Home இலங்கை நாட்டில்   சகலரும் சமமான உரிமையுடன் வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் :

நாட்டில்   சகலரும் சமமான உரிமையுடன் வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் :

by admin

நாட்டிலே இனவாதத்தையும்,மதவாதத்தையும் இல்லாமல் ஆக்கி சகலரும் சமமான உரிமையுடன் வாழக்கூடிய நல்லதொரு இலங்கையை கட்டியொழுப்புவதற்காக   ஐக்கிய மக்கள் சக்தி என்கின்ற பாரிய விருட்சத்தை உருவாக்கி மக்களாகிய உங்களிடம் அவற்றை கையளித்து இருக்கின்றோம்.என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து இன்று புதன் கிழமை மதியம் மன்னாரில் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது. -அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ,சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கிம்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாருக் உற்பட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எனது வெற்றிக்காக முன்னாள் அமைச்சர்களான றிஸாட் பதியுதீன் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாரிய தியாகங்களை செய்தார்கள் அவர்கள் மட்டும் இல்லை அவர்கள் சார்ந்த கட்சிகளும்,கட்சிகளின் பிரதி நிதிகளும் எங்களின் வெற்றிக்காக பாடுபட்டார்கள்.
எனவே நான் நன்றி உள்ளவன் என்ற வகையில் செய்த உதவிக்கு நான் எதிர் காலத்தில் இந்த மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகளையும் அவர்களுடைய பாதுகாப்பையும் இந்த நாட்டில் வாழ்கின்ற எனைய மக்களினது  பாதுகாப்பையும்,அபிவிருத்தியையும் உறுதி படுத்தும் செயல்பாட்டை முன்னெடுப்பேன் என்கின்ற உத்தரவாதத்தை தருகின்றேன்.
இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும்.இந்த கிருமியின் ஊடாக நாடு படுகின்ற துன்பங்களை நீங்கள் அறிவீர்கள்.இதனை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டி இருக்கும். என்னுடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு என்ன என்ன வழிகளை கையான்டார்களோ நிச்சையமாக நானும் இந்த நாட்டிலே வாழ்கின்ற சகல இன மத உரிமைகளினுடைய பாதுகாப்பையும் உரிய முறையில் பாதுகாத்து தருவேன்.
ஒற்றையாட்சி என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.இங்கு வாழ்கின்ற அனைத்து சமூகங்களும்,தங்களுடைய வாழுகின்ற உரிமை,சம உரிமை, அரசியல் கலாச்சார உரிமைகளை பேனிப்பாது காக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக நாங்களும் பாடுபட வேண்டி உள்ளது.
குறிப்பாக சட்டத்தில் மட்டும் ஒற்றையாட்சி என்று குறிப்பிடப் பட்டிருந்தால் ஒருபோதும் அதனை நடை முறை படுத்த முடியாது.அதற்காக பல தியாகங்களையும் முன்னெடுப்புக்களையும் நாங்கள் செய்ய வேண்டி உள்ளது.
அந்த தியாகங்களும், முன்னெடுப்புக்களும் வார்த்தைகளினாலும், எழுத்துக்களினாலும் குறிப்பிடப் பட்டிருந்தால் போதாது. அவை உள்ளங்களில் இருந்து வர வேண்டும். அதனூடாகத்தான் நாங்கள் எதிர் பார்க்கின்ற ஒற்றையாட்சிக் குறிய இலக்குகளையும் மக்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க முடியும்.
எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார்.எனது தந்தையை கொலை செய்தவர் ஒரு பயங்கரவாதி.அவர் விடுதலை புலியை சேர்ந்தவர்.அவர் ஒரு தமிழர். இருந்த போதும் ஒரு தமிழன் செய்த தவறுக்காக முழு தமிழ் சமூகத்தையும் நாங்கள் பழி வாங்கும் நடவடிக்கை அல்லது சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டிய தேவை ஒரு போதும் இல்லை.
அது போன்று தான் இந்த நாட்டிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது. அடிப்படை வாத கொள்கைகளோடு ஒரு சிலர் இந்த செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்கள்.  அதற்காக ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு மதத்தையோ அல்லது முஸ்ஸீம் சமூகத்தின் ஏனையோர்களையோ வஞ்சிப்பதையும் அவர்களுக்கு எதிராக தேவையற்ற விடையங்களில் ஈடுபட்டு அவர்களுடைய பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற பணிகளை மேற்கொள்ளுவது என்பது மிகவும் மோசமான ஒரு செயலாகும்.
