக மாறலாம். அத்தோடு  எமது நாட்டில் நடைபெறும் பல அடக்குமுறைகளின் வெளிப்பாடுகளுக்கு ஒருங்கிசைந்த தீர்வுகளைக் காண பயணங்களைத் தொடரலாம். எல்லா மக்களும் மதிக்கப்படும் சமூகங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

மேலும், கறுப்பின மக்களது தற்போதைய போராட்டங்களை அவர்களது மொழிகளிலேயே விளங்கிக் கொள்வது அவசியம். இது தொடர்பான மேலதிக விடயங்களை இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ளலாம். பேச்சு மொழி மட்டும் மொழியல்ல. அவர்களது வெளிப்பாடுகளில்  கலையும் ஒரு மொழியாகிறது. உதாரணமாக அமெரிக்காவில் வசிக்கும் ஜென்டொக் எனும் கறுப்பின ஹிப்ஹொப் கலைஞர் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்றில் எல்லோருக்கும் வாழும் உரிமை உண்டு என்பதை கறுப்பின மக்களது விம்பங்களின் ஊடாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

                எங்களுக்குள், புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் அவற்றை நாம் இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ளலாம். எங்கிருந்து மற்றும் யாரிடமிருந்து நாம் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதில் கூருணர்வுடன் இருப்பதும் இக்கால கட்டத்தில் அவசியம். அதாவது முதலாளித்துவச் சிந்தனைகளையே மையமாகக் கொண்டு, இலாப நோக்குடன் இயங்கும் கம்பெனிகள் குறிப்பாக அக்கம்பெனிகளில் உயர்பதவிகளில் இருக்கும் வெள்ளையினத்தவரது பார்வையில் கறுப்பின மக்களது வலிகளையும், அனுபவங்களையும் விளங்கிக் கொள்வதில்  பிரச்சினை உள்ளது என்பதனை நாம்  விளங்கிக் கொள்ள வேண்டும்.

பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ்  எம்மில் ஏற்படுத்தும் அதிர்வலைகளில் இருந்து யாருமே விடுபட முடியாது. நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். நேரடியாக அவர்களது போராட்டங்களில் பங்கு பற்ற முடியாமல் இருந்தாலும், சிந்தனைரீதியிலும், செயற்பாட்டுரீதியிலும் எம்மை மாற்றிக் கொள்வதே நாம் செய்யக் கூடிய அடிப்படையான அம்சமாக இருக்க முடியும்.

உதாரணமாக இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும்  வாழும் குயர் மற்றும் பெண்கள் குழுக்கள் மத்தியில் பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் தொடர்பான கலந்துரையாடல்களும் (கொவிட்-19 காரணமாக இணையத்தின் ஊடானவை) பிரதிபலிப்புகளும் நடைபெற்று வருகின்றன. தேடலும், பகிர்வுகளும் எப்போதும் எமது கூருணர்வுடன் கூடிய விமர்சனக் கண்ணோட்டங்களுக்கு வலுச் சேர்ப்பதோடு அவற்றின் அடிப்படையிலான எமது செயற்பாடுகளையும் மனநிலை மாற்றங்களையும் தொடர்ந்து வல்லமைப்படுத்தி வருகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இவ்வாறான ஒரு பகிர்வில் ஒரு தோழரால் முன்வைக்கப்பட்ட கருத்து இது.

நிறஅடிப்படையில் கறுப்பினத்தவர்கள் அடக்குமுறை செய்யப்படுகிறார்கள் என்பதை நாம் அந்நாட்டு அடிமைப்படுத்தல் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு நிறத்தை கண்களால் பார்த்து மட்டும் அடக்குமுறை இடம்பெறுகின்றன என்ற குறுகிய சிந்தனையிலிருந்தும் நாம் வெளிவரவேண்டும். அதாவது கறுப்பினத்தவர்களது பெயர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்குவது அவர்களது பிள்ளைகளை பாடசாலைகளில் வேறாக நடத்துவது என்பவை உள்ளடங்கலாக சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பின்னணிகளில் கறுப்பினத்தவரை ஒதுக்குவதன் ஊடாக அடக்குமுறை செய்தல் என்பதே கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் என்று விளங்கிக் கொள்ளல் அவசியம்.

