இந்தியா பிரதான செய்திகள்

“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்”

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 475 கோடி மக்கள் வாழும் 84 நாடுகளின் நம்பத்தகுந்த தரவை அடிப்படையாக கொண்டு கொரோனா வைரஸ் பரவலின் தொற்றுநோயியல் மாதிரியை அந்த பல்கலைக்கழகத்தின் ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டின் ஆராய்ச்சியாளர்களான ஹஷீர் ரஹ்மந்தாத், டி.ஒய் லிம் மற்றும் ஜான் ஸ்டெர்மன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தினமும் 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பத்து நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இரான், இந்தோனீசியா, பிரிட்டன், நைஜீரியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எங்களது ஆய்வில் கொரோனா தடுப்பு மருந்து, சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், தீவிரமான பரிசோதனை, நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைந்து கண்டறிதல் உள்ளிட்டவை எதிர்காலத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பை குறைக்க உதவலாம்” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட 84 நாடுகளின் தற்போதைய தினசரி நோய்த்தொற்று பாதிப்பு, நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் விகிதம், குணமடைந்தவர்கள் மற்றும் பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டு வருவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எங்களது ஆய்வு முறையின்படி, ஜூன் 18ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் சுமார் 8.85 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் ஆறு லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். எங்களது இந்த மதிப்பீடு உலக நாடுகளால் வெளியிடப்பட்ட நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பை விட முறையே 11.8 மற்றும் 1.48 மடங்கு அதிகமாகும்” என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆய்வு முடிவானது இன்னும் துறைசார் வல்லுநர்களால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா  #இந்தியா  #தடுப்புமருந்து

பிபிசி தமிழ்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.