எதிர் வரும் 6 ஆம் திகதி நான் பிரதமராக வந்தவுடன் இந்த நாட்டில் இருக்கின்ற இனவாத,மதவாத சக்திகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதோடு, இந்த நாட்டிலே இனவாதத்தையும்,மதவாதத்தையும் இல்லாமல் ஆக்கி சகலரும் சமமான உரிமையுடன் வாழக்கூடிய நல்லதொரு இலங்கையை கட்டியொழுப்புவதற்காக நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி என்கின்ற பாரிய விருட்சத்தை உறுவாக்கி உங்களுக்கு அவற்றை கையளித்து இருக்கின்றோம்.
எனவே நீங்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தை வெற்றியடைய செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
-நான் பிரதமராகிய உடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள 153 கிராம அலுவலகர் பிரிவுகளும்,707 கிராமங்களிலும் அபிவிருத்தி பணிகளை சஜித் பிரேமதாஸ ஆகிய நான் முன்னெடுப்பேன்.
-மேலும் பிரதேச செயலகங்கள் தோறும் புதிய கைத்தொழில் பேட்டையை உருவாக்கி இங்கிருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தையும் நான் வகுத்துள்ளேன்.அது மட்டும் இல்லை கணவரை இழந்த பெண்கள்,பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,சுய தொழில் முயற்சிகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் எதிர் காலத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் புதிய புதிய அபிவிருத்திகளை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம்.நான் பிரதமரானதும் உடனடியாக பிரதமர் செயலணி ஒன்றை ஏற்படுத்தி இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகளை தனித்தனியாக நேரடியாக கண்காணிக்கின்ற ஒரு வியூகத்தை வகுப்பேன்.
ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளுக்கும் நான் நேரடியாக வருகை தந்து மக்களின் பிரச்சினைகளையும் குறைகளையும் கேட்டு அவர்களுக்கான அபிவிருத்திகளையும் கொண்டு வர இருக்கின்றோம்.நகராட்சி,கிராமாட்சி என்கின்ற கொள்கைகளுக்கு கீழ் கிராமங்களும் நகரங்களும் அபிவிருத்தி அடைகின்ற போது இந்த நாடு அபிவிருத்தி காணும்.
சில முஸ்ஸீம் தலைவர்கள் தொடர்பாக பேசப்படுகின்றது.அவர்கள் இந்த சமூகத்திற்காக போராடுகின்றார்கள்.உரிமைகளுக்காக பேசுகின்றார்கள்.இந்த நாட்டிலே கொரோனாவை அழிப்பது இல்லை.இந்த முஸ்ஸீம் தலைமைகளை எவ்வாறு அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி அவர்களை எவ்வாறு துவம்சம் செய்ய முடியும் என்கின்ற திட்டங்களை வகுத்து செயல்படுகின்றார்கள்.
இதற்கு ஒரு போதும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.இவர்களின் யாராவது குற்றம் இழைத்திருந்தால் அதற்கு நீதிமன்றம் இருக்கின்றது.சட்டம் இருக்கின்றது.உரிய சட்ட நடவடிக்கை மூலம் அவர்கள் அவற்றை முன்னெடுக்கலாம்.
-அவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டால் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கின்ற அரசியல் இனக்கம் பிறித்துக்கொள்ள முடியும்.-அதனை விடுத்து பொய்களையும் புறங்களையும் தனிப்பட்ட முறையில் அவர்களின் கௌரவத்தை பாதீக்கின்ற வகையில் சில ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
இவற்றை நாங்கள் நிறுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. வடக்கில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை வடமாகாணத்தில் அதுவும் வன்னி மாவட்டத்தில் மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தி நிச்சையமாக வெற்றி பெறும். மூன்று மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்.என அவர் மேலும் தெரிவித்தார். #சமஉரிமை #இனவாதம் #மதவாதம்  #சஜித்பிரேமதாஸ
  
 
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More