உலகம் பிரதான செய்திகள்

1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு…

இந்தியாவின் போயிங் விமானம் ஒன்று 1966ஆம் ஆண்டில் பிரான்ஸின் அல்ப்ஸ் மலை உச்சியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து இந்தியப் பத்திரிகைகள் இரண்டின் பழைய பிரதிகள் சில கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றன.

1966 ஜனவரி 20, 21 திகதி குறிக்கப்பட்ட ‘ஹெரால்ட்’ (National Herald) மற்றும் ‘எக்கனமிக் ரைம்ஸ்’ (The Economic Times) பத்திரிகைகளின் ஒரு டசின் பிரதிகளே பனிப்பாறைகளிடையே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி தெரிவாகியமை பற்றிய செய்தியை பிரதான தலைப்புச் செய்தியாகக் கொண்டு வெளிவந்த பத்திரிகைகளும் இவற்றில் காணப்படுகின்றன.(படம்)

விபத்து நடந்து சுமார் 55 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு கிடைத்திருக்கும் இப் பத்திரிகைகள் பனி நீரில் நனைந்து மிகவும் நொய்ந்து காணப்பட்டாலும் அவற்றின் வடிவம் குலையாமலும் செய்திகளை வாசித்தறியக் கூடிய நிலையிலும் உள்ளன என்று ஏ. எப். பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள அல்ஸ்ப் மலைப் பிராந்தியத்தின் அதிஉயர்ந்த சிகரப்பகுதியான வெள்ளை மலைப் பகுதியில்(Mont-Blanc) விமானம் வீழ்ந்து நொறுங்கிய இடத்தில் உல்லாசப்பயணிகள் மற்றும் மலையேறிகளுக்கான இடைத் தங்கல் நிலையம் ஒன்றை நடத்திவரும் ஒருவரே இந்தப் பத்திரிகைப் பிரதிகளைப் பனிப் பாறைகளுக்கு இடையே கண்டுபிடித்து மீட்டிருக்கிறார்.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் அடிக்கடி நடமாடுகின்ற வாய்ப்பைக் கொண்டிருப்பதால் இவர் ஏற்கனவே விமானத்தின் சிதைவுகள் சிலவற்றையும் அங்கிருந்து மீட்டுப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

1966 ஜனவரி 24 ஆம் திகதி இந்தியாவின் மும்பாய் நகரில் இருந்து நியுயோர்க் நோக்கி 177 பயணிகளுடன் பறந்த ‘போயிங் 707’ ரக ஏயர் இந்திய விமானம் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் பனிப்பாறைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. அதில் இருந்த பயணிகள் எவரும் உயிர்பிழைக்கவில்லை. சடலங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தின் ஆரம்ப கர்த்தாவாக மதிக்கப்பட்ட விஞ்ஞானி ஹொமி பாபாவும் (Homi Bhabha)ஒருவர். அவரது உடல் எச்சங்கள் உட்பட பயணிகள் சிலரது கை, கால் போன்ற உடல் உறுப்புகள் மற்றும் உடைமைகள் மலையேறும் குழுவினர் சிலரால் கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருந்தன.

இந்த விமானத்தில் எடுத்துவரப்பட்ட இந்திய அரசின் இரகசிய ராஜீக ஆவணங்கள் அடங்கிய பொதி ஒன்று (Diplomatic mail bag) கடந்த 2013 இல் பனிப்பாறைச் சிதைவுகளி டையே மீட்கப்பட்டிருந்தது. இதே பகுதியில் இளம் மலையேறும் வீரர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட சிறிய இரும்புப் பெட்டியில் இந்தியாவின் பெயர் பொறிக்கப்பட்ட விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் மரகத ஆபரணங்களும் காணப்பட்டன. சுமார் இரண்டு லட்சத்து 46 ஆயிரம் ஈரோக்கள் பெறுமதிவாய்ந்த இந்தக் கற்கள் பின்னர் அப்பகுதி பிரெஞ்சுப் பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

வெள்ளை மலையின் இதே பகுதியில் 1950 ஆம் ஆண்டிலும் மற்றொரு இந்திய விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தது.

இந்த இரண்டு இந்திய விமான விபத்துக்களிலும் பலியானவர்களுக்கான நினைவிடம் ஒன்று கடந்த ஆண்டில் அல்ப்ஸ் பனிமலைப்பகுதியில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படம்:இந்திராகாந்தி பிரதமராகத் தெரிவான தலைப்புச் செய்தியுடன் ஹெரால்ட் பத்திரிகையின் முகப்புத் தோற்றம்)

நன்றி – Kumarathasan Karthigesu முகநூல்

11-07-2020
சனிக்கிழமை.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link