இதனை இலங்கையின் பின்னணியிலும் விளங்கிக் கொள்வதற்கு எம்மிடம் பல உதாரணங்கள் உள்ளன. நிற அடிப்படையிலான பாகுபாடுகளை இலங்கையின் பின்னணியில் நோக்குவோமேயாயின் இன்னுமே பெயார் எண்ட் லவ்லி கிறீமுக்கு அடிமைகளாக்கப்பட வேண்டிய நிலையிலேயே அநேகமான பெண்களும் அல்லது பெண் என அடையாளப்படுத்துபவர்களும், சில ஆண்களும் அல்லது ஆண் என அடையாளப்படுத்துபவர்களும் இருக்கின்ற துன்பநிலை புலப்படுகின்றது. வெள்ளைநிறத் தோலில்தான் அழகும், கவர்ச்சியும் உள்ளது என்பதை நம்பும் சமூகங்களாக நாம் எப்போது மாறினோம்? எப்போதாவது நாம் இதனை சவாலுக்கு உட்படுத்தியுள்ளோமா?

 குறிப்பாக தென் பூகோள வடிவமைப்பில் மெலனின் நிறமூர்த்தங்கள் அதிகம் கொண்ட நாம் கறுப்பாகவோ அல்லது கருமையின் சாயல்களிலோ இருப்பதுதான் இயல்பு. அழகு, கவர்ச்சி, வர்ணனை என்பதெல்லாம் கறுப்பு நிறத்திலிருந்தே உருவகப்படுத்தப்பட்டிருக்கும். அதுதான் எமது தோலின் நிறம். அதில் எப்போது மாற்றம் வந்ததென்றால் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் எமது பழங்குடிகளோடு வெள்ளையினத்தவரின் கலப்பு ஏற்பட்டபோதுதான். சில நூற்றாண்டு கால மாற்றமே இந்த நிற மாற்றம்.  இந்த வெள்ளை நிறத்தில் ஏற்பட்ட மோகத்தையும், அதன் பின்னணியையும் பகுத்தாய்ந்து நோக்குதல் அவசியம். குறிப்பாக அந்த மோகத்தை தமது விற்பனை மற்றும் இலாப அரசியலாக்கி தக்கவைத்ததில் தனியார் கம்பனிகளுக்கு முக்கிய பங்கிருந்து வருகின்றது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

காலனித்துவத்தையும், அதனால் இன்றும் எமது சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைச் சிந்தனைகளையும் களைந்தெறிய விரும்புவர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டாடுவதை நிறுத்துவதிலிருந்து தொடங்கலாம்.

கறுப்பு நிறம் கொண்ட பன்மைத்துவ பால் பண்பு கொண்டவர்கள், பெண்கள், ஆண்கள் எவரும் நிற அடிப்படையில் ஒதுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தமது வாழ்தலுக்கான அரசியல் அறமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு அர்த்தமல்ல மாநிறம் கொண்டவர்களை ஒதுக்குதல் என்பது. கறுப்பையோ, கறுப்பின் சாயலை உடையவர்களை ஒதுக்க வேண்டாம், அந்நியப்படுத்த வேண்டாம் என்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

 மேலே சுட்டிக் காட்டப்பட்;ட மாற்றங்களுக்குக் காலம் எடுக்குமேயாயினும் கறுப்பின மக்களை  “காப்பிலி”  என அழைப்பதை நிறுத்துவதிலிருந்தும், அவர்களது உடல்களை விநோதமாக ஏறிடுவதனைத் தவிர்ப்பதில் இருந்தும் மாற்றங்களை நோக்கிய இத்தேடலுக்குரிய பயணங்களைத் தொடங்குவோமா? #பிளக்லைவ்ஸ்மெட்டர்ஸ்  #BlackLivesMatters #கறுப்பினமக்கமக்கள் #போராட்டங்கள்  #அடக்குமுறைகள் #சமத்துவம் 

22.06.2020

Spread the love
 
 
      

Related News

1 comment

canlı poker oyna July 6, 2020 - 12:42 pm

I do not even know the way I stopped up here, but I believed this publish used to be great.
I do not recognise who you are but definitely you’re going to a famous blogger should you aren’t already.
Cheers!

